Wednesday 2 May 2012

Catholic News in Tamil - 01/05/12

1.   மே 13ம் தேதி இத்தாலிய நகரங்களில் திருத்தந்தையின் ஒரு நாள் மேய்ப்புப்பணி பயணம்

2. திருத்தந்தை 2ம் ஜான் பால் அருளாளராக உயர்த்தப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு

3. ஆப்ரிக்காவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து மிலான் கர்தினால் கவலை

4. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கியூபாவுக்கானத் திருப்பயணம், கத்தோலிக்கத் திருஅவையில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது - ஆயர்கள்

5. இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் புதிய தலைவரும் பொறுப்பாளர்களும் பதவியேற்பு

6. மியான்மாரில் சிறுபான்மை சமூகங்களுடன் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆயர் ரெய்மண்ட்

7. உலகில் வேலைவாய்ப்பின்மை அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருக்கின்றது ஐ.நா.அறிக்கை

8. மே 1, உலக ஆஸ்துமா தினம்

-------------------------------------------------------------------------------------------

1. மே 13ம் தேதி இத்தாலிய நகரங்களில் திருத்தந்தையின் ஒரு நாள் மேய்ப்புப்பணி பயணம்

மே,01,2012. ஆழ்நிலை தியானங்களுக்கும், துறவு மடங்களுக்கும் புகழ்பெற்ற மூன்று இத்தாலிய நகரங்களில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இம்மாதம் 13ம் தேதி ஞாயிறன்று ஒரு நாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 13, ஞாயிறு காலை 10 மணிக்கு Arezzo என்ற ஊரில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, La Verna நகரில் அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து திருக்காயங்கள் திருத்தலத்திற்கும், 'புனித முகம்' ("Santo Volto") என்ற புகழ்பெற்ற சிலுவை வைக்கப்பட்டுள்ள San sepolcro நகரின் பேராலயத்திற்கும் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதிகளில் பணியாற்றும் புனித பிரான்சிஸ், புனித கிளாரா துறவுச் சபை சகோதரர்களையும், அருள்சகோதரிகளையும் திருத்தந்தை சந்திப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

2. திருத்தந்தை 2ம் ஜான் பால் அருளாளராக உயர்த்தப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு

மே01,2012. பற்றுறுதி, அன்பு, துணிவு ஆகிய பண்புகளுக்கு அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வாழ்வில் வெளிப்பட்ட வீரத்துவமானச் சாட்சியம், அனைத்து விசுவாசிகளும் தங்களை கிறிஸ்தவர்கள் என்று பயப்படாமல் சொல்லிக் கொள்வதற்கு உதவியுள்ளது என்று அயர்லாந்து தலத்திருஅவைத் தலைவர் கர்தினால் Seán Brady கூறினார்.
மே 01, இச்செவ்வாயன்று திருத்தந்தை 2ம் ஜான் பால் அருளாளராக உயர்த்தப்பட்டதன் முதலாமாண்டு நிறைவடைவதையொட்டி செய்தி வெளியிட்ட Armagh பேராயர் கர்தினால் Brady, இத்திருத்தந்தையின் சாட்சிய வாழ்வு, உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் பயப்படாமல் நற்செய்தியை அறிவிப்பதற்கும், திருஅவையில் பயப்படாமல் இருப்பதற்கும் உதவியுள்ளது என்று கூறினார்.
2011ம் ஆண்டு மே 01ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை 2ம் ஜான் பால் அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலியில் சுமார் 15 இலட்சம் பேர் கலந்து கொண்டனர்.

3. ஆப்ரிக்காவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து மிலான் கர்தினால் கவலை

மே01,2012. ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டுக்காக மிலான் தலத்திருஅவை உலகெங்கிலுமிருந்து கிறிஸ்தவர்களை வரவேற்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நைஜீரியா மற்றும் கென்யாவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படும் வருத்தமான செய்திகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன என்ற கவலையை வெளியிட்டார் மிலான் பேராயர் கர்தினால் ஆஞ்செலோ ஸ்கோலா.
ஞாயிறு திருப்பலியில் விசுவாசிகள் பக்தியுடன் கலந்து கொண்ட போது இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறிய கர்தினால் ஸ்கோலா, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆப்ரிக்காவில் மட்டுமல்ல, பாகிஸ்தான், இந்தியா உட்பட ஆசிய நாடுகளிலும் இடம் பெறுகின்றன என்றும் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் காட்டுமிராண்டித்தனமாய்க் கொல்லப்படுவது மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாராமுகம் மற்றும் புறக்கணிப்பு குறித்து மிலான் தலத்திருஅவை கவலை அடைந்துள்ளது என்றும் கர்தினால் கூறினார். 
இத்தாலிய யூதமத அவையும் மிலான் கர்தினாலுடன் இணைந்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.   
இம்மாதம் 30ம் தேதி மிலானில் தொடங்கும் ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் திருத்தந்தையும் கலந்து கொள்வார்.
நைஜீரியாவில் இஞ்ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 19 பேர் இறந்தனர்.

4. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கியூபாவுக்கானத் திருப்பயணம், கத்தோலிக்கத் திருஅவையில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது - ஆயர்கள்

மே01,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கடந்த மார்ச் மாதத்தில் கியூபாவுக்கு மேற்கொண்ட திருப்பயணம், கத்தோலிக்கத் திருஅவையில் மக்களின் ஆர்வத்தைத் தட்டி எழுப்பியுள்ளது என்று அந்நாட்டு ஆயர்கள் கூறினர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கியூபாவில் திருஅவையின் பங்கு குறித்து பேசிய ஹவானா கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அலமினோ, கியூபா அரசோடு சேர்ந்து பணி செய்வதற்கானத் திருஅவையின் முயற்சிகள் புத்துணர்வு பெற்றுள்ளன என்றும் கூறினார்.
கியூபாவில், விசுவாச வாழ்வின் வசந்த காலத்தைத் திருஅவை வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றுரைத்த கர்தினால் ஒர்த்தேகா, திருத்தந்தையின் அடக்கமும் கனிவும் மக்களைப் பெரிதும் ஈர்த்துள்ளன என்றும் தெரிவித்தார்.

5. இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் புதிய தலைவரும் பொறுப்பாளர்களும் பதவியேற்பு

மே,01,2012. இந்தியாவில் நிலவும் பட்டினி வெளி அடையாளம் என்றும், மக்களுக்கு உணவு சென்றடைய வழி செய்யாமல் இருப்பது சமுதாயக் குற்றம் என்றும் டில்லி உயர் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் Victor D’Souza கூறினார்.
இத்திங்களன்று நடைபெற்ற இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தின் துவக்கத்தில் நடைபெற்ற திருப்பலியில் மறையுரையாற்றிய அருள்தந்தை Victor D’Souza இவ்வாறு கூறினார்.
இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றி வந்த ஆயர் Peter Remigius தலைமையேற்று நடத்திய இத்திருப்பலியில் காரித்தாஸ் அமைப்புடன் தொடர்பு கொண்ட ஆயர்களும், குருக்களும் கலந்து கொண்டனர்.
இவ்வமைப்பின் புதியத் தலைவராக ஆயர் Lumen Monteiroவும், புதியப் பொறுப்பாளர்களாக அருள்தந்தையர் Frederick D’Souzaவும் Paul Moonjelyயும் பதவியேற்றனர்.
பணிக்காலம் முடிந்து பதவி விலகும் ஆயர் Peter Remigiusம் அருள்தந்தை Varghese Mattamanaவும் பொன்னாடை, நினைவுப் பரிசுகளுடன் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

6. மியான்மாரில் சிறுபான்மை சமூகங்களுடன் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆயர் ரெய்மண்ட்

மே01,2012. மியான்மாரில் சிறுபான்மை இனச் சமூகங்களுடன் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு அந்நாட்டு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் கூறினார்.
மியான்மாரில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அரசுத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து செயல்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ள வேளை, அந்நாட்டு Banmaw ஆயர் Raymond Sumlut Gam இவ்வாறு கூறினார்.
மியான்மார் இராணுவத்துக்கும் கச்சின் புரட்சியாளர்களுக்கும் இடையே இன்னும் சண்டை இடம் பெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய ஆயர், நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்துள்ள சமார் எழுபதாயிரம் மக்களில், நாற்பதாயிரம் பேர் Banmaw மறைமாவட்டத்தில் உள்ளனர் என்றும் கூறினார். 
மேலும், மியான்மாருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பான் கி மூன், அந்நாட்டுக்கு எதிரானப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுமாறு வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


7. உலகில் வேலைவாய்ப்பின்மை அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருக்கின்றது ஐ.நா.அறிக்கை

மே01,2012. உலகில் வேலைவாய்ப்பின்மை அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருப்பதாகவும், இந்நிலை விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் ILO என்ற உலகத் தொழில் நிறுவனம் அறிவித்தது.
உலகத் தொழில் அறிக்கை 2012 : சிறந்த பொருளாதாரத்துக்கு சிறந்த வேலைகள் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ILO நிறுவனம், உலகில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடும் போது தற்போது சுமார் 5 கோடி வேலைவாய்ப்புகள் மறைந்து விட்டன என எச்சரித்தது.
2016ம் ஆண்டுக்குள் வேலைவாய்ப்பு வசதிகளில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

8. மே 1, உலக ஆஸ்துமா தினம்

மே01,2012. உலகளவில் 15 விழுக்காட்டினரும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 18 விழுக்காட்டுக் குழந்தைகளும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
6 முதல் 12 வயதுக்கு உட்பட்டோரிடம் இந்நோய்த் தாக்கம் அதிகம் இருப்பதாகவும், ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை பெற்றால் இதிலிருந்து விடுபடலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் சீர்க்கேட்டினால் ஏற்படும் தூசி, புகை, புழுதி, மாசு போன்றவைகளால் ஆஸ்துமா எனும் நுரையீரல் நோய் ஏற்படுகின்றது. ஒருவித ஒவ்வாமையால் மூச்சுக் குழாய் தடித்து வீக்கம் ஏற்படும் போது, மூச்சுவிட கஷ்டமாக இருப்பதே ஆஸ்துமா ஆகும்.
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, விழிப்புணர்வின்மை, சரிவிகித உணவின்மை, நோய் எதிர்ப்பு சக்தியின்மை, மாசடைந்த சுற்றுச்சூழல், மனஅழுத்தம், மரபணு ஆஸ்துமா, புகை, தூசி போன்ற மாசுகள் இந்நோய்க்கு ஆபத்தான காரணிகளாகும்.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...