Thursday, 24 May 2012

Catholic News in Tamil - 18/05/12

1. இருபால் துறவியருடன் நல்லதோர் உறவை வளர்க்க அமெரிக்க ஆயர்களுக்குத் திருத்தந்தை வலியுறுத்தல்

2. OPAM கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திற்குத் திருத்தந்தை வாழ்த்து

3. ஊழலையும் வரிஏய்ப்பையும் தடுப்பதற்கு ஒளிவுமறைவற்ற நடவடிக்கை அவசியம் உலகின் பல ஆயர்கள்

4. சிரியாவில் ஐ.நா.வின் அமைதித் திட்டத்திற்குத் திருப்பீடத் தூதர் முழு ஆதரவு

5. தென் கொரியாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள் நிறுத்தப்படுவதற்குச் சமயத் தலைவர்கள் வேண்டுகோள்

6. மடகாஸ்கர் அரசியல் தலைவர்களுக்கு கிறிஸ்தவ  சபைகள் வேண்டுகோள்

7. மனித வர்த்தகம் குறித்து பாகிஸ்தான் காரித்தாஸ் எச்சரிக்கை

8. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

9. குழந்தை பிறப்பின் போது இடம்பெறும் அன்னையர் இறப்புக்களின் எண்ணிக்கையில் நைஜீரியா, இந்தியா முதலிடம்

------------------------------------------------------------------------------------------------------

1. இருபால் துறவியருடன் நல்லதோர் உறவை வளர்க்க அமெரிக்க ஆயர்களுக்குத் திருத்தந்தை வலியுறுத்தல்

மே 18,2012. தங்களது வாழ்வு முழுவதையும் நற்செய்தி அறிவுரைகளின்படி வாழ்வதற்கு உறுதி எடுக்கும் ஆண்,பெண் துறவிகளின் சான்று பகரும் வாழ்வு இக்காலத்துக்கு மிகவும் தேவைப்படுகின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவையொட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் 14 மற்றும் 15 வது குழுவின் 15 ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருஅவையின் பணிகளை முழுமையாய்ச் செய்வதற்கு, அந்நாட்டுக் கத்தோலிக்கர் மத்தியில் ஒன்றிப்புத் தேவை என்பதைக் கடந்த ஆறு மாதங்களாகத் தான் சந்தித்து வந்த அந்நாட்டு ஆயர்களிடமிருந்து அறிந்து கொண்டதாகத் தெரிவித்த திருத்தந்தை, குடியேற்றதாரர் விவகாரம், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோரின் சாட்சிய வாழ்வு ஆகிய இரண்டு விவகாரங்களை இச்சந்திப்பில் தான் வலியுறுத்த விரும்புவதாகக் கூறினார்.
நமது விசுவாசம் எனும் விலைமதிப்பில்லாத சொத்தை மகிழ்ச்சியோடும் நன்றியோடும் வாழ்வதற்கான ஆவலை, வருகிற அக்டோபரில் ஆரம்பமாகும் விசுவாச ஆண்டு அமெரிக்கக் கத்தோலிக்கச் சமுதாயம் முழுவதுக்கும் தட்டி எழுப்பும் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை.
கத்தோலிக்கச் சமுதாயத்தில் நிலவும் ஒன்றிப்பு, புதிய நற்செய்திப்பணியின் நேர்மறைச் சவால்களைச் சந்திப்பதற்கு உதவுவதோடு, அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருஅவையின் மறைப்பணிக்குப் பெரும் தடைகளாக இருக்கின்ற சக்திகளை எதிர்த்துச் செயல்படவும் உதவும் என்றும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உலகளாவியத் திருஅவையில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை  இரண்டாவது பெரிய ஆயர் பேரவையாகும். இப்பேரவையின் ஆயர்களை 15 குழுக்களாகச் சந்தித்து வந்த திருத்தந்தை, இவ்வெள்ளியன்று அதன் கடைசிக் குழுவினரைச் சந்தித்தார்.
இந்திய ஆயர் பேரவை நான்காவது பெரிய பேரவையாகும்.


2. OPAM கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திற்குத் திருத்தந்தை வாழ்த்து

மே 18,2012. உலகில் மிகவும் பின்தங்கிய நாடுகளில் கல்வியறிவை வளர்ப்பதற்கு முயற்சித்து வரும் ஓர் இத்தாலிய கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்தின் பணிகளை ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
OPAM என்ற இத்தாலிய கத்தோலிக்க அரசு-சாரா நிறுவனம் உருவாக்கப்பட்டதன் 40ம் ஆண்டை முன்னிட்டு, அந்நிறுவனத்தின் தலைவர் பேரருட்திரு Aldo Martini விற்குத் திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அனுப்பியத் தந்திச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த OPAM நிறுவனத்தின் 40ம் ஆண்டை முன்னிட்டு இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றும் இவ்வெள்ளியன்று உரோம் நகரில் தொடங்கியுள்ளது.  வலுவற்ற மனித சமுதாயம் : உலகின் தெற்கிலிருந்து பாடங்கள் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.
தென் அமெரிக்க நாடான Venezuela வில் 5 ஆண்டுகள் மறைப்பணியாற்றிய பின்னர் இத்தாலி திரும்பிய அருட்பணி Carlo Muratore என்பவர், எந்தவிதமான வளர்ச்சிக்கும் கல்வியே அடிப்படை என்பதில் உறுதியாயிருந்து 1972ம் ஆண்டு இந்த OPAM நிறுவனத்தை ஆரம்பித்தார்.


3. ஊழலையும் வரிஏய்ப்பையும் தடுப்பதற்கு ஒளிவுமறைவற்ற நடவடிக்கை அவசியம் உலகின் பல ஆயர்கள்
      
மே 18,2012. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 12,500 கோடி டாலரை வளரும் நாடுகளிலிருந்து சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு பல நாடுகளின் கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அர்ஜெண்டினா, ஆஸ்ட்ரியா, பெல்ஜியம், காமரூன், சாட், சிலே, கொலம்பியா, காங்கோ சனநாயகக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, பெரு, காங்கோ குடியரசு, பிரிட்டன் போன்ற  நாடுகளின் 17 ஆயர்கள் இணைந்து ஐரோப்பிய சமுதாய அவைக்கு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
நாடுகளின் பொருளாதாரங்கள் நெருக்கடிக்கு உள்ளாகி, சமுதாயத்தின், குறிப்பாக ஏழைகளின் அன்றாட வாழ்க்கைக் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், நிதி அமைப்பில் அறநெறிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படுமாறு குடிமக்கள் கேட்கிறார்கள் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
சிலரின் பேராசை, உலக சமுதாயத்தில் மிகவும் நலிந்த மக்களின் வாழ்வாதாரத்தையே ஆட்டம் கொள்ளச் செய்துள்ளது என்று குறை கூறும் அவ்வறிக்கை, இயற்கை வளங்களைச் சுரண்டி சேமிக்கப்படும் செல்வம், ஒரு சிறுபான்மைக்கும் மட்டுமே உரியதாக ஆக்கப்படுவதைத் தடுக்கும் புதிய சட்டங்கள் அவசியம் என்றும் கோரியுள்ளது.


4. சிரியாவில் ஐ.நா.வின் அமைதித் திட்டத்திற்குத் திருப்பீடத் தூதர் முழு ஆதரவு

மே 18,2012. இம்மாதம் 10ம் தேதி சிரியாவின் தமாஸ்கஸ் நகரில் நடந்த வாகனக் குண்டு வெடிப்புத் தாக்குதல்களுக்குப் பின்னர் அந்நாட்டில் வன்முறை தொடர்ந்து இடம் பெற்று வருவதாக சிரியாவிலுள்ள திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
புரட்சியாளர்களின் ஹோம்ஸ் பகுதியில் சிரியா இராணுவம் இவ்வியாழனன்றும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதைக் குறிப்பிட்ட பேராயர் Zenari, வன்முறையும் தாக்குதல்களும் தொடர்ந்து இடம் பெற்றாலும் அந்நாட்டிற்கெனப் பரிந்துரைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதற்கு சர்வதேச சமுதாயம் அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
சிரியாவின் நிலைமை மிகுந்த கவலை தருவதாகக் கூறிய பேராயர், ஐ.நா. பிரதிநிதியாக அந்நாட்டில் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளை நடத்திய Kofi Annan னின் அமைதித் திட்டத்திற்கு சர்வதேச சமுதாயம் வலுவான ஆதரவளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.


5. தென் கொரியாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள் நிறுத்தப்படுவதற்குச் சமயத் தலைவர்கள் வேண்டுகோள்

மே 18,2012. தென் கொரியாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள் நிறுத்தப்படுவதற்கு விசுவாசிகள் உதவுமாறு, அந்நாட்டின் முக்கிய சமயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென் கொரியாவின் Ssangyong வாகனத் தயாரிப்பு நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டுள்ள அத்தலைவர்கள், இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அந்நாட்டினர் அனைவரும் சேர்ந்து செயல்படுமாறு கேட்டுள்ளனர்.
கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon உட்பட அந்நாட்டின் முக்கிய மதத்தலைவர்கள் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
Ssangyong  வாகனத் தயாரிப்பு நிறுவனம் தொடர்பாக 2009ம் ஆண்டிலிருந்து கடந்த மார்ச் வரை 2,646 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.


6. மடகாஸ்கர் அரசியல் தலைவர்களுக்கு கிறிஸ்தவ  சபைகள் வேண்டுகோள்

மே 18,2012. மடகாஸ்கர் நாட்டின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அரசியல் தலைவர்கள் தடையாய் இருப்பதை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.
நாட்டின் சர்ச்சைக்குரிய விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில், தற்போதைய இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் மற்றும் நிர்வாகத்துக்கு வெளியே இருக்கும் அரசியல்வாதிகள் நேரத்தை வீணடிக்கின்றனர் என்றுரைக்கும் அத்தலைவர்களின் அறிக்கை, தங்களது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
தங்களது சொந்த ஆதாயங்களுக்காக இடைக்கால அரசை நீடிக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர் என்றுரைக்கும் அவ்வறிக்கை, மடகாஸ்கர் மக்களின் நலனில் இவர்கள் அக்கறை காட்டவில்லை என்றும் கூறுகிறது.
தற்போது பெரும்பாலான மக்கள் வறுமையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் கடினமான சூழலிலும் வாழ்வதாகவும்,   பெற்றோரையும் முதியோரையும் மதிக்கும் பாரம்பரியப் பண்புகள் அழிந்து வருகின்றன எனவும் மடகாஸ்கர் கிறிஸ்தவத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


7. மனித வர்த்தகம் குறித்து பாகிஸ்தான் காரித்தாஸ் எச்சரிக்கை

மே 18,2012. கவர்ச்சியான வேலைவாய்ப்புக்களை வழங்க முன்வரும் நிறுவனங்கள் குறித்து மிகுந்த கவனமுடன் இருக்குமாறு இளையோரை எச்சரித்துள்ளது பாகிஸ்தான் காரித்தாஸ்.
இளையோருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முன்வரும் நிறுவனங்கள் மனித வர்த்தகக் கும்பல்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் போலத் தெரிவதாக எச்சரிக்கும் காரித்தாஸ், இத்தகைய கும்பல்களின் நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் ஆபத்திலுள்ள சுமார் 80 இலட்சம் பாகிஸ்தான் இளையோர் குறித்த தனது கவலையையும் வெளியிட்டுள்ளது.
மனித வர்த்தகம் குறித்து கராச்சியில் இடம் பெற்ற இரண்டு நாள் பயிற்சிப் பாசறையில் இளையோருக்கு இந்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் மனித வர்த்தகப் பிரச்சனை கொத்தடிமையோடு தொடர்புடையது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு கடந்த ஆண்டில் வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகின்றது. இந்த அடிமைவேலையில் சுமார் 18 இலட்சம் பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.


8. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

மே 18,2012 தங்களை விசாரிக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இலங்கையின் கொழும்பு சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் உண்ணாநோன்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் உட்பட 190 க்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் கொழும்பு சிறையில் இந்த உண்ணாநோன்பு போராட்டத்தைத் இவ்வியாழனன்று ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைப் போர் முடிந்து இவ்வெள்ளியோடு மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்நடவடிக்கையத் தொடங்கியுள்ள தமிழ்க் கைதிகள், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தாங்கள், புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.


9. குழந்தை பிறப்பின் போது இடம்பெறும் அன்னையர் இறப்புக்களின் எண்ணிக்கையில் நைஜீரியா, இந்தியா முதலிடம்

மே 18,2012. உலகில் 2010ம் ஆண்டில் குழந்தை பிறப்பின் போது 2,87,000 பெண்கள் இறந்தனர், இவ்வெண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பாகம் இந்தியாவில் இடம் பெற்றுள்ளது என்று ஐ.நா. வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
மொத்த எண்ணிக்கையில் 33 விழுக்காடு இந்தியாவிலும் நைஜீரியாவிலும் இடம் பெற்றுள்ளது, இதில் சுமார் 19 விழுக்காடு இந்தியாவில் இடம் பெற்றுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.
1990ம் ஆண்டில் இடம் பெற்ற இறப்புக்களைவிட இவ்வெண்ணிக்கை 47 விழுக்காடு குறைவு என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வளர்ச்சி அடையாத 80 நாடுகளில் இந்தியா 76 ம் இடத்தில் அமைந்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...