Saturday 12 May 2012

Catholic News in Tamil - 11/05/12

1. ஒவ்வொரு மனிதருக்கும் நற்செய்தியைப் பெறுவதற்கு உரிமை உள்ளது - திருத்தந்தை

2. புனிதர் Hildegard அதிகாரப்பூர்வமாகப் புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்

3. சிரியாவில் பயங்கரவாதம் நிறுத்தப்படுவதற்கு மெல்கித்தே ரீதித் தலைவர் வேண்டுகோள்

4. அனைத்துலக திருநற்கருணை மாநாடு அயர்லாந்து திருஅவையின் காயங்களைக் குணப்படுத்த உதவும் - டப்ளின் பேராயர் நம்பிக்கை

5. பிலிப்பீன்சில் நிருபர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு ஆயர்கள் கண்டனம்

6. உலகின் மூன்றில் இடது பகுதி குழந்தைகளின் இறப்புக்குத் தடுத்து நிறுத்தக்கூடிய தொற்றுநோய்க் கிருமிகள் காரணம் அமெரிக்க வல்லுனர்கள்

7. ஆசியா மற்றும் பசிபிக் பகுதியின் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தில் உறுதியான தன்மையைக் கொண்டுள்ளது ஐ.நா.

8. இலங்கை இனப்பிரச்சனைக்கானத் தீர்வு விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடிவு

------------------------------------------------------------------------------------------------------

1. ஒவ்வொரு மனிதருக்கும் நற்செய்தியைப் பெறுவதற்கு உரிமை உள்ளது - திருத்தந்தை

மே 11,2012. நற்செய்தியின் தூதுவர்கள், தங்களது போதகரும் ஆண்டவரும் போல தொடர்ந்து நசுக்கப்பட்டு வந்தாலும், நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருஅவை துணிவை இழக்கக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின் 170 தேசிய இயக்குனர்களை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்த நற்செய்தி அறிவிப்புப் பணியில் தனது ஆதரவையும் தெரிவித்தார்.
பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் மாற்றங்கள் இடம் பெற்று வரும் இக்காலத்தில் மனிதர் மட்டும் தனிமையையும் வேதனையையும் சோர்வையும் அனுபவிக்கின்றனர், நற்செய்தியின் தூதுவர்களும் தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்தவ வரலாற்றில், எண்ணற்ற மறைசாட்சிகள் எப்போதும் இருந்து வருகிறார்கள், நற்செய்தி அறிவிப்புப் பாதையில் இவர்களின் எண்ணிக்கையும் சாட்சியங்களும் இன்றியமையாதவைகள் என்றும் திருத்தந்தை கூறினார்.
உலகில் எப்போதும் அவசரத் தேவையாக இருக்கும் நற்செய்தி அறிவிப்புப்பணி, இக்காலத்தில் உலகின் துரிதப் பாதையோடு சென்று, கிறிஸ்துவை ஒவ்வொருவருக்கும் அறிவிக்கப்பட வேண்டியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
இன்றைய மறைப்பணியானது தனது நம்பிக்கையை இறைவனின் செயலில் வைத்து, ஆழமான செபத்தில் ஈடுபடவும், தூய ஆவியின் வலிமையையும் ஒளியையும் இறைஞ்சுவதற்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் அவர் கூறினார்.
வத்திக்கானில் இத்திங்களன்று தொடங்கிய பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின் தேசிய இயக்குனர்களின் கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடைகின்றது.


2. புனிதர் Hildegard அதிகாரப்பூர்வமாகப் புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்

மே 11,2012. கத்தோலிக்கத் திருஅவையில் புனிதராக அறிவிக்கப்படாமலே, புனிதர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருக்கும் ஜெர்மனியின் Bingen நகர் புனிதர் Hildegardஐ,  அதிகாரப்பூர்வமாகப் புனிதர் என இவ்வியாழனன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பலி மற்றும் சிறப்புத் திருப்பலி வாசகங்களோடு புனிதர் Hildegardன் திருவிழா நாளைச் சிறப்பிக்கலாம் என்றும் திருத்தந்தை அறிவித்தார்.
பெனடிக்ட் தியான யோக துறவு சபையின் 12ம் நூற்றாண்டு புனிதை Hildegard ஐ புனிதராக அங்கீகரித்த அதேநாளில், சிலரை அருளாளர்கள் மற்றும் புனிதர்களாக உயர்த்தப்படுவதற்கும் திருத்தந்தை ஒப்புதல் அளித்தார்.
இஸ்பானிய உள்நாட்டுப் போர் மற்றும் நாத்சி அடக்குமுறைகளில் உயிரிழந்த 37 மறைசாட்சிகள், இன்னும், புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதற்கான 12 அருளாளரின் உயரிய பண்புகள், அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற இரண்டு புதுமைகள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளித்தார் திருத்தந்தை.
கியூபா நாட்டு Felix Varela, துறவு சபைகளைத் தொடங்கிய இரண்டு இஸ்பானியர்கள், அமெரிக்கரான Miriam Teresa Demjanovich, சுலோவேனியாவைப் பூர்வீகமாகக் கொண்ட  அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் Irenaeus Frederick Baraga போன்றோரும் இவர்களில் உள்ளடங்குவர்.


3. சிரியாவில் பயங்கரவாதம் நிறுத்தப்படுவதற்கு மெல்கித்தே ரீதித் தலைவர் வேண்டுகோள்

மே 11,2012. சிரியா நாட்டு தமாஸ்கசில் இவ்வியாழனன்று இரண்டு வாகனக் குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளவேளை, அந்நாட்டில் வன்முறை முடிவுக்கு கொண்டு வரப்படுமாறு வலியுறுத்தினார் முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregorios Laham.
இந்தக் குண்டு வெடிப்புகள் இடம் பெற்ற போது, அந்த இடத்திற்குச் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அனனியாஸ் ஆலயத்தில் வழிபாடு நடந்து  கொண்டிருந்ததாகக் கூறிய, அந்தியோக்கியாவின் மெல்கித்தே கிரேக்கரீதி திருச்சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregorios, ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தாங்கள் உணர்ந்ததாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்குப் பகுதியில் உலக சமுதாயத்தின் தலையீடு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், சிரியா மக்களின் வேதனைக் குரல்களை உலக சமுதாயம் கேட்காமல் இருக்கின்றது என்றும் கூறினார்.
புனிதபூமி, 63 ஆண்டுகளாக அமைதிக்காகக் காத்திருக்கின்றது, ஆயினும், அப்பகுதி மீது பாராமுகமும், வெற்று வார்த்தைகளும் மௌனமுமே இதுவரை உலகிடமிருந்து கிடைத்துள்ளன என்றும், அந்தியோக்கியாவின் மெல்கித்தே கிரேக்கரீதி முதுபெரும் தலைவர் கவலை தெரிவித்தார்.     
மத்திய கிழக்கை வெறுப்பும் போரும் விழுங்குவதற்கு உலகம் அனுமதிக்கக் கூடாது என்றும், போதும் என்று சொல்வதற்கான நேரம் வந்து விட்டது என்றும் அவர் கூறினார்.
இந்தக் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் சுமார் 55 பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வாகனத் தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதல்களை ஐ.நா.பாதுகாப்பு அவையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.


4. அனைத்துலக திருநற்கருணை மாநாடு அயர்லாந்து திருஅவையின் காயங்களைக் குணப்படுத்த உதவும் - டப்ளின் பேராயர் நம்பிக்கை

மே 11,2012. வருகிற ஜூன் மாதத்தில் அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு அந்நாட்டுத் திருஅவையின் காயங்களைக் குணப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் டப்ளின் பேராயர் Diarmuid Martin.
வருகிற ஜூன் 10 முதல் 17 வரை தலைநகர் டப்ளினில்  நடைபெறவிருக்கும் 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு குறித்து நிருபர் கூட்டத்தில் இவ்வியாழனன்று விளக்கிய பேராயர் மார்ட்டின் இவ்வாறு கூறினார்.
அயர்லாந்து திருஅவைக்குள் பிளவுகள் இருப்பதைக் குறிப்பிட்ட பேராயர் மார்ட்டின், இந்தத் திருநற்கருணை மாநாடு, அத்திருஅவைக்குள் ஒப்புரவையும் ஒன்றிப்பையும் ஏற்படுத்துவதற்கு உதவும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
அயர்லாந்தின் உள்நாட்டுப் போர் இடம் பெற்ற பத்து ஆண்டுகளுக்குள் 1932ம் ஆண்டு அந்நாட்டில் நடைபெற்ற திருநற்கருணை மாநாட்டையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறினார் டப்ளின் பேராயர்.
திருநற்கருணை : கிறிஸ்துவோடும் ஒருவர் ஒருவரோடும் ஒன்றிப்புஎனும் தலைப்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
அயர்லாந்தின் முதுபெரும் தலைவராக இருக்கும் வட அயர்லாந்தின் Armagh கர்தினால் Sean Brady, அயர்லாந்து திருஅவையில் 1970களில் தவறிழைத்த ஓர் அருட்பணியாளர் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லையெனக் குறைகூறி, அத்தலைமைப் பொறுப்பிலிருந்து கர்தினால் விலக வேண்டுமென்ற குரல்கள் அந்நாட்டில் ஒலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், செயற்கை முறை குடும்பக் கட்டுப்பாடு, குருக்களின் கன்னிமை, ஒரேபாலினச் சேர்க்கை, பெண் குருக்கள் போன்ற விவகாரங்கள் மீதானத் தடையை நீக்க வேண்டுமென கேட்டு வரும் 5 அயர்லாந்து குருக்கள் மீதும் திருப்பீட விசுவாசக்காப்புப் பேராயம் அண்மையில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


5. பிலிப்பீன்சில் நிருபர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு ஆயர்கள் கண்டனம்

மே 11,2012. பிலிப்பீன்சின் Davao மாநிலத்தில் திருஅவை நடத்தும் வானொலியின் நிருபர் கொலை செய்யப்பட்டிருப்பதற்குத் தங்களது வன்மையாகக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
Nestor Libaton என்பவர், இச்செவ்வாயன்று ஒரு நிகழ்ச்சி பற்றிய விபரங்களை வழங்கிய பின்னர், Mati நகருக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இனம் தெரியாத மூன்று துப்பாக்கி மனிதரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  
பிலிப்பீன்சில் கடந்த 15 நாள்களில் கொல்லப்பட்ட மூன்றாவது நிருபர் Nestor Libaton என்பவர் குறிப்பிடத்தக்கது.


6. உலகின் மூன்றில் இடது பகுதி குழந்தைகளின் இறப்புக்குத் தடுத்து நிறுத்தக்கூடிய தொற்றுநோய்க் கிருமிகள் காரணம் அமெரிக்க வல்லுனர்கள்

மே 11,2012. இளஞ்சிறார் மத்தியில் இடம் பெறும் இறப்புக்களில் பெரும்பாலானவை தடுத்து நிறுத்தக்கூடிய தொற்றுநோய்க் கிருமிகளால் ஏற்படுபவை என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
2010ம் ஆண்டில் 193 நாடுகளில் இடம் பெற்ற இறப்புக்களை வைத்து the Lancet இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு வல்லுனர்கள், 5 வயதை அடையுமுன்னரே இறந்த 76 இலட்சம் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பகுதிக் குழந்தைகளின் இறப்புக்கு தொற்றுநோய்களே காரணம் என்று கூறியுள்ளனர்.
நிமோனியாக் காய்ச்சல் இந்த இறப்புக்களுக்கு முக்கிய காரணம் என்று கூறும் அமெரிக்க வல்லுனர்கள், இந்தக் குழந்தை இறப்புக்களில் பாதி, ஆப்ரிக்காவில் இடம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 16 இலட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளின் இறப்புக்கு தொற்றுநோய்க் கிருமிகளே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.


7. ஆசியா மற்றும் பசிபிக் பகுதியின் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தில் உறுதியான தன்மையைக் கொண்டுள்ளது ஐ.நா.

மே 11,2012. ஏற்றுமதியில் சரிவு, முதலீடுகளின் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஆசியா மற்றும் பசிபிக் பகுதியின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் ஓராண்டு மந்தமடைந்திருந்தாலும், உலக அளவில் இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகின்றது என்று இவ்வியாழனன்று வெளியான ஐ.நா.வின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆசியா மற்றும் பசிபிக் பகுதியின் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைப்பாடு 2012என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆய்வில், இப்பகுதி உலகப் பொருளாதாரத்தில் உறுதியான தன்மையைக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.   
கடந்த ஆண்டில் 7 விழுக்காடாக இருந்த இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி, 2012ம் ஆண்டில் 6.5 விழுக்காடாக உள்ளது, ஆயினும், 2010ம் ஆண்டில் இவ்வளர்ச்சி 8.9 விழுக்காடாக இருந்தது எனவும் ஐ.நா.அறிக்கை கூறுகின்றது.


8. இலங்கை இனப்பிரச்சனைக்கானத் தீர்வு விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடிவு

மே 11,2012. இலங்கையில் இனப் பிரச்சனைக்கானத் தீர்வை விரைவுபடுத்தும் விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டனுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்சனை விடயத்தில் இனிவரும் காலங்களில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைப்பதற்கு வழி ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கானப் பேச்சுகளைத் துரிதப்படுத்துவதற்கும், தமிழ் அரசியல் கட்சிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து வருவது தொடர்பாக, பொது நிலைப்பாடு ஒன்றை எடுப்பதற்கும் இவ்விருநாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர் என்று சொல்லப்ப்டடுள்ளது.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...