1.
அருள்பணியாளர்களாகப் பயிற்சி பெறும் அனைவரும் மக்கள் பணியைத் தங்கள் வாழ்வின்
மையமாகக் கொண்டிருக்க வேண்டும் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
2.
கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே உறவுகளை
வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்றன -
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
3. உரையாடல் பாணியில் இரு மணி நேரம் நீடித்த ஓர் இணையதள நிகழ்வில்
கர்தினால் Dolan
4.
கத்தோலிக்கத் திருஅவை இவ்வுலகில் பயணம் செய்யும் ஒரு திருப்பயணி - திருப்பீடத்
தூதர்
5.
அரசு விதித்துள்ள அரசாணைக்கு Papua New
Guinea ஆயர்கள் வன்மையான எதிர்ப்பு
6.
உலகெங்கும் பரவியுள்ள இயேசு சபையினரின் எண்ணிக்கை
7.
வியட்நாமில் கத்தோலிக்க முதலாளிகள் வழியாக மக்களுக்குப் பயன்படும் முன்னேற்றங்கள்
8.
ஒலிம்பிக் தீபம் கிரேக்க நாட்டின் Olympiaவில் ஏற்றப்பட்டது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அருள்பணியாளர்களாகப் பயிற்சி பெறும் அனைவரும் மக்கள் பணியைத்
தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
மே,10,2012.
அருள்பணியாளர்களாகப் பயிற்சி பெறும் அனைவரும் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம்
செலுத்துவதைக் காட்டிலும், மக்கள் பணியைத் தங்கள் வாழ்வின்
மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் நகரில் உள்ள ஸ்பானிய
பாப்பிறைக் கல்லூரி தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி, அக்கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய
150 பேர் கொண்ட குழுவைத் திருப்பீடத்தில் இவ்வியாழனன்று மதியம் சந்தித்தபோது
திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஸ்பானிய மறைமாவட்டக் குருக்களின்
பாதுகாவலராகிய புனித அவிலா நகர் ஜான் அவர்களின் திருநாளன்று இக்கல்லூரியின்
உறுப்பினர்களைச் சந்திப்பது தனக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது
என்று கூறியத் திருத்தந்தை, புனித அவிலா ஜான் திருஅவையின் மறைவல்லுனராக விரைவில்
உயர்த்தப்பட உள்ளார் என்றும் கூறினார்.
கட்டுபாடான வாழ்வைப் பின்பற்றுவதிலும், அன்னை மரியா மீது ஆழ்ந்த
பக்தி கொண்டிருப்பதிலும் இளம் குருக்கள் புனித அவிலா நகர் ஜானைப் பின்பற்ற
வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
‘மறைமாவட்டங்களுக்கென
உழைக்கும் அருள்பணியாளர்கள்’ என்ற குழுவை ஸ்பெயின் நாட்டில் உருவாக்கிய அருளாளர் Manuel
Domingo y Sol, உரோம் நகரில் திருத்தந்தை 13ம் லியோ அவர்களின் ஆசீரோடு இக்கல்லூரியைத்
துவக்கினார் என்பதைத் தன் உரையில் நினைவு கூர்ந்தத் திருத்தந்தை, இக்கல்லூரியை நிறுவிய அருளாளரின்
உயர்ந்த நோக்கங்களை நடைமுறைப்படுத்துவது இக்கல்லூரியுடன் தொடர்புடைய அனைவரின் கடமை
என்பதை எடுத்துரைத்தார்.
இக்கல்லூரியின் உறுப்பினர்களோடு
திருத்தந்தையைச் சந்தித்த மத்ரித் பேராயர் கர்தினால் Maria Rouco Varela, மற்றும் கூடியிருந்த பேராயர்கள், மற்றும் கல்லூரியின் அனைத்து
உறுப்பினர்களையும் வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அவர்களுக்கு வழங்கினார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2. கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே உறவுகளை வளர்க்க
மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்றன - திருத்தந்தை
16ம் பெனடிக்ட்
மே,10,2012. இலத்தீன் அமெரிக்க
நாடுகளில், சிறப்பாக, அர்ஜென்டீனா, பிரேசில் ஆகிய நாடுகளில், கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நிலவி வரும்
நட்புறவும், உறவுகளை
வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் தனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்றன என்று திருத்தந்தை
16ம் பெனடிக்ட் கூறினார்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழும்
யூதர்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத்
திருத்தந்தை, இந்நாடுகளில்
இருந்து வத்திக்கானுக்கு வந்து தன்னைச் சந்திக்கும் முதல் யூதப் பிரதிநிதிகள்
அவர்களே என்பதை மகிழ்வுடன் சுட்டிக் காட்டினார்.
