1.
கர்தினால் டர்க்சன் - மனித வர்த்தகத்தை ஒழிக்க தனிப்பட்ட மனிதர்களின் மனமாற்றமே
உறுதியான வழி
2.
கர்தினால் ஃபிலோனி - விசுவாச ஆண்டில் பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின் பணி இன்னும்
அதிகமாகத் தீவிரப்படுத்தப்பட வேண்டும்
3. இயேசு சபை
அருள்தந்தை கலில் சமீர் - அரேபிய வசந்தம் முடிந்துவிட்டது
4.
குழந்தைகளைக் கிறிஸ்தவ வாழ்வில் வளர்ப்பது பற்றிய வத்திக்கான் கருத்தரங்கு
5. உலகத் தலைவர்களின்
முழு ஈடுபாடு இல்லாமல், HIV நோய்கண்ட குழந்தைகளைக்
காப்பாற்றுவது மிகவும் கடினம் - ஐ.நா.
6.
நகர்ப்புற வாழ்க்கை ஒவ்வாமையை அதிகரிக்கிறது
7.
புற்றுநோயுள்ளோரில் ஆறில் ஒருவருக்கு கிருமித் தொற்று காரணம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கர்தினால் டர்க்சன் - மனித வர்த்தகத்தை ஒழிக்க தனிப்பட்ட மனிதர்களின்
மனமாற்றமே உறுதியான வழி
மே,09,2012. மனித வர்த்தகத்தைக்
களைவதற்கு திருஅவை எடுக்கும் முயற்சியாக திருப்பீடத்தின் நீதி அமைதி அவை ஏற்பாடு
செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் வாழ்த்துவதாகத் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் தன் புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கூறினார்.
சட்டங்களுக்குப் புறம்பாக
உலகில் இன்று நடைபெறும் மனித வர்த்தகத்தைக் களைவதற்கு வத்திக்கானில்
இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய நீதி மற்றும் அமைதிக்கான
திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், மனித வர்த்தகத்தை ஒழிக்க
ஒவ்வொரு நாட்டிலும் சட்டங்கள் இருந்தாலும், தனிப்பட்ட மனிதர்களின் மனமாற்றமே
இந்தக் குற்றத்தைத் தடுக்கும் உறுதியான வழி என்று கூறினார்.
மனித வர்த்தகத்திற்கு உட்படுத்தப்படும்
மக்கள் முந்தைய காலத்தின் அடிமைகளைப் போல், அல்லது அவர்களைவிடவும் கேவலமாக நடத்தப்படுகின்றனர்
என்று சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன், உலகில் நிலவும் வறுமையை ஆதாயமாக்கிக்
கொண்டு மனசாட்சியற்றவர்கள் நடத்தும் இந்த வர்த்தகத்தை முற்றிலும் ஒழிக்க
வேண்டுமென்றால், வறுமையைப்
போக்கும் வழிகளை அரசுகள் ஆராய வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
மனித சமுதாயம் சந்தித்து
வரும் இக்கொடுமையை கத்தோலிக்கத் திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும் ஆழமாக உணரவும், பல்வேறு நிலைகளில் இந்த
கொடுமையைத் தடுக்கும் வழிகளை ஆய்வு செய்யவும் இந்தக் கருத்தரங்கு கூட்டப்பட்டது
என்று கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த இங்கிலாந்து ஆயர் Patrick
Lynch கூறினார்.
சட்டத்திற்குப் புறம்பாக
உலகில் நடைபெறும் வர்த்தகங்களில், போர்கருவிகளின் வர்த்தகம் முதல்
இடத்திலும், மனித
வர்த்தகம் இரண்டாவது இடத்திலும்
உள்ளது என்று ICN என்ற
கத்தோலிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2. கர்தினால் ஃபிலோனி - விசுவாச ஆண்டில் பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின்
பணி இன்னும் அதிகமாகத் தீவிரப்படுத்தப்பட வேண்டும்
மே,09,2012. நற்செய்திப்பணி திருஅவையின்
இதயத்துடிப்பாக விளங்குகிறது, அப்பணியில் முழு மூச்சுடன் ஈடுபட வருகிற விசுவாச ஆண்டு
நம்மை அழைக்கிறது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
மேமாதம் 7ம் தேதி இத்திங்கள் முதல்
வருகிற சனிக்கிழமை வரை உரோம் நகரில் நடைபெறும் பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின்
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீட நற்செய்திப் பணி பேராயத்தின் தலைவர்
கர்தினால் Fernando Filoni இவ்வாறு கூறினார்.
மற்ற ஆண்டுகளை விட, வருகிற விசுவாச ஆண்டில் பாப்பிறை
மறைபரப்புக் கழகங்களின் பணி இன்னும் அதிகமாகத் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்திக் கூறிய கர்தினால் Filoni, நற்செய்திப் பணிக்குப் பெரும் சவாலாக
இருப்பது சீனா என்பதையும் தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
பல நாடுகளிலிருந்து இக்கூட்டத்தில்
கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தையைச்
சந்திப்பதுடன் இக்கூட்டம் நிறைவடையும்.
3. இயேசு சபை அருள்தந்தை கலில் சமீர் - அரேபிய வசந்தம் முடிந்துவிட்டது
மே,09,2012. அரேபிய வசந்தம் முடிந்துவிட்டது
என்று மத்தியக் கிழக்குப் பகுதிகளைக் குறித்து கற்றறிந்து தற்போது கீழைரீதி
பாப்பிறை நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் இயேசு சபை அருள்தந்தை Samir
Khalil Samir கூறினார்.
அரேபியாவின் பல நாடுகளில் எவ்வித
முன்னேற்பாடும் இல்லாமல் திரண்டு வந்த மக்கள் சக்தியால் உருவான விடுதலைப் போராட்டங்கள், தற்போது இஸ்லாமிய
அடிப்படைவாதக் குழுக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன என்று எகிப்து நாட்டைச்
சேர்ந்த அருள்தந்தை Khalil Samir, CNA என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த
பேட்டியொன்றில் கூறினார்.
எகிப்து, லிபியா, துனிசியா ஆகிய அரேபிய நாடுகளில்
மக்கள் போராட்டத்தால் குடியரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தற்போது இந்நாடுகளில் இஸ்லாமிய
அடிப்படைவாதக் குழுக்களின் ஆதிக்கத்தையே அதிகம் உணர முடிகிறது என்ற தன் ஏமாற்றத்தை
அருள்தந்தை Khalil Samir தன் பேட்டியில் வெளியிட்டார்.
பெண்களே அமைதியை அதிகம் விரும்பும்
மனம் கொண்டவர்கள் என்பதால், இந்நாடுகளில் நிரந்தரமான, சுதந்திரமான குடியரசுகள் உருவாக பெண்
கல்வி மிகவும் முக்கியம் என்பதை அருள்தந்தை Khalil Samir சுட்டிக்காட்டினார்.
4. குழந்தைகளைக்
கிறிஸ்தவ வாழ்வில் வளர்ப்பது பற்றிய வத்திக்கான் கருத்தரங்கு
மே,09,2012. ஐரோப்பாவின் பல
நாடுகளில் மறைக்கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கலந்துகொள்ளும் ஒரு கருத்தரங்கு
உரோம் நகரில் இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறுகிறது.
"புதிய நற்செய்திப் பணி
என்ற கண்ணோட்டத்தில் கிறிஸ்தவ வாழ்வின் துவக்கம்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த
12வது ஐரோப்பிய கருத்தரங்கில் 7 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கிறிஸ்தவ
வாழ்வில் வளர்ப்பது பற்றிய எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.
இரண்டாம் வத்திக்கான் பேரவையின்
ஐம்பதாம் ஆண்டு, திருஅவை
மறைகல்வி நூலை வெளியிட்ட இருபதாம் ஆண்டு, வருகிற அக்டோபர் மாதம் திருஅவை துவக்க
உள்ள விசுவாச ஆண்டு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து சிறப்பிக்கும் வண்ணம் இந்தக்
கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
இப்புதனன்று புனித மரியா பசிலிக்காப்
பேராலயத்தில், கர்தினால்
Peter Erdo, அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்
இக்கருத்தரங்கில் பங்கேற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.
5. உலகத் தலைவர்களின் முழு ஈடுபாடு இல்லாமல், HIV நோய்கண்ட குழந்தைகளைக் காப்பாற்றுவது மிகவும்
கடினம் - ஐ.நா.
மே,09,2012. உலகத் தலைவர்களின்
முழு ஈடுபாடு இல்லாமல், HIV நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் காப்பாற்றுவது
மிகவும் கடினம் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
HIV நோயினால் குழந்தைகள் பாதிக்கப்படாமல்
இருக்கும் ஒரு சூழல் 2015ம் ஆண்டுக்குள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன்
ஐ.நா.வின் UNAIDS அமைப்பின்
இயக்குனர் Michel Sidibé, இப்புதனன்று ஒரு திட்டத்தை
அறிமுகப்படுத்தியபோது,
இவ்வாறு கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் HIV கிருமிகளால் 3,90,000
குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், HIV மற்றும் AIDS நோயினால் ஒவ்வோர் ஆண்டும்
42,000 பெண்கள் இறக்கின்றனர் என்றும் UNAIDS மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பிறக்கும் எந்தக் குழந்தையும்
HIV நோயினால்
தாக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் என்ற என்ற இலக்கை 2015ம் ஆண்டுக்குள் அடைய
வேண்டும் என்ற கருத்துடன் ஐ.நா.வின் UNAIDS, “Believe it. Do it.” அதாவது, “நம்புங்கள், நடைமுறைப்படுத்துங்கள்” என்ற முயற்சியை 2011ம் ஆண்டு
ஆரம்பித்துள்ளது.
