Saturday, 28 May 2011

Catholic News - hottest and latest - 24 May 2011


1.  குடும்பங்களுக்கான ஏழாவது உலகக் கருத்தரங்கிற்கு உதவும் வழிகாட்டுதல் ஏட்டை  வெளியிட்டது திருப்பீடம்

2.   திருப்பீடத்திற்கும் குரவேசியாவிற்கும் இடையே கல்வி குறித்து ஏற்படுத்தப்பட்ட‌ ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது

3.   ருமேனிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையேயான உறவு மேம்பாடு

4.  தொழிலாளர்களுக்கான கேரளத் திருச்சபையின் புதிய திட்டம்

5.  கம்போடியத் திருச்சபை குறித்து அந்நாட்டு திருச்சபைப் பணியாளர்களின் முதல் கூட்டம்

6.   மங்களூர் விமான விபத்தின் ஆண்டு நினைவுக்கென அனைத்து மதத்தினரின்ரும் சிறப்புச் செபங்கள்

7.  மியான்மார் நாட்டில் மனித உரிமைகளுக்கானப் பாதுகாப்பு இல்லை என்கிறார் ஐ.நா.  அதிகாரி


----------------------------------------------------------------------------------------------------------------
1.  குடும்பங்களுக்கான ஏழாவது உலகக் கருத்தரங்கிற்கு உதவும் வழிகாட்டுதல் ஏட்டை  வெளியிட்டது திருப்பீடம்

மே 24, 2011.  வரும் ஆண்டு மேமாதம் 30 முதல் ஜூன் 3ந் தேதி வரை இத்தாலியின் மிலானில் இடம் பெற உள்ள குடும்பங்களுக்கான ஏழாவது உலக கருத்தரங்கிற்கு உதவும் நோக்கிலான வழிகாட்டுதல் ஏட்டை இச்செவ்வாயன்று வெளியிட்டது திருப்பீடம்.
குடும்பங்களுக்கான திருப்பீட அவை 'குடும்பம் : பணியும் கொண்டாட்டமும்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இவ்வேடு, இக்கருத்தரங்கிற்குக் குடும்பங்களைத் தயாரிப்பதற்கு உதவும் மறைக்கல்வி ஏடாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீடப் பத்திரிகைத்துறை அலுவலகத்தில் இவ்வேடு வெளியிடப்பட்ட நிகழ்வில் குடும்பங்களுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Ennio Antonelli, மிலான் பேராயர் கர்தினால் Dionigi Tettamanzi, மிலான் துணை ஆயர் Franco Giulio Brambilla ஆகியோர் உட்பட ஐவர் உரை நிகழ்த்தினர்.

2.   திருப்பீடத்திற்கும் குரவேசியாவிற்கும் இடையே கல்வி குறித்து ஏற்படுத்தப்பட்ட‌ ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது

மே 24, 2011.  திருப்பீடத்திற்கும் குரவேசியாவிற்கும் இடையே 15 ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்து இசைவு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்கான ஏட்டில் இத்திங்களன்று அந்நாட்டு ஆயர் பேரவைத்தலைவரும் பிரதமரும் கையெழுத்திட்டனர்.
குரவேசிய ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Marin Srakic மற்றும் பிரதமர் Jadranka Kosor ஆகியோரிடையே தற்போது கையெழுத்திடப்பட்டு அமுலுக்கு வந்துள்ள இவ்வொப்பந்தத்தின் மூலம் தலத்திருச்சபை, மக்களின் தேவைகளுக்கு ஏற்ப கல்விக்கூடங்களை திறக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே தலத்திருச்சபை இந்நாட்டில் 12 மேல்நிலை பள்ளிகளையும், இரு ஆரம்பக் கல்விக்கூடங்களையும் 48 பாலர் பள்ளிகளையும் நடத்தி வருகிறது.

3.   ருமேனிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையேயான உறவு மேம்பாடு

மே 24, 2011.  ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையேயான உறவு மேம்பாட்டின் அடையாளமாக அக்கிறிஸ்தவ சபை முதுபெரும் தலைவருக்கும் போலந்து கர்தினாலுக்கும் இடையேயான் சந்திப்பு அண்மையில் இடம் பெற்றதாக ருமேனிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் செய்தி அலுவலகம் தெரிவிக்கிறது.
அண்மையில் ருமேனிய நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட போலந்து கர்தினால் Stanislaw Dziwisz, ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரைச் சந்தித்து இரு கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையேயான உறவுகளின் மேம்பாட்டை உறுதிப்படுத்தினார்.
அமைதியை ஊக்குவிப்பதில் இரு சபைகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது.

4.  தொழிலாளர்களுக்கான கேரளத் திருச்சபையின் புதிய திட்டம்

மே 24, 2011.  கோவில்களிலும் திருச்சபை நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கென புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர் கேரளக் கத்தோலிக்க ஆயர்கள்.
சமூகத்திற்கான தங்கள் பொறுப்புணர்வை நிறைவேற்றும் விதமாக, திருச்சபை தொழிலாளர்களுக்கான 'சுரக்ஷா' என்ற காப்பீட்டுத்திட்டத்தைக் கேரள ஆயர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்தார் தலத்திருச்சபையின் தொழிலாளர் அவையின் தலைவர் ஆயர் ஜோசப் பொருனேடம்.
இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுத்திட்ட அமைப்பு ஆகியவைகளும் கேரள ஆயர்களின் இத்திட்டத்துடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்தார் ஆயர்.
கேரளத் திருச்சபை கொணர்ந்துள்ள இத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் அனைவரும் ஆயுள் காப்பீட்டையும் ஓய்வூதிய வசதிகளையும் பெற உள்ளனர்.

5.  கம்போடியத் திருச்சபை குறித்து அந்நாட்டு திருச்சபைப் பணியாளர்களின் முதல் கூட்டம்

மே 24, 2011.  கம்போடியத் திருச்சபையைக் கட்டியெழுப்புவது குறித்து அந்நாட்டின் திருச்சபைப் பணியாளர்கள் முதன் முறையாக அந்நாட்டில் கூடி விவாதித்தனர்.
பொதுநிலைப் பணியாளர்கள் மற்றும் துறவுச் சபைகளின் அங்கத்தினர்கள் என 118 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் Olivier Michel Mareie Schmitthaeusler,  அந்நாட்டில் பணிபுரியும் மறைபோதகர்களுள் பெரும்பான்மையினோர் வெளிநாட்டவர்களாக இருக்கும் பட்சத்தில், அந்நாட்டிற்கான‌ப் பணியில் அனைவரையும் சகோதர சகோதரிகளாக அன்பு செய்ய வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகிறது என்றார்.
கல்வி மற்றும் நலம் தொடர்புடையவைகளில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு செயல்படும் தலத்திருச்சபை, அவ்வப்போது இவ்வாறு கூடி தங்கள் பணிகள் குறித்து ஏனைய மறைப்பணியாளர்களுடன் விவாதிப்பது ஊக்கம் தருவதாக இருக்கும் என இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் அறிவித்தனர்.
இத்தகையக் கூட்டங்கள் இனிமேல் ஆண்டிற்கு மும்முறை இடம்பெறும் என உறுதி வழங்கியுள்ளார் ஆயர் Schmitthaeusler.
1960ம் ஆண்டுகளில் வியட்நாம் போரின்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் குண்டுவீச்சு தாக்குதலில் கம்போடியாவின் அனைத்து கோவில்களும் அழிவுக்குள்ளாகியதைத் தொடர்ந்து, 1991ம் ஆண்டில் கம்பாடியா நாட்டிற்கு வந்த வெளிநாட்டு மறைப்பணியாளர்களாலேயே தலத்திருச்சபை கட்டி எழுப்பப்பட்டு வருகின்றது.
கம்போடியாவில் தற்போது பணிபுரியும் ஏறத்தாழ 50 குருக்களுள் 5 பேரே அந்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

6.   மங்களூர் விமான விபத்தின் ஆண்டு நினைவுக்கென அனைத்து மதத்தினரின்ரும் சிறப்புச் செபங்கள்

மே 24, 2011.  158 பேரின் உயிரிழப்புகளுக்குக் காரணமான மங்களூர் விமான விபத்தின் ஓராண்டை  அனைத்து மதத்தினரும் சிறப்புச் செபங்களுடன் இஞ்ஞாயிறன்று நினைவு கூர்ந்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் 22ந்தேதி மங்களூரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில், துபாயிலிருந்து அதில் பயணம் செய்த 166 பேரில் 8 பேர் தவிர எனையோர் உயிரிழந்தனர். அவ்விபத்தின் ஒராண்டு நினைவாக, விபத்துக்குள்ளானவர்களுக்காக‌ செபிக்கும் நோக்கில் இயேசு சபையினர் ஏற்பாடு செய்திருந்த திருப்பலியில் ஏறத்தாழ 1000 பேர் கலந்துகொண்டனர்.
சனிக்கிழமையன்று, பல்வேறு மதங்களின் ஒன்றிணைந்த செபக்கூட்டமும் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது.
தப்பெண்ணங்களாலும் பகைமையாலும் மக்கள் பிரிந்து வாழ்ந்த ஒரு காலக்கட்டத்தில் இவ்விபத்து அனைத்து மதத்தினரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு வர உதவியுள்ளது என்றார் இஸ்லாமிய மதக் குரு ஜானப் அப்துல் காதர்.
இவ்விபத்தில் இறந்த 23 குழந்தைகளின் நினைவை கௌரவிக்கும் விதமாக மங்களூரின் குழந்தைகள் ஒன்றிணைந்து விபத்துப் பகுதியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

7.  மியான்மார் நாட்டில் மனித உரிமைகளுக்கானப் பாதுகாப்பு இல்லை என்கிறார் ஐ.நா.  அதிகாரி

மே 24, 2011.  மியான்மார் நாட்டில் மக்களாட்சியை நோக்கிய பாதை வெகு காலதாமதமாகவே இடம்பெறுவதாகவும், மனித உரிமைகளுக்கானப் பாதுகாப்பு அங்கு இல்லை எனவும் குறை கூறியுள்ளார் ஐ.நா.வின் சிறப்பு அதிகாரியும் மனித உரிமை வழக்குரைஞருமான Tomas Ojea Quintana.
குடியாட்சியை நோக்கிய பாதையில் மியான்மார் அரசின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. சார்பில் அண்மையில் ஆய்வு நடத்திய இவர், சிறுபான்மை சமுதாயத்தினர் வாழும் பகுதிகளில் வன்முறைகள் தொடர்வதாகவும், அரசின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகளால் மனித உரிமை மீறல்கள் பெருகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களின் நிலங்களை ஆக்ரமித்தல், கட்டாயப் பணியில் மக்களை ஈடுபடுத்துதல், வலுக்கட்டாயமாக வேறு இடங்களில் குடியமர்த்துதல், மற்றும் பாலின அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவை குறித்து அரசு எவ்வித கவலையும் இன்றி செயல்படுவதாகவும் அறிவித்தார் குவின்டானா.
உலகிலேயே மனித உரிமை மீறல்களில் நேரடியாக ஈடுபட்டுள்ள ஒரே நாடு மியான்மார் தான் எனவும் அவரின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
உரிமைகளின் பாதுகாப்பிற்கான உறுதிமொழிகள் வழங்கப்பட வேண்டும், மற்றும் மக்களுக்கான திட்டங்களில் அவர்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் குவின்டானா கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment