1.
திருத்தந்தை : மிகக் கொடிய வறுமை அன்பின்மை
2.
பிரிட்டனின் ஒரு Ordinariate க்குத் திருத்தந்தை நிதியுதவி
3. வளர்ந்து
வரும் மக்கள்தொகை பிலிப்பீன்சின் பொருளாதாரத்துக்கு உதவுகின்றது என்ற கூற்றுக்கு ஆயர்கள்
வரவேற்பு
4.
அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி : நேபாளத்தில் சமய சுதந்திரம் அச்சுறுத்தலில்
இருக்கின்றது
5.
காங்கோ குடியரசில் புரட்சிக்குழுவின் வன்முறையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு
6. கொரியாவில்
கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து வளர்ந்து வருகின்றது
7.
ஆசியப் பள்ளிச் சிறாருக்குக் கண் பிரச்சனை
8.
மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : மிகக் கொடிய வறுமை அன்பின்மை
மே 04,2012. இவ்வுலகில்
பெரும் துன்பங்களுக்கு காரணமாகும் பொருளாதார மற்றும் ஆன்மீக வறுமையை அகற்றுவதற்கு உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்படுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
எத்தியோப்பியா, மலேசியா, அயர்லாந்து,
ஃபிஜி மற்றும் அர்மேனியா நாடுகளின் திருப்பீடத்துக்கான தூதர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில்
சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக்
கொண்டார்.
தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியினால்
குடும்பங்களில் அதிகரித்து வரும் நிலையற்ற தன்மை, மனத்தளர்ச்சி, தனிமை போன்றவற்றைச்
சுட்டிக் காட்டிய திருத்தந்தை, சமுதாயத்தில் சமூக சமத்துவமின்மை அதிகரிக்காமல் இருப்பதற்கும்,
மக்களுக்குத் தரமான வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கும் சாதகமான சட்டங்களுக்கு அரசுகள்
உறுதியளிக்குமாறு பரிந்துரைத்தார்.
மனித-சமூக-அரசியல் தளத்தின் அடிப்படையை
உறுதிப்படுத்துவதற்கு, ஆன்மீக விழுமியங்களை இழப்பதால் ஏற்படும் துன்பங்களைக் களைவதில் அக்கறை
காட்டப்படுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
பல இளையோரின் தேடல், செயற்கைத்தனமான
சொர்க்கத்தில் கொண்டு போய்ச் சேர்க்கின்றது, எதற்கும் அடிமையாதல், நுகர்வுத்தன்மை,
பொருளியக் கோட்பாடு ஆகியவை மனித இதயத்தைப் பேரின்ப வாழ்வுக்குக் கொண்டு சேர்ப்பதில்லை
என்பதையும் திருத்தந்தை கோடிட்டுக் காட்டினார்.
மிகக் கொடிய வறுமை அன்பின்மையே
என்றும், பொருளாதார வளங்களை அதிகமாகக் கொண்டிராமல் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும்
திருத்தந்தை கூறினார்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்ற
கலாச்சார மற்றும் சமயப் பாரம்பரியங்களை ஊக்குவிக்க வேண்டியது நாடுகளின் கடமை
என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, இறையுணர்வில் வளர்வது மற்றவரைச் சகோதரராக
நோக்கச் செய்யும், இது ஏழ்மையை ஒழிப்பதற்கு உதவும் என்றும் கூறினார்.
2. பிரிட்டனின் ஒரு Ordinariate க்குத் திருத்தந்தை நிதியுதவி
மே 04,2012. பிரிட்டனின் Walsingham
Personal Ordinariate க்குத்
திருத்தந்தை 2 இலட்சத்து 50 ஆயிரம் டாலர் நிதியுதவி செய்திருப்பது, அம்மறைமவட்டத்தின்
வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையையே காட்டுகின்றது என்று ஆயர் Keith
Newton கூறினார்.
Personal ordinariate என்பது ஆங்லிக்கன் திருஅவையிலிருந்து
உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில் இணைகின்றவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பாகும்.
2009ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியிடப்பட்ட Anglicanorum Coetibus என்ற
அப்போஸ்தலிக்க ஏட்டின்படி, இந்த Ordinariate ல் இருப்பவர்கள், ஆங்லிக்கன் திருஅவையின்
ஆன்மீக மற்றும் திருவழிப்பாட்டுப் பாரம்பரியக் கூறுகளைக் கா்ததுக் கொண்டு கத்தோலிக்கத்
திருஅவையில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
Walsingham நமதன்னை
Ordinariate, இங்கிலாந்து மற்றும் வேல்சில் நற்செய்திப்
பணியை இன்னும் அதிகமாகச் செய்வதற்கு முயற்சித்து வரும்வேளை, திருத்தந்தை அனுப்பியுள்ள
இந்த நிதியுதவி, அதன் பணிக்கு ஊக்கமூட்டுவதாய் இருக்கின்றது என்று ஆயர் Newton கூறினார்.
