Thursday, 17 May 2012

Catholic News in Tamil - 16/05/12

1. திருத்தந்தை மிலான் உயர்மறைமாவட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்கள்

2. அக்டோபர் மாதம் துவங்கவுள்ள விசுவாச ஆண்டு நம் விசுவாத்தை மீண்டும் புதுப்பிக்க நல்லதொரு தருணம் - ஹாங்காங் பேராயர்

3. திருத்தந்தையின் உருவத்தை Benetton என்ற பன்னாட்டு நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து எழுந்த ஒரு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது

4. மேற்கு ஆப்ரிக்காவுக்கு தென் கொரிய காரித்தாஸ் அனுப்பியுள்ள 2,50,000 டாலர்கள்

5. பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு - கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம்

6. கத்தோலிக்க மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் நடத்தும் இரு சிறப்பான நிகழ்வுகள்

7. தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம் : வாழ்ந்து காட்டும் வரலாற்றுச் சிறப்பு

8. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த உண்ணாநோன்பு போராட்டம் முடிவு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை மிலான் உயர்மறைமாவட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்கள்

மே,16,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வருகிற ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து 3ம் தேதி வரை மிலான் உயர்மறைமாவட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்களை இச்செவ்வாயன்று வத்திக்கான் செய்தித் தொடர்பகம் வெளியிட்டது.
இந்தப் பயணத்தின் ஒரு மிக்கிய அங்கமாக, மிலான் நகரில் நடைபெறும் குடும்பங்களின் 7வது அனைத்துலக மாநாட்டின் நிறைவுத் திருப்பலியைத் திருத்தந்தை நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் முதல் தேதி வெள்ளியன்று மாலை மிலான் நகர் சென்றடையும் திருத்தந்தை, அன்றிரவு 7.30 மணிக்கு அகில உலக குடும்பங்களின் மாநாட்டு பிரதிநிதிகளுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
மிலான் நகரில் புதிதாக உறுதிப்பூசுதல் பெற்றுள்ள சிறுவர் சிறுமிகளைச் சனிக்கிழமையன்று காலை சந்திக்கும் திருத்தந்தை, மாலையில் மிலான் நகர அரசு அதிகாரிகளைச் சந்தித்து உரை வழங்குவார்.
இப்பயணத்தின் இறுதி நாளான ஞாயிறன்று மாநாட்டின் சிறப்புத் திருப்பலியாற்றும் திருத்தந்தை, மதியம் கர்தினால்கள், ஆயர்கள், மாநாட்டினை ஏற்பாடு செய்வோரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து உரையாற்றுவார்.
வெள்ளியன்று மாலை 4 மணிக்கு உரோம் நகரின் சம்பினோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, மிலான் உயர்மறைமாவட்டத்தில் நடைபெறும் பல பொது நிகழ்வுகளில் பங்கேற்றபின், ஜூன் மாதம் 3ம் தேதி, ஞாயிறு மாலை 5.30 மணியளவில் மீண்டும் உரோம் நகர் வந்தடைவார்.


2. அக்டோபர் மாதம் துவங்கவுள்ள விசுவாச ஆண்டு நம் விசுவாத்தை மீண்டும் புதுப்பிக்க நல்லதொரு தருணம் - ஹாங்காங் பேராயர்

மே,16,2012. இரண்டாம் வத்திக்கான் பேரவையின் 50ம் ஆண்டு நிறைவாக, வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ள விசுவாச ஆண்டும், கத்தோலிக்க மறைகல்வித் தொகுப்பு வெளியிடப்பட்டதன் 20 ஆண்டு நிறைவும் நம்மிடையே விசுவாத்தை மீண்டும் புதுப்பிக்கத் தரப்பட்டுள்ள நல்ல தருணங்கள் என்று ஹாங்காங் பேராயர் கர்தினால் John Tong Hon கூறினார்.
ஹாங்காங் பகுதியில் இவ்வாண்டு உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, 3400க்கும் அதிகமானோர் திருமுழுக்கு பெற்றனர். இவர்களில் 800 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தை அண்மையில் சந்தித்து உரையாற்றிய கர்தினால் Tong Hon இவ்வாறு கூறினார்.
மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தில் இன்னும்  ஆர்வமாக ஈடுபடுவது நமது விசுவாசத்தை வளர்க்கும் ஒரு சிறந்த வழி என்றும் கர்தினால் எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கு மறைகல்வி புகட்டியவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு, திருஅவையின் விசுவாசப் பயணத்தில் தொடர்ந்து தாங்களும் இணைவதாக வாக்களித்தனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


3. திருத்தந்தையின் உருவத்தை Benetton என்ற பன்னாட்டு நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து எழுந்த ஒரு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது

மே,16,2012. Benetton என்ற பன்னாட்டு நிறுவனம் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட Unhate என்ற ஒரு விளம்பரப் படத்தில் திருத்தந்தையின் உருவத்தைத் தவறாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து எழுந்த ஒரு வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாக வத்திக்கான் பேச்சாளர் அருள்தந்தை பெதெரிக்கோ லொம்பார்தி இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டார்.
2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் Benetton நிறுவனம் வெளியிட்ட விளம்பரப் பட வரிசையில் உலகின் பல உயர் தலைவர்களின் படங்கள் வெளியிடப்பட்டதற்குப் பலத்த எதிர்ப்புக்கள் எழுந்தன.
இந்தப் படவரிசையில் திருத்தந்தையின் படம் வெளியிடப்பட்டதற்காக தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து, இந்நிறுவனம் அந்தப் படத்தை உடனே நீக்கியது. இருந்தாலும், திருத்தந்தையின் படத்தை தவறான முறையில் பயன்படுத்துவது குறித்த ஒரு வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.
இந்த வழக்கின் முடிவாக, Benetton நிறுவனம் தனது தவறுக்காக முழு பொறுப்பேற்று மன்னிப்பையும் கேட்டுக் கொண்டது என்று அருள்தந்தை லொம்பார்தியின் அறிக்கை கூறுகிறது.
இந்தத் தவறுக்கு இழப்பீட்டுத் தொகையாக எதையும் திருஅவை பெற விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அருள்தந்தை லொம்பார்தியின் அறிக்கை, இருப்பினும், அறநெறிக்கு எதிராக இந்நிறுவனத்தின் செயல்பாடு இருந்தமையால், திருஅவையின் பிறரன்பு பணிகளுக்கு இந்நிறுவனம் ஓர் அடையாள தொகையை அளிக்க இசைந்துள்ளது என்றும் எடுத்துரைக்கிறது.


4. மேற்கு ஆப்ரிக்காவுக்கு தென் கொரிய காரித்தாஸ் அனுப்பியுள்ள 2,50,000 டாலர்கள்

மே,16,2012. ஒன்றும் செய்யாமல் நின்று,    குழந்தைகள் பட்டினியால் இறப்பதைக் காண எங்கள் மனசாட்சி இடம்தரவில்லை என்று தென்கொரிய காரித்தாஸ் தலைவர் Shin கூறினார்.
மேற்கு ஆப்ரிக்காவில் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் இறக்கும் சூழல் உருவாகியிருப்பதைத் தடுக்க தென்கொரிய காரித்தாஸ் அப்பகுதிக்கு 2,50,000 டாலர்கள், அதாவது, 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் அவசர நிதி உதவியாக அனுப்பியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சியும், உலகில் எல்லா நாடுகளிலும் உணவு விலை கூடியிருப்பதும் இந்தப் பட்டினிச் சாவுகளுக்கு முக்கிய காரணங்கள் என்று காரித்தாஸ் தலைவர் Shin ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
லிபியாவில் நடைபெற்ற போராட்டங்களால் அங்கிருந்து வெளியேறிய புலம்பெயர்ந்தோர் Niger, Burkina Faso, Senegal, Chad ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளது இந்தப் பிரச்னையை இன்னும் அதிகரித்துள்ளது என்று Shin சுட்டிக்காட்டினார்.


5. பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு - கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம்

மே,16,2012. இதற்கிடையே, மக்கள்தொகை அதிகம் உள்ள கராச்சி நகரில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஒரு திட்டத்தை பாகிஸ்தானில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்பு இத்திங்களன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கழிவுப்பொருட்களைத் திறந்த வெளிகளில் கொட்டாமல் இருப்பது, கழிவுப் பொருட்களிலிருந்து எரிசக்தியை உருவாக்குவது, வீட்டைச் சுற்றி காய்கறி செடிகளை நடுவது போன்ற செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காரித்தாஸ் செயலர் Dominic Gill கூறினார்.
திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பை மேடுகளில் குழந்தைகள் விளையாடுவதால், அவர்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் உருவாகி வந்ததும் இத்திட்டத்தினால் தடுக்கப்படும் என்று காரித்தாஸ் அலுவலர் Ayub Shafi எடுத்துரைத்தார்.
கராச்சி நகரில் மட்டும் ஒருநாளைக்கு உருவாகும் கழிவுப் பொருட்களின் எடை 9000 டன்னுக்கும் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


6. கத்தோலிக்க மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் நடத்தும் இரு சிறப்பான நிகழ்வுகள்

மே,16,2012. ஒலிம்பிக் போட்டிகளும், மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகளும் இலண்டன் மாநகரில் நடைபெறவிருப்பதையொட்டி, அந்நாட்டின் கத்தோலிக்க மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் ஒன்றிணைந்து இரு சிறப்பான நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் உண்டு (EveryBody Has a Place) என்ற மையக்கருத்துடன் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று ஜூலை மாதம் 2ம் தேதியன்று இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மைய அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகள், மாற்றுத் திறன், இறையியல் ஆகிய கோணங்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் இக்கருத்தரங்கில் பரிமாறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை அடுத்து, மாற்றுத் திறனாளிகளைச் சிறப்பிக்கும் ஒரு தேசிய நாள் ஜூலை மாதம் 8ம் தேதி கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்களில் ஈடுபட்டிருந்த இளையோரை ஒருங்கிணைக்க பழமைக் காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் உருவாக்கப்பட்டன என்பதில் பொதிந்துள்ள ஆழமான உண்மையை நாம் இன்று மீண்டும் உணர்வதற்கு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள் உதவவேண்டும் என்பதே இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கத் திருஅவையின் குறிக்கோள் என்று ஒலிம்பிக் போட்டிகளுடன் பல்வேறு கத்தோலிக்க நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு வரும் James Parker கூறினார்.


7. தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம் : வாழ்ந்து காட்டும் வரலாற்றுச் சிறப்பு

மே,16,2012. இந்திய உள்ளாட்சி அமைப்புகளில், தன்னுடைய ஊராட்சியை, இந்தியாவின் சிறந்த கிராமமாக மாற்றியிருக்கிறார், மிக்கேல் பட்டண ஊராட்சித் தலைவர் இயேசு மேரி.
வறட்சியும், உப்பு நிறைந்த நிலத்தடி நீரும், இராமநாதபுரத்தில் உள்ள மக்களை, வேறு பகுதிகளுக்குக் குடியேற வைத்தன. ஆனால், இதே மாவட்டத்தில் உள்ள மிக்கேல் பட்டணத்தில், மழை நீரைச் சேகரித்து, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய் வழியாக, ஊருணிக்கு கொண்டு செல்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும், இந்த அமைப்பு முறைப்படுத்தப்பட்டு, ஊருணிக்குச் செல்லும் பொதுக் குழாயில் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, 800 வீடுகளில், மழைக்காலத்தில் சேகரிக்கப்படும் நீர், ஊருணிக்கு அருகே உள்ள தொட்டியில் மேலும் சுத்திகரிக்கப்பட்டு, ஊரின் அருகே உள்ள இரண்டு ஊருணிகளில் சேகரிக்கப்படுகிறது.
இதனால், சுற்றுப் பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது; கிணறுகளில் தண்ணீர் குறைவதில்லை; இது, விவசாயத்திற்கு கை கொடுக்கிறது. வறண்ட பூமியில், இது மிகப்பெரும் சாதனை என்கின்றனர், கிராம மக்கள்.
"கல்வியால் மட்டுமே சமூகம், தன்னிறைவு அடையும். 40 ஆண்டுகளுக்கு முன்பு, என்னை என் தந்தை படிக்க வைத்தார். அதுவே, என் வாழ்விற்கு வெளிச்சத்தைத் தந்தது. அதனால்தான், பல்வேறு முன்னேற்றங்கள் சாத்தியமானது,'' என்கிறார், இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமான, 54 வயது ஊராட்சித் தலைவர் இயேசு மேரி.
இந்த சாதனைகள், உள்ளூர் மக்களின் முழுமையான ஈடுபாட்டில் நிறைவேறி உள்ளது. இதற்காக, மிக்கேல் பட்டணம் ஊராட்சிக்கு விருது வழங்கி, உலக வங்கி கவுரவித்து உள்ளது.


8. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த உண்ணாநோன்பு போராட்டம் முடிவு

மே,16,2012. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரின் ஆலோசனைக்கு இணங்கி, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக கடந்த 14 நாட்களாக உண்ணாநோன்பு போராட்டத்தை மேற்கொண்டவர்கள் இத்திங்களன்று தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி A.P.Shah போராட்டக் குழுவினருக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளைத் துவங்க, போராட்டக் குழவினர் தங்கள் உண்ணாநோன்பு போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், இப்போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்று போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவரான விக்டோரியா புஷ்பராயன் கூறினார்.  
மேமாதம் முதல் தேதியன்று 35 பேருடன் ஆரம்பமான இந்தப் போராட்டம் இரு நாட்களில் 337 பேராக உயர்ந்தது. இவர்களில் பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இறுதியில் இத்திங்கள்வரை 67 பேர் தொடர்ந்து 14 நாட்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மூலம் மக்கள் வாழ்வுக்கு எந்தவித பாதிப்பும் நேராமல் இருப்பதற்கு சட்டப்பூர்வமான அனைத்து உறுதிகளையும் அரசு அளிக்க வேண்டுமென்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் (PMANE)  எடுத்துவரும் பல முயற்சிகளின் ஒன்றாக இந்த காலவரையறையற்ற உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்ந்தது.

 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...