Sunday, 27 May 2012

Catholic News in TAmil - 24/05/12

1. திருத்தந்தை : கடவுளும் காயப்பட்ட ஐரோப்பாவும்
2. பல்கேரியா, மாசிடோனியா அரசுத்தலைவர்கள், திருத்தந்தை சந்திப்பு
3. ஏழைக் குடும்பங்களுடன் திருத்தந்தை மதிய உணவு
4. குடியேற்றதாரர் குறித்த அமெரிக்க ஆயர்களின் கூட்டம்
5. எல் சால்வதோரில் வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களை நிறுத்துவதற்கு சான் சால்வதோர் பேராயர் வலியுறுத்தல்
6. போலியோ நோயைத் தடுப்பதற்கு அவசரகாலத் திட்டம்
7. கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக தனது நாட்டைவிட்டு வெளிநாடு செல்லவிருக்கிறார் Aung San Suu Kyi
8. இந்தியாவின் 200 கோடி டாலர் தெற்காசிய உதவித் திட்டம்
9. மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை வீடுகளுக்கே சென்று பெறும் புதிய முயற்சி
-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கடவுளும் காயப்பட்ட ஐரோப்பாவும்
மே24,2012. அன்றாட வாழ்விலிருந்து கடவுளை ஒதுக்கி வைத்தால் மனித மாண்பும் நீதியும் சுதந்திரமும் மலராது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலிய ஆயர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அவ்வுரையின் இறுதியில் தூய ஆவியிடம் செபித்த போது, கடவுளை ஒதுக்கி வாழும் போது அது இடர்களுக்கே இட்டுச்செல்லும் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும், மனித மாண்பும் சுதந்திரமும் மலர்ந்தால்தான் ஒரு சமுதாயத்தை  நீதியில் சமைக்க முடியும் என்பதை மனித சமுதாயத்துக்கு உணர்த்தும் என்று வேண்டினார்.
ஐரோப்பாவில் சமய நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக திருப்பலிக்குச் செல்வோர் மற்றும் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில், காயப்பட்ட ஐரோப்பாவில் கடவுள் பற்றி அறிவித்து அவரைக் கொண்டாட வேண்டும், அவருக்குச் சான்று பகர வேண்டுமெனக் கேட்டுள்ளார் திருத்தந்தை.
கடவுள் அறியப்படாதவராக நோக்கப்பட்டு, இயேசு ஒரு வரலாற்று நாயகன் என்ற நிலையில் மட்டும் பார்க்கப்படும் போக்கு நிலவும் இக்காலத்தில் ஆழமான இறையனுபவம் பெற்ற மனிதரின் வாழ்க்கையினால் மட்டுமே மக்கள் கிறிஸ்துவிடம் ஈர்ப்பைப் பெறுவார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
நமது பற்றுறுதி மற்றும் செபத்தின் தன்மையைப் புதுப்பிக்காவிட்டால் மறைபோதகப் பணியில் மறுமலர்ச்சி இருக்காது என்றும் திருத்தந்தை கூறினார்.    
2. பல்கேரியா, மாசிடோனியா அரசுத்தலைவர்கள், திருத்தந்தை சந்திப்பு
மே24,2012. இவ்வியாழனன்று பல்கேரிய நாட்டு அரசுத்தலைவர் Rossen Plevneliev, மாசிடோனியக் குடியரசுத் தலைவர் Nikola Guevski ஆகியோரையும் தனித்தனியே திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஐரோப்பாவின் இணைப்பாதுகாவலர்கள் புனிதர்கள் சிரில்,மெத்தோடியஸ் ஆகியோரின் விழாக்களையொட்டி இவ்விரு நாடுகளின் தலைவர்களும் திருத்தந்தையையும், பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தனர்.
