Sunday, 6 May 2012

Catholic News in Tamil - 05/05/12

1. திருத்தந்தை : கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் கத்தோலிக்கத்தின் தனித்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்

2. அல்பேனிய அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு

3. திருப்பீடப் பேச்சாளர் : அறிவியல் அன்பின்றி தனது மேன்மையை இழக்கிறது

4. பிரிட்டனில் சமய சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் சர்வதேச நிகழ்ச்சி

5. கென்யாவில் தேர்தல் குறித்த கல்வியை வளர்க்க ஆயர்கள் நடவடிக்கை

6. 26 புதிய சுவிஸ் காவல்வீரர்கள் பணியேற்பு

7. தினமும் ஏறக்குறைய ஆயிரம் பெண்கள் குழந்தை பிறப்பின் போது இறக்கின்றனர் ஐ.நா.

8. அனைத்துலக கை கழுவும் தினம்


-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் கத்தோலிக்கத்தின் தனித்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்

மே 05,2012. உண்மையான கத்தோலிக்கமாக இருக்கும் அறிவுசார்ந்த கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்வது அமெரிக்கத் தலத்திருஅவைக்கு இன்றியமையாதது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவையொட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் 13 வது குழுவை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் கத்தோலிக்கத்தின் தனித்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
கத்தோலிக்கத்தின் தனித்தன்மை வலியுறுத்தப்படும் பொழுது அது கிறிஸ்துவின் விடுதலையளிக்கும் உண்மையையும், நற்செய்தியால் உந்தப்பட்ட, முழுவதும் மனிதம் நிறைந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு உரையாடலையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.
இக்காலத்தில் பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் நெருக்கடியைக் களைவதற்கு உதவுவதில் கத்தோலிக்க நிறுவனங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும் கூறிய திருத்தந்தை, கத்தோலிக்கக் கல்வி, புதிய நற்செய்திப்பணியின் ஒரு பகுதியாக இருக்கின்றது என்றும் கூறினார்.
அறிவு மற்றும் நற்பண்புகளால் வாழ்வு முழுவதும் வழிநடத்தப்படுவதற்கு மாணவர்கள் பற்றுறுதிக்கும் அறிவுக்கும் இடையே இருக்கும் நல்லிணக்கத்தை இணைத்துப் பார்ப்பதற்கு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை எடுத்துச் சொன்னார்.
பற்றுறுதிக்கும் மனித அறிவுக்கும் இடையே இருக்கும் உறவு பற்றிக் கூறும் பொழுது, ஞானத்தை அன்பு செய்வது இறைவனை அன்பு செய்வதாகும் என்று புனித அகுஸ்தீன் கூறினார் என்றும் உரைத்த திருத்தந்தை, கல்வியில் அறிவை மட்டும் வழங்கினால் போதாது, இதயங்களையும் வடிவமைக்க வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உலகில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, இரண்டாவது பெரிய ஆயர் பேரவையாகும். இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

2. அல்பேனிய அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு

மே 05,2012. அல்பேனிய அரசுத் தலைவர் Bamir Topiஐ இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் 20 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அல்பேனிய அரசுத் தலைவர் Topi.
அல்பேனியாவுக்கும் திருஅவைக்கும் இடையே நிலவும் உறவு, குறிப்பாக, பல்சமய உரையாடல், அந்நாட்டின் கல்வி மற்றும் சமூக வாழ்வுக்குக் கத்தோலிக்கத் திருஅவை செய்து வரும் பணிகள், ஐரோப்பிய சமுதாய அவையில் அல்பேனியா இணைவது ஆகியவை இச்சந்திப்புக்களின்போது பேசப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.

3. திருப்பீடப் பேச்சாளர் : அறிவியல் அன்பின்றி தனது மேன்மையை இழக்கிறது

மே 05,2012. அறிவியல், அன்பின்றி தனது மேன்மையை இழக்கிறது, அன்பு மட்டுமே மனித சமுதாயத்தின் அறிவியல் ஆய்வுக்கு உறுதி வழங்குகிறது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
உரோம் இயேசுவின் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையிடம் இவ்வியாழனன்று  திருத்தந்தை பேசியதை, வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் சுட்டிக் காட்டிய அருள்தந்தை லொம்பார்தி, மனித மனம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மனித சமுதாயத்தின் நலனுக்காகவென்று அமைந்துள்ளதா? என்ற கேள்வியையும் திருத்தந்தை எழுப்பியதாகக் கூறினார்.
அறிவியலும் மருத்துவ ஆராய்ச்சியும் மனித நலத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது, அன்பினால் வழிநடத்தப்பட வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது இதில் தெரிகின்றது என்றும் அவர் தெரிவித்தார். 

4. பிரிட்டனில் சமய சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் சர்வதேச நிகழ்ச்சி

மே 05,2012. இம்மாதம் 17ம் தேதி பிரிட்டனில் நடைபெறவிருக்கும் சமய சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில், கிறிஸ்தவர்கள் நசுக்கப்படும் நாடுகளின் ஆயர்களும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலண்டன் Westminster பேராலயத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், இந்தியா, பாகிஸ்தான், ஈராக், எகிப்து, நைஜீரியா போன்ற நாடுகளின் ஆயர்களும் கலந்து கொண்டு சமய சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் சர்வதேச விவகார ஆணையத் தலைவர் ஆயர் Declan Lang, Westminster பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தி இதனைத் தொடங்கி வைப்பார்.
இந்நிகழ்ச்சியில் சமய சுதந்திரத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மற்றும் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களின் சாட்சியங்களும் வழங்கப்படும் என அறிவி்க்கப்பட்டுள்ளது. 

5. கென்யாவில் தேர்தல் குறித்த கல்வியை வளர்க்க ஆயர்கள் நடவடிக்கை

மே 05,2012. ஆப்ரிக்க நாடான கென்யாவில் 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்கள் கலவரங்களின்றி இடம் பெறுவதற்கு உதவுவதற்குத் திட்டமிட்டு வருகின்றனர் ஆயர்கள்.
நல்ல தலைவர்களின் பண்புகளை விளக்கும் தேர்தல் கையேடு ஒன்றைத் தயாரிப்பதற்குத் திட்டமிட்டு வரும் கென்ய ஆயர்கள், நாட்டின் நலனைத் தங்கள் இதயத்தில் கொணடிருக்கும் தலைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்குமாறு மக்களைத் தூண்டவிருப்பதாகக் கூறினர்.
கென்யாவில் 2010ம் ஆண்டில் மாற்றி அமைக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பின்படி முதன்முதலாக இந்த 2013ம் ஆண்டுத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.  
2007ம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இடம் பெற்ற வன்முறையில் 1,220 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. 26 புதிய சுவிஸ் காவல்வீரர்கள் பணியேற்பு

மே 05,2012. 1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்டபோது அப்போதைய திருத்தந்தையைக் காப்பாற்றுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து படைவீரர்கள் உயிரிழந்த வீரத்துவச் செயலை நினைவுகூரும் விதமாக, இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் 26 புதிய சுவிஸ் காவல் வீரர்களின் பணியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தப் படைவீரர்கள் உயிரிழந்த மே 6ம் நாளன்று ஒவ்வோர் ஆண்டும் புதிய சுவிஸ் காவல் வீரர்கள் உறுதிமொழி எடுத்து பணியில் சேருகின்றனர்.
திருத்தந்தை 7ம் கிளமெண்ட் திருப்பீட மாளிகையை விட்டுத் தப்பித்துச் செல்வதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தது இந்நாளில் நினைவுகூரப்படுகின்றது.  
சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்கள், திருத்தந்தையின் திருப்பயணங்கள், அவர் நிகழ்த்தும் திருவழிபாடுகள், பொதுச் சந்திப்புக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கின்றனர். இன்னும் வத்திக்கான் மாளிகையையும் பாதுகாக்கின்றனர். இந்த சுவிஸ் மெய்க்காப்பாளர்கள், 19 க்கும் 32 வயதுக்கும் உட்பட்ட கத்தோலிக்க இளைஞராக இருக்க வேண்டும். குறைந்தது 5 அடி 9 அங்குலம் உயரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

7. தினமும் ஏறக்குறைய ஆயிரம் பெண்கள் குழந்தை பிறப்பின் போது இறக்கின்றனர் ஐ.நா.

மே 05,2012. மருத்துவச்சியர் எனப்படும் பேறுகாலத்தில் மருத்துவ உதவி செய்யும் பெண்கள் எக்காலத்தையும்விட இக்காலத்திற்கு அதிகம் தேவைப்படுகின்றனர் என்று ICM என்ற அனைத்துலக மருத்துவச்சியர் கூட்டமைப்பு கூறியது.
மே5, இச்சனிக்கிழமை அனைத்துலக மருத்துவச்சியர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்நாளை முன்னிட்டுப் பேசியுள்ள UNFPA என்ற ஐ.நா.மக்கள்தொகை நிதியமைப்பு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை வசதியில்லாத இலட்சக்கணக்கானப் பெண்கள் நல்ல முறையில் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு இவர்கள் செய்து வரும் உதவிகளைப் பாராட்டியுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஆயிரம் பெண்கள் குழந்தை பிறப்பின் போது இறக்கின்றனர். 20 இலட்சம் குழந்தைகள் பிறந்த 24 மணி நேரத்தில் இறந்து விடுகின்றன என்று UNFPA அறிவி்த்தது.

8. அனைத்துலக கை கழுவும் தினம்

மே 05,2012. மே 05, இச்சனிக்கிழமை அனைத்துலக கைகழுவும் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம், குறைந்தது 7 வளர்ந்த நாடுகள் மற்றும் 10 வளரும் நாடுகளில் கை கழுவாததால் ஏற்படும் நலவாழ்வுப் பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்குகின்றனர் என்று கூறியது.
மரு்ததுவமனைகளில் நோயாளிகளைப் பராமரிக்கும் போது கைகளைக் கழுவுவதில் மிகுந்த கவனம் செலுத்தினால் பல தொற்றுக் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம் என்றும் WHO கூறியது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...