2011ம் ஆண்டு சனவரியில் உருவாக்கப்பட்ட
Walsingham
Ordinariate ல் சுமார் 1200 பொதுநிலை விசுவாசிகளும்
60 அருட்பணியாளர்களும் உள்ளனர்.
3. வளர்ந்து வரும் மக்கள்தொகை பிலிப்பீன்சின் பொருளாதாரத்துக்கு
உதவுகின்றது என்ற கூற்றுக்கு ஆயர்கள் வரவேற்பு
மே 04,2012. பிலிப்பீன்சில்
அதிகரித்து வரும் மக்கள்தொகை அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவுவதாய் இருக்கின்றது
என்று அந்நாட்டு நிதியமைச்சகச் செயலர் கூறியிருப்பதை வரவேற்றுள்ளனர் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.
பிலிப்பீன்ஸ் நிதியமைச்சகச் செயலர்
Cesar Purisima இப்புதனன்று தெரிவித்துள்ள இக்கூற்று,
மனித வாழ்வுக்கு ஆதரவு தெரிவிப்பதாய் இருக்கின்றது என்றும், இது நாட்டின் வருங்காலத்துக்கு
உதவும் என்றும் அந்நாட்டு ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் வாழ்வு ஆணையத்தின் செயலர்
அருள்திரு Melvin Castro
கூறினார்.
வேலை செய்யும் வயதுடைய பிலிப்பீன்ஸ்
மக்கள், 2015ம் ஆண்டுக்குள், அந்நாட்டுப் பொருளாதாரத்தின் பெரும்பான்மைப் பங்கை வகிப்பார்கள்
என்றும் தலத்திருஅவை வட்டாரங்கள் கூறுகின்றன.
2010ம் ஆண்டில் பிலிப்பீன்ஸ் மக்கள்தொகை
9 கோடியே 23 இலட்சமாக இருந்தது. மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடுகளில் 12 வது இடத்தையும்
கொண்டுள்ளது.
பிலிப்பீன்சின் புள்ளி விபர அலுவலகத்தின்
விபரங்களின்படி, 1960களில் குறையத் தொடங்கிய மக்கள்தொகை, 2010ம் ஆண்டில் 1.9 விழுக்காடு
அதிகரித்தது என்று தெரிய வந்துள்ளது.
4. அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி : நேபாளத்தில் சமய சுதந்திரம் அச்சுறுத்தலில் இருக்கின்றது
மே 04,2012. நேபாளத்தில்
முழு சமய சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் எதிர்காலம் அமைக்கப்படுமாறு அனைத்து அரசியல்
சக்திகளுக்கும் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக அந்நாட்டு அப்போஸ்தலிக்கப்
பிரதிநிதி ஆயர் அந்தோணி ஷர்மா கூறினார்.
நேபாளத்தில் தயாரிக்கப்பட்டு வரும்
புதிய அரசியல் அமைப்புக்கான கெடு, இம்மாதம் 27ம் தேதியோடு நிறைவடைகின்றது
என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆயர் ஷர்மா, இத்தயாரிப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்
என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
நேபாளத்தின் ஒவ்வொரு குடிமகனின் மாண்பை
மதித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு அந்நாட்டிலுள்ள சுமார் 20 இலட்சம் கிறிஸ்தவர்கள்
விரும்புகிறார்கள் என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய ஆயர் ஷர்மா, முழு சமய
சுதந்திரத்திற்கு உறுதியளிக்கும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று
கூறினார்.
ஒரு காலத்தில் இந்து முடியாட்சி
நாடாக இருந்த நேபாளத்தை, இந்து நாடாக அமைப்பதற்கு இன்றும் சில கட்சிகளும் குழுக்களும்
முயற்சிக்கின்றன என்றும் அவர் குறை கூறினார்.
நேபாளத்திலுள்ள 32 கத்தோலிக்கப்
பள்ளிகளில் 11 ஆயிரம் மாணவியர் உட்பட சுமார் 21 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர்.
அந்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 300 முதல் 500 பேர் வரை புதிதாகத் திருமுழுக்குப் பெறுகின்றனர்
என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
5. காங்கோ குடியரசில் புரட்சிக்குழுவின் வன்முறையால் ஆயிரக்கணக்கான
குடும்பங்கள் பாதிப்பு
மே 04,2012. ஆப்ரிக்க
நாடான காங்கோ சனநாயகக் குடியரசில் புரட்சிக்குழுவின் தொடர் வன்முறையால் ஆயிரக்கணக்கான
குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேறும் நிலைக்கு உள்ளாகியுள்ளன என்று
மறைபோதகக் குரு ஒருவர் கூறினார்.
வட கிவு மாநிலத்தில் இவ்வாண்டின்
முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2 இலட்சத்து 41 ஆயிரம் குடும்பங்கள் வெளியேறியுள்ளன,
இதற்குப் புரட்சிக்குழுவின் தலைவர் Bosco Ntagandaவின் படைகளே காரணம் என்று சவேரியன் மறைபோதக
அருள்தந்தை Loris Cattani கூறினார்.
மனித சமுதாயத்துக்கு எதிராகக்
குற்றம் செய்ததற்காக Ntaganda அனைத்துலக
குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவிருக்கிறார் என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம்
கூறியது.
ஐ.நா.வின் கணக்குப்படி, காங்கோ
சனநாயகக் குடியரசில் 20 இலட்சத்துக்கு மேற்ட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
6. கொரியாவில் கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து வளர்ந்து வருகின்றது
மே 04,2012. தென்
கொரியாவில் 2011ம் ஆண்டில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வயது வந்தோர் திருமுழுக்குப்
பெற்றனர் என்று கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்ட புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அந்நாட்டில் 2011ம் ஆண்டில்
1,34,562 பேர் திருமுழுக்குப் பெற்றனர். இத்துடன்
அந்நாட்டில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 53 இலட்சமாக உயர்ந்துள்ளது என்று அந்தப் புள்ளி
விபரங்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரிய மக்கள் தொகையில் கத்தோலிக்கர்
10.3 விழுக்காடாகும்.
7. ஆசியப் பள்ளிச் சிறாருக்குக் கண் பிரச்சனை
மே 04,2012. ஆசியாவின்
முக்கிய நகரங்களில் 90 விழுக்காட்டுச் சிறார் வரை கிட்டப்பார்வை பிரச்சனையுடன் பள்ளிப்படிப்பை
முடித்து வெளியேறுகின்றனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
பள்ளிகளில் மாணவர்கள் கடினமாய்
வேலை செய்வதாலும், சூரிய ஒளியில் இருக்கும் நேரம் குறைபடுவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகின்றது
என்று அந்த ஆய்வு கூறுகிறது.
இச்சிறாரில் ஐந்தில் ஒருவருக்கு
கண் பார்வையிழப்பு உட்பட கடும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது என்று The Lancet மருத்துவ இதழில்
அறிவியலாளர் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழத்தைச்
சேர்ந்த பேராசிரியர் Ian Morgan தலைமையில்
இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி, தென் கிழக்கு ஆசியாவில் மக்கள் மத்தியில் 20 முதல்
30 விழுக்காடு வரை இப்பிரச்சநை இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
8. மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை
மே 04,2012. இந்தியாவில்
பள்ளிக் குழந்தைகளுக்கு பிரம்படி போன்ற கடுமையான தண்டனை கொடுக்கும்
ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கும் வகையில் சிறுவர்கள்
பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகளில் ‘உடல்ரீதியான
தண்டனை’ எனப்படும்
பிரம்படி தண்டனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறு தவறு
செய்யும் மாணவர்களுக்கும் பள்ளிகளில் பிரம்படி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு 7
மாநிலங்களில் சுமார் ஆறாயிரம் மாணவர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு
நடத்திய ஆய்வில், 99 விழுக்காட்டு மாணவர்கள் பள்ளிகளில் கடுமையான தண்டனையைச்
சந்தித்து வருவதாக புகார் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்குக்
கடுமையான தண்டனை அளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க மத்திய
அரசு முடிவு செய்துள்ளது.
சிறிய அளவில் காயம்
ஏற்படுத்தும் பிரம்படித் தண்டனைக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும், அந்தத் தவறை
மீண்டும் செய்தால் 3 வருட சிறைத் தண்டனை அளிக்கவும் சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது.
இரண்டாவது முறை ஆசிரியர்கள் இதே
தவறு செய்யும்போது, பணியில் இருந்து விலக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு
வரப்படுகிறது.
No comments:
Post a Comment