3. ஏழைக் குடும்பங்களுடன் திருத்தந்தை மதிய உணவு
மே24,2012. இத்தாலியின் மிலான் நகரில் இம்மாதம் 30 முதல் ஜூன் 3 வரை நடைபெறும் ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டிற்குச் செல்லும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தேவையில் இருக்கும் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் விருந்தோம்பல் பண்பையும் தெரிவிப்பார் என்று மிலான் பேராயர் கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலா அறிவித்தார்.
இவ்வுலக மாநாடு நிறைவடையும் ஜூன் 3ம் தேதியன்று சுமார் நூறு குடும்பங்களின் 300 உறுப்பினர்களுடன் திருத்தந்தை மதிய உணவு அருந்துவார் என்று கர்தினால் ஸ்கோலா நிருபர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோர், அரசியல்ரீதியான அகதிகள், குடியேற்றதாரர், வயதான தம்பதியர் ஆகியோர் இந்த மதிய உணவுக்கெனத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வுலக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கும் வெளிநாட்டவர்க்கு உதவும் நோக்கத்தில், மிலான் குடும்பங்கள் 2012 என்ற அமைப்பும் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு இதுவரை சுமார் ஐம்பதாயிரம் யூரோக்களைத் திரட்டியிருப்பதாகவும் நிருபர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
குடும்பங்களைக் கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவிருக்கும் இவ்வுலக மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த 104 பேர் உரையாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. குடியேற்றதாரர் குறித்த அமெரிக்க ஆயர்களின் கூட்டம்
மே24,2012. அமெரிக்கக் கண்டத்தில் சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் குடியேற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆராயும் நோக்கத்தில் அக்கண்டத்தின் ஆயர்கள் வரும் வாரத்தில் தொமினிக்கன் குடியரசில் கூட்டம் நடத்தவுள்ளனர்.  
இம்மாதம் 28 முதல் 30  வரை நடைபெறும் இக்கூட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ, மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் நாடுகளின் ஆயர்கள் கலந்து கொள்வார்கள் என்று பீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
குடியேற்றதாரரின் சொந்த நாடுகள் மற்றும் அவர்கள் வாழும் நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இன்னும் இவர்களுக்குத் திருஅவையின் மேய்ப்புப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து பேசப்படும் எனவும் பீதெஸ் அறிவித்தது.
5. எல் சால்வதோரில் வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களை நிறுத்துவதற்கு சான் சால்வதோர் பேராயர் வலியுறுத்தல்
மே24,2012. மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் இரண்டு போட்டி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் சான் சால்வதோர் பேராயர் ஹோசே லூயிஸ் எஸ்கோபார் அலாஸ்.
இந்தக் கும்பல்களுக்கிடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கானப் பேச்சுவார்த்தையில் இடைநிலை வகிக்கும் அந்நாட்டு இராணுவ ஆன்மீக ஆலோசகர் பேராயர் Fabio Colindres வின் முயற்சிகளுக்குத் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார் சான் சால்வதோர் பேராயர் எஸ்கோபார் அலாஸ்.
Mara Salvatrucha, Mara-18 ஆகிய இரண்டு முக்கிய வன்முறைக் கும்பல்களால் அந்நாட்டில் அண்மை ஆண்டுகளாக மக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன. மேலும், ஒரு இலட்சம் குடிமக்களுக்கு 65 கொலைகள் வீதம் நடந்து வரும் எல் சால்வதோர் நாடு இலத்தீன் அமெரிக்காவில் வன்முறை மிகுந்த நாடுகளில் இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளது.
6. போலியோ நோயைத் தடுப்பதற்கு அவசரகாலத் திட்டம்
மே24,2012. போலியோ நோய்ப் பாதிப்பு இல்லாமல் இருந்த நாடுகளில் மீண்டும் அந்நோய்ப் பாதிக்கத் தொடங்கியிருப்பதால், இந்நோயைத் தடுப்பதற்கு உலக அளவில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் விரைவில் உலகினரை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ஆப்ரிக்கா, தாஜிக்கிஸ்தான், சீனா ஆகிய பகுதிகளில் போலியோ நோய்க்கிருமிகள் பரவத் தொடங்கியிருப்பதாக WHO கூறியது.
நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டுமென்றும் WHO நிறுவனம் கேட்டுள்ளது.
தகுந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், பத்தாண்டுக்குள், ஒவ்வோர் ஆண்டும் உலகில் சுமார் 2 இலட்சம் சிறார் வாதநோயாளிகளாகிவிடுவார்கள் என்று இந்நிறுவன உறுப்பினர்கள் ஜெனீவா கூட்டத்தில் எச்சரித்தனர்.
போலியோ நோய் அச்சுறுத்தல் அதிகமாக இருந்த நாடுகளில் ஒன்றான இந்தியா, கடந்த பிப்ரவரியிலிருந்து அந்நோய்ப் பாதிப்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
7. கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக தனது நாட்டைவிட்டு வெளிநாடு செல்லவிருக்கிறார் Aung San Suu Kyi
மே24,2012. மியான்மார் சனநாயக ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் Aung San Suu Kyi, கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக அடுத்த வாரத்தில் தனது நாட்டைவிட்டு வெளிநாடு செல்லவிருக்கிறார்.
இம்மாதம் 30 முதல் ஜூன் 1 வரை தாய்லாந்து நாட்டு பாங்காக்கில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்கெனச் செல்லவிருக்கிறார் Suu Kyi.
மியான்மாரில் மக்களாட்சி ஏற்படுவதற்காக அமைதியான முறையில் போராடியதற்காக ஏறத்தாழ 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்தவர் சு சி. 66 வயதாகும் இவர் வருகிற ஜூனில் ஆஸ்லோ சென்று 1991ம் ஆண்டில் தான் பெற்ற அமைதி நொபெல் விருதுக்கான உரை வழங்குவார். ஜூன் 21ம் தேதியன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின் விருந்தினராக உபசரிக்கப்படுவார். 
8. இந்தியாவின் 200 கோடி டாலர் தெற்காசிய உதவித் திட்டம்
மே24,2012. தெற்காசிய நாடுகளுக்கு உதவ, 200 கோடி டாலர்கள் அளவுக்கு, நிதி உதவி அமைப்பு ஒன்றை, தனது மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் மூலம் உருவாக்கியிருக்கிறது இந்தியா.
இதன்மூலம், அண்டை நாடுகள், இந்தியாவின் ரிசர்வ் வங்கியை அணுகி நிதி உதவி பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய கடன் வசதி அமைப்பு, அண்டை நாடுகளிடையே, இந்தியா தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலானது என்று கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலர் நீலகண்டன் ரவி, இந்நடவடிக்கையானது, அண்டை நாடுகளுடன் இந்திய உறவுகள் மேம்பட உதவும் என்று கூறினார்.
9. மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொள்ளும் புதிய முயற்சி
மே24,2012. வீடுகளுக்கே சென்று மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை அளிக்கும் ஒரு புதிய முயற்சியில் சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பட்டதாரி தம்பதியினர் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக பிளாஸ்டிக், ரப்பர், காகிதம், இரும்பு, அலுமினியம் போன்று மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை, வீடுகளுக்கே சென்று பெற்றுவரும் ஒரு திட்டத்தை ஜோசஃப் ஜெகன் மற்றும் சுஜாதா தம்பதியினர் இணையதளம் மூலம் மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார்கள்.
இந்தியாவில் குப்பைகளை அகற்றுவது ஒரு பெரும் பிரச்சினையாக இருப்பதாலும், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் சிறுவணிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் தம்மால் எடுக்கப்பட்டுவரும் புது முயற்சிக்கு வரவேற்பு இருப்பதாக ஜோசஃப் ஜெகன் தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 3200 மெட்ரிக் டன்கள் அளவுக்கு குப்பைகள் சேர்வதாக மாநகராட்சி கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...