Saturday 28 May 2011

Catholic News - hottest and latest - 23 May 2011

1.  ஒன்றிணைந்த அமைதி வாழ்வு மற்றும் ஒப்புரவிற்கான அடிப்படைக்கூறுகள், இறைவனின் மீட்புத் திட்டத்தில் காணப்படுகின்றன

2.  பல்கேரியா நாட்டிலிருந்து வந்திருந்த பிரதிகளுக்கு திருத்தந்தையின் உரை

3.  இறைவன் மீதான விசுவாசமும், இயேசு கிறிஸ்து மீதான விசுவாசமும் இரு வேறு செயற்பாடுகள் அல்ல

4.  சர்வதேசக் காரித்தாஸ் அமைப்பின் பொதுஅவைக் கூட்டத்தில் திருப்பீடச் செயலரின் மறையுரை

5.  சர்வதேச காரித்தாஸ் அமைப்பில் குறிப்பிடத்தக்க புதுப்பித்தல் இடம்பெறவேண்டும் என்கிறார் கர்தினால் ரொட்ரிக்கோஸ் மரதியாகா

6.  வியட்நாம் அரசின் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து கர்தினால் Minh Man கவலை

7.  சீனாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்தும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது

----------------------------------------------------------------------------------------------------------------
1.  ஒன்றிணைந்த அமைதி வாழ்வு மற்றும் ஒப்புரவிற்கான அடிப்படைக்கூறுகள், இறைவனின் மீட்புத் திட்டத்தில் காணப்படுகின்றன

மே 23,2011. புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸ் அறிவித்த நற்செய்தியும் சாட்சியமும் அன்றைய மக்களின் பாரம்பரியம் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களின் ஐக்கியத்திற்கு உதவுவதாக இருந்தது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
முன்னாள் யூக்கோஸ்லாவியா குடியரசான மாசடோனியாவின் அரசுத்தலைவர் Gjorge Ivanov மற்றும் அவருடன் வந்திருந்த அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அப்பகுதியில் நற்செய்தியை அறிவித்த இப்புனிதர்களின் எடுத்துக்காட்டு இன்றும் அனைவருக்கும் பயன் தரவல்லதாக உள்ளது என எடுத்துரைத்ததோடு, ஒன்றிணைந்த அமைதி வாழ்வும், ஒப்புரவும் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைக் கூறுகளை இறைவனின் மீட்புத் திட்டத்தில் கண்டு கொள்ளலாம் என்றார்.
மனிதனுக்குரிய மீற முடியாத உரிமைகளையும் மனித மாண்பையும் மதிக்காமல் நம்மால் ஐக்கியத்தில் வாழமுடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை, சுயநலமான நம் ஒவ்வொரு நோக்கங்களும் சுத்திகரிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதால், உள்மன மாற்றத்திற்கான அழைப்பை இறைவார்த்தை தொடர்ந்து விடுத்துக்கொண்டே இருக்கின்றது என மேலும் கூறினார்.

2.  பல்கேரியா நாட்டிலிருந்து வந்திருந்த பிரதிகளுக்கு திருத்தந்தையின் உரை

மே 23,2011. புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியசின் திருவிழாவை முன்னிட்டு உரோம் நகர் வந்திருந்த மாசடோனியக் குடியரசுப் பிரதிநிதிகளைப்போல், பல்கேரியா நாட்டிலிருந்து வந்திருந்த பிரதிகளையும் இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
பல்கேரிய பாராளுமன்றத் தலைவர் Tsetska Tsacheva  தலைமையில் வந்திருந்த அந்நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்தத் திருத்தந்தை, கிழக்கு ஐரோப்பாவின் ஆன்மீகப் புதுப்பித்தலுக்கும், சுதந்திர மேம்பாட்டிற்கும், ஐரோப்பியக் கிறிஸ்தவத்தின் ஐக்கியத்திற்கும் புனிதர்கள் சிரிலும் மெத்தோடியசும் ஆற்றியுள்ளப் பணிகளை நினைவு கூர்ந்தார்.
இவர்கள் மூலம் கிறிஸ்தவ விசுவாசமானது அன்றைய ஐரோப்பியக் கண்டத்தில் திளைத்து அதன் வரலாற்றோடு இரண்டறக் கலந்துள்ளது என்றார். மக்களிடையேயான பலன் தரும் ஒத்துழைப்பிற்கும் ஆழமான ஒன்றிணைந்த வாழ்வுக்கும் தன்னை அர்ப்பணித்து உழைக்க ஐரோப்பா அழைப்புப் பெற்றுள்ளது என்ற பாப்பிறை, இது பொருளாதாரக் கொள்கைகளால் மட்டுமல்ல, மாறாக மனித இதயத்தில் எழுதப்பட்டுள்ள தொன்மை மதிப்பீடுகளின் அடிப்படையிலும் பெறப்படவேண்டும் என மேலும் கூறினார்.
இவ்விரு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த பின், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் பேராயரும் வாரங்கலின் அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான பேராயர் தும்மா பாலா, மற்றும் விசாகப்பட்டணம் பேராயர் மரியதாஸ் காகிதப்பூ ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து உரையாடினார் பாப்பிறை.

3.  இறைவன் மீதான விசுவாசமும், இயேசு கிறிஸ்து மீதான விசுவாசமும் இரு வேறு செயற்பாடுகள் அல்ல

மே 23,2011. இறைவன் மீதான விசுவாசமும், இயேசு கிறிஸ்து மீதான விசுவாசமும் இரு வேறு செயற்பாடுகள் அல்ல, மாறாக விசுவாசத்தின் ஒரே செயல்பாடு என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்துவே வழி, உண்மை மற்றும் வாழ்வு என்பது குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் போது தன் கருத்துக்களை வழங்கியத் திருத்தந்தை, இறைவன் கண்ணுக்குப் புலப்படாதவர் என்ற எண்ணம் புதிய ஏற்பாட்டில் மறைந்து, இறைவன் த‌ன் முகத்தைக் காண்பித்தார் என்றார்.
மனு உரு எடுத்தல், மரணம், மற்றும் உயிர்ப்பின் வழி, இறைமகன்  நம்மைப் பாவங்களிலிருந்து விடுவித்து, நமக்கு இறைவனின் குழந்தைகளுக்குரிய சுதந்திரத்தை வழங்கி, இறைவனின் முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த முகமே அன்பு என மேலும் கூறிய திருத்தந்தை, இறைவன், கிறிஸ்துவில் காணக்கூடியவராக இருந்தார் எனவும் தெரிவித்தார்.
இயேசுவின் உண்மை எனும் வார்த்தைகளால் வழிநடத்தப்பட நம்மையே நாம் அனுமதிப்பதே இறைவனைச் சென்றடைவதற்கான சிறந்த வழி எனவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

4.  சர்வதேசக் காரித்தாஸ் அமைப்பின் பொதுஅவைக் கூட்டத்தில் திருப்பீடச் செயலரின் மறையுரை

மே 23,2011. இயேசு கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபையின் மற்றும் இறைமக்களின் பிறரன்புப் பணிகளின் அமைப்புமுறைச் சார்ந்த அடிப்படைக் கூறின் ஒரு பகுதியே சர்வதேசக் காரித்தாஸ் அமைப்பு என்றார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
சர்வதேசக் காரித்தாஸ் அமைப்பின் 19வது பொதுஅவைக் கூட்டத்தை இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றி துவக்கிவைத்து மறையுரை ஆற்றிய கர்தினால் பெர்த்தோனே, திருச்சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அன்பின் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டினார்.
தங்கள் வாழ்விற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழியில்லாமல் எவரும் துன்புறக்கூடாது என்பதையும் எடுத்துரைத்த கர்தினால் பெர்த்தோனே, முழு மனித மாண்பிற்கானப் பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பினார்.
ஏழைகளின் உரிமைகள் பாதுக்கப்பட்டு, முன்னேற்றப்பட வேண்டியதன் அவசரத் தேவையை அங்கீகரிக்கும் சர்வதேசக் காரித்தாஸ் அமைப்பு, ஏழைகளை நம் சகோதர, சகோதரிகளாகக் கண்டு ஏற்றுக் கொள்ள நமக்கு உதவுகிறது என்று மேலும் எடுத்துரைத்தார் திருப்பீடச் செயலர்.

5.  சர்வதேச காரித்தாஸ் அமைப்பில் குறிப்பிடத்தக்க புதுப்பித்தல் இடம்பெறவேண்டும் என்கிறார் கர்தினால் ரொட்ரிக்கோஸ் மரதியாகா

மே 23,2011. இரண்டாம் வத்திக்கான் பொது அவையைத் தொடர்ந்து, திருச்சபையில் இடம்பெற்ற மாற்றங்கள் போல், தற்போது சர்வதேச காரித்தாஸ் அமைப்பில் குறிப்பிடத்தக்க புதுப்பித்தல் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரிக்கோஸ் மரதியாகா.
சர்வதேச காரித்தாஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் 60ம் ஆண்டையொட்டி உரோம் நகரில் இடம்பெறும் அதன் 19வது பொதுஅவைக் கூட்டத்தில் துவக்க உரையாற்றிய அவ்வமைப்பின் தலைவர் கர்தினால் ரொட்ரிக்கோஸ் மரதியாகா, ஒரே குடும்பமாக ஏழ்மையற்ற நிலைகளுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன், அநீதியையயும் ஏழ்மையையும் எதிர்த்துப் போரிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஏழ்மையை அகற்றுவதற்கானச் சிறந்த வழிகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என அப்பொதுஅவையில் பங்குபெறுவோரை நோக்கி அழைப்பு விடுத்த அவர், எழைகளுக்குப் பணிபுரிவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். 

6.  வியட்நாம் அரசின் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து கர்தினால் Minh Man கவலை

மே 23,2011. திருச்சபை தொடர்புடைய நடவடிக்கைகளில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கில் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொணர வியட்நாம் அரசு முயன்று வருவதாகக் கவலையை வெளியிட்டுள்ளார் கர்தினால் Jean Pham Minh Man.
Saigon உயர் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Minh Man, வியட்நாம் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போது மதத்திற்கு எதிராக முன் வைