Sunday, 27 May 2012

Catholic News in Tamil - 26/05/12

1.       திருத்தந்தை : கடுந்தாக்குதல்களுக்கு மத்தியில் கடவுளின் வீடு உறுதியாக நிற்கின்றது

2. கிறிஸ்துவின் உயிர்ப்பைப் போற்றும் விதத்தில் உலகெங்கும் செல்லவிருக்கும்      மரச்சிலுவையைத் திருத்தந்தை ஆசீர்வதித்தார்

3. இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திருத்தந்தை உதவி

4. காட்சிகள், திருவெளிப்பாடுகள் குறித்த திருப்பீடத்தின் வழிமுறைக் கையேடு

5. அருள்தந்தை லொம்பார்தி : பாபேலிருந்து பெந்தகோஸ்தே

6. பொலிவிய ஆயர்கள் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு

7. சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அனைத்து விசுவாசிகளும் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு பால்டிமோர் பேராயர் வலியுறுத்தல்

8. சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை இன்னும் அதிக நாடுகள் அமல்படுத்துமாறு ஐ.நா.கோரிக்கை

9. மூன்று நாடுகளில் சக்திமிக்க புதிய தொலைநோக்கி
-------------------------------------------------------------------------------------------

1.திருத்தந்தை : கடுந்தாக்குதல்களுக்கு மத்தியில் கடவுளின் வீடு உறுதியாக நிற்கின்றது

மே26,2012. கடுந்தாக்குதல்களுக்கு மத்தியில் கடவுளின் வீடு உறுதியாக நிற்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது என்ற (மத்.7,24,25)இயேசுவின்  திருச்சொற்களைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இயேசுவின் இந்த வாக்குறுதி திருஅவைக்கு எப்போதும் இருந்து வருகிறது என்று கூறினார்.
இத்தாலிய அருங்கொடை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் 40ம் ஆண்டை முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை காலை சுமார் ஐம்பதாயிரம் விசுவாசிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
பாதுகாப்பற்றதன்மை மிகுந்துள்ள இந்த நவீன சமுதாயத்தில் நாம் நிச்சயமற்ற நிலைகளை எதிர்நோக்குகிறோம், நாம் வாழ்வதற்கான அர்த்தமுள்ள கூறுகளும் குறைவுபடுகின்றன, எனவே, கடவுள் என்ற உறுதியான பாறைமீது, நமது வாழ்வையும் சமூக உறவுகளையும் கட்டி எழுப்ப வேண்டியது முக்கியமாக இருக்கின்றது, நம்மை வழிநடத்துவதற்கு கடவுளின் கரத்தை அனுமதிக்க வேண்டிய தேவை அதிகரித்து வருகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
பிறரன்புச் செயல்கள் மற்றும் விசுவாசத்திற்குச் சாட்சிய வாழ்வு வாழ்வதன் மூலம் கிறிஸ்தவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களின் வாழ்வை மாற்ற முடியும் என்றும் அவர் கூறினார். 
திருத்தந்தையின் இவ்வுரைக்கு முன்னர், இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ இந்த அருங்கொடை இயக்க விசுவாசிகளுக்கு திருப்பலியும் நிகழ்த்தினார்.

2. கிறிஸ்துவின் உயிர்ப்பைப் போற்றும் விதத்தில் உலகெங்கும் செல்லவிருக்கும் மரச்சிலுவையைத் திருத்தந்தை ஆசீர்வதித்தார்