6. நகர்ப்புற வாழ்க்கை ஒவ்வாமையை அதிகரிக்கிறது
மே,09,2012. இயற்கைச் சூழலை அனுபவிக்காத
நகர்ப்புற வாழ்க்கை காரணமாக பலருக்கு ஒவ்வாமை ஏற்படுவதாக பின்லாந்து ஆய்வாளர்கள்
கண்டறிந்திருக்கின்றனர்.
மனிதர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய
குறிப்பிட்டவகை நுண்ணுயிரிகள் நகர்ப்புறம் சாராத பசுமை சூழ்ந்த இயற்கைச் சூழலில்
அதிகம் காணப்படுவதாகவும், அத்தகைய சூழலில் வாழும் மனிதர்களுக்கு
ஒவ்வாமை குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதேவேளையில், பசுமை சூழலற்ற
நகர்ப்புறத்தில் வாழ்பவர்களுக்கு இத்தகைய நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் பயன்
கிடைப்பதில்லை என்பதால் அத்தகையவர்கள் மத்தியில் ஒவ்வாமை அதிகரித்து காணப்படுவதாகவும்
இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஒவ்வாமை என்பது பல வகைப்படும்.
சிலருக்கு சில வகை உணவுகள் ஒவ்வாமையை தூண்டும். சிலருக்கு சிலவகை மருந்துகள்
ஒவ்வாமையை தூண்டும். சிலருக்கு சிலவகை திரவங்களால் ஒவ்வாமை ஏற்படும். ஆனால்
மனிதர்களில் ஒரு சிலருக்கு மட்டும் இந்த ஒவ்வாமை ஏன் ஏற்படுகிறது என்கிற அடிப்படை
கேள்விக்கு மட்டும் நீண்ட நாட்களாகவே மருத்துவரீதியான உறுதியான விடை கிடைக்கவில்லை.
அத்தகைய ஆய்வு ஒன்றில் ஈடுபட்ட
பின்லாந்து அறிவியலாளர்கள் தங்கள் ஆய்வின் முடிவுகளை அறிவியலுக்கான தேசிய இதழில்
வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த ஆய்வின் முடிவில், இவர்கள்
நகர்வாழ் மக்களுக்கு இரண்டு பரிந்துரைகளை செய்திருக்கிறார்கள். நகர்வாழ் மக்கள்
தங்கள் வாழ்விடங்களில் முடிந்தவரை பசுமைத்தாவரங்களை வளர்க்க வேண்டும் என்பதுடன், முடியும்போதெல்லாம்
பசுமையான இயற்கை சூழலில் நேரத்தை செலவிடவேண்டும் என்பது இவர்களின் முதல் பரிந்துரை.
இரண்டாவதாக, நகரங்களைத் திட்டமிடும்போது
பூங்காக்கள் மற்றும் பசுமை வெளிகளுக்கு இடங்களை ஒதுக்க வேண்டும் என்பது அவர்களின்
இரண்டாவது பரிந்துரை.
7. புற்றுநோயுள்ளோரில் ஆறில் ஒருவருக்கு கிருமித் தொற்று காரணம்
மே,09,2012. மக்களுக்கு வருகின்ற
புற்றுநோய்களில் ஒரு பங்கு தவிர்க்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய கிருமித்
தொற்றுகளினால் ஏற்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
உலக அளவில் புற்றுநோய் வரும் ஆட்களில்
ஆறில் ஒருவருக்கு இந்த நோய், கிருமித் தொற்றுக்களினால் ஏற்படுவதாக இந்த ஆய்வு
தெரிவிக்கிறது. இக்கணிப்பின்படி, கிருமித் தொற்றினால் புற்றுநோய் வருபவர்களின்
எண்ணிக்கை ஆண்டுக்கு ஏறத்தாழ இருபது இலட்சம் ஆகும்.
வளர்ந்துவரும் நாடுகள் என்று எடுத்துக்கொண்டால்
கிருமித் தொற்றினால் ஏற்படுகின்ற புற்றுநோய்களின் விகிதாச்சாரம் மேலும் அதிகம்
என்று இந்த ஆய்வு கூறுகிறது.
பிரான்சில் உள்ள புற்றுநோய்
அனைத்துலக ஆய்வமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவில், புற்றுநோயையும் தொற்று நோயாக அங்கீகரிக்க
வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயை உருவாக்கும் கிருமித்
தொற்றுக்களை தடுப்பூசிகள் மற்றும் கிருமித் தொற்று சிகிச்சை முறைகள் கொண்டு
கட்டுப்படுத்த கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த அமைப்பு
வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment