Saturday, 28 May 2011

Catholic News - hottest and latest - 28 May 2011

1.    உரோம் நகர் வந்துள்ள கேரள ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

2.    குரோவேசிய நாட்டிற்கான ப‌ய‌ண‌த்தின் போது குடும்ப‌ம் ம‌ற்றும் இளையோர் பிர‌ச்னைக‌ளுக்குத் திருத்தந்தை முக்கிய‌த்துவ‌ம்
      வ‌ழ‌ங்குவார்

3.    உலக இளையோர் தினத்தின் பலன்களை உடனே காண முடிகிறது என்கிறார் இஸ்பெயின் கர்தினால்

4.    மத்தியக் கிழக்குப் பகுதியின் மதங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்

5.    வன்முறைக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கைது செய்யப்பட்ட இலங்கை இயேசு சபை குரு விடுதலை

6.    கம்யூனிச சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

7.     இவ்வுலகில் படிப்பறிவில்லாத மக்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள் - UNESCO அறிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------

1.    உரோம் நகர் வந்துள்ள கேரள ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

மே 28, 2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள கேரளாவைச் சேர்ந்த ஐந்து ஆயர்களை இச்சனிக்கிழமையன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தைஇச்சனிக்கிழமை காலை மேலும் ஐந்து இந்தியத் திருச்சபைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
கேர‌ளாவின் கொல்லம் ஆயர் ஸ்டான்லி ரோமன், புனலூர் ஆயர் சில்வெஸ்டர் பொன்னுமுத்தன், நெய்யாற்றிங்கரா ஆயர் வின்சென்ட் சாமுவேல், ஆலப்புழா ஆயர் ஸ்டீபன் அத்திப்பொழியில், விஜயபுரம் ஆயர் செபஸ்தியான் தெக்கத்தேசேரில் ஆகியோரை குழுவாகவும், பின்னர் தனித்தனியாகவும் சந்தித்து அந்தந்த‌ ம‌றைமாவ‌ட்ட‌ங்க‌ள் குறித்து அவ‌ர்க‌ளுட‌ன் உரையாடினார் திருத்தந்தை.

2.     குரோவேசிய நாட்டிற்கான ப‌ய‌ண‌த்தின் போது குடும்ப‌ம் ம‌ற்றும் இளையோர் பிர‌ச்னைக‌ளுக்குத் திருத்தந்தை முக்கிய‌த்துவ‌ம் வ‌ழ‌ங்குவார்

மே 28, 2011.  துன்பகரமான வேளைகளில் தங்கள் விசுவாசத்தைக் காப்பாற்றியும், திருப்பீடத்துடன் எப்போதும் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியும் வந்துள்ள குரோவேசிய நாட்டிற்குத் திருத்தந்தை பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றார் திருப்பீடப்பேச்சாளர் அருட்திரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி.
வ‌ரும் ச‌னி ம‌ற்றும் ஞாயிறு குரோவேசியாவில் இட‌ம்பெற‌ உள்ள‌ திருத்தந்தையின் திருப்ப‌ய‌ண‌ம் குறித்து க‌ருத்துக்க‌ளை வெளியிட்ட‌ இயேசு சபை குரு லொம்பார்தி, ம‌த‌ச்சார்ப‌ற்ற‌ நிலைக‌ளின் ச‌வால்க‌ளை எதிர்நோக்கி வ‌ரும் இந்நாட்டில், குடும்ப‌ம் ம‌ற்றும் இளையோர் பிர‌ச்னைக‌ளுக்கு தன் ப‌ய‌ண‌த்தின் போது திருத்தந்தை அதிக முக்கிய‌த்துவ‌ம் வ‌ழ‌ங்குவார் என்றார்.
தனி நாடாகச் சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகளுக்குப்பின் தற்போது இவ்வாண்டில் ஐரோப்பிய ஐக்கிய அவையில் இணைய உள்ள குரோவேசியாவில்  ஜூன் 5ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தேசிய குடும்ப நாள் கொண்டாட்டங்களில் பங்குகொள்ள உள்ளார் திருத்தந்தை.

3.    உலக இளையோர் தினத்தின் பலன்களை உடனே காண முடிகிறது என்கிறார் இஸ்பெயின் கர்தினால்

மே 28, 2011.  வருங்கால வாழ்வனைத்தையும் தங்கள் முன்னே வைத்திருக்கும் இளையோர் அந்த வாழ்வுக்கான அடிக்கல்லை நாட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதே கத்தோலிக்கத் திருச்சபையின் உலக இளையோர் தினம் என்றார் கர்தினால் அந்தோனியோ மரிய ருவோக்கோ வலேரா.
வரும் ஆகஸ்ட் மாதத்தின் உலக இளையோர் தினம் திருத்தந்தையுடன் இடம்பெற உள்ள இஸ்பெயினின் மத்ரித் நகர் பேராயர் கர்தினால்  ருவோக்கோ வலேரா, உலக இளையோர் தினத்தின் பலன்கள் ஒவ்வொருமுறையும் குருத்துவ, துறவற மற்றும் திருமணத்திற்கான அழைப்பாக மலர்வதைக் காண முடிகிறது என்றார்.
கத்தோலிக்க இளையோர் தினக்கொண்டாட்டங்கள், சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பை  இளையோர் வழி வழங்கி வருகின்றன என மேலும் கூறினார் இஸ்பெயின் கர்தினால்.

4.    மத்தியக் கிழக்குப் பகுதியின் மதங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்

மே 28, 2011.  பொது நலனுக்கான ஒத்துழைப்புக்கும் அமைதியை ஊக்குவிப்பதற்கும் உதவும் நோக்குடன் மத்தியக் கிழக்குப் பகுதியின் மதங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது மத்தியக் கிழக்கு ஆயர் பேரவையின் சிறப்பு அவை.
உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச் தலைமையில் அண்மையில் கூடிய இச்சிறப்பு அவை, அனைத்து மதத்தவரின், இனத்தவரின் கலாச்சாரப் பிரிவினரின் சரிநிகர் உரிமைகளுக்கு உறுதி வழங்கப்பட வேண்டும் என தல மற்றும் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பையும் விடுத்துள்ளது.
சகிப்புத்தன்மை, ஒருவர் ஒருவரை புரிந்து கொள்ளுதல் மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாதது மதங்களிடையேயான இணக்க வாழ்வே என்பதையும் ஆயர்களின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
மத்தியக் கிழக்குப் பகுதிக்கான ஆயர்களின் அடுத்த சிறப்பு அவைக்கூட்டம் ஜூலை 6 மற்றும் 7 தேதிகளில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5.    வன்முறைக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கைது செய்யப்பட்ட இலங்கை இயேசு சபை குரு விடுதலை

மே 28, 2011.  வன்முறைக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை துருப்புகளால் கைது செய்யப்பட்ட இயேசு சபை குரு ஒருவரும் ஐந்து தமிழர்களும் நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகளை தங்கள் வசம் வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக இயேசு சபை குரு பால் சத்குணநாயகம் மற்றும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப்பின் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் இவ்வாரமே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றமற்றவர் என ஏனைய ஐந்து தமிழர்களுடன் இணைந்து விடுவிக்கப்பட்டுள்ள குரு சத்குணநாயகம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் பயின்று உளயியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று மட்டக்களப்புவின் அரசு சாரா அமைப்பின் மையத்தில் மக்களுக்கான உளவியல் ஆலோசகராகச் செயலாற்றி வருகிறார்.

6.     கம்யூனிச சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

மே 28, 2011.  சீனாவில் நாத்தீக கம்யூனிச ஆட்சி இடம்பெறுகின்ற போதிலும், அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைப் பெருகிவருவதும், சமூகத்தில் கிறிஸ்தவத்தின் தாக்கம் அதிகரித்து வருவதும் குறிப்பிடக்கூடிய ஒரு கூறாக உள்ளது என்கிறார் சீனாவின் எழுத்தாளர் ஜியாங் யுவான்லாய்.
சீனாவில் இன்றைய கிறிஸ்தவத்தின் நிலை குறித்து தாய்வானில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய சீன கிறிஸ்தவ எழுத்தாளர் யுவான்லாய், சீனாவில் தற்போது 10 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்வதாகவும் அதில் 1கோடி பேர் கத்தோலிக்கர்கள் எனவும் தெரிவித்தார்.

7.    இவ்வுலகில் படிப்பறிவில்லாத மக்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள் - UNESCO அறிக்கை

மே 28,2011. கல்வியின் மூலமே பெண்களுக்கு தன்னம்பிக்கையைத் தர முடியும் என்றும், பெண்களின் தன்னம்பிக்கையால் இந்த உலகம் இன்னும் பெருமளவு முன்னேறும் என்றும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCOபெண்கள் கல்வியில் உலகத்தின் பங்களிப்பு என்ற கருத்தில் பாரிசில் இவ்வியாழன் நடத்திய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
UNESCOவின் அண்மைய கணக்கெடுப்பின்படி, இவ்வுலகில் படிப்பறிவில்லாத 79 கோடியே 60 இலட்சம் மக்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள் என்றும், உலகின் அனைத்து நாடுகளிலும் மூன்றில் ஒரு பகுதி நாடுகளிலேயே கல்விக்கூடங்களில் ஆண் பெண் இருபாலரும் சமமான அளவு பயின்று வருகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
பள்ளிப் படிப்பு, மற்றும் அடிப்படை எழுத்தறிவு ஆகிய இரு நிலைகளிலும் பெண்கள் இணைக்கப்பட்டால், இவ்வுலகம் இன்னும் அதிக அளவில் உற்பத்தியைப் பெருக்கும் வாய்ப்பு உள்ளதென்று ஐ.நா.தலைமைச் செயலர் சுட்டிக்காட்டினார்.
கல்வியில் மட்டும் பெண்களுக்குச் சமத்துவம் வழங்குவதோடு நில்லாமல், பல்வேறு துறைகளிலும் பெண்களுக்குச் சமத்துவம் வழங்க  UNESCOவின் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...