மே26,2012. 2033ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் இரண்டாயிரமாம் ஆண்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வரும் நீண்ட மரச்சிலுவையை இப்புதனன்று ஆசீர்வதித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
13 அடி உயரம் கொண்ட இத்திருச்சிலுவை, கடவுளுக்கு நன்றி செலுத்துவதன் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீடச்சார்பு தினத்தாள் L’Osservatore Romano கூறியது.
புனித பேதுரு, புனித ஜான் இலாத்தரன், புனித மேரி மேஜர், புனித பவுல் ஆகிய உரோம் பசிலிக்காக்களுக்கும், உக்ரேய்ன், போலந்து, லாத்வியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, நார்வே, டென்மார்க், சுவீடன், ஜெர்மனி, ஐஸ்லாந்து, பிரான்ஸ், ஹாலந்து, பெல்ஜியம், ஆஸ்ட்ரியா, ஹங்கேரி, சுலோவாக்கியா, செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கும்  இத்திருச்சிலுவை ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் இத்திருச்சிலுவையை எடுத்துச் செல்லும் முயற்சி, உக்ரேய்ன் நாட்டு லெயோபோலி நகர விசுவாசிகள் குழு ஒன்றால் தொடங்கப்பட்டது.

3. இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திருத்தந்தை உதவி

மே26,2012. அண்மையில் இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Carpi, Mantua, Modena, Ferrara-Comacchio-Nonantola ஆகிய மறைமாவட்டங்களுக்குத் திருத்தந்தை ஒரு இலட்சம் யூரோக்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீடத்தின் Cor Unum என்ற பிறரன்பு அவையின் மூலம் அனுப்பவுள்ள இவ்வுதவி, பாதிக்கப்பட்ட அம்மறைமாவட்டங்களின் நிவாரணப்பணிகளுக்கு உதவும் என்றும், இந்த உதவியானது, பாதிக்கப்பட்ட மக்களுடன் திருத்தந்தை கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் இருக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது. 

4. காட்சிகள், திருவெளிப்பாடுகள் குறித்த திருப்பீடத்தின் வழிமுறைக் கையேடு

மே26,2012. தங்களுக்குக் காட்சி கிடைத்ததாகவும் திருவெளிப்பாடுகளைப் பெற்றதாகவும் தனிப்பட்டவர்கள் சொல்லும் போது அவற்றைக் கையாள்வதற்கு உதவும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயம்.
காட்சிகள், திருவெளிப்பாடுகள், இயல்புக்கு மாறான அசாதாரணக்கூறுகள் குறித்த அறிவிப்பு ஆகியவற்றைத் தேர்ந்துதெளியும் திருஅவை அதிகாரிகளின் கடினமான பணிக்கு இக்கையேடு உதவும் என்று, இக்கையேட்டுக்கு முன்னுரை எழுதியுள்ள திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாடா தெரிவித்தார்.
1978ம் ஆண்டிலிருந்து பேராயத்துக்குள் கையாளப்பட்டு வரும் இது குறித்த விதிமுறைகள், இலத்தீனிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு தற்போது முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

5. அருள்தந்தை லொம்பார்தி : பாபேலிருந்து பெந்தகோஸ்தே

மே26,2012. நமது வாழ்க்கையின் இருளான நேரங்களிலும், நல்லது எது, தீயது எது என்று அறிந்துணருவதற்கு, தேர்ந்துதெளிதல், ஆறுதல், வல்லமை ஆகிய கொடைகளுக்காகத் தூய ஆவியிடம் வேண்டுவோம் என்று வத்திக்கான் தொலைக்காட்சி நிறுவன இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
சமுதாயத்திலும் திருஅவையிலும் எப்பொழுதும் இருந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பாபேல் குழப்பங்கள் நீங்கி பெந்தகோஸ்தெயின் உரையாடல் மற்றும் ஒன்றிப்பு நோக்கி நாம் தொடர்ந்து செல்ல, தூய ஆவியின் இக்கொடைகள் நமக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
ஒக்தாவா தியஸ் என்ற வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் பாபேலிருந்து பெந்தகோஸ்தே என்ற தலைப்பில் பேசிய அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த திங்களன்று உரோம் கர்தினால்களுடன் திருத்தந்தை உணவருந்திய போது அவர் ஆற்றிய உரையின் முக்கிய கருத்துக்களைக் குறிப்பிட்ட அருள்தந்தை லொம்பார்தி, நன்மைக்கும் தீமைக்கும் இடையே மனிதர் தங்களுக்குள் நடத்தும் போராட்டத்தில், ஒன்று கடவுளை மறக்கச் செய்கிறது, மற்றது மனிதர் தன்னையே மறக்கச் செய்கின்றது என்ற திருத்தந்தையின் விளக்கத்தையும் குறிப்பிட்டார்.
தீயவனின் கொடிக்கடியில் அல்லது இயேசுவின் கொடிக்கடியில் நிற்பதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று புனித லொயோலா இஞ்ஞாசியாரது ஆன்மீகப் பயிற்சிகளில் சொல்லப்பட்டிருப்பதையும் குறிப்பிட்ட இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி, இயேசுவின் நண்பர்களாகவும் ஊழியர்களாகவும் இருப்பதற்கு நன்மைத்தனம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறினார்.

6. பொலிவிய ஆயர்கள் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு

மே26,2012. ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தைப் பாதுகாக்கவேண்டிய கடமையை ஒரு நாட்டின் அரசு கொண்டுள்ளது என்று கூறி, ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் மசோதாவை உருவாக்க வேண்டாமெனக் கேட்டுள்ளனர் பொலிவிய ஆயர்கள்.
இந்த மசோதா, பொலிவிய வரலாற்றிலும் அதன் சமுதாயத்திலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்ற குடும்பத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் எச்சரித்துள்ளனர்.
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணம், பொலிவிய அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதையும் ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் மசோதா இன்னும் நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.

7. சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அனைத்து விசுவாசிகளும் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு பால்டிமோர் பேராயர் வலியுறுத்தல்

மே26,2012. சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்க ஐக்கிய நாட்டு விசுவாசிகள் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் பால்டிமோர் பேராயர் வில்லியம் லோரி.
வாஷிங்டனில், தேசிய சமய சுதந்திர விருதைப் பெற்று உரையாற்றிய பேராயர் லோரி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெருமெண்ணிக்கையில் இருக்கும் ஆயர்களும் கத்தோலிக்கரும், அந்நாட்டின் தற்போதைய சமயச்சார்பற்ற தீவிரப் போக்குக்கு எதிராகப் போராடாமல் இருக்க முடியாது என்று கூறினார்.
சமய நிறுவனங்கள், தங்களது அறநெறிப் போதனைகளுக்கு எதிராகச் செயல்படுவதற்குத் தற்போது முதன்முறையாகக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் பேராயர் குறை கூறினார்.

8. சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை இன்னும் அதிக நாடுகள் அமல்படுத்துமாறு ஐ.நா.கோரிக்கை
 
மே26,2012. சிறார் விற்பனை, சிறார் விபசாரம், சிறாரைப் பாதிக்கும் பாலின ஊடகங்கள் ஆகியவற்றிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் உரிமைகளை அமல்படுத்துவதற்கு இன்னும் அதிக நாடுகள் முன்வர வேண்டுமென்று ஐ.நா.கேட்டுள்ளது.
சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை மேலும் 20 நாடுகள் அமல்படுத்தியுள்ளவேளை, ஆயுதம் தாங்கிய மோதல்கள் இடம்பெறும் இடங்களில் சிறார் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு 15 நாடுகள் முன்வந்துள்ளதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுள்ளது ஐ.நா.
18 வயதுக்குட்பட்ட சிறாரைப் படையில் சேர்க்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தையும் நாடுகள் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலரின் பிரதிநிதி இராதிகா குமாரசாமி.

9. மூன்று நாடுகளில் சக்திமிக்க புதிய தொலைநோக்கி

மே26,2012. உலகின் மிக அதிக சக்திவாய்ந்த வானொலி அலை தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் அமையப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூவாயிரம் வானொலி மின்னலைக் கொடிகள் கொண்டு உருவாகும் பிரம்மாண்ட தொலைநோக்கி, ஒன்றோடு ஒன்று விலகிச் சென்று கொண்டிருக்கும் நூறு கோடி அண்டங்களை அலசிக் கணக்கெடுக்கவுள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற தொலைநோக்கியைவிட பத்தாயிரம் மடங்கு வேகமாகவும், ஐம்பது மடங்கு துல்லியமாகவும் இந்தப் புதிய தொலைநோக்கி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...