'நமது
காலத்தில்' என்ற
பொருள்படும் Nostra Aetate என்ற இரண்டாம் வத்திக்கான் பேரவை ஏடு வெளிவந்த 50ம் ஆண்டை
வருகிற அக்டோபர் மாதம் சிறப்பிக்கிறோம் என்பதை நினைவுபடுத்திப் பேசியத் திருத்தந்தை, கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே
நிலவிவந்த நம்பிக்கையற்றச் சூழல் மாறி, இவ்விரு குழுக்களுக்கும் இடையே
உறவுகள் வளர்வதற்கு இரண்டாம் வத்திக்கான் பேரவை உதவியாக இருந்தது என்று
எடுத்துரைத்தார்.
ஆன்மீக, நன்னெறி விழுமியங்களை
இழந்து வரும் உலகில் மனித மாண்பும், உண்மையான அமைதியும் நிலவ மனம் திறந்த
உரையாடல்கள் தேவை என்று கூறியத் திருத்தந்தை, யூதப் பிரதிநிதிகள் வத்திக்கானுக்கு
வருகை தந்திருப்பது, கத்தோலிக்க-யூத உரையாடலை வளர்க்கும் ஒரு முயற்சி என்ற
தன் மகிழ்வையும் வெளிப்படுத்தினார்.
யூதப் பிரதிநிதிகளையும், அவர்கள் குடும்பங்களையும்
தான் வாழ்த்துவதாகவும், அவர்களுக்கு இறைவனின் ஆசீரும் நிறை
அமைதியும் கிடைக்க தான் செபிப்பதாகவும் திருத்தந்தை தன் வாழ்த்துரையின் இறுதியில்
கூறினார்.
3. உரையாடல் பாணியில் இரு மணி நேரம் நீடித்த ஓர் இணையதள
நிகழ்வில் கர்தினால் Dolan
மே,10,2012. கத்தோலிக்கத் திருஅவை
'தாய் திருஅவை' என்று எப்போதும்
அழைக்கப்படுகிறது, எனவே, நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்தோர்
மீது இத்தாய் எப்போதும் பரிவு கொண்டிருப்பார் என்று நியூயார்க் பேராயர் கர்தினால் Timothy Dolan கூறினார்.
மக்களுடன் கேள்வி பதில் உரையாடல்
என்ற பாணியில் இரு மணி நேரம் நீடித்த ஓர் இணையதள நிகழ்வில் இச்செவ்வாயன்று
பங்கேற்ற கர்தினால் Dolan,
திருஅவையின் பணிகள் பற்றியும், அமெரிக்க அரசுடன் திருஅவை கொண்டுள்ள
கருத்து வேறுபாடுகள் குறித்தும் பேசினார்.
தஞ்சம் தேடி அமெரிக்க மண்ணை
நாடி வரும் மக்களுக்கு உதவிகள் செய்வதற்குப் பதில், அவர்களைப் பல்வேறு சட்ட திட்டங்களால் வேற்றுமைப்படுத்தி, உதவிகளை மறுக்கும் போக்கு
அரசிடம் காணப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்திய கர்தினால் Dolan, மனிதாபிமானம், கிறிஸ்தவப் பண்பு ஆகியவற்றை திருஅவை
என்றும் உயர்த்திப் பிடிக்கும் என்று கூறினார்.
கருத்தடை, கருக்கலைப்பு
ஆகிய செயல்பாடுகளுக்கு அரசு காட்டிவரும் ஆதரவை திருஅவை வன்மையாக எதிர்க்கும் என்றும், மனிதரின் அடிப்படை
உரிமைகளில் ஒன்றான மதச் சுதந்திரத்தை பாதிக்கும் இந்த நடைமுறைக்குத் திருஅவையின்
ஆதரவு என்றும் கிடையாது என்றும் கர்தினால் தன் உரையாடலில் தெளிவுபடுத்தினார்.
உலகில் தாக்கங்களை உருவாக்கும்
முதல் 100 பேர் என்ற பட்டியலில் கர்தினால் Dolanன்
பெயரை Time இதழ் வெளியிட்டிருப்பதைக் குறித்து
அவரிடம் கேள்வி எழுந்தபோது, இத்தகையப் புகழ் நிலையற்றது என்றும்,
உண்மையின் பக்கம் நிற்பதே நிலையானப் புகழைத்தரும் என்றும் வலியுறுத்திக் கூறினார்.
4. கத்தோலிக்கத் திருஅவை இவ்வுலகில் பயணம் செய்யும் ஒரு திருப்பயணி
- திருப்பீடத் தூதர்
மே,10,2012. கத்தோலிக்கத் திருஅவை
இவ்வுலகில் பயணம் செய்யும் ஒரு திருப்பயணி என்பதை ஆந்திரத் தலத்திருஅவை உணர்ந்து, ஏழை மக்களுடன்
இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennacchio, கூறினார்.
ஆந்திரத் தலத்திருஅவை உருவாகி
300 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, இச்செவ்வாயன்று விஜயவாடாவில் நடைபெற்ற
ஒரு மாநாட்டில் தலைமையேற்று உரையாற்றிய பேராயர் Pennacchio, இவ்வாறு கூறினார்.
இம்மாநாட்டின் திருப்பலியிலும், பொது அமர்விலும் தலைமையேற்ற
பேராயர் Pennacchio, திருத்தந்தையின் தனிப்பட்ட ஆசீரையும், வாழ்த்துக்களையும் கூடியிருந்தோருக்கு
வழங்கினார்.
உலகின் பல நாடுகளில் எழுந்துள்ள
மறைபணித் தேவைகளை நிறைவேற்ற ஆந்திரத் தலத்திருஅவை அருள் பணியாளர்களை அனுப்ப
வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார் பேராயர் Pennacchio.
செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற
இந்த மாநாட்டில் ஆந்திர மாநிலத்தின் 13 மறைமாவட்டங்களில் பணியாற்றும் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர்
என்று 1500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
5. அரசு விதித்துள்ள அரசாணைக்கு Papua New Guinea ஆயர்கள் வன்மையான எதிர்ப்பு
மே,10,2012. பாலியல் கல்வியைப்
பள்ளிகளில் புகட்டும் ஓர் அங்கமாக பள்ளிகளில் ஆணுறை வழங்கப்படவேண்டும் என்று Papua
New Guinea அரசு
விதித்துள்ள அரசாணைக்கு அந்நாட்டின் ஆயர்கள் வன்மையான எதிர்ப்பைத்
தெரிவித்துள்ளனர்.
இந்த ஆணை மனசாட்சியைப் பாதிக்கும்
ஓர் ஆணை (‘Conscientious Objection’) என்று
கூறிய ஆயர்கள்,
இந்த ஆணையை அந்நாட்டில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள் பின்பற்றாது
என்று தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பரவி வரும் HIV, AIDS
நோய்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இதனை மேற்கொள்வதாக அந்நாட்டு
அரசு அறிவித்துள்ளது.
அரசின் கல்வித்துறை விடுத்துள்ள
இந்த ஆணையில் ஒரு சில பயன்கள் உண்டு என்றாலும், கத்தோலிக்கக் கல்வி என்ற
கோட்பாட்டிற்கு எதிராகச் செல்லும் எந்த ஓர் ஆணையையும் திருஅவை பின்பற்றாது என்று
ஆயர் பேரவையின் சார்பில் பேசிய பேராயர் Francesco
Panfilo கூறினார்.
நோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி
என்ற பெயரில் ஆணுறைகளை வழங்குவது மாணவச் சமுதாயத்தைத் தவறான பாதையில் இட்டுச்
செல்வதாகும் என்றும், இத்தகைய நடவடிக்கை இளையோரிடையே கட்டுப்பாடற்ற
பாலியல் உறவுகளை வளர்த்து, மேலும் இந்நோய்களைப் பரப்பும் என்றும்
பேராயர் Panfilo எடுத்துரைத்தார்.
கல்வியாளர்களும், பெற்றோர்களும்
இணைந்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே நீடித்த பயன்தரும் என்று Papua New Guinea ஆயர்கள் கூறியுள்ளனர்.
6. உலகெங்கும் பரவியுள்ள இயேசு சபையினரின் எண்ணிக்கை
மே,10,2012. உலகெங்கும் பணியாற்றும்
இயேசு சபையினரின் எண்ணிக்கை 2012ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று 17,637 ஆக
இருந்தது என்று இயேசு சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது.
இவ்வியாழனன்று வெளியான இந்தப்
புள்ளி விவரங்களின்படி, இயேசு சபையில் இவ்வாண்டு துவக்கத்தில், 12526 குருக்கள், 1470 அருள்
சகோதரர்கள் என்றும், குருத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளோர் 2896 பேர், மற்றும் 745
பேர் துறவு வாழ்வில்
புதிதாக இணைந்துள்ளவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகெங்கும் பரவியுள்ள இயேசு சபையினர், 84 மாநிலங்களாகவும், 15 சிறு
பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுச் செயல்படுகின்றனர்.
தெற்கு ஆசியப் பகுதிகளில் பெருமளவாக, 4036 பேர்
இயேசு சபை உறுப்பினர்கள் என்றும், அதற்கு அடுத்தபடியாக, அமெரிக்க
ஐக்கிய நாட்டில் 2547 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் இந்தப் புள்ளிவிவரம்
கூறுகிறது.
இயேசு சபையினரின் மொத்த எண்ணிக்கை
கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 296 பேர் குறைவு என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
7. வியட்நாமில் கத்தோலிக்க முதலாளிகள் வழியாக மக்களுக்குப் பயன்படும்
முன்னேற்றங்கள்
மே,10,2012. பொருளாதாரச் சரிவு, வேலையின்மை ஆகியவைகளால்
தற்கொலை வரை மக்கள் செல்லும் இக்காலத்தில், வியட்நாமில் உள்ள கத்தோலிக்க வர்த்தக
முதலாளிகள் மக்களுக்குப் பயன்படும் முன்னேற்றங்களைக் கொணர்ந்துள்ளனர்.
2003ம் ஆண்டு Ho Chi Minh நகர் பேராயராக இருந்த கர்தினால் Jean Baptiste Phạm Minh Mẫn, அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட
ஓர் அமைப்பில் வியட்நாம் செல்வந்தர்கள் இணைந்து வந்தனர். இந்த அமைப்பின் வழியாக, இன்றும்
வியட்நாமில் பல பொருளாதார முன்னேற்றங்கள் நிகழ்கின்றன என்று ஆசிய செய்தி நிறுவனம்
கூறியுள்ளது.
Quang Minh கூட்டுறவு
என்ற ஒரு பெரும் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் Cao
Dũng Khanh நடத்தி வரும் நிறுவனத்தில் 3000க்கும் அதிகமானோர் வீட்டில் இருந்த
வண்ணம் தொழில்களைச் செய்து வருகின்றனர். வியட்நாமில் நல்ல பாதிப்புக்களை உருவாக்கிய
முதல் 100 பேரில் Cao Dũng Khanhன் பெயரும்
இடம் பெற்றுள்ளது.
நாடெங்கும் 300க்கும் அதிகமான
கத்தோலிக்க முதலாளிகள் காரித்தாஸ், மற்றும் பிற அரசு சாரா அமைப்புக்கள் மூலம்
பல்லாயிரம் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனம்
மேலும் கூறுகிறது.
8. ஒலிம்பிக் தீபம் கிரேக்க நாட்டின் Olympiaவில் ஏற்றப்பட்டது
மே,10,2012. இவ்வாண்டு இலண்டன்
மாநகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தப்படும் ஒலிம்பிக் தீபம்
கிரேக்க நாட்டின் Olympiaவில் இவ்வியாழனன்று
ஏற்றப்பட்டு,
தன் பயணத்தைத் துவங்கியது.
கிரேக்க நாட்டில் தற்போது நிலவி
வரும் அமைதியற்றச் சூழலில், பலத்தப் பாதுகாப்புடன் ஏற்றப்பட்ட இந்தத் தீபம், மே மாதம்
18ம் தேதி பிரித்தானிய நாட்டில் தனது 70 நாள் பயணத்தைத் துவக்கும் என்று BBC ஊடகம்
கூறியுள்ளது.
Olympiaவில்
உள்ள Hera என்ற பழமைவாய்ந்த இடிந்த கோவிலில்
சூரியனின் கதிர்களை ஒரு கண்ணாடியின் மூலம் குவியச்செய்து நெருப்பு உருவாக்கி, ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்பட்டது.
1896ம் ஆண்டு தற்காலத்திய ஒலிம்பிக்
போட்டிகள் துவக்கப்பட்ட ஏதென்ஸ் நகரத்திலிருந்து ஒவ்வொரு முறையும் இந்த ஒலிம்பிக்
ஒளி விளக்கு வெவ்வேறு நாடுகளுக்குப் பயணத்தை மேற்கொள்கிறது.
No comments:
Post a Comment