Saturday, 28 May 2011

Catholic News - hottest and latest - 27 May 2011

1. அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

2. இலங்கையின் Galle மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

3. உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மற்றும் கேரள மாநில ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

4. பொது நிலையினர் அரசுடன் அதிகமாக ஒத்துழைக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும் - திருத்தந்தை

5. கடல் கொள்ளைக்காரர்களின் பிடியில் கப்பல்கள் சிக்காத வண்ணம் பாதுகாப்பு வழிகளை மேம்படுத்த வேண்டும் - வத்திக்கான் அறிக்கை

6. பாகிஸ்தான் பைசலாபாத் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள்

7. உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------

1. அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

மே 27,2011. கடவுளின் அன்பை ஒவ்வொரு நாளும் வாழ்வில் வெளிப்படுத்துவதன் மூலமே மனிதர்களின் அடிப்படை மாண்பை இவ்வுலகில் நிலைநிறுத்த முடியும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த ஞாயிறு முதல் இவ்வேள்ளிவரை உரோமையில் நடைபெற்ற அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் உலகப் பொதுஅவையில் கலந்து கொண்ட உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இரண்டாம் உலகப் போரின் அழிவுகளிலிருந்து மனித குலத்தைக் காக்க, திருத்தந்தை 12ம் பத்திநாதரால் உருவாக்கப்பட்ட காரித்தாஸ் அமைப்பு, மனித குலத்தின் மீது திருச்சபை கொண்டுள்ள அக்கறையை உலகிற்கு வெளிப்படுத்தியது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு நாட்டிலும் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த காரித்தாஸ் அமைப்புக்களை அருளாளர் இரண்டாம் ஜான் பால் ஒருங்கிணைத்து, அகில உலகக் காரித்தாஸ் அமைப்பை உருவாக்கியதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இறைவனின் அன்பை உலகிற்கு வெளிப்படுத்துவதில் இவ்வமைப்பு கொண்டுள்ள பொறுப்புக்களையும் சுட்டிக் காட்டினார்.
திருச்சபை பணிகளின் ஓர் அங்கமாக விளங்கும் காரித்தாஸ், திருச்சபையின் படிப்பினைகளுடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் உலகில் உள்ள மற்ற சமுதாய அமைப்புக்களிலிருந்து வேறுபட்டுள்ளது என்பதை திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் வலியுறுத்தினார்.
இவ்வுலகின் துயர்களைத் துடைக்கும் பணிகளில் ஈடுபடும் அகில உலகக் காரித்தாஸ் அமைப்பு, மறு உலகைக் குறித்த விசுவாசத்தை வளர்க்கும் பணியிலும் ஆர்வமாய் ஈடுபடுவதன் மூலம், இவ்வுலகில் நிலவும் பல்வேறு கருத்துக்களுக்கு மாற்று சாட்சியாகத் திகழமுடியும் என்று திருத்தந்தை தன் உரையில் தெளிவுபடுத்தினார்.


2. இலங்கையின் Galle மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

மே 27,2011. இலங்கையின் Galle மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்தந்தை Raymond Wickramasingheயை இவ்வெள்ளியன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்தார்.
"இலங்கையின் நமதன்னை" என்ற தேசிய குருமடத்தில் பேராசிரியராகப் பணியாற்றி  வந்துள்ள புதிய ஆயர் Wickramasinghe, 1962ம் ஆண்டு இரத்னபுரா மறைமாவட்டத்தின் Uthuwankanda எனுமிடத்தில் பிறந்தவர். 1989ம் ஆண்டு குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டு, பங்கு குருவாகவும், Galle மறைமாவட்ட இளங்குருமட அதிபராகவும் ஆயரின் செயலராகவும், மறைமாவட்டக் காரித்தாஸ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள இவர், உரோம்நகர் Alphonsianum கத்தோலிக்க நிறுவனத்தில் பயின்று, முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
அருள்தந்தை Wickramasinghe புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள Galle மறைமாவட்டத்தில் உள்ள 13 பங்குத்தளங்களில் 33 குருக்கள் மற்றும் 97 அருள்சகோதரிகள் பணியாற்றுகின்றனர்.


3. உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மற்றும் கேரள மாநில ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

மே 27,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆறு திருச்சபைத் தலைவர்கள் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் பேராயரை இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தைஇவ்வெள்ளி காலை மேலும் ஏழு இந்தியத் திருச்சபைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
கேர‌ளாவின் திருவனந்தபுரம் பேராய‌ர் மரிய கல்லிஸ்ட் சூசை பாக்கியத்தை முத‌லில் த‌னியாக‌ச் சந்தித்து உரையாடிய‌ திருத்தந்தை, ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஆய‌ர் இன்னையா சின்ன அட்டகட்லா, விஜயவாடா ஆய‌ர் பிரகாஷ் மல்லவரப்பு ஆகியோரையும், கேரளாவின் கொச்சின் ஆய‌ர் ஜோசப் கரியில், கன்னூர் ஆய‌ர் வர்கீஸ் சக்கலக்கல், கோட்டபுரம் ஆய‌ர் ஜோசப் கரிக்கசேரி, மற்றும் கோழிக்கோடு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி வின்சென்ட் அரக்கல் ஆகியோரையும் குழுவாகச் சந்தித்து, அந்தந்த‌ ம‌றைமாவ‌ட்ட‌ங்க‌ள் குறித்து அவ‌ர்க‌ளுட‌ன் உரையாடினார்.


4. பொது நிலையினர் அரசுடன் அதிகமாக ஒத்துழைக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும் - திருத்தந்தை

மே 27,2011. பொது நிலையினர் அரசுடன் இன்னும் அதிகமாக ஒத்துழைக்கவும், பொது வாழ்வில் இன்னும் முழுமையாகப் பங்கேற்கவும் அவர்களை ஊக்குவிப்பதில் ஆயர்கள் பொது நிலையினரை உற்சாகப்படுத்த வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலி நாடு உருவாக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டு கொண்டாடப்படுவதையொட்டி, அந்நாட்டினை இறையன்னையின் பாதுகாப்பில் ஒப்படைக்கும் நோக்கத்தில், இவ்வியாழனன்று மாலை புனித மரியன்னை பசிலிக்காப் பேராலயத்தில் இத்தாலிய ஆயர்களுடன் இணைந்து, திருத்தந்தை செபமாலையை வேண்டியபோது, அவர்களுக்கு ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இத்தாலி நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சனைகள் நிறைந்த வரலாற்றைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, இத்தாலியின் அரசியல் விவகாரங்களில் திருச்சபை ஈடுபடுவது அதன் பணியல்ல என்பதையும் எடுத்துக் கூறினார்.
இவ்வுலகையும் தாண்டிய மறுஉலகம் உள்ளதென்றும், அவ்வுலகைச் சார்ந்த உண்மைகளை உலகின் அரசுகளுக்குச் சொல்லித் தருவதற்கு திருச்சபை கடமைப் பட்டுள்ளதென்றும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.


5. கடல் கொள்ளைக்காரர்களின் பிடியில் கப்பல்கள் சிக்காத வண்ணம் பாதுகாப்பு வழிகளை மேம்படுத்த வேண்டும் - வத்திக்கான் அறிக்கை

மே 27,2011. கப்பல்களின் உரிமையாளர்களும், அவற்றைக் கட்டுபவர்களும் கடல் கொள்ளைக்காரர்களின் பிடியில் தங்கள் கப்பல்கள் சிக்காத வண்ணம் பாதுகாப்பு வழிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று வத்திக்கான் அறிக்கை ஒன்று கூறுகிறது.
புலம் பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவை இவ்வியாழனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அகில உலக கடற்பகுதி அமைப்புக்கள் ஒருங்கிணைந்து கடல் பயணங்களை இன்னும் பாதுக்காப்பு கொண்டதாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கடற் கொள்ளைக் காரர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறதெனவும், நடக்கும் 2011ம் ஆண்டில் மட்டும் இதுவரை 214 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதென்றும், இவற்றில் 26 கப்பல்கள், 522 ஊழியர்கள் இன்னும் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
கடற் கொள்ளை என்ற பிரச்சனைக்கு மூலகாரணமாக இருக்கும் வறுமையை ஒழிப்பதற்கு உலக அரசுகள் முயன்றால், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று புலம் பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவை வெளியிட்டுள்ள இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.


6. பாகிஸ்தான் பைசலாபாத் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள்

மே 27,2011. பாகிஸ்தான் பைசலாபாத் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லறை பூமியை டிராக்டர்களைக் கொண்டு தகர்த்து அந்நிலத்திற்கு உரிமைக் கொண்டாட ஒரு சில இஸ்லாமியர்கள் அண்மையில் முயன்றுள்ளனர்.
இதற்கிடையே, Afshan Sabir என்ற 29 வயதுடைய ஓர் இளம் கிறிஸ்தவத் தாயைப் போதைக்குள்ளாக்கி, ஒரு குழுவினர் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்ற செய்தியும் அண்மையில் வெளியாகியுள்ளது.
இந்த வன்முறைச் செயல்களைத் தீர விசாரிக்க பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவின் உறுப்பினர்கள் நேரடியாக அப்பகுதியில் தகவல்கள் திரட்டச் சென்றுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
காவல் துறையினர் இந்த வன்முறைகளைக் கண்டும் காணாமல் இருப்பதால் தீவிரவாத இஸ்லாமியக் குழுக்கள் இதுபோன்ற செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர் என்று பைசலாபாத் பகுதியில் பணி புரியும் அருள்தந்தை ஜோசப் ஜமில் கூறினார்.
மேலும் இச்செவ்வாயன்று இரு கிறிஸ்தவ பெண்கள் ஓர் இஸ்லாமிய வியாபாரியால் கடத்தப்பட்டுள்ளனர் என்றும், இப்பெண்கள் இஸ்லாமியர்களாக மாறி தன்னை மணமுடிக்கும்படி இந்த வியாபாரி வற்புறுத்தி வருகிறார் என்றும் தெரிய வந்துள்ளது.


7. உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

மே 27,2011. உலகில் நிகழும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புக்களுக்கு மனிதர்களின் பேராசையே காரணம் என்று கொரியாவின் தலத்திருச்சபை கூறியுள்ளது.
வருகிற ஜூன் மாதம் 5ம் கடைபிடிக்கப்படும் உலகச் சுற்றுச் சூழல் நாளையொட்டி, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக்கான பணிக்குழுவின் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், நுகர்வுக் கலாச்சாரத்தில் அதிகம் மூழ்கி வரும் மனித குலம் வளர்த்து வரும் பேராசைகளே பல்வேறு அழிவுகளுக்கு காரணமாகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் Fukushima அணுசக்தி மையத்தில் உருவான ஆபத்துக்கள், கொரியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நான்கு நதி இணைப்புத் திட்டம் ஆகியவற்றைத் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, மனிதர்களின் பேராசை மனித உயிர்கள் மீது கொண்டுள்ள மதிப்பைப் பெரிதும் பாதிக்கின்றது என்பதையும் வலியுறுத்துகிறது.
அகில உலகச் சுற்றுச் சூழல் நாளுக்கு ஒரு முன்னோடியாக இவ்வியாழனன்று கொரியாவின் Seoul நகரில் நடைபெற்ற அனைத்து கிறிஸ்தவர்கள் அமைப்பின் செபவழிபாட்டில் சுற்றுச் சூழல் மட்டில் கிறிஸ்தவர்கள் காட்ட வேண்டிய அக்கறை வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment