Thursday 17 May 2012

Catholic News in Tamil - 15/05/12

1. கண்ணூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Varghese Chakkalakal

2. அனைவரும் ஒன்றிணைந்து அமைதியைத் தேடும் முயற்சியில் ஈடுபடவேண்டும் - தெற்கு சூடான் ஆயர்கள்

3. மதச்சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கனடா அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஆயர்கள் கவலை

4. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்கப்பட்ட முதல் மறைமாவட்டம் 500வது ஆண்டு நிறைவு

5. சீனாவில் உள்ள மரியன்னை திருத்தலத்தில் 20000க்கும் அதிகமான திருப்பயணிகள்

6. இயற்கை வளங்களைக் காக்கும் முறையில் முன்னேற்றம் காணும் கூட்டுறவு’: Brisbane நகரில் கருத்தரங்கு

7. 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் புற்றுநோய் காரணமாக இறப்பவர் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்துள்ளது

8. உளவியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இலங்கைப் படையினர்

------------------------------------------------------------------------------------------------------

1. கண்ணூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Varghese Chakkalakal

மே,15,2012. கேரளாவின் கண்ணூர் மறைமாவட்டத்தின் ஆயரான Varghese Chakkalakal அவர்களை கோழிக்கோடு மறைமாவட்டத்தின் ஆயராகவும், கண்ணூர் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இச்செவ்வாயன்று நியமித்தார்.
1953ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி Malapallipuram என்ற ஊரில் பிறந்த Varghese Chakkalakal, 1981ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1998ம் ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் இவர் கண்ணூர் மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்று, 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.


2. அனைவரும் ஒன்றிணைந்து அமைதியைத் தேடும் முயற்சியில் ஈடுபடவேண்டும் - தெற்கு சூடான் ஆயர்கள்

மே,15,2012. தெற்கு சூடானில் வாழும் மக்களும் அந்நாட்டு அரசும் அமைதி வேண்டி போராடி வருகின்றனர் என்று அந்நாட்டின் ஆயர்கள் கூறியுள்ளனர்.
தெற்கு சூடானில் தற்போது நிலவி வரும் பதட்டமான சூழலிலிருந்து நாட்டைக் காக்க, அனைவரும் ஒன்றிணைந்து அமைதியைத் தேடும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்று 14 பேர் கொண்ட அந்நாட்டின் கத்தோலிக்க, ஆங்கலிக்கன் ஆயர்கள் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களுக்குப் பின், மே மாதத் துவக்கத்தில் ஒன்று கூடிய ஆயர்கள், சூடானும், தெற்கு சூடானும் பகைமை உணர்வுகளைத் தூண்டும் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, மக்களைக் காக்கும் வழிகளை வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிதாக உருவாகியுள்ள தெற்கு சூடான் நாட்டு அரசு, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்துமாறும், சூடான் நாட்டுடன் மோதல்களைத் தவிர்க்குமாறும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
சூடானும், தெற்கு சூடானும் விடுத்துவரும் அறிக்கைகளில் உள்ள உண்மைகளை அகில உலக அரசுகள் ஆய்வு செய்ய வேண்டுமென்றும், தெற்கு சூடான் ஆரம்பித்துள்ள புதிய பயணத்தில் உலக நாடுகளின் அரசுகள் துணைவர வேண்டுமென்றும் ஆயர்கள் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


3. மதச்சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கனடா அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஆயர்கள் கவலை

மே,15,2012. மதச்சுதந்திரம் நசுக்கப்படும்போது, மனித சமுதாயத்தின் அனைத்து உரிமைகளும் வலுவிழந்து போகின்றன என்றும், இதனால் சமுதாயம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்றும் கனடாவின் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
கனடா ஆயர் பேரவை இத்திங்களன்று வெளியிட்ட ஒரு மேய்ப்புப் பணி மடலில், மதச்சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கனடா அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் பொது வாழ்விலிருந்து மதங்களை பிரித்து, அவற்றைத் தனி மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட ஓர் அம்சமாக அரசு மாற்றியமைக்க முயற்சிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
மனித சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம் மதங்கள் என்பதையும், மதத்திற்கும், அரசுக்கும் இடையே நல்லுறவு வளர வேண்டும் என்பதையும் கனடா அரசுக்கு உணர்த்தும் கடமை மக்களுக்கு உள்ளது என்று ஆயர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


4. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்கப்பட்ட முதல் மறைமாவட்டம் 500வது ஆண்டு நிறைவு

மே,15,2012. இலத்தீன் அமெரிக்காவில் வளர்ந்து வரும் விசுவாச வாழ்வில் மரியன்னைக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்று Santo Domingo பேராயர் கர்தினால் Nicolas de Jesus Lopez Rodriguez கூறினார்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளின் முதல் மறைமாவட்டமாக "Santa Maria la Antigua" என்ற பெயருடன் அமைக்கப்பட்ட மறைமாவட்டத்தின் 500வது ஆண்டு நிறைவின் துவக்க விழா திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் Lopez Rodriguez இவ்வாறு கூறினார்.
இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளிலும் பிரச்சனைகள் சூழ்ந்திருந்தாலும், இந்நாடுகளின் மக்கள் தங்கள் கலாச்சாரத்தில் ஊறிய விசுவாசத்தை வெளிப்படுத்தத் தவறுவதில்லை என்று கர்தினால் Lopez Rodriguez பெருமையுடன் சுட்டிக் காட்டினார்.
20000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இத்துவக்கவிழாவில் உரையாற்றிய Panama பேராயர் José Domingo Ulloa Mendieta, மக்களுக்குப் பணிபுரியும் அரசுத் தலைவர்கள் நன்னெறி விழுமியங்களைக் கடைபிடிப்பதில் தவறாமல் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
1513ம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் லியோ அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் மறைமாவட்டத்தின் 500வது ஆண்டு நிறைவு விழா அடுத்த ஆண்டு முழுவதும் தொடரும் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. சீனாவில் உள்ள மரியன்னை திருத்தலத்தில் 20000க்கும் அதிகமான திருப்பயணிகள்

மே,15,2012. சீனாவின் Cang Zhou மறைமாவட்டத்தில் உள்ள மரியன்னை திருத்தலத்தில் 20000க்கும் அதிகமான திருப்பயணிகள் கலந்து கொண்ட ஒரு திருப்பலியை பேராயர் Joseph Li Lian Gui தலைமையேற்று நடத்தினார் என்று Fides செய்தி கூறுகிறது.
மேலும் Hu Xian எனுமிடத்தில் உள்ள மற்றொரு மரியன்னை திருத்தலத்திற்கும் 10000க்கும் அதிகமான விசுவாசிகள் திருப்பயணம் மேற்கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
சீனத் திருஅவைக்காக சிறப்பு செபங்கள் எழுப்பப்படும் ஒரு நாளாக மேமாதம் 24ம் தேதியை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ளதையொட்டி, சீன மக்களிடம் இந்த ஆர்வம் தூண்டப்பட்டுள்ளது என்று இத்திருப்பயணத்தில் பங்கேற்றோர் கூறியதாகவும் Fides செய்தி கூறியது.
மரியன்னையின் பரிந்துரை வழியாக, சீனத் திருஅவை சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சனைகளும் தீந்துவிடும் என்ற செய்தி திருப்பயணிகளுக்கு வழங்கப்பட்டது என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


6. இயற்கை வளங்களைக் காக்கும் முறையில் முன்னேற்றம் காணும் கூட்டுறவு’: Brisbane நகரில் கருத்தரங்கு

மே,15,2012. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் முறையில் மனித குலத்தின் முன்னேற்றம் அமையும் வழிகளை ஆராயும் கடமை நம் அனைவருக்கும் உண்டு என்று ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
வருகிற ஜூன் மாதம் Rio+20 அகில உலக உச்சி மாநாட்டிற்கு ஒவ்வொரு நாடும் தயாரித்து வரும் வேளையில், மனித குலத்தின் முன்னேற்றம், இயற்கை வளங்களை மேலும் அழிக்கும் போக்கில் வளர்வதைத் தடுக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று ஐ.நா. அதிகாரி Sha Zukang, ஆஸ்திரேலியாவின் Brisbane நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் கூறினார்.
இயற்கை வளங்களைக் காக்கும் முறையில் முன்னேற்றம் காணும் கூட்டுறவுஎன்ற மையக்  கருத்துடன் Brisbane நகரில் இத்திங்களன்று துவங்கிய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய Sha Zukang, இன்றைய தலைமுறையினரை மட்டும் மனதில் வைத்து நாம் திட்டங்களைத் தீட்டுவது பயனற்றது என்று வலியுறுத்தினார்.
அண்மையில் வெளியான ஒரு ஐ.நா. அறிக்கையில், 2030ம் ஆண்டில் உலகின் உணவுத் தேவை இன்னும் 50 விழுக்காடும், எரிசக்தியின் தேவை இன்னும் 40 விழுக்காடும், தண்ணீர் தேவை இன்னும் 30 விழுக்காடும் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.


7. 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் புற்றுநோய் காரணமாக இறப்பவர் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்துள்ளது

மே,15,2012. பிரித்தானியாவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் புற்றுநோய் காரணமாக இறப்பவர் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்துள்ளது என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
1971ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக 21,300க்கும் அதிகமானோர் தங்கள் 50 வயதுக்கு மேல் இறந்துள்ளனர் என்றும், அந்த எண்ணிக்கை 2010ம் ஆண்டில் 14,000ஆகக் குறைந்துள்ளது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே  கண்டறியும் வழிகள் முன்னேறியிருப்பது ஒரு காரணம் என்றாலும், அண்மைய ஆண்டுகளில் 50 வயதைத் தாண்டியோர் மத்தியில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதும் ஒரு முக்கிய காரணம் என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இன்றும் உலகில் புற்றுநோயின் முதன்மைக் காரணம் புகையிலைப் பயன்பாடு என்று கூறும் இவ்வறிக்கை, அளவுக்கு அதிகமாய் மதுபானம் அருந்துதல், உடல்பருமன், மற்றும் இயற்கையிலிருந்து நேரடியாகக் காய்கறிகள் கிடைக்கும் வாய்ப்பு குறைதல் ஆகியவை புற்றுநோய் உருவாகும் பிற காரணங்கள் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.


8. உளவியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இலங்கைப் படையினர்

மே,15,2012. இலங்கையில் ஆயுதப்படைகளுக்குள் அதிகரித்துவரும் தற்கொலைகள் மற்றும் கொலைகள் காரணமாக, முப்படையினர் மற்றும் காவல்துறையினரை உளவியல் மதிப்பீட்டுக்கு உட்படுத்தவேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.
2006ம் ஆண்டில் இருந்து படைகளுக்குள் தற்கொலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. 2006ம் ஆண்டில் இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த 52 பேரும், 6 காவல்துறை அதிகாரிகளும் தற்கொலை செய்து கொண்டனர் என்று தெரிகிறது.
2010, 2011ம் ஆண்டுகளில் இலங்கையின் முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் தற்கொலை மரணங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லையெனினும் இவ்விரு ஆண்டுகளிலும் ஒவ்வோர் ஆண்டும் 100க்கும் அதிகமான தற்கொலை மரணங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது.
இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்னர், படையினரின் உளவியல் நிலை மோசமடைந்துள்ளதாலேயே இத்தகையச் சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள கொழும்பு ஊடகம், படையினர் அனைவரும் உடனடியாக உளவியல் மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டியது அவசரத் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...