Thursday 12 May 2011

Catholic News - hottest and latest - 11 May 2011

1. லிபியாவில் NATO அமைப்பு மேற்கொண்டுள்ள குண்டு வீச்சு, அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் காயப்படுத்தியுள்ளது - ஆயர் மர்தினெல்லி

2. புலம் பெயர்ந்தோருக்கானச் சட்டங்கள் கால தாமதமின்றி, தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் - லாஸ் ஆஞ்சலஸ் பேராயர்

3. கோவாவில் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர் பசிலிக்கா தீ விபத்துக்களைச் சந்திக்கும் ஆபத்தில் உள்ளது

4. பாலஸ்தீன நாட்டில் அண்மையில்  உருவான அமைதி உடன்படிக்கை நம்பிக்கையை வளர்த்துள்ளது - WCC

5. நாசி வதை முகாமில் கொல்லப்பட்ட அருள்தந்தை Georg Hafner வருகிற ஞாயிறன்று அருளாளராக உயர்த்தப்படுவார்

6. உரோமையில் அகில உலக கத்தோலிக்கத் திரைப்பட விழா ஆரம்பம்

7. இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்ற 8 ஆண்டுகள் ஆகும்

----------------------------------------------------------------------------------------------------------------

1. லிபியாவில் NATO அமைப்பு மேற்கொண்டுள்ள குண்டு வீச்சு, அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் காயப்படுத்தியுள்ளது - ஆயர் மர்தினெல்லி

மே 11,2011. போரை அல்ல அமைதியை உருவாக்கவே ஐ.நா.உலக அமைப்பு, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று Tripoliன் திருப்பீட நிர்வாகி ஆயர் ஜியோவான்னி இன்னோசென்சோ மர்தினெல்லி கூறினார்.
லிபியாவின் அரசுத் தலைவர் Gaddafiன் ஆயுத பலத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் NATO அமைப்பு மேற்கொண்டுள்ள குண்டு வீச்சு, பல அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் காயப்படுத்தியுள்ளதென்று ஆயர் மர்தினெல்லி கூறினார்.
இத்திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் இரவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்களில் லிபியாவின் தொலைக்காட்சி நிறுவனம், அரசு செய்தித்தொடர்பு நிறுவனம் ஆகியவைகள் தாக்கப்பட்டதுடன், குழந்தைகளுக்கான ஒரு நிறுவனமும் தாக்கப்பட்டுள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த குண்டு வீச்சுகளால் பொது மக்கள் பெரிதும் கலவரம் அடைந்துள்ளனர் என்றும், தாய்மார்கள் குழந்தைகளுடன் தெருக்களில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் விடப்பட்டுள்ளதைக் காண முடிகிறதென்றும் ஆயர் மர்தினெல்லி சுட்டிக் காட்டினார்.
லிபியாவில் ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் பிரச்சனையில் இத்தாலிக்கு பெரும் பங்கு உள்ளதென்று கூறிய ஆயர், Tripoliல் குண்டு வீசப்படுவதை நிறுத்துவதற்கு மக்கள் இறைவனை மட்டுமே நம்ப வேண்டியச் சூழல் உருவாகியுள்ளதென்ற தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.


2. புலம் பெயர்ந்தோருக்கானச் சட்டங்கள் கால தாமதமின்றி, தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் - லாஸ் ஆஞ்சலஸ் பேராயர்

மே 11,2011. புலம் பெயர்ந்தோருக்கானச் சட்டங்களை அமெரிக்க அரசும் அரசுத் தலைவரும் கால தாமதமின்றி, தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று லாஸ் ஆஞ்சலஸ் பேராயர் ஹோசே கோமஸ் கூறினார்.
அண்மையில் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா புலம் பெயர்ந்தோரைக் குறித்து ஆற்றிய ஓர் உரைக்கு பதிலிறுக்கும் வகையில், அமெரிக்க ஆயர் பேரவையின் புலம்பெயர்வுப் பணிக்குழுவின் தலைவரான பேராயர் கோமஸ் இச்செவ்வாயன்று தன் கருத்தை வெளியிட்டார்.
அமெரிக்காவின் மத்திய அரசு  புலம் பெயர்ந்தோருக்கென தெளிவானச் சட்டங்களை இயற்றாமல் காலம் தாழ்த்துவதால், ஒவ்வொரு மாநிலமும் இப்பிரச்சனையை வேறுபட்ட வழிகளில் தீர்க்க முயல்வது நாட்டில் குழப்பங்களை உருவாக்குவதாக பேராயர் சுட்டிக் காட்டினார்.
இப்பிரச்சனைக்குத் தெளிவானத் தீர்வு இல்லாததால், பல குடும்பங்கள் சிதைக்கப்படுகின்றன என்றும், அமெரிக்க ஐக்கிய நாடு உலகின் பல நாடுகளில் இருந்தும் வருபவர்களை வரவேற்கும் ஒரு நாடாக இருப்பதே அந்நாட்டின் பெருமைக்குரிய வரலாறு என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.


3. கோவாவில் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர் பசிலிக்கா தீ விபத்துக்களைச் சந்திக்கும் ஆபத்தில் உள்ளது

மே 11,2011. கோவாவில் உள்ள புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர் பசிலிக்கா தகுந்த பராமரிப்பு இல்லாமல், தீ விபத்துக்களைச் சந்திக்கும் ஆபத்தில் உள்ளதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பழமைச் சின்னங்களைக் காக்கும் அரசு அமைப்பின் கண்காணிப்பில் உள்ள இந்த 17ம் நூற்றாண்டு பேராலயம், கடந்த பல ஆண்டுகளாகச் சரியான பராமரிப்பு இல்லாததால், எந்த நேரத்திலும் தீக்கு இரையாகும் ஆபத்தில் உள்ளதென்று இக்கோவிலின் அதிபரான அருள்தந்தை Savio Barretto இப்புதனன்று UCAN செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
UNESCO வின் உலகச் சின்னங்களில் ஒன்றெனக் கருதப்படும் இக்கோவில், Baroque கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறிய அருள்தந்தை Barretto, கோவிலில் உள்ள மின் இணைப்புக்களில் அடிக்கடி தீப்பொறிகள் உருவாகி வருவதையும், இதனால் இக்கோவில் தீவிபத்தைச் சந்திக்கும் ஆபத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக அரசிடம் இது பற்றி எடுத்துரைத்தும், அரசு எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருக்கிறதென்றும், உலகச் சின்னங்களில் ஒன்றாகவும், புனித சேவியரின் உடல் வைக்கப்பட்டுள்ள புனிதத்தலமாகவும் உள்ள இக்கோவில் இந்நிலையில் இருப்பது பெரும் கவலையைத் தருகிறதென்றும் அதிபர் அருள்தந்தை Savio Barretto கூறினார்.
ஒவ்வொரு நாளும் இப்புனிதத் தலத்தைக் காண 10000 மக்கள் வருகின்றனர் என்று UCAN செய்தி கூறுகிறது.


4. பாலஸ்தீன நாட்டில் அண்மையில்  உருவான அமைதி உடன்படிக்கை நம்பிக்கையை வளர்த்துள்ளது - WCC

மே 11,2011. பாலஸ்தீன நாட்டில் Fatah, Hamas ஆகிய இரு குழுக்களுக்கிடையே அண்மையில்  உருவான அமைதி உடன்படிக்கை நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நம்பிக்கையை வளர்த்துள்ளதென்று உலகக் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இருவருக்கும் இடையே பிரச்சனைகளை உருவாக்கி வரும் Gaza பகுதியில் ஒருங்கிணைந்த இடைக்கால அரசை உருவாக்கவும், மேற்குக் கரை மற்றும் Gaza பகுதிகளில் 2012ம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெறவும் ஒப்புதல் தரும் இந்த உடன்படிக்கையால், அப்பகுதியில் நீடித்த அமைதி உருவாகும் என்று நம்புவதாக WCC என்ற உலகக் கிறிஸ்தவக் குழுவின் தலைமை அலுவலகம் இச்செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒப்புரவையும், உரையாடலையும் வளர்க்கும் நோக்கில் WCC ஏற்பாடு செய்துள்ள ஓர் அனைத்துலக கருத்தரங்கு Jamaicaவில் உள்ள Kingston நகரில் இம்மாதம் 17 முதல் 25 வரை நடைபெற உள்ளது.
உலகின் பல நாடுகளில் இருந்தும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருக்கும் 1000க்கும் அதிகமான உறுப்பினர்கள், உலகில் அமைதியைக் கொணர்வதற்கு மதங்களும், கிறிஸ்தவ சபைகளும் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து பேசுவர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. நாசி வதை முகாமில் கொல்லப்பட்ட அருள்தந்தை Georg Hafner வருகிற ஞாயிறன்று அருளாளராக உயர்த்தப்படுவார்

மே 11,2011. 1942ம் ஆண்டு நாசி வதை முகாமில் கொல்லப்பட்ட அருள்தந்தை Georg Hafner வருகிற ஞாயிறன்று அருளாளராக உயர்த்தப்படுவார்.
புனிதர்நிலைப் படிகளுக்கான திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Angelo Amato ஜெர்மனியின் Wurzburg நகரில் வருகிற ஞாயிறன்று திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1900ம் ஆண்டு ஜெர்மனியின் Wurzburgல் பிறந்த Georg முதல் உலகப் போரின் இறுதியில், ஓராண்டு கட்டாய இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு, பின்னர் குருத்துவப் பயிற்சியை மேற்கொண்டார்.
1924ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Georg, தன் குருத்துவப் பணியில் ஆரவமாய் ஈடுபட்டார். அவரது ஆர்வத்தால் ஜெர்மானிய அரசுடன் மோதல்கள் உருவாயின. இவரை 1941ம் ஆண்டு நாசிப் படையினர் கைது செய்து, வதை முகாமுக்கு அனுப்பினர். அங்கும் இவர் அன்பு ஒன்றையே  தன் சொல்லாலும், செயல்களாலும் வெளிப்படுத்தினார். நாசி வதை முகாமில் 1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Georg Hafner கொல்லப்பட்டார்.


6. உரோமையில் அகில உலக கத்தோலிக்கத் திரைப்பட விழா ஆரம்பம்

மே 11,2011. அகில உலக கத்தோலிக்கத் திரைப்பட விழாவொன்று இப்புதனன்று உரோமையில் துவக்கப்பட்டது.  மேமாதம் 21 வரை நடைபெறும் இவ்விழாவில் சிறந்தத் திரைப்படம், சிறந்த ஆவணப் படம், சிறந்த நடிகர்கள், சிறந்த இயக்குனர்கள் ஆகியப் பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயேசு தன் அரிய உண்மைகளை உவமைகள் வழியாக மக்கள் மனதில் பதித்தார்; அதேபோல், இன்றைய உலகின் ஆழமான உண்மைகளைக் கூற திரைப்படம் என்ற அருமையான கருவி நம்மிடம் உள்ளதென்று திருப்பீடத்தின் கலாச்சார பணிக் குழுவில் பணியாற்றும் அருள்திரு Franco Perazzolo இத்திரைப்பட விழாவைக் குறித்து இத்திங்களன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் உண்மை அழகைக் காணவும், அதைக் குறித்துப் பேசவும் இவ்விழா உதவியாக இருக்கும் என்று நம்புவதாக இவ்விழாவின் அமைப்பாளர்களில் ஒருவரான Alberto Di Giglio கூறினார்.
"உலகை மாற்றிய ஒன்பது நாட்கள்" (Nine Days that Changed the World) என்ற தலைப்பில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் குறித்தத் திரைப்படம்,  "இறைவனின் சக்தி வாய்ந்த பணியாளர்" (God's Mighty Servant) என்ற தலைப்பில் திருத்தந்தை 12ம் பத்திநாதருக்குப் பணிகள் செய்த அருள் சகோதரி Pascalinaவை மையப்படுத்தியத் திரைப்படம் உட்பட ஐந்து திரைப்படங்கள் "வெள்ளி மீன்" என்ற இவ்விழாவின் உயரிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்ற 8 ஆண்டுகள் ஆகும்

மே 11,2011. இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள கண்ணிவெடிகளை முழுமையாக அகற்ற இன்னும் 8 ஆண்டுகள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இது தெரியவந்துள்ளதாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
போரர்க்களமாகத் திகழ்ந்த வடபகுதியில் கண்ணிவெடி மற்றும் குண்டுகள் வெடித்ததனால் ஏற்பட்ட விபத்துக்களில் கடந்த ஆண்டு மட்டும் 49 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நைஜல் ராபின்சன் குறிப்பிடுகின்றார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்விடங்களில் கடந்த வருடம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதையடுத்து, அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இதனையடுத்து தற்போது அந்த மக்களின் விவசாய நிலங்களில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக நைஜல் ராபின்சன் கூறுகின்றார்.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...