Saturday, 28 May 2011

Catholic News - hottest and latest - 26 May 2011

1. கத்தோலிக்க சீரோ மலபார் ரீதி சபையின் புதியத் தலைவராக ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி

2. உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மாநில ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

3. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சூறாவளிக் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தை அனுப்பிய அனுதாபச் செய்தி

4. திருத்தந்தைக்கு ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர்கள் பரிசாக அளித்த மகுடம்

5. இறையடியார் Fulton Sheenஐ அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் வலுவடைந்துள்ளன

6. ஈராக் பேராயர் Louis Sakoவுக்கு  அண்மையில் வழங்கப்பட்ட விருது

7. பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இளையோரைப் பயிற்றுவிப்பதற்காக ராஞ்சியில் தொடர்பு சாதன நிலையம்

8. மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் காரித்தாஸ்

----------------------------------------------------------------------------------------------------------------

1. கத்தோலிக்க சீரோ மலபார் ரீதி சபையின் புதியத் தலைவராக ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி

மே 26,2011. கத்தோலிக்க சீரோ மலபார் ரீதியின் புதியத் தலைவராக தக்கலை ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தன் ஒப்புதலை வழங்கி அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
எர்ணாகுளம்-அங்கமலி பேராயராகவும் சீரோ மலபார் ரீதி சபையின் தலைவராகவும் செயல் பட்டு வந்த கர்தினால் வர்கி விதயத்தில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி தன் 84ம் வயதில் இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து, கொச்சியின் காக்கநாடில் கூடிய சீரோ மலபார் ரீதி ஆயர்களால் கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை ஆயர் ஆலஞ்சேரி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சங்கணாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் துருத்தி எனுமிடத்தில் 1945ம் ஆண்டு ஏப்ரல் 19ம்தேதி பிறந்த ஆயர் ஆலஞ்சேரி, 1972ம் ஆண்டுக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
பாரீஸ் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தில் பயின்று மறைக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் இவர்.
1997ம் ஆண்டு ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், தக்கலை சீரோ மலபார் ரீதி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்துள்ளார். இச்செவ்வாயன்று சீரோ மலபார் ரீதியின் தலைவராக ஆயர் ஆலஞ்சேரி தேர்ந்த்தெடுக்கப்பட்டதை இப்புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அங்கீகரித்தார்.


2. உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மாநில ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

மே 26,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மாநில ஆறு ஆயர்கள் மற்றும் கேரளாவின் வேராப்பொளி பேராயரை இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தை,  இவ்வியாழன் காலை மேலும் ஏழு இந்தியத் திருச்சபைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
கேரளாவின் வேராப்பொளி பேராயர் பிரான்சிஸ் ல்லக்கல்லை முதலில் னியாகச் சந்தித்து உரையாடியதிருத்தந்தை, ஆந்திராவின் ப்பா ஆயர் பிரசாத் லேலா, ம்மம் ஆயர் பால் மைப்பான், ர்நூல் ஆயர் அந்தொனி பூலா, லகொண்டா ஆயர் ஜோஜி கோவிந்து, குண்டூர் ஆயர் பாலி காலி, நெல்லூர் ஆயர் மோசஸ் தொரபொய்னா பிரகாசம் ஆகியோரையும் குழுவாகச் சந்தித்து, அந்தந்தறைமாவட்டங்கள் குறித்து அவர்களுடன் உரையாடினார்.


3. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சூறாவளிக் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தை அனுப்பிய அனுதாபச் செய்தி

மே 26,2011. இவ்வாரத் துவக்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிசூரிப் பகுதியில் Joplin எனும் இடத்தில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் உயிரிழந்தவர்கள், காயப்பட்டவர்கள் மற்றும் பல வழிகளில் பாதிக்கப்பட்டோருக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே திருத்தந்தையின் பெயரால் இவ்வனுதாபச் செய்தியை ஒரு தந்தி மூலம் ஆயர் ஜேம்ஸ் ஜான்ஸ்டனுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வியற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு ஆன்ம சாந்தியையும், இன்னும் பல வழிகளில் பாதிக்கப்பட்டோருக்கு மன உறுதியையும் இறைவன் அளிப்பாராக என்று இத்தந்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிறன்று வீசிய சூறாவளி மிக அதிக அளவு சக்தி வாய்ந்ததென்றும், இச்சூறாவளியின் பாதை ஆறு மைல் நீளமும் மூன்றேகால் மைல் அகலமும் கொண்டதென்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இச்சூறாவளியின் பாதையில் 8000 கட்டிடங்கள் சேதமடைந்தன என்றும், 122 பேர் உயிரிழந்தனர், 750க்கும் அதிகமானோர் காயமுற்றனர், மற்றும் 1500 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
1953ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வீசிய சூறாவளிகளில் 519 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்தபடியாக 2011ம் ஆண்டில் இதுவரை வீசிய சூறாவளிகளில் இதுவரை 500 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் மேலும் கூறுகின்றன.


4. திருத்தந்தைக்கு ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர்கள் பரிசாக அளித்த மகுடம்

மே 26,2011. ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர்கள் சார்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டுக்கு இப்புதனன்று மகுடம் ஒன்று பரிசளிக்கப்பட்டது.
இம்மகுடத்தை உருவாக்குவதற்குப் பொறுப்பேற்றிருந்த Dieter Philippi என்பவர் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தையிடம் இம்மகுடத்தை அளித்தார்.
14ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை திருத்தந்தையாக இருந்த அனைவரும் பதிவியேற்ற அன்று மகுடம் அணிந்து வந்தனர். 1963ம் ஆண்டு திருத்தந்தையாகப் பதவியேற்ற ஆறாம் பவுல் மகுடம் அணிந்து பதவியேற்ற கடைசித் திருத்தந்தை. அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஜான் பால் மகுடத்திற்குப் பதிலாக, கழுத்துப் பட்டை ஒன்றை அணியும் பழக்கத்தை உருவாக்கினார்.
இரண்டாம் ஜான் பால் மற்றும் 16ம் பெனடிக்ட் ஆகிய இரு திருத்தந்தையரும் மகுடம் அணியாமல் பதவியேற்றனர்.
எனினும் இரண்டாம் ஜான் பாலுக்கு ஹங்கேரி நாட்டு கத்தோலிக்கர்கள் 1981ம் ஆண்டு மகுடம் ஒன்றைப் பரிசளித்தனர். அம்மகுடத்தைத் தயாரித்த நிறுவனம் தற்போது 16ம் பெனடிக்டுக்கு வழங்கப்பட்ட மகுடத்தையும் தயாரித்தது என்று Dieter Philippi செய்தியாளர்களிடம் கூறினார்.


5. இறையடியார் Fulton Sheenஐ அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் வலுவடைந்துள்ளன

மே 26,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் தொலை காட்சி மற்றும் வானொலி மூலம் இறைவார்த்தையை தன் மறையுரைகளால் பரப்பி வந்த பேராயர் Fulton Sheenஐ அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் வலுவடைந்துள்ளன.
இம்முயற்சிகளின் ஒரு பகுதியாக, பேராயர் Fulton Sheen குறித்த விவரங்கள் அடங்கிய கோப்பு ஒன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டிடம் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் வழங்கப்பட்டது.
1895ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த பேராயர் Sheen 1950 மற்றும் 1960களில் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் வழியாக பல உயர்ந்த மறையுரைகளை வழங்கி வந்தார். 1979 ம் ஆண்டு இறந்த இவரை, புனித நிலைக்கு உயர்த்தும் முயற்சிகள் 2002ம் ஆண்டு அதிகாரப் பூர்வமாகத் துவக்கப்பட்டன. பேராயர் Fulton Sheen தற்போது 'இறையடியார்' என்ற பட்டத்திற்கு உரியவர்.
பேராயர் Sheen 20ம் நூற்றாண்டின் தொடர்பு சாதனங்களைத் தன் வயப்படுத்தி, அவற்றின் வழியாக கத்தோலிக்கப் படிப்பினைகளை மிகவும் சக்தி வாய்ந்த வழிகளில் கூறியதை தான் வியந்து பாராட்டுவதாக ஆஸ்திரேலியாவின் கர்தினால் George Pell கத்தோலிக்கப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
72 வயதான ஓர் அமெரிக்கப் பெண்மணி நுரையீரல் தொடர்பான ஓர் அறுவைச் சிகிச்சையில் இன்னும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தபோது, அவரது கணவர் பேராயர் Fulton Sheenன் பரிந்துரையைத் தேடினார் என்றும், அதனால் அப்பெண்மணி நலமடைந்தார் என்றும் கூறப்படும் ஒரு புதுமையே இப்பேராயர் அருளாளராக உயர்த்தப்படுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


6. ஈராக் பேராயர் Louis Sakoவுக்கு  அண்மையில் வழங்கப்பட்ட விருது

மே 26,2011. கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே உரையாடல்கள் தொடர வேண்டும் என்றும், இவ்விரு மதத்தவரிடையே அமைதிக்காக உழைக்கும் அர்ப்பணம் இன்னும் ஆழப்பட வேண்டும் என்றும் ஈராக் நாட்டைச் சேர்ந்த பேராயர் Louis Sako கூறினார்.
பேராயர் Louis Sako, ஈராக்கில் மனித உரிமைகள் மற்றும் மதங்களுக்கிடையே உரையாடல் ஆகியவற்றை வளர்க்கும் வண்ணம் தொடர்ந்து உழைத்து வருவதைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு அண்மையில் Frankfurt நகரில் விருது ஒன்று வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறும்போது, பேராயர் Sako, கலாச்சாரங்களும், மதங்களும் ஒன்றை ஒன்று மதித்து வாழ்வதே உலகில் அமைதியை  வளர்க்கும் சிறந்த வழி என்று கூறினார்.
62 வயது நிரம்பிய Kirkuk உயர்மறைமாவட்டப் பேராயர் Louis Sako, அமைதி மற்றும் மனித உரிமைகளை வளர்க்கும் பணியில் காட்டி வரும் ஆர்வத்தை முன்னிட்டு, 2008ம் ஆண்டு Defensor Fidei என்ற விருதையும், 2010ம் ஆண்டு Pax Christi விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.


7. பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இளையோரைப் பயிற்றுவிப்பதற்காக ராஞ்சியில் தொடர்பு சாதன நிலையம்

மே 26,2011. இந்தியாவில் ஜார்கண்ட் பகுதியில் வாழும் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இளையோரை இன்றையத் தொடர்பு சாதனங்களில் பயிற்றுவிப்பதற்காக ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் தொடர்பு சாதன நிலையம் ஒன்று அண்மையில் துவக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட், மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளில் உள்ள பழங்குடியினரிடையே 19ம் நூற்றாண்டில் உழைத்து வந்த கான்ஸ்டன்ட் லீவன்ஸ் என்ற பெல்ஜிய நாட்டு இயேசு சபைத் துறவியின் பெயரைத் தாங்கிய இத்தொடர்பு சாதன நிலையம், திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி என்று பல தொடர்பு சாதனங்களில் பழங்குடியினரான இளையோருக்குப் பயிற்சிகள் வழங்கும் என்று அப்பகுதியின் இயேசு சபைத் தலைவர் அருள்தந்தை சேவியர் சொரெங் கூறினார்.
பழங்குடியினரின் எண்ணங்கள் பொதுவாக நாட்டின் பல்வேறு தொடர்பு சாதனங்களில் அதிகமாய் கேட்கப்படுவதில்லை என்றும், அக்குறையைத் தீர்க்க இந்த மையம் ஓரளவாகிலும் முயலும் என்றும் அருள்தந்தை சொரெங் மேலும் கூறினார்.
இந்தியாவில் ஏற்கனவே சேவியர் தொடர்புத் துறை மையம் என்ற பெயரில் மும்பையில் புகழ் பெற்றதொரு மையத்தின் ஒரு பகுதியாக லீவன்ஸ் தொடர்பு சாதன நிலையம் இயங்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


8. மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் காரித்தாஸ்

மே 26,2011. இலங்கையின் காரித்தாஸ் பொறுப்பாளர்கள் இந்தியாவில் சிறைபடுத்தப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் Chilaw மறைமாவட்டத்தில் உள்ள Kalpitiya பங்கைச் சார்ந்த ஆறு மீனவர்கள் ஓராண்டுக்கு முன் இந்திய கடற்பகுதியில் நுழைந்தததையடுத்து, இந்திய அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர்.
இந்த ஆறு மீனவர்களையும் விடுவிக்க இலங்கையின் Chilaw பகுதி காரித்தாஸ் இயக்குனர் Abraham Barnabas, தான் இந்திய அரசுடன் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து UCAN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் விவரித்தார்.
இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தங்கள் வரம்புகளை மீறி அடுத்த நாட்டுக் கடற்பகுதியில் நுழைந்ததால் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான மீனவர்கள் சிறைகளில் வாடுகின்றனர் என்று காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இவ்விரு நாடுகளின் கடல் பகுதிகள் தெளிவாகக் குறிக்கப்படாததால் இந்தப் பிரச்சனை எழுகிறதென்றும், முக்கியமாக, கடலில் புயல்கள் வீசும்போது படகுகள் திசை இழந்து செல்வதும் இப்பிரச்சனைக்கு ஒரு காரணம் என்றும் இலங்கை காரித்தாஸ் ஒருங்கிணைப்பாளர் அந்தோணிமுத்து கூறினார்.
காரித்தாஸ் அமைப்பின் சார்பில் இப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அரசுகளுடனும் பேசி வருவதாகவும், இப்பிரச்சனை குறித்து மேலும் பேச தங்கள் அமைப்பின் பிரதிநிதிகளை இவ்விரு நாடுகளும் அண்மையில் அழைத்திருப்பது நம்பிக்கை தரும் ஒரு வாய்ப்பு என்றும் அந்தோணிமுத்து மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...