An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Sunday, 27 May 2012
robert john kennedy: Catholic News in Tamil - 26/05/12
robert john kennedy: Catholic News in Tamil - 26/05/12: 1. திருத்தந்தை : கடுந்தாக்குதல்களுக்கு மத்தியில் கடவுளின் வீடு உறுதியாக நிற்கின்றது 2. கிறிஸ்துவின் உயிர்ப்பைப் போற்றும் விதத்...
Catholic News in Tamil - 26/05/12
1. திருத்தந்தை : கடுந்தாக்குதல்களுக்கு மத்தியில் கடவுளின் வீடு உறுதியாக நிற்கின்றது
2. கிறிஸ்துவின் உயிர்ப்பைப் போற்றும் விதத்தில் உலகெங்கும் செல்லவிருக்கும் மரச்சிலுவையைத் திருத்தந்தை ஆசீர்வதித்தார்
3. இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திருத்தந்தை உதவி
4. காட்சிகள், திருவெளிப்பாடுகள் குறித்த திருப்பீடத்தின் வழிமுறைக் கையேடு
5. அருள்தந்தை லொம்பார்தி : பாபேலிருந்து பெந்தகோஸ்தே
6. பொலிவிய ஆயர்கள் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு
7. சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அனைத்து விசுவாசிகளும் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு பால்டிமோர் பேராயர் வலியுறுத்தல்
8. சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை இன்னும் அதிக நாடுகள் அமல்படுத்துமாறு ஐ.நா.கோரிக்கை
9. மூன்று நாடுகளில் சக்திமிக்க புதிய தொலைநோக்கி
------------------------------ ------------------------------ ------------------------------ -
1.திருத்தந்தை : கடுந்தாக்குதல்களுக்கு மத்தியில் கடவுளின் வீடு உறுதியாக நிற்கின்றது
மே26,2012. கடுந்தாக்குதல்களுக்கு மத்தியில் கடவுளின் வீடு உறுதியாக நிற்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
“நான்
சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும்
பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது” என்ற (மத்.7,24,25)இயேசுவின் திருச்சொற்களைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இயேசுவின் இந்த வாக்குறுதி திருஅவைக்கு எப்போதும் இருந்து வருகிறது என்று கூறினார்.
இத்தாலிய
அருங்கொடை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் 40ம் ஆண்டை முன்னிட்டு வத்திக்கான்
புனித பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை காலை சுமார் ஐம்பதாயிரம்
விசுவாசிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
பாதுகாப்பற்றதன்மை மிகுந்துள்ள இந்த நவீன சமுதாயத்தில் நாம் நிச்சயமற்ற நிலைகளை எதிர்நோக்குகிறோம், நாம் வாழ்வதற்கான அர்த்தமுள்ள கூறுகளும் குறைவுபடுகின்றன, எனவே, கடவுள் என்ற உறுதியான பாறைமீது, நமது வாழ்வையும் சமூக உறவுகளையும் கட்டி எழுப்ப வேண்டியது முக்கியமாக இருக்கின்றது, நம்மை வழிநடத்துவதற்கு கடவுளின் கரத்தை அனுமதிக்க வேண்டிய தேவை அதிகரித்து வருகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
பிறரன்புச்
செயல்கள் மற்றும் விசுவாசத்திற்குச் சாட்சிய வாழ்வு வாழ்வதன் மூலம்
கிறிஸ்தவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களின் வாழ்வை மாற்ற முடியும் என்றும்
அவர் கூறினார்.
திருத்தந்தையின் இவ்வுரைக்கு முன்னர், இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ இந்த அருங்கொடை இயக்க விசுவாசிகளுக்கு திருப்பலியும் நிகழ்த்தினார்.
2. கிறிஸ்துவின் உயிர்ப்பைப் போற்றும் விதத்தில் உலகெங்கும் செல்லவிருக்கும் மரச்சிலுவையைத் திருத்தந்தை ஆசீர்வதித்தார்
மே26,2012.
2033ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பின்
இரண்டாயிரமாம் ஆண்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைநகரங்களுக்கு எடுத்துச்
செல்லப்பட்டு வரும் நீண்ட மரச்சிலுவையை இப்புதனன்று ஆசீர்வதித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
13 அடி உயரம் கொண்ட இத்திருச்சிலுவை, கடவுளுக்கு நன்றி செலுத்துவதன் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீடச்சார்பு தினத்தாள் L’Osservatore Romano கூறியது.
புனித பேதுரு, புனித ஜான் இலாத்தரன், புனித மேரி மேஜர், புனித பவுல் ஆகிய உரோம் பசிலிக்காக்களுக்கும், உக்ரேய்ன், போலந்து, லாத்வியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, நார்வே, டென்மார்க், சுவீடன், ஜெர்மனி, ஐஸ்லாந்து, பிரான்ஸ், ஹாலந்து, பெல்ஜியம், ஆஸ்ட்ரியா, ஹங்கேரி, சுலோவாக்கியா, செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கும் இத்திருச்சிலுவை ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் இத்திருச்சிலுவையை எடுத்துச் செல்லும் முயற்சி, உக்ரேய்ன் நாட்டு லெயோபோலி நகர விசுவாசிகள் குழு ஒன்றால் தொடங்கப்பட்டது.
3. இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திருத்தந்தை உதவி
மே26,2012. அண்மையில் இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Carpi, Mantua, Modena, Ferrara-Comacchio-Nonantola ஆகிய மறைமாவட்டங்களுக்குத் திருத்தந்தை ஒரு இலட்சம் யூரோக்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீடத்தின் Cor Unum என்ற பிறரன்பு அவையின் மூலம் அனுப்பவுள்ள இவ்வுதவி, பாதிக்கப்பட்ட அம்மறைமாவட்டங்களின் நிவாரணப்பணிகளுக்கு உதவும் என்றும், இந்த உதவியானது, பாதிக்கப்பட்ட மக்களுடன் திருத்தந்தை கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் இருக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
4. காட்சிகள், திருவெளிப்பாடுகள் குறித்த திருப்பீடத்தின் வழிமுறைக் கையேடு
மே26,2012.
தங்களுக்குக் காட்சி கிடைத்ததாகவும் திருவெளிப்பாடுகளைப் பெற்றதாகவும்
தனிப்பட்டவர்கள் சொல்லும் போது அவற்றைக் கையாள்வதற்கு உதவும் வழிமுறைகளை
வெளியிட்டுள்ளது திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயம்.
காட்சிகள், திருவெளிப்பாடுகள்,
இயல்புக்கு மாறான அசாதாரணக்கூறுகள் குறித்த அறிவிப்பு ஆகியவற்றைத்
தேர்ந்துதெளியும் திருஅவை அதிகாரிகளின் கடினமான பணிக்கு இக்கையேடு உதவும்
என்று, இக்கையேட்டுக்கு முன்னுரை எழுதியுள்ள திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாடா தெரிவித்தார்.
1978ம் ஆண்டிலிருந்து பேராயத்துக்குள் கையாளப்பட்டு வரும் இது குறித்த விதிமுறைகள், இலத்தீனிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு தற்போது முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
5. அருள்தந்தை லொம்பார்தி : பாபேலிருந்து பெந்தகோஸ்தே
மே26,2012. நமது வாழ்க்கையின் இருளான நேரங்களிலும், நல்லது எது, தீயது எது என்று அறிந்துணருவதற்கு, தேர்ந்துதெளிதல், ஆறுதல், வல்லமை ஆகிய கொடைகளுக்காகத் தூய ஆவியிடம் வேண்டுவோம் என்று வத்திக்கான் தொலைக்காட்சி நிறுவன இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
சமுதாயத்திலும்
திருஅவையிலும் எப்பொழுதும் இருந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பாபேல்
குழப்பங்கள் நீங்கி பெந்தகோஸ்தெயின் உரையாடல் மற்றும் ஒன்றிப்பு நோக்கி
நாம் தொடர்ந்து செல்ல, தூய ஆவியின் இக்கொடைகள் நமக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
“ஒக்தாவா தியஸ்” என்ற வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் பாபேலிருந்து பெந்தகோஸ்தே என்ற தலைப்பில் பேசிய அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த
திங்களன்று உரோம் கர்தினால்களுடன் திருத்தந்தை உணவருந்திய போது அவர்
ஆற்றிய உரையின் முக்கிய கருத்துக்களைக் குறிப்பிட்ட அருள்தந்தை லொம்பார்தி, நன்மைக்கும் தீமைக்கும் இடையே மனிதர் தங்களுக்குள் நடத்தும் போராட்டத்தில், ஒன்று கடவுளை மறக்கச் செய்கிறது, மற்றது மனிதர் தன்னையே மறக்கச் செய்கின்றது என்ற திருத்தந்தையின் விளக்கத்தையும் குறிப்பிட்டார்.
தீயவனின்
கொடிக்கடியில் அல்லது இயேசுவின் கொடிக்கடியில் நிற்பதை நாம் தேர்ந்தெடுக்க
வேண்டுமென்று புனித லொயோலா இஞ்ஞாசியாரது ஆன்மீகப் பயிற்சிகளில்
சொல்லப்பட்டிருப்பதையும் குறிப்பிட்ட இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி, இயேசுவின் நண்பர்களாகவும் ஊழியர்களாகவும் இருப்பதற்கு நன்மைத்தனம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறினார்.
