Saturday 28 May 2011

Catholic News - hottest and latest - 25 May 2011


1. திருப்பீட அதிகாரிகள் கர்தினால் Tauranம், பேராயர் Celataவும் மேற்கொண்டுள்ள தென் கொரியப் பயணம்

2. உலகநல நிறுவனத்தின் 64வது பொது அவையில் நலவாழ்வுப் பணிகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் ஆற்றிய உரை

3. அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவராக கர்தினால் Maradiaga இரண்டாம் முறையாகத் தேர்வு

4. வரலாறு படைத்த இரண்டாம் ஜான் பால் - இத்தாலியில் புகைப்படக் கண்காட்சி

5. பெரு நாட்டில் கருக்கலைத்தலுக்கு எதிராக 30,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட பேரணி

6. 2012ம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியக் கத்தோலிக்கப் பொதுநிலையினருக்கானப் பேரவை

7. இலங்கையில் கல்லூரி மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சிகள் அளிப்பதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

8. சீனத் திருச்சபைக்கான செப நாளில் இறையன்னையின் திருத்தலத்தில் திருப்பலி நடத்துவதற்கு சீன அரசு தடை

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட அதிகாரிகள் கர்தினால் Tauranம், பேராயர் Celataவும் மேற்கொண்டுள்ள தென் கொரியப் பயணம்

மே 25,2011. மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauranம், அவ்வவைச் செயலர் பேராயர் Pier Luigi Celataவும் இவ்வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை தென் கொரியாவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்கொரிய ஆயர்களின் மத உரையாடலுக்கான அவை  விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டிற்குச் சென்றுள்ள இவ்விரு திருப்பீட அதிகாரிகளின் பயணத் திட்டத்தில் தென்கொரிய அரசுத் தலைவர், கலாச்சாரத் துறைக்கான அமைச்சர், மற்றும் மத விவகாரங்களுக்கான இயக்குனர் ஆகியோரைச் சந்தித்து உரையாடும் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
கொரியாவின் புத்த மற்றும் கன்பூசிய மையங்களை இவ்விருவரும் பார்வையிடுவர் என்று திருப்பீட அறிக்கையொன்று சொல்கிறது.
"திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கியுள்ள படிப்பினைகளின் அடிப்படையில் மதங்களுக்கிடையேயான உரையாடல்" என்ற தலைப்பில் Seoul நகரின் உயர் குருமடத்தில் நடைபெறும் கருத்தரங்கிலும், ஊடகத் துறை பிரதிநிதிகள் சந்திப்பிலும் கர்தினால் Tauran இப்பயணத்தின்போது கலந்து கொள்வார்.


2. உலகநல நிறுவனத்தின் 64வது பொது அவையில் நலவாழ்வுப் பணிகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் ஆற்றிய உரை

மே 25,2011. செல்வம் நிறைந்த நாடுகள் வறுமைப்பட்ட நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வராவிடில், அந்நாட்டு மக்களின் நல வாழ்வு முன்னேற்றம் வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்று வத்திகான் அதிகாரி ஒருவர் கூறினார்.
Genevaவில் இச்செவ்வாயன்று நிறைவுபெற்ற உலகநல நிறுவனத்தின் 64வது பொது அவையில் உரையாற்றிய நலவாழ்வுப் பணிகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski இவ்வாறு கூறினார்.
2010ம் ஆண்டுக்கான அகில உலக நலவாழ்வு அறிக்கையைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய பேராயர் Zimowski, அனைத்துலகிலும் மக்கள் நலவாழ்வுக் காப்பினைப் பெறுவதில் நாம் இன்னும் மிக அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று எடுத்துரைத்தார்.
HIV நோய் குறித்து இவ்வுலகம் இன்னும் தகுந்த பாடங்களைப் படிப்பது தேவையென்றும், பொறுப்புள்ள வாழ்வு முறை, மற்றும் பழக்க வழக்கங்களில் நாம் கொள்ளும் மாற்றங்களே இந்த நோயை உலகிலிருந்து முற்றிலும் தீர்ப்பதற்கான வழி என்பதையே வத்திக்கான் எப்போதும் வலியுறுத்தி வருகிறதென்று பேராயர் Zimowski சுட்டிக்காட்டினார்.


3. அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவராக கர்தினால் Maradiaga இரண்டாம் முறையாகத் தேர்வு

மே 25,2011. கத்தோலிக்கப் பிறரன்புச் சேவைகளில் ஈடுபடுவோர், இச்சேவைகள் கிறிஸ்தவ படிப்பினைகளை பிறர் மீது புகுத்தும் வழிகள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார் கர்தினால் Oscar Rodriguez Maradiaga.
உரோம் நகரில் இஞ்ஞாயிறு முதல் வெள்ளி வரை நடந்து வரும் 19வது அகில உலகக் காரித்தாஸ் பொதுஅவையில் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Honduras நாட்டைச் சேர்ந்த கர்தினால் Maradiaga, கிறிஸ்தவப் பிறரன்புப் பணிகளின் தூய்மையைக் குறித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
தூய அன்புக்கு இலக்கணமாகத் திகழும் கடவுளின் பணிகளில் ஈடுபடும்போது, அதுவே கடவுளுக்கு உகந்த சாட்சிய வாழ்வு என்று கூறிய திருத்தந்தையின் கருத்துக்களை நினைவுபடுத்தி பேசிய கர்தினால் Maradiaga, இவ்வன்புப் பணிகளே மக்களை இறைவனிடம் கொண்டு வந்து சேர்க்கும் வலிமை பெற்றவை என்று எடுத்துக் கூறினார்.
165 நாடுகளில் கத்தோலிக்கப் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் காரித்தாஸ் அமைப்பில் இன்னும் அதிக அளவில் ஆயர்கள் பங்கேற்க வேண்டுமென்று வத்திக்கான் விழைவதாகவும் கர்தினால் Maradiaga எடுத்துரைத்தார்.


4. வரலாறு படைத்த இரண்டாம் ஜான் பால் - இத்தாலியில் புகைப்படக் கண்காட்சி

மே 25,2011. மேமாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலை அருளாளராக உயர்த்திய நிகழ்வின் வழியாக அவர்மேல் இவ்வுலகம் இன்னும் எவ்வளவு அன்பு கொண்டுள்ளது என்பதை உணர முடிந்ததென்று கர்தினால் Leonardo Sandri கூறினார்.
அருளாளர் ஜான் பால் குறித்த ஒரு புகைப்படக் கண்காட்சியை இத்தாலியில் உள்ள Spoleto பேராலயத்தில் துவக்கி வைத்த கர்தினால் Sandri, தொலைதூர நாட்டிலிருந்து உரோமைக்கு வந்த அருளாளர் ஜான் பால், இந்த உலகை ஒரு குடும்பமாக இணைக்கும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டார் என்று கூறினார்.
இவ்வுலக வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த அருளாளர் ஜான் பாலை இவ்வுலகம் எளிதில் மறந்து விடாது என்று கர்தினால் Sandri சுட்டிக்காட்டினார்.
வரலாறு படைத்த இரண்டாம் ஜான் பால்என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம் 30 வரை நடைபெறும் என்றும், இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புகைப் படங்கள் Reuters நிறுவனத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்டவை என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. பெரு நாட்டில் கருக்கலைத்தலுக்கு எதிராக 30,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட பேரணி

மே 25,2011. வாழ்வுக்கான நடைப்பயணம்என்று பெரு நாட்டின் தலைநகரான Limaவில் அண்மையில் நடந்த பேரணியில் 30,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
பெரு நாட்டில் கருக்கலைத்தலை சட்டமயமாக்கும் முயற்சியை எதிர்த்து, இயற்கை வழியில் குடும்பக் கட்டுப்பாட்டு மையம் என்ற அமைப்பு பெரு நாட்டின் தலைநகராகிய Limaவில் இப்பேரணியை நடத்தியது.
இப்பேரணியில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையைக் காணும்போது, இந்நாட்டில் கருக் கலைத்தல் சட்டமயமாவதை பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர் என்பது தெளிவாகிறது என்று Lima வின் துணை ஆயர் Raul Chau கூறினார்.
சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள், தங்கள் குரலை அரசு கேட்க வேண்டும் என்று இப்பேரணி மூலம் உணர்த்தியுள்ளனர் என்றும், வருகிற ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் கருக்கலைத்தல் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் இப்பேரணியை ஏற்பாடு செய்த Martin Tantalean கூறினார்.


6. 2012ம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியக் கத்தோலிக்கப் பொதுநிலையினருக்கானப் பேரவை

மே 25,2011. இந்தியக் கத்தோலிக்கப் பொதுநிலையினருக்கானப் பேரவை 2012ம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிலையினரின் பங்கு பற்றி இரண்டாம் வத்திக்கான் அவை பல உயர்ந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும், இன்னும் பொதுநிலையினர் திருச்சபையில் ஆற்றும் பங்கு மிகக் குறைந்ததாகவே உள்ளது என்று அகில இந்திய கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் Remy Denis கூறினார்.
1983ம் ஆண்டு வெளியான திருச்சபைச் சட்டச்சீர்திருத்தங்களில் பொதுநிலையினருக்கென இன்னும்  அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது கூறப்பட்டிருந்தாலும், பொதுநிலையினர் இன்னும் திருச்சபையின் முழு அங்கங்களாக மாற வழிகளைத் தேடும் ஒரு முயற்சி இந்த பேரவை என்று Remy Denis மேலும் கூறினார்.
இந்தியாவின் 166 மறை மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள கத்தோலிக்கப் பொதுநிலையினர் சங்கங்களின் உறுப்பினர்கள் அண்மையில் நடத்திய ஒரு கூட்டத்தில் பொதுநிலையினருக்கான பேரவை குறித்து தீர்மானம் எடுத்தனர்.
திருச்சபையின்  பணிகளில் இன்னும் அதிக அளவில் பொதுநிலையினர் ஈடுபடுவதற்கென அவர்கள் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்கும் என்று இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.


7. இலங்கையில் கல்லூரி மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சிகள் அளிப்பதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

மே 25,2011. இலங்கையில் கல்லூரிகளில் புதிதாய் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இராணுவ அடிப்படைப் பயிற்சிகளைச் சொல்லித் தர இலங்கை அரசு முயன்று வருவதற்கு அந்நாட்டின் கிறிஸ்தவ மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இத்திங்களன்று இலங்கையின்  பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஏறத்தாழ 22000 மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இராணுவ அடிப்படைப் பயிற்சிகள் உடனே நிறுத்தப்பட வேண்டுமென்று அருள்தந்தை Dilan Perera இராணுவ அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளார்.
இந்தப் பயிற்சி முறைகள் குறித்து பல பெற்றோரும் தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ளதால், அவர்களது முறையீடுகளைத் தீர்க்கும் வரை இந்த பயிற்சிகள் துவக்கப்படக் கூடாதென்று இலங்கை உச்ச நீதி மன்றம் ஏற்கனவே இராணுவத்திடம் கூறியிருந்ததென்று UCAN செய்தியொன்று கூறுகிறது.
தலைமைத்துவம் குறித்த பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றால், அவற்றைக் கல்விக்கூடங்களே அளிப்பது சிறந்ததேயொழிய, இராணுவம் அல்ல என்று ஆங்கலிக்கன் இறைபணியாளர் Marimuthupillai Sathivel கூறினார்.


8. சீனத் திருச்சபைக்கான செப நாளில் இறையன்னையின் திருத்தலத்தில் திருப்பலி நடத்துவதற்கு சீன அரசு தடை

மே 25,2011. இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட சகாய அன்னைத் திருநாளை சீனத் திருச்சபைக்காக சிறப்பான செபங்களை எழுப்பும் நாளாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்ததையடுத்து உலகின் பல நாடுகளிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சிறப்புச்  செப நாளில் சீனாவின் Sheshan எனுமிடத்தில் உள்ள நமது இறையன்னையின் திருத்தலத்தில் திருப்பலி நடத்துவதற்கு சீன அரசு தடை விதித்திருந்தது.
சீனத் திருச்சபைக்குச் செபங்களை எழுப்பும் நாளாக இந்த நாளை திருத்தந்தை அறிவித்தது குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட அருள்தந்தை Pietro Cui, இந்த அறிவிப்பின் மூலம் தன் குழந்தைகள் மீது தனி அன்பு காட்டும் ஒரு தந்தையாகத் திருத்தந்தை விளங்குகிறார் என்றார்.
Sheshanல் உள்ள மரியன்னையின் திருத்தலத்திற்கு மேமாதம் 24ம் தேதி பல திருப்பயணிகள் வருவது வழக்கம் என்றும், இவ்வாண்டு பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வண்ணம் திருத்தலத்தைச் சுற்றி சீன அரசு இராணுவ வீரர்களை நிறுத்தியிருந்தென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...