Thursday, 24 May 2012

Catholic News in Tamil - 22/05/12

1. வரலாற்றில் இடம்பெறுவது இருவேறு அன்புகளுக்கிடையேயான போராட்டம் என்கிறார் திருத்தந்தை

2. போர்க்காலத்தில் உயிரிழந்த, காணாமற்போன அப்பாவி மக்களுக்கான செப நாளைச் சிறப்பித்துள்ளனர் இலங்கையின் அருள்சகோதரிகள்

3. அமெரிக்க அரசை எதிர்த்து 43 கத்தோலிக்க நிறுவனங்கள் தொடுத்துள்ள வழக்குகள்

4. தெற்கு ஆப்ரிக்க நாடுகளின் தேர்தல்களில் கண்காணிப்பாளர்களாகச் செயல்பட அப்பகுதி ஆயர்கள் முன்வந்துள்ளனர்

5. 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்கு அயர்லாந்து இளையோரின் முயற்சிகள்

6. தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ தம்பதி விடுவிக்கப்பட்டுள்ளனர்

7. உலகப் புகழ்பெற்ற இசை நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் பாடும் பிரான்சிஸ்கன் துறவி

8. புகையிலையால் வரும் ஆபத்தும் - செலவும்

------------------------------------------------------------------------------------------------------

1. வரலாற்றில் இடம்பெறுவது இருவேறு அன்புகளுக்கிடையேயான போராட்டம் என்கிறார் திருத்தந்தை

மே,22,2012. இறைவனை மறந்து தன்னையே அன்புக் கூர்தல், மற்றும் மரணமாயினும் தன்னையே மறுத்து இறைவனை அன்புக் கூர்தல் என்ற இருவகையான அன்புகளுக்கிடையேயான போராட்டமே வரலாறு முழுவதும் காணப்படுகிறது என திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றும் கர்தினால்களிடம் உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த மாதம் சிறப்பிக்கப்பட்ட திருத்தந்தையின் 85வது பிறந்த நாளையொட்டி இத்திங்களனறு திருப்பீட தலைமையகக் கர்தினால்களைச் சந்தித்து உரை வழங்கிய பாப்பிறை, மகிழ்ச்சி நிரம்பிய நாட்களைத் தனக்குத் தந்த இறைவனுக்கும், கர்தினால்களின் நட்பு வட்டாரத்திற்கும் நன்றியுரைப்பதாக கூறியதோடு, வரலாறு முழுவதும் இருவிதமான அன்புகளுக்கு இடையேயான போராட்டம் இடம்பெற்று வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.
இவ்வுலகை ஆள விரும்பும் தீயோன், பல்வேறு வன்முறை வழிகள் மற்றும் ஏமாற்று வேலைகள் மூலம் சமூகத்தின் ஒழுக்க நெறிக் கோட்பாடுகளை அழித்து வருவதையும் இக்காலத்தில் காணமுடிகிறது என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இவ்வுலகை வெற்றி கண்டுள்ள நம் மீட்பரின் பாதையில் துணிச்சலுடன் நடைபோடுவோம் என்ற வார்த்தைகளுடன் கர்தினால்களுக்கான தன் உரையை நிறைவுச் செய்தார் பாப்பிறை.


2. போர்க்காலத்தில் உயிரிழந்த, காணாமற்போன அப்பாவி மக்களுக்கான செப நாளைச் சிறப்பித்துள்ளனர் இலங்கையின் அருள்சகோதரிகள்

மே,22,2012. இலங்கை உள்நாட்டுப்போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து கடந்த சனிக்கிழமையை அரசு சிறப்பித்த அதேவேளை, போர்க்காலத்தில் உயிரிழந்த, காணாமற்போன அப்பாவி மக்களுக்கான செப நாளைச் சிறப்பித்துள்ளது இலங்கையின் நீதி, உண்மை மற்றும் ஒப்புரவிற்கான அருள்சகோதரிகள் அவை.
போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நினைவுகூரப்படும்போது எவ்விதத்திலும் பாகுபாடுகள் இடம்பெறக்கூடாது என்ற அருள்சகோதரிகள் அவை, மன்னிப்பும் இரக்கமுமே உண்மையான ஒப்புரவைக் கொண்ரமுடியும் எனவும் தெரிவித்தனர்.
உள்நாட்டுப்போரில் உயிரிழந்த, காணாமற்போன மற்றும் இன்னும் அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கென கடந்த சனிக்கிழமையன்று ஒன்று கூடி செபித்த இலங்கை அருள்சகோதரிகள், இப்போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்தது குறித்து அரசு மக்களின் மன்னிப்பை வேண்ட வேண்டும் எனவும் விண்ணப்பித்தனர்.


3. அமெரிக்க அரசை எதிர்த்து 43 கத்தோலிக்க நிறுவனங்கள் தொடுத்துள்ள வழக்குகள்

மே,22,2012. அமெரிக்க அரசால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நலக் காப்பீட்டுத் திட்டம் கத்தோலிக்கர்களின் அடிப்படை மதச் சுதந்திரத்திற்கு எதிராக அமைந்திருப்பதால், இதனை நீதிமன்றங்களின் வழியே எதிர்ப்பதற்கு அமெரிக்கக் கத்தோலிக்கர்கள் துணிந்துள்ளனர் என்று நியூயார்க் பேராயர் கர்தினால் Timothy Dolan கூறினார்.
கருத்தடை, கருக்கலைப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு நலக் காப்பீட்டுத் திட்டம் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படும் நேரம் நெருங்கி வருவதால், இதனை எதிர்த்து, அமெரிக்காவில் உள்ள 43 கத்தோலிக்க நிறுவனங்கள் வழக்குகளைத் தொடுத்துள்ளன.
கத்தோலிக்கர்களின் இந்த நிலைப்பாடு குறித்து இத்திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய நியூயார்க் பேராயரும், அமெரிக்க ஆயர் அவையின் தலைவருமான கர்தினால் Dolan, கத்தோலிக்கர்கள் இந்தப் பிரச்சனையில் காட்டிவரும் ஒத்தமைந்த கருத்துக்கள் உற்சாகம் தருகின்றன என்று கூறினார்.
அமெரிக்க ஆயர் பேரவை நேரடியாக எந்த வழக்கும் தொடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய கர்தினால் Dolan, மற்றபடி, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகள் இன்னும் பல மறைமாவட்டங்கள் தனித்தனியே வழக்குகளைத் தொடுத்துள்ளன என்று கூறினார்.
கத்தோலிக்கப் படிப்பினைகளை மற்றவர்மீது திணிக்காமல் கத்தோலிக்க நிறுவனங்கள் அமெரிக்காவில் பணிகளைச் செய்து வருகிறது, இச்சூழலில் கத்தோலிக்க நிறுவனங்கள் மீது அரசு தன் எண்ணங்களைத் திணிப்பதற்குத் தாங்கள் பணியப் போவதில்லை என்று புகழ்பெற்ற Notre Dame பல்கலைக் கழக முதல்வர் அருள்தந்தை John Jenkins கூறினார்.


4. தெற்கு ஆப்ரிக்க நாடுகளின் தேர்தல்களில் கண்காணிப்பாளர்களாகச் செயல்பட அப்பகுதி ஆயர்கள் முன்வந்துள்ளனர்

மே,22,2012. தெற்கு ஆப்ரிக்காவில் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் நாடுகள், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல் இடம்பெறுவதற்கானச் சூழல்களுக்கு உறுதி வழங்கவேண்டும் என அப்பகுதி நாடுகளின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மக்களுக்குத் தேவையான வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக நிற்கும் வன்முறை மற்றும் பாதுகாப்பற்ற நிலைகள் குறித்து அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற தெற்கு ஆப்ரிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவர் ஆயர் Nubuasah, அடுத்த ஆண்டு அப்பகுதியின் பல நாடுகளில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில், அப்பகுதி ஆயர்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களாகச் செயல்படுவர் என்றார்.
சவால் நிறைந்த தேர்தல் காலங்களில் நன்னெறிக் கோட்பாடுகளையும் மக்களின் மாண்பையும் மதித்துச் செயல்படவேண்டியது அரசுகளின் கடமை என மேலும் கூறினார் ஆயர் Nubuasah.


5. 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்கு அயர்லாந்து இளையோரின் முயற்சிகள்

மே,22,2012. அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் வருகிற ஜூன் மாதம் 11ம் தேதி முதல் 16 முடிய நடைபெற உள்ள 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் தயாரிக்கும் ஒரு முயற்சியாக அயர்லாந்து இளையோர் பல செயல்பாடுகளைத் திட்டமிட்டுள்ளனர்.
'எழுந்து செல்லுங்கள்' (Get Set and Go) என்ற பொருள்படும் இந்த நிகழ்ச்சியில் மறைகல்வி, கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், செப வழிபாடுகள் என்று பல செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று கத்தோலிக்க செய்தி நிறுவனம் ICN கூறியுள்ளது.
இளையோருக்கான இடம் என்ற பொருள்படும் Chiara Luce Youth Space என்ற அமைப்பு, திருநற்கருணை மாநாட்டின்போது தியானம், இசை, கலந்துரையாடல் என்ற பல்வேறு வழிகளில் இளையோருக்கு இறைவனை ஆழமாக அறிமுகம் செய்துவைக்கும் என்று இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் Anna Keegan கூறினார்.
இத்தாலியில் வாழ்ந்த இளம்பெண் Chiara Badano புற்றுநோயால் துன்புற்றாலும், Focolare இயக்கத்தில் ஈடுபட்டு, தன் மகிழ்வையும் விசுவாசத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டதன் மூலம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். இவரை 2010ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஓர் அருளாளராக உயர்த்தினார்.
அருளாளர் Chiara Badanoவைப் பாதுகாவலராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள Chiara Luce Youth Space அமைப்பு 50வது அகில உலகத் திருநற்கருணை மாநாட்டில் இளையோரை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடவுள்ளது.


6. தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ தம்பதி விடுவிக்கப்பட்டுள்ளனர்

மே,22,2012. தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் நான்கு ஆண்டுகளாகச் சிறைவைக்கப்பட்டிருந்த ஒரு கிறிஸ்தவத் தம்பதி, தற்போது குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் ஒருவருடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவரால் பொய்யாக தேவ நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்துள்ள முனிர் மசிஹ் மற்றும் ருக்காயா தம்பதியர், லாகூர் உயர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Muhammad Yousaf என்பவரின் குழந்தைகளுக்கும் இக்கிறிஸ்தவ தம்பதியரின் குழந்தைகளுக்கும் இடையே இடம்பெற்ற சிறிய தகராறின் காரணமாக இத்தம்பதியர் மீது Yousaf  தேவநிந்தனைக் குற்றம் சுமத்தினார்.
குற்றம் சுமத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்துள்ள இத்தம்பதிக்கு எதிராக எவரும் சாட்சி சொல்ல வராத நிலையில், இவர்கள் தற்போது விடுவிக்கப்படுள்ளனர்.


7. உலகப் புகழ்பெற்ற இசை நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் பாடும் பிரான்சிஸ்கன் துறவி

மே,22,2012. இசையே இறைவனுடன் என்னை  இணைக்கும் நேரடியானத் தொடர்பு, இசை வழியாகவே இறைவனும் என்னுடன் தொடர்பு கொள்கிறார் என்பதையும் நான் உணர்கிறேன் என்று பிரான்சிஸ்கன் துறவுச் சபையைச் சேர்ந்த அருள்சகோதரர் Alessandro Brustenghi கூறினார்.
Decca Records/Universal Music என்ற புகழ்பெற்ற இசை நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் இத்திங்களன்று முதல் முறையாகப் பாடியுள்ள அருள்சகோதரர் Brustenghi, 33 வயது நிரம்பிய பிரான்சிஸ்கன் துறவி.
இத்தாலியில் பிறந்த Alessandro, தன் இளவயதில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் இசையை இரசித்து வளர்ந்தவர். தனது 21வது வயதில் இறைவனின் அழைப்பை ஏற்றார். தன் துறவு வாழ்வில் இசைக்கு இவர் ஒதுக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
Decca Records நிறுவனத்தின் மூலம் இவர் பாடும் பாடல்கள் வருகிற அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இசை நிறுவனத்தின் இந்த ஒப்பந்தம் இவருக்கு வழங்க உள்ள தொகை முழுவதும் பிரான்சிஸ்கன் துறவு சபை மேற்கொண்டுள்ள அனைத்து பிறரன்புப் பணிகளுக்கு வழங்கப்படும் என்று அருள்சகோதரர் Alessandro Brustenghi தெரிவித்தார்.


8. புகையிலையால் வரும் ஆபத்தும் - செலவும்

மே,22,2012. புகையிலை பயன்பாட்டால் உருவாகும் புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்காக 30 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகிறது என அண்மையில் தமிழகத்தில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
புகையிலையால் அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரத்து 271 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கின்ற நிலையில்,  புகையிலையால் உண்டாகும் நோய்களுக்காக அரசுக்கு ஆகும் செலவு அதைவிட மூன்று மடங்கு என, வேடச்சந்தூரில் நடைபெற்ற, புகையிலைக்கான மாற்று விவசாயம் குறித்த கருத்தரங்கில், அடையாறு புற்றுநோய் மைய பேராசிரியர் விதுபாலா தெரிவித்தார்.
புகையிலையால் தினமும் 2,500 பேர் இறக்கின்றனர். மற்றும், புகையிலையில் நான்காயிரம் நச்சுப் பொருட்கள் உள்ளன, ஒவ்வொரு முறையும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தும் போது வாழ்நாளில் 7 முதல் 14 நிமிடங்கள் வரை குறைகிறது,  என மேலும் கூறினார் அவர்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...