6. பொலிவிய ஆயர்கள் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு
மே26,2012.
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தைப்
பாதுகாக்கவேண்டிய கடமையை ஒரு நாட்டின் அரசு கொண்டுள்ளது என்று கூறி, ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் மசோதாவை உருவாக்க வேண்டாமெனக் கேட்டுள்ளனர் பொலிவிய ஆயர்கள்.
இந்த மசோதா, பொலிவிய
வரலாற்றிலும் அதன் சமுதாயத்திலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்ற
குடும்பத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஆயர்கள் தங்கள்
அறிக்கையில் எச்சரித்துள்ளனர்.
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணம், பொலிவிய அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதையும் ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது
பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் மசோதா
இன்னும் நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.
7. சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அனைத்து விசுவாசிகளும் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு பால்டிமோர் பேராயர் வலியுறுத்தல்
மே26,2012.
சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்க ஐக்கிய நாட்டு விசுவாசிகள்
ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் பால்டிமோர் பேராயர் வில்லியம்
லோரி.
வாஷிங்டனில், தேசிய சமய சுதந்திர விருதைப் பெற்று உரையாற்றிய பேராயர் லோரி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெருமெண்ணிக்கையில் இருக்கும் ஆயர்களும் கத்தோலிக்கரும், அந்நாட்டின் தற்போதைய சமயச்சார்பற்ற தீவிரப் போக்குக்கு எதிராகப் போராடாமல் இருக்க முடியாது என்று கூறினார்.
சமய நிறுவனங்கள், தங்களது
அறநெறிப் போதனைகளுக்கு எதிராகச் செயல்படுவதற்குத் தற்போது முதன்முறையாகக்
கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் பேராயர் குறை கூறினார்.
8. சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை இன்னும் அதிக நாடுகள் அமல்படுத்துமாறு ஐ.நா.கோரிக்கை
மே26,2012. சிறார் விற்பனை, சிறார் விபசாரம், சிறாரைப்
பாதிக்கும் பாலின ஊடகங்கள் ஆகியவற்றிலிருந்து அவர்களுக்குப்
பாதுகாப்பளிக்கும் உரிமைகளை அமல்படுத்துவதற்கு இன்னும் அதிக நாடுகள் முன்வர
வேண்டுமென்று ஐ.நா.கேட்டுள்ளது.
சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை மேலும் 20 நாடுகள் அமல்படுத்தியுள்ளவேளை, ஆயுதம்
தாங்கிய மோதல்கள் இடம்பெறும் இடங்களில் சிறார் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு
15 நாடுகள் முன்வந்துள்ளதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுள்ளது ஐ.நா.
18
வயதுக்குட்பட்ட சிறாரைப் படையில் சேர்க்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தையும்
நாடுகள் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலரின்
பிரதிநிதி இராதிகா குமாரசாமி.
9. மூன்று நாடுகளில் சக்திமிக்க புதிய தொலைநோக்கி
மே26,2012. உலகின் மிக அதிக சக்திவாய்ந்த வானொலி அலை தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் அமையப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூவாயிரம் வானொலி மின்னலைக் கொடிகள் கொண்டு உருவாகும் பிரம்மாண்ட தொலைநோக்கி, ஒன்றோடு ஒன்று விலகிச் சென்று கொண்டிருக்கும் நூறு கோடி அண்டங்களை அலசிக் கணக்கெடுக்கவுள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற தொலைநோக்கியைவிட பத்தாயிரம் மடங்கு வேகமாகவும், ஐம்பது மடங்கு துல்லியமாகவும் இந்தப் புதிய தொலைநோக்கி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.robert john kennedy: Catholic News in TAmil - 25/05/12
robert john kennedy: Catholic News in TAmil - 25/05/12: 1. செக் குடியரசுப் பிரதமர் Petr Necas , திருத்தந்தை சந்திப்பு 2. ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வோருக்குப் பரிபூரண பல...
Catholic News in TAmil - 25/05/12
1. செக் குடியரசுப் பிரதமர் Petr Necas, திருத்தந்தை சந்திப்பு
2. ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வோருக்குப் பரிபூரண பலன்
3. வன்முறைகளுக்கு மத்தியில் எதிர்காலத்தைப் பற்றி பெண்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மனித குலத்திற்கு ஒரு பாடம் - கர்தினால் Vegliò
4. சிரியாவுக்குள் புகுந்துள்ள வன்முறை கும்பல்களால் நாட்டின் அமைதிக்கு பெரும் ஆபத்து - Aleppo வின் அப்போஸ்தலிக்க நிர்வாகி
5. நீதியுடனும், நேர்மையுடனும் செயல்படக்கூடிய ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் - தென் கொரிய ஆயர்கள் அழைப்பு
6. மன்னாரில் கத்தோலிக்க அருட்பணியாளர்களுக்கு காவல்துறை நெருக்கடி
7. சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தக் கோரி உண்ணாநோன்பு போராட்டம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. செக் குடியரசுப் பிரதமர் Petr Necas, திருத்தந்தை சந்திப்பு
மே25,2012. செக் குடியரசுப் பிரதமர் Petr Necas அவர்கள், இவ்வெள்ளியன்று
திருப்பீடத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை சுமார் இருபது
நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம்
அறிவித்தது.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் செக் பிரதமர் Necas.
இச்சந்திப்பின்போது, புனித நார்பெர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பிராக் நகரின் மிகப் பழமையான Strahov துறவுமடத்தைச் சேர்ந்த 9ம் நூற்றாண்டு திருவிவிலியத்தைத் திருத்தந்தைக்குப் பரிசாகக் கொடுத்தார் செக் பிரதமர்.
திருத்தந்தையும், செக் பிரதமருக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்திலுள்ள பெர்னினி தூண் வடிவம் போன்ற விலைமதிப்பற்ற பேனாவை அளித்தார்.
2. ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வோருக்குப் பரிபூரண பலன்
மே25,2012.
இம்மாதம் 30 முதல் ஜூன் 3 வரை இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் ஏழாவது
அனைத்துலக குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வோருக்குப் பரிபூரணபலன் சலுகையை
வழங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாவமன்னிப்புச்சலுகை
வழங்கும் அப்போஸ்தலிக்க நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆணையில்
திருத்தந்தை வழங்கியுள்ள இந்தப் பரிபூரணபலன் பாவமன்னிப்புச் சலுகை
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குடும்ப மாநாட்டில் பங்கு கொள்வதற்கு ஆன்மீகரீதியாகத் தங்களைத் தயாரிப்போருக்கும், இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலாமல் இருக்கும், அதேவேளை செபத்தாலும், குறிப்பாக, இம்மாநாட்டு
நிகழ்வுகளில் திருத்தந்தையின் உரைகளைத் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம்
கேட்பவர்க்கும் இச்சலுகையைத் திருத்தந்தை வழங்குகிறார் என்றும் அந்த ஆணை
தெரிவிக்கிறது.
மேலும், விசுவாசிகள், குடும்பங்களின் நலனுக்காகச் செபிக்கும் ஒவ்வொரு நேரமும் இந்தப் பரிபூரண பலனின் ஒரு பகுதியைப் பெறுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பரிபூரணபலன் என்பது பாவத்திற்கானத் தற்காலிகத் தண்டனை கடவுள் திருமுன் மன்னிக்கப்படுவதாகும்.
3. வன்முறைகளுக்கு மத்தியில் எதிர்காலத்தைப் பற்றி பெண்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மனித குலத்திற்கு ஒரு பாடம் - கர்தினால் Vegliò
மே,25,2012. புலம் பெயர்ந்தோரில் பெண்கள் அதிக வன்முறைகளுக்குப் பலியாகின்றனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்க
ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதரகம் புலம் பெயர்ந்தோரின் பிரச்சனைகளை
மையப்படுத்தி உரோம் நகரில் இவ்வியாழனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு
கருத்தரங்கில், புலம்பெயர்ந்தோர், பயணிகள் ஆகியோருக்குப் பணிபுரியும் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
"வாய்ப்புகளுக்கான பாலங்களை உருவாக்குதல்: பெண்களும் புலம்பெர்யர்தலும்" என்ற தலைப்பில் அமைந்திருந்த கர்தினால் Vegliòவின் உரையில், கட்டாயமாகப் புலம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படும் மக்களிடையே, பெண்கள் அதிக வன்முறைகளுக்குள்ளாவதால், ஆழமான உள்மனக் காயங்களை அவர்கள் வாழ்வு முழுவதும் சுமக்க வேண்டியுள்ளது என்று எடுத்துரைத்தார்.
பாலியல்
வன்முறை என்பது போர்களில் பயன்படுத்தப்படும் ஒரு வன்முறைத் திட்டமாக
உருவெடுத்துள்ளது என்ற ஆபத்தைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Vegliò, 'குலங்களைச் சுத்தமாக்குதல்' (‘ethnic cleansing’) என்ற ஒரு தவறான எண்ணத்தால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை வலியுறுத்தினார்.
மனித வர்த்தகத்தில் பெருமளவில் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதையும் எடுத்துரைத்த கர்தினால் Vegliò, இத்தனை
வன்முறைகளுக்கும் மத்தியில் பெண்கள் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை
கொண்டிருப்பது மனித குலத்திற்கு ஒரு பாடமாக அமைகிறது என்று கூறினார்.
4. சிரியாவுக்குள் புகுந்துள்ள வன்முறை கும்பல்களால் நாட்டின் அமைதிக்கு பெரும் ஆபத்து - Aleppo வின் அப்போஸ்தலிக்க நிர்வாகி
மே,25,2012.
சிரியாவின் அமைதியைக் குலைப்பதற்கு வேற்று நாடுகளிலிருந்து
அந்நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் வன்முறை கும்பல்கள் செயல்பட்டு
வருகின்றன என்று Aleppo வின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giuseppe Nazzaro கூறினார்.
லிபியா, துனிசியா, துருக்கி, பாகிஸ்தான்
ஆகிய நாடுகளிலிருந்து சிரியாவுக்குள் புகுந்துள்ள வன்முறை கும்பல்களும்
அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமைப்புக்களும் சிரியாவின் அமைதிக்கு
பெரும் ஆபத்தாக அமைந்துள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த
பேட்டியொன்றில் ஆயர் Nazzaro கூறினார்.
சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், அமைதியை விரும்பாத பிற நாட்டு வன்முறை கும்பல்கள் சிரியாவில் குழப்பங்களை உருவாக்கி வருகின்றன என்று ஆயர் Nazzaro குற்றம் சாட்டியுள்ளார்.
வன்முறைகள் தொடர்வதால், நாட்டில் கிடைக்க வேண்டிய மருத்துவ உதவிகளும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதென்றும் ஆயர் Nazzaro குறை கூறியுள்ளார்.
5. நீதியுடனும், நேர்மையுடனும் செயல்படக்கூடிய ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் - தென் கொரிய ஆயர்கள் அழைப்பு
மே,25,2012. தென் கொரியாவில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் நீதியுடன், நேர்மையுடன் செயல்படக்கூடிய ஒருவரை மக்கள் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தென் கொரிய அரசுத்தலைவர் அகில உலக அரசியல் விடயங்களில் ஈடுபடவேண்டிய ஒருவராக இருப்பதால், ஊழல், பேராசை, அநீதி ஆகிய குறைகளற்ற ஒருவரை அப்பதவிக்குத் தேர்ந்தெடுப்பது மக்களின் கடமை என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரிய ஆயர்களின் எண்ணங்களை உள்ளடக்கிய ஓர் அறிக்கையைப் பேரவையின் சார்பில் செயலர் அருள்தந்தை Thaddaeus Lee Ki-shelf, Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.
“உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்” (இணைச்சட்டம் 1: 13) என்று விவிலியத்தின் இணைச்சட்ட நூலில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை தங்கள் அறிக்கையில் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், இன்றைய உலகில் கடவுள் தரும் ஒளியைக் கொண்டு தலைவர்களைத் தேர்ந்தெடுக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
6. மன்னாரில் கத்தோலிக்க அருட்பணியாளர்களுக்கு காவல்துறை நெருக்கடி
மே25,2012. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வேலைவாய்ப்பு, நிலஅபகரிப்பு போன்றவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்திலும், மன்னார் ஆயருக்கு எதிராக அமைச்சர் ஒருவர் தெரிவித்த தேவையற்ற குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மன்னார் மறைமாவட்ட குருக்கள் எதிர்ப்பு நிகழ்வொன்றை இஞ்ஞாயிறன்று நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மன்னார்
கத்தோலிக்க குருகுல முதல்வர் உட்பட ஐந்து அருட்பணியாளர்களை மன்னார்
நீதிமன்றத்தின் விசாரணைக்குச் செல்லுமாறு அவசரகால காவல்துறை ஆணை
பிறப்பித்துள்ளது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
மன்னார் ஆயர் ஜோசப் ராயப்பு, ஏற்கனவே இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சர் ரிசாட் பதியுதீனால் தேவையற்ற விதத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
மன்னாரிலிருந்து
தலைமன்னார்க்குச் செல்லும் முக்கிய சாலையில் உள்ள கட்டுக்காரன்
குடியிருப்பு கிராமத்தில் உள்ள மன்னார் ஆயர் இல்லம் மற்றும் அப்பகுதி
மக்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஏக்கர் நிலத்தை இந்த அமைச்சரின் சகோதரர்
ஒருவர் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் அண்மையில் செய்தியாக
வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நில
அபகரிப்பு தொடர்பாக மன்னார் ஆயர் உள்ளிட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த ஐந்து
பேர் தலைமன்னார் காவல்துறையில் புகார் செய்திருந்தனர் என்றும் செய்திகள்
வெளியாகியுள்ளன.
7. சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தக் கோரி உண்ணாநோன்பு போராட்டம்
மே,25,2012. இலங்கையில் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களை விடுவிக்கக் கோரி இவ்வியாழனன்று 500க்கும் அதிகமான மனித உரிமை ஆர்வலர்கள் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2009ம்
ஆண்டு மேமாதம் முடிவுற்ற உள்நாட்டுப் போருக்குப் பின் மூன்றாண்டுகள்
கழிந்தபின்னரும் தமிழர்களை எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல்
சிறைகளில் அடைத்து வைத்திருப்பது அநீதி என்று இந்த உண்ணாநோன்பு
போராட்டத்தில் கலந்து கொண்ட பெருமாள் பூமிநாதன் கூறினார்.
பல சிறைகளில் தமிழர்கள் தாங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரி, சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிய பூமிநாதன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறைக் கைதிகளில் பலரது நிலை மோசமடைந்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
இலங்கைச்
சிறையில் விசாரணையின்றி அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு விரைவில்
தீர்வு காணப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மே மாதத் துவக்கத்தில்
அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
robert john kennedy: Catholic News in TAmil - 24/05/12
robert john kennedy: Catholic News in TAmil - 24/05/12: 1. திருத்தந்தை : கடவுளும் காயப்பட்ட ஐரோப்பாவும் 2. பல்கேரியா , மாசிடோனியா அரசுத்தலைவர்கள் , திருத்தந்தை சந்திப்பு 3. ஏழைக் குடும்பங்க...
Catholic News in TAmil - 24/05/12
1. திருத்தந்தை : கடவுளும் காயப்பட்ட ஐரோப்பாவும்
2. பல்கேரியா, மாசிடோனியா அரசுத்தலைவர்கள், திருத்தந்தை சந்திப்பு
3. ஏழைக் குடும்பங்களுடன் திருத்தந்தை மதிய உணவு
4. குடியேற்றதாரர் குறித்த அமெரிக்க ஆயர்களின் கூட்டம்
5. எல் சால்வதோரில் வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களை நிறுத்துவதற்கு சான் சால்வதோர் பேராயர் வலியுறுத்தல்
6. போலியோ நோயைத் தடுப்பதற்கு அவசரகாலத் திட்டம்
7. கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக தனது நாட்டைவிட்டு வெளிநாடு செல்லவிருக்கிறார் Aung San Suu Kyi
8. இந்தியாவின் 200 கோடி டாலர் தெற்காசிய உதவித் திட்டம்
9. மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை வீடுகளுக்கே சென்று பெறும் புதிய முயற்சி
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. திருத்தந்தை : கடவுளும் காயப்பட்ட ஐரோப்பாவும்
மே24,2012.
அன்றாட வாழ்விலிருந்து கடவுளை ஒதுக்கி வைத்தால் மனித மாண்பும் நீதியும்
சுதந்திரமும் மலராது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலிய ஆயர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அவ்வுரையின் இறுதியில் தூய ஆவியிடம் செபித்த போது, கடவுளை ஒதுக்கி வாழும் போது அது இடர்களுக்கே இட்டுச்செல்லும் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும், மனித
மாண்பும் சுதந்திரமும் மலர்ந்தால்தான் ஒரு சமுதாயத்தை நீதியில் சமைக்க
முடியும் என்பதை மனித சமுதாயத்துக்கு உணர்த்தும் என்று வேண்டினார்.
ஐரோப்பாவில் சமய நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக
திருப்பலிக்குச் செல்வோர் மற்றும் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவோரின்
எண்ணிக்கை குறைந்து வருவதை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில், காயப்பட்ட ஐரோப்பாவில் கடவுள் பற்றி அறிவித்து அவரைக் கொண்டாட வேண்டும், அவருக்குச் சான்று பகர வேண்டுமெனக் கேட்டுள்ளார் திருத்தந்தை.
கடவுள் அறியப்படாதவராக நோக்கப்பட்டு, இயேசு
ஒரு வரலாற்று நாயகன் என்ற நிலையில் மட்டும் பார்க்கப்படும் போக்கு நிலவும்
இக்காலத்தில் ஆழமான இறையனுபவம் பெற்ற மனிதரின் வாழ்க்கையினால் மட்டுமே
மக்கள் கிறிஸ்துவிடம் ஈர்ப்பைப் பெறுவார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
நமது
பற்றுறுதி மற்றும் செபத்தின் தன்மையைப் புதுப்பிக்காவிட்டால் மறைபோதகப்
பணியில் மறுமலர்ச்சி இருக்காது என்றும் திருத்தந்தை கூறினார்.
2. பல்கேரியா, மாசிடோனியா அரசுத்தலைவர்கள், திருத்தந்தை சந்திப்பு
மே24,2012. இவ்வியாழனன்று பல்கேரிய நாட்டு அரசுத்தலைவர் Rossen Plevneliev, மாசிடோனியக் குடியரசுத் தலைவர் Nikola Guevski ஆகியோரையும் தனித்தனியே திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஐரோப்பாவின் இணைப்பாதுகாவலர்கள் புனிதர்கள் சிரில்,மெத்தோடியஸ் ஆகியோரின் விழாக்களையொட்டி இவ்விரு நாடுகளின் தலைவர்களும் திருத்தந்தையையும், பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தனர்.
3. ஏழைக் குடும்பங்களுடன் திருத்தந்தை மதிய உணவு
மே24,2012.
இத்தாலியின் மிலான் நகரில் இம்மாதம் 30 முதல் ஜூன் 3 வரை நடைபெறும் ஏழாவது
அனைத்துலக குடும்ப மாநாட்டிற்குச் செல்லும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தேவையில்
இருக்கும் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் விருந்தோம்பல்
பண்பையும் தெரிவிப்பார் என்று மிலான் பேராயர் கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலா
அறிவித்தார்.
இவ்வுலக
மாநாடு நிறைவடையும் ஜூன் 3ம் தேதியன்று சுமார் நூறு குடும்பங்களின் 300
உறுப்பினர்களுடன் திருத்தந்தை மதிய உணவு அருந்துவார் என்று கர்தினால்
ஸ்கோலா நிருபர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோர், அரசியல்ரீதியான அகதிகள், குடியேற்றதாரர், வயதான தம்பதியர் ஆகியோர் இந்த மதிய உணவுக்கெனத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வுலக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கும் வெளிநாட்டவர்க்கு உதவும் நோக்கத்தில், “மிலான் குடும்பங்கள் 2012”
என்ற அமைப்பும் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு இதுவரை சுமார்
ஐம்பதாயிரம் யூரோக்களைத் திரட்டியிருப்பதாகவும் நிருபர் கூட்டத்தில்
அறிவிக்கப்பட்டது.
குடும்பங்களைக்
கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவிருக்கும்
இவ்வுலக மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த 104 பேர் உரையாற்றுவார்கள்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. குடியேற்றதாரர் குறித்த அமெரிக்க ஆயர்களின் கூட்டம்
மே24,2012.
அமெரிக்கக் கண்டத்தில் சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் குடியேற்றங்கள்
ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆராயும் நோக்கத்தில் அக்கண்டத்தின்
ஆயர்கள் வரும் வாரத்தில் தொமினிக்கன் குடியரசில் கூட்டம் நடத்தவுள்ளனர்.
இம்மாதம் 28 முதல் 30 வரை நடைபெறும் இக்கூட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ, மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் நாடுகளின் ஆயர்கள் கலந்து கொள்வார்கள் என்று பீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
குடியேற்றதாரரின் சொந்த நாடுகள் மற்றும் அவர்கள் வாழும் நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இன்னும் இவர்களுக்குத் திருஅவையின் மேய்ப்புப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து பேசப்படும் எனவும் பீதெஸ் அறிவித்தது.
5. எல் சால்வதோரில் வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களை நிறுத்துவதற்கு சான் சால்வதோர் பேராயர் வலியுறுத்தல்
மே24,2012.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் இரண்டு போட்டி வன்முறைக்
கும்பல்கள் தாக்குதல்களை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும்
முயற்சிகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் சான் சால்வதோர் பேராயர் ஹோசே
லூயிஸ் எஸ்கோபார் அலாஸ்.
இந்தக்
கும்பல்களுக்கிடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கானப் பேச்சுவார்த்தையில்
இடைநிலை வகிக்கும் அந்நாட்டு இராணுவ ஆன்மீக ஆலோசகர் பேராயர் Fabio Colindres வின் முயற்சிகளுக்குத் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார் சான் சால்வதோர் பேராயர் எஸ்கோபார் அலாஸ்.
Mara Salvatrucha, Mara-18 ஆகிய இரண்டு முக்கிய வன்முறைக் கும்பல்களால் அந்நாட்டில் அண்மை ஆண்டுகளாக மக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன. மேலும், ஒரு
இலட்சம் குடிமக்களுக்கு 65 கொலைகள் வீதம் நடந்து வரும் எல் சால்வதோர் நாடு
இலத்தீன் அமெரிக்காவில் வன்முறை மிகுந்த நாடுகளில் இரண்டாவது இடத்தையும்
கொண்டுள்ளது.
6. போலியோ நோயைத் தடுப்பதற்கு அவசரகாலத் திட்டம்
மே24,2012. போலியோ நோய்ப் பாதிப்பு இல்லாமல் இருந்த நாடுகளில் மீண்டும் அந்நோய்ப் பாதிக்கத் தொடங்கியிருப்பதால், இந்நோயைத் தடுப்பதற்கு உலக அளவில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் விரைவில் உலகினரை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ஆப்ரிக்கா, தாஜிக்கிஸ்தான், சீனா ஆகிய பகுதிகளில் போலியோ நோய்க்கிருமிகள் பரவத் தொடங்கியிருப்பதாக WHO கூறியது.
நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டுமென்றும் WHO நிறுவனம் கேட்டுள்ளது.
தகுந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், பத்தாண்டுக்குள், ஒவ்வோர்
ஆண்டும் உலகில் சுமார் 2 இலட்சம் சிறார் வாதநோயாளிகளாகிவிடுவார்கள் என்று
இந்நிறுவன உறுப்பினர்கள் ஜெனீவா கூட்டத்தில் எச்சரித்தனர்.
போலியோ நோய் அச்சுறுத்தல் அதிகமாக இருந்த நாடுகளில் ஒன்றான இந்தியா, கடந்த பிப்ரவரியிலிருந்து அந்நோய்ப் பாதிப்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
7. கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக தனது நாட்டைவிட்டு வெளிநாடு செல்லவிருக்கிறார் Aung San Suu Kyi
மே24,2012. மியான்மார் சனநாயக ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் Aung San Suu Kyi, கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக அடுத்த வாரத்தில் தனது நாட்டைவிட்டு வெளிநாடு செல்லவிருக்கிறார்.
இம்மாதம்
30 முதல் ஜூன் 1 வரை தாய்லாந்து நாட்டு பாங்காக்கில் நடைபெறும் உலகப்
பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்கெனச் செல்லவிருக்கிறார் Suu Kyi.
மியான்மாரில்
மக்களாட்சி ஏற்படுவதற்காக அமைதியான முறையில் போராடியதற்காக ஏறத்தாழ 15
ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்தவர் சு சி. 66 வயதாகும் இவர் வருகிற
ஜூனில் ஆஸ்லோ சென்று 1991ம் ஆண்டில் தான் பெற்ற அமைதி நொபெல் விருதுக்கான
உரை வழங்குவார். ஜூன் 21ம் தேதியன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின்
விருந்தினராக உபசரிக்கப்படுவார்.
8. இந்தியாவின் 200 கோடி டாலர் தெற்காசிய உதவித் திட்டம்
மே24,2012. தெற்காசிய நாடுகளுக்கு உதவ, 200 கோடி டாலர்கள் அளவுக்கு, நிதி உதவி அமைப்பு ஒன்றை, தனது மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் மூலம் உருவாக்கியிருக்கிறது இந்தியா.
இதன்மூலம், அண்டை நாடுகள், இந்தியாவின் ரிசர்வ் வங்கியை அணுகி நிதி உதவி பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய கடன் வசதி அமைப்பு, அண்டை நாடுகளிடையே, இந்தியா தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலானது என்று கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலர் நீலகண்டன் ரவி, இந்நடவடிக்கையானது, அண்டை நாடுகளுடன் இந்திய உறவுகள் மேம்பட உதவும் என்று கூறினார்.
9. மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொள்ளும் புதிய முயற்சி
மே24,2012.
வீடுகளுக்கே சென்று மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை பெற்றுக்கொண்டு
அதற்கான பணத்தை அளிக்கும் ஒரு புதிய முயற்சியில் சென்னையைச் சேர்ந்த தகவல்
தொழில்நுட்ப பட்டதாரி தம்பதியினர் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக பிளாஸ்டிக், ரப்பர், காகிதம், இரும்பு, அலுமினியம் போன்று மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை, வீடுகளுக்கே
சென்று பெற்றுவரும் ஒரு திட்டத்தை ஜோசஃப் ஜெகன் மற்றும் சுஜாதா
தம்பதியினர் இணையதளம் மூலம் மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார்கள்.
இந்தியாவில் குப்பைகளை அகற்றுவது ஒரு பெரும் பிரச்சினையாக இருப்பதாலும், இத்தொழிலில்
ஈடுபட்டு வரும் சிறுவணிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் தம்மால்
எடுக்கப்பட்டுவரும் புது முயற்சிக்கு வரவேற்பு இருப்பதாக ஜோசஃப் ஜெகன்
தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 3200 மெட்ரிக் டன்கள் அளவுக்கு குப்பைகள் சேர்வதாக மாநகராட்சி கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...