1. திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத்திற்கு புதிய தலைவர்
2. ஆஸ்திரேலிய ஆயர் பேரவைக்கு பேராயர் வேலியோவின் உரை
3. நற்செய்தி அறிவிப்புக்கான மிகப்பெரும் சக்தியாக உலக இளைஞர் தினம் உள்ளது.
4. மலேசிய கிறிஸ்தவ சமூகம் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அந்நாட்டின் மத இணக்க வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
5. அயோத்தியின் பாபர் மசூதி குறித்த இந்திய உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார் மனித உரிமைகள் அவை தலைவர்.
6. மெக்ஸிகோவில் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட கத்தோலிக்கத் தலைவர்கள் ஆதரவுடன் அமைதி ஊர்வலம்.
7. லிபியாவிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத்திற்கு புதிய தலைவர்
மே 10, 2011. நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஐவன் டயஸ் பணி ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அப்பேராயத்தின் தலைவராக பேராயர் ஃபெர்னாண்டோ ஃபிலோனியை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
1936ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ந்தேதி மும்பையில் பிறந்த கர்தினால் டயஸ், 75 வயது நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இவர் கானா, பெனின், டோகோ, கொரியா, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான திருப்பீடத்தூதராகவும், மும்பை பேராயராகவும் பணியாற்றியுள்ளார்.
நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடப் பேராயத்தின் புதியத் தலைவராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேராயர் ஃபிலோனி, 1946ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தவர். ஈராக், ஜோர்தான், மற்றும் பிலிப்பீன்ஸிற்கான திருப்பீடத்தூதராகச் செயலாற்றியுள்ள இவர், 2007ஆம் ஆண்டு முதல் திருப்பீடச்செயலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
2. ஆஸ்திரேலிய ஆயர் பேரவைக்கு பேராயர் வேலியோவின் உரை
மே 10, 2011. உலகின் பல பகுதிகளிலும், சிறப்பாக ஆஸ்திரேலியாவிலும் புலம் பெயர்ந்தொருக்குத் திருச்சபை ஆற்றிவரும் பணிகளை இன்னும் ஆழப்படுத்த நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
புலம் பெயர்ந்தோர் மற்றும் வழிபோக்கர்களுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் அந்தோனியோ மரிய வேலியோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இப்புதனன்று ஆஸ்திரேலிய ஆயர் பேரவை உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
நாட்டை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படும் மக்கள் உடல், மனம், உணர்வளவில் சந்திக்கும் பல துன்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம் என்று கூறிய பேராயர் வேலியோ, இரண்டாம் வத்திக்கான் திரு அவை காலத்தில் இருந்தே, புலம் பெயர்ந்தோரின் துன்பங்களைத் துடைக்கும் பணியில் திருச்சபை முனைப்புடன் ஈடுபட்டு வந்துள்ளது என்றும், புலம் பெயர்ந்தோரை வரவேற்கும் ஒரு வாசலாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தலத் திருச்சபைகள் செயல்படுவதையே திருச்சபை வலியுறுத்தி வந்துள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.
வரவேற்பதுடன் மட்டும் திருச்சபையின் பணிகள் நின்று விடுவதில்லை. அடைக்கலம் தேடி ஒரு நாட்டிற்குள் புலம் பெயர்ந்தோரின் மாறுபட்ட கலாச்சாரங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மதிப்பதிலும் தலத் திருச்சபைகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பேராயர் வேலியோ கேட்டுக் கொண்டார்.
புறக்கணிக்கப்பட்ட பலருக்குக் கல்விப் பணி புரிந்து வந்த ஆஸ்திரேலியப் புனிதர் மேரி மெக்கில்லாப்பின் வழிநடத்தலால் ஆஸ்திரேலியத் திருச்சபை புலம் பெயர்ந்தோர் பணியில் உலகின் பல நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் பேராயர் வேலியோ கூறினார்.
3. நற்செய்தி அறிவிப்புக்கான மிகப்பெரும் சக்தியாக உலக இளைஞர் தினம் உள்ளது.
மே 10, 2011. இயேசு கிறிஸ்துவுடனான உண்மையான, ஆழமான, மகிழ்ச்சி நிறை சந்திப்பு இடம்பெற உள்ள உலக இளையோர் தினக்கொண்டாட்ட தயாரிப்புகள் மத்ரித்தில் சிறப்பான விதத்தில் இடம்பெற்று வருவதாக அறிவித்தார் இஸ்பெயின் கர்தினால் Antonio Rouco Varela.
ஆகஸ்ட் 16 முதல் 21 வரை இடம்பெறவுள்ள உலக இளையோர் தினத்திற்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், அது குறித்து செய்தி வெளியிட்ட கர்தினால், இதயங்கள் புதுப்பிக்கப்பட வாய்ப்பு நல்கும் இக்கொண்டாட்டங்கள், திருச்சபைக்கும் இளையோர் சமுதாயத்திற்கும் மிகுந்த பலன் தரும் காலமாக இருக்கும் என்றார்.
அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலால் மேய்ப்புப்பணி சார்ந்த திட்டமாகத் துவக்கப்பட்ட இளையோர் தின கொண்டாட்டங்கள் தற்போது நற்செய்தி அறிவிப்பிற்கான மிகப்பெரும் சக்தியாக மாறியுள்ளது குறித்தும் மகிழ்ச்சியை வெளியிட்டார் கர்தினால் Varela.
இஸ்பெயினில் இவ்வாண்டு இடம்பெறும் இளைஞர் தினக்கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இதுவரை 170 நாடுகளைச் சேர்ந்த மூன்று இலட்சத்து நாற்பதாயிரம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவுச் செய்துள்ளனர்.
4. மலேசிய கிறிஸ்தவ சமூகம் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அந்நாட்டின் மத இணக்க வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
மே 10, 2011. மலேசியாவின் கிறிஸ்தவ சமூகம் மீது சில அடிப்படைவாதக் குழுக்கள் சுமத்தி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், அந்நாட்டின் மத இணக்க வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு பேராயர் மர்ஃபி நிக்கொலஸ் சேவியர் பாக்கியம்.
கிறிஸ்தவத்தை மலேசியாவின் அரசு மதமாகவும், கிறிஸ்தவர் ஒருவரை அந்நாட்டு பிரதமராகவும் அறிவிக்க மலேசிய கிறிஸ்தவர்கள் முயன்று வருகிறார்கள் என 'ஊட்டுசான் மலேசியா' என்ற பத்திரிகை வெளியிட்ட தகவல் உண்மைக்குப் புறம்பானது என உரைத்த பேராயர் பாக்கியம், இது குறித்த அரசு விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.
மதங்களிடையே பகைமையை வளர்த்து அவர்களின் நல்லிணக்க வாழ்வைக் கெடுப்பதற்கு காரணமாக இருக்கும் இத்தகையப் பொய் தகவல்களைப் பரப்புவோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார் பேராயர்.
தலத்திருச்சபை என்றுமே எவருக்கும் எதிரான பகை உணர்வுகளுடன் செயல்பட்டதில்லை என்ற பேராயர் பாக்கியம், தேசிய இணக்க வாழ்வையும் ஐக்கியத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் திருச்சபை பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதோடு செபத்திலும் ஈடுபட்டு வருகின்றது என்றார்.
5. அயோத்தியின் பாபர் மசூதி குறித்த இந்திய உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார் மனித உரிமைகள் அவை தலைவர்.
மே 10, 2011. அயோத்தியின் பாபர் மசூதி குறித்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு தற்காலிக தடை வழங்கியுள்ள இந்திய உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அறிவித்துள்ளார் குஜராத் மனித உரிமைகள் அவையின் தலைவர் இயேசு சபை குரு செத்ரிக் பிரகாஷ்.
16ம் நூற்றாண்டு மசூதி இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் என்பதை ஏற்று, அதனை இந்து மற்றும் இஸ்லாமிய குழுக்களிடையே மூன்றாகப் பிரிக்க 2010ம் ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி அலகாபாத் உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு செயல்படுத்தப்பட தடை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றத்தின் அண்மை தீர்ப்பை தலத்திருச்சபையுடன் இணைந்து பல மனித உரிமை குழுக்களும் வரவேற்றுள்ளன. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆச்சரியம் தரும் ஒன்றாக உள்ளது என உச்சநீதி மன்ற நீதிபதிகள் கூறியுள்ளது சரியான ஒரு கூற்றே எனக் கூறினார் குரு பிரகாஷ்.
எது தவறு, எது நிரூபிக்க வல்ல உண்மை என்பதை விட, மக்களின் நம்பிக்கைக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப்போல் தெரிவதாக இயேசு சபை குரு மேலும் கூறினார்.
உச்ச நீதி மன்றத்தின் இறுதித்தீர்ப்பு, உண்மைக்கும் நீதிக்கும் சேவையாற்றும் ஒன்றாக இருக்கும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார் குரு பிரகாஷ்.
6. மெக்ஸிகோவில் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட கத்தோலிக்கத் தலைவர்கள் ஆதரவுடன் அமைதி ஊர்வலம்.
மே 10, 2011. கடந்த நான்கு ஆண்டுகளாக மெக்ஸிகோ நாட்டில் இடம்பெற்றுவரும் தொடர் வன்முறைகள் நிறுத்தப்படக்கோரியும், போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் கொள்கை மாற்றங்கள் கோரியும் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகள் தலைமையில் அந்நாட்டு தலைநகரில் அமைதி ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கானக் கொள்கைகளை வரையறுக்க அரசு தவறிவிட்டது என்றக் குற்றச்சாட்டுடன் இதில் கலந்து கொண்ட மக்கள், நாட்டில் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக செபிப்பதாகவும் அறிவித்தனர்.
போதைப்பொருட்களுக்கு எதிரான அரசின் போரால், குற்றங்கள் குறையவில்லை மாறாக, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளே அதிகரித்துள்ளன என்றார் அந்நாட்டில் மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் குரு ஆஸ்கார் என்ரிக்கோஸ்.
கடந்த நான்கு ஆண்டுகளாக மெக்ஸிகோ நாட்டில் தொடரும் வன்முறைகளால் இதுவரை ஏறத்தாழ 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பல இலட்சக்கணக்கானோர் அச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
7. லிபியாவிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.
மே 10, 2011. லிபியாவில் இடம்பெறும் மோதல்களால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறிவருவதாகவும், இத்திங்களன்று 30,000க்கும் மேற்பட்டோர் துனிசியா நாட்டிற்குள் குடிபெயர்ந்துள்ளதாகவும் கவலையை வெளியிட்டார் அந்நாட்டு அப்போஸ்தலிக்க நிர்வாகி.
அண்மை அமைதி முயற்சிகள் எதுவும் மக்களின் அச்சத்தைப் போக்க உதவவில்லை என்ற ஆயர் ஜொவான்னி இன்னொசென்ஸோ மர்த்தினெல்லி, மக்கள் பேரச்சம் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விருப்பத்தையே வெளியிடுவதாகவும், அண்மை மோதல்கள் துவங்கியதிலிருந்து ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் லிபியாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறினார்.
மோதல்களில் ஈடுபட்டிருப்போர் இடைக்காலப் போர்நிறுத்தத்தில் கையெழுத்திட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய அவசரத்தேவையையும் வலியுறுத்தினார் ஆயர் மர்த்தினெல்லி.
No comments:
Post a Comment