Thursday, 24 May 2012

Catholic News in Tamil - 23/05/12

 
1. கர்தினால் பெர்தோனே: மழலை இதயங்கள் நலமாகத் துடிப்பதைக் காணும்போது, அறிவியல் முன்னேற்றங்கள் மீது நமது நம்பிக்கை கூடுகிறது

2. மணமுறிவுக்கு வழி வகுக்கும் உலகம், அந்த உறவைக் காக்கும் வழிகளைத் தேடவும் கடமைப்பட்டுள்ளது - கர்தினால் Ennio Antonelli

3. மக்களுக்குத் தேவையான நலமளிக்கும் பணிகளை உருவாக்குவது உலகச் சமுதாயத்தின் கடமை - வத்திகான் உயர் அதிகாரி

4. டப்ளின் நகரில் இயேசுவின் காலத்தைய இடங்களுக்கு கணணி வழியே கற்பனைப் பயணம் மேற்கொள்வது போன்ற கண்காட்சி

5. சீனத் திருஅவைக்காக செபிக்கும் நாளைக் கொண்டாட சீன அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்

6. விளையாட்டு வீரர்கள் தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படையாகப் பறைசாற்றுவதைத் திருத்தந்தை எப்போதும் பாராட்டியுள்ளார்

7. Rio+20 உலக உச்சி மாநாட்டில் உணவு பாதுகாப்பைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் - உலகின் முன்னணி ஆய்வாளர்கள்

8. தமிழ் நாட்டின் சிறைகளில் இருக்கும் 35 பேர் இவ்வாண்டு 12ம் வகுப்பு தேர்வினை எழுதி, அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர்

------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் பெர்தோனே: மழலை இதயங்கள் நலமாகத் துடிப்பதைக் காணும்போது, அறிவியல் முன்னேற்றங்கள் மீது நமது நம்பிக்கை கூடுகிறது

மே,23,2012. குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு அறிவியலும் மருத்துவமும் வளர்வது நம்பிக்கை தருகிறது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
16 மாதக் குழந்தைக்கு உலகிலேயே முதன்முறையாக மிக நுண்ணிய செயற்கை இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்திய குழந்தை இயேசு மருத்துவமனை மருத்துவர்களையும், உதவி செய்தோரையும் பாராட்டி கர்தினால் பெர்தோனே அனுப்பிய ஒரு செய்தியில் இவ்வாறு கூறினார்.
சீரான இரத்த ஓட்டத்துடன் மழலைகளின் இதயங்கள் துடிப்பதைக் காணும்போது, எதிர்காலத்தின் மீதும், அதற்குத் துணை நிற்கும் அறிவியல் முன்னேற்றங்கள் மீதும் நமது நம்பிக்கை கூடுகிறது என்று கூறிய கர்தினால் பெர்தோனே, உரோம் நகரில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனை, குழந்தைகள் நலனில் எப்போதும் முன்னணியில் உள்ளது என்பதைத் தன் செய்தியில் வலியுறுத்திக் கூறினார்.


2. மணமுறிவுக்கு வழி வகுக்கும் உலகம், அந்த உறவைக் காக்கும் வழிகளைத் தேடவும் கடமைப்பட்டுள்ளது - கர்தினால் Ennio Antonelli

மே,23,2012. மிகக் குறுகிய கால மணவாழ்வுக்குப் பின் மணமுறிவுக்கு வழி வகுக்கும் உலகம், அந்த உறவைக் காத்து வளர்க்கும் வழிகளைத் தேடவும் கடமைப்பட்டுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேமாதம் 30ம் தேதி முதல் ஜூன் மாதம் 3ம் தேதி முடிய இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறவிருக்கும் அகில உலக குடும்பங்களின் மாநாட்டைக் குறித்து இச்செவ்வாயன்று விவரங்களைச் செய்தியாளர்களுக்கு வெளியிட்ட குடும்பநல பாப்பிறை அவையின் தலைவர் கர்தினால் Ennio Antonelli, இவ்வாறு கூறினார்.
மணமுறிவு பெற்றவர்கள் மீண்டும் தங்கள் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள 'Retrouvailles' என்ற கழகத்தைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Antonelli, இக்கழகத்தின் மூலம் தங்கள் மணவாழ்வை மீண்டும் உறுதிசெய்துள்ள தம்பதியர் மற்றவர்களுக்கு உதவிவருவதை எடுத்துக் கூறினார்.
பணிகள், ஒய்வு, மற்றும் கொண்டாட்டம் என்ற பல அம்சங்களின் வழியாக குடும்பங்கள் கட்டப்படுவதால் மிலான் நகரக் கூட்டத்தில் குடும்பத்தையும் கொண்டாட்டத்தையும் இணைப்பது எவ்வாறு என்பது மையக் கருத்தாக அமைந்துள்ளது என்று மிலான் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Angelo Scola செய்தியாளர்களிடம் கூறினார்.
3 இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டின் இறுதித் திருப்பலியைத் திருத்தந்தை நிறைவேற்றும்போது, அப்பலியில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என்ற எதிர்பார்ப்பு உள்ளதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. மக்களுக்குத் தேவையான நலமளிக்கும் பணிகளை உருவாக்குவது உலகச் சமுதாயத்தின் கடமை - வத்திகான் உயர் அதிகாரி

மே,23,2012. நலவாழ்வுப் பணிகள் பொருளாதார நெருக்கடிகளை மக்கள் மீது இன்னும் அதிகமாகத் திணிக்காமல், அவர்களுக்குத் தேவையான நலமளிக்கும் பணிகளை உருவாக்குவது உலகச் சமுதாயத்தின் கடமை என்று வத்திகான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இத்திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடைபெறும் 65வது உலக நலவாழ்வு மாநாட்டில் திருப்பீடத்தின் சார்பில் ஐ.நா.வின் நிரந்தரப் பார்வையாளராகச் செயலாற்றும் பேராயர் Zygmunt Zimowski உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
நலப்பணிகள் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை திருத்தந்தை பல்வேறு நேரங்களில் கூறிவந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Zimowski, இந்த உரிமையில் அடிப்படை நலப் பணிகளாவது இணைக்கப்பட அனைத்து நாடுகளும் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ள நாடுகள் தங்கள் மொத்த வருவாயில் ஒரு பகுதியை பின்தங்கிய நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஒதுக்கி வைத்தால், அடிப்படை நலப் பணிகள் அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்புக்கள் பெருகும் என்று திருத்தந்தை Caritas in veritate என்ற சுற்று மடலில் கூறியுள்ளதையும் பேராயர் தன் உரையில் எடுத்துரைத்தார்.
உலகின் பல நாடுகளிலும் 1,20,000க்கும் அதிகமான நலப்பணி மையங்களின் வழியாக பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் பணிகள் பற்றி குறிப்பிட்ட பேராயர் Zimowski, இப்பணிகளால் பெருமளவு பயன்பெறுவது வறியோரே என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.


4. டப்ளின் நகரில் இயேசுவின் காலத்தைய இடங்களுக்கு கணணி வழியே கற்பனைப் பயணம் மேற்கொள்வது போன்ற கண்காட்சி

மே,23,2012. 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு வாழ்ந்த இடங்களுக்கு மீண்டும் சென்று வந்ததைப் போன்ற ஓர் அனுபவம் எனக்குக் கிடைத்தது என்று அகில உலக திருநற்கருணை மாநாட்டின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவரான John Waters கூறினார்.
ஜூன் 10ம் தேதி முதல் 17ம் தேதி முடிய அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறவிருக்கும் திருநற்கருணை மாநாட்டையொட்டி அங்கு வருபவர்கள் இயேசுவின் காலத்தைய இடங்களுக்கு கணணி வழியே கற்பனைப் பயணம் மேற்கொள்வது போன்ற ஒரு கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கற்பனைப் பயணத்தை மேற்கொண்ட John Waters, ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
'இறைபிரசன்னத்தால் மேற்கொள்ளப்பட்ட வாழ்வு - திருத்தூதர்களின் பார்வையில்' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முப்பரிமாண திருப்பயணம், திருநற்கருணை மாநாடு நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை முதல் மாலை வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியைக் காண்போர் இயேசுவின் பணி வாழ்வில் அவர் சென்ற இடங்களுக்குத் தாங்களும் சென்று, இறுதியாக இயேசு விண்ணேற்றம் அடைந்த இடத்தை சென்றடைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


5. சீனத் திருஅவைக்காக செபிக்கும் நாளைக் கொண்டாட சீன அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்

மே,23,2012. மேமாதம் 24ம் தேதி சீனாவின் Shanghai நகரில் அமைந்துள்ள Sheshan மரியன்னைத் திருத்தலத்திற்கு அந்நகர மக்களைத் தவிர மற்ற கத்தோலிக்கர்கள் செல்லக் கூடாது என்று சீன அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேமாதம் 24ம் தேதி, இவ்வியாழனன்று சீனத் தலத் திருஅவைக்காக செபிக்கும் நாளென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார். இந்த நாளையொட்டி, Sheshan மரியன்னைத் திருத்தலத்திற்குச் சென்று திருப்பலி நிகழ்த்தி செபிப்பது சீனத் தலத் திருஅவையில் வழக்கமாக உள்ளது. இந்த முயற்சியைத் தடை செய்யும் நோக்கத்துடன் சீன அரசு செயல்பட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Shanghai நகருக்கு 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மரியன்னையின் திருத்தலம் சீன மக்களின் பாதுகாவலான அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இத்திருத்தலத்தின் அருகே இயேசு சபையினரால் உருவாக்கப்பட்ட விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை சீன அரசு தனதாக்கிக் கொண்டது.
2007ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சீனத் தலத் திருஅவைக்காக செபிக்கும் நாளை உருவாக்கி, அகில உலகத் திருஅவையை சீன நாட்டுக்காக செபிக்கும்படி அழைத்தார். 2008ம் ஆண்டு முதல் சீன அரசு இந்த நாளையொட்டி அதிகக் கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது.


6. விளையாட்டு வீரர்கள் தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படையாகப் பறைசாற்றுவதைத் திருத்தந்தை எப்போதும் பாராட்டியுள்ளார்

மே,23,2012. இளையோரின் எடுத்துக்காட்டுகளாய் விளங்கும் விளையாட்டு வீரர்கள் தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படையாகப் பறைசாற்றுவதைத் திருத்தந்தையும், திருஅவைத் தலைவர்களும் எப்போதும் பாராட்டியுள்ளனர் என்று திருப்பீட அலுவலர் அருள்தந்தை Kevin Lixey கூறினார்.
ஐரோப்பிய கால்பந்தாட்டக் குழுக்களிடையே நடைபெற்ற போட்டியில் அண்மையில் கோப்பையை வென்ற Chelsea என்ற அணியின் Didier Drogba என்ற கத்தோலிக்க விளையாட்டு வீரர், தங்கள் அணியின் வெற்றிக்கு இறைவனே காரணம் என்று வெளிப்படையாகக் கூறியதைத் தொடர்ந்து, அருள்தந்தை Lixey இவ்வாறு சொன்னார்.
34 வயதான Drogba ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்தவர். இவரது முயற்சியால் Chelsea அணி இந்தக் கோப்பையைக் கைப்பற்றியதும், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியொன்றில் கடவுள் மிக நல்லவர் என்று கூறினார்.
உலகில் ஆழ்ந்த பாதிப்புக்களை உருவாக்கிய 100 பேர் என்று Time வார இதழ் கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள கால்பந்தாட்ட வீரர் Drogba, உளநாட்டுப் போரினால துன்புற்றுவரும் ஐவரி கோஸ்ட் நாட்டில் அமைதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராகச் செயலாற்றுகிறார்.
இவர் Chelsea அணியில் சேருவதற்கு முன் பிரான்ஸ் நாட்டின் ஓர் அணியில் விளையாடி வந்தவர். அவ்வணியில் பயன்படுத்தியச் சீருடையை அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள ஒரு பேராலயத்திற்கு பரிசாக வழங்கினார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


7. Rio+20 உலக உச்சி மாநாட்டில் உணவு பாதுகாப்பைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் - உலகின் முன்னணி ஆய்வாளர்கள்

மே,23,2012. ஜூன் மாதம் 20ம் தேதி முதல் 22ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் Rio de Janeiro நகரில் நடைபெறும் Rio+20 உலக உச்சி மாநாட்டில் உலகின் உணவு பாதுகாப்பைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்று உலகின் முன்னணி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பொது நிதியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஒரு பெரும் உலக நிறுவனமான CGIAR என்ற உணவு உற்பத்தி ஆய்வு நிறுவனம் Rioவில் நடைபெறும் மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய ஏழு அம்சங்களை இப்புதனன்று வெளியிட்டுள்ளது.
நில வளம், நீர் வளம், காடுகள், நீர் ஊற்றுகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வழிகளை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து தேடுவது மிகவும் அவசியம் என்பது இந்த ஏழு அம்சங்களில் ஒன்று.
100க்கும் மேலான நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருக்கும் இந்த மாநாட்டில், உலகின் 40 விழுக்காடு மக்களின் வாழ்வியல் ஆதாரமாகவும், பணியாகவும் இருக்கும் வேளாண்மை பற்றி மிகத் தீவிரமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவ்வறிக்கை கூறியுள்ளது.
1992ம் ஆண்டு Rio நகரில் நடைபெற்ற ஐ.நா.வின் சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்றம் குறித்த உலக மாநாட்டிற்குப் பின், பத்தாண்டுகள் கழித்து, 2002ம் ஆண்டு, இந்த மாநாடு தென் ஆப்ரிக்காவின் Johannesburg நகரில் நடைபெற்றது. தற்போது இந்த மாநாடு Rio+20 என்ற தலைப்பில் மீண்டும் Rio de Janeiro நகரில் நடைபெற உள்ளது.


8. தமிழ் நாட்டின் சிறைகளில் இருக்கும் 35 பேர் இவ்வாண்டு 12ம் வகுப்பு தேர்வினை எழுதி, அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர்

மே,23,2012. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் என்ற இளைஞர் இவ்வாண்டு நடைபெற்ற 12ம் வகுப்பு அரசுத் தேர்வில் 91 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளார்.
தமிழ் நாட்டின் பல்வேறு சிறைகளில் கைதிகளாய் இருக்கும் 35 பேர் இவ்வாண்டு அரசுத் தேர்வினை எழுதி, அனைவருமே தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், தேர்வு எழுதிய அத்தனைக் கைதிகளிலும் பேரறிவாளன் 1200 மதிப்பெண்களுக்கு 1096 மதிப்பெண்கள் பெற்று முதன்மையாக வெற்றி பெற்றுள்ளார் என்றும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
1991ம் ஆண்டு இராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. இந்தக் கொலைவழக்கில் கைதான பலரில் இவரே மிகவும் இளையவர். கவிதைகளில் அதிக ஆவல் கொண்ட பேரறிவாளன், திருக்குறள் மீது தனி பற்றுள்ளவர் என்று UCAN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சென்ற ஆண்டு 12ம் வகுப்புத் தேர்வு எழுதியவர்கள் 19 பேர் என்றும் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காகி, 35 பேர் தேர்வு எழுதி, அனைவரும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது என்றும் சிறைகளின் கூடுதல் காவல்துறை துறை உயர் தலைவர் S K Dogra செய்தியாளர்களிடம் கூறினார்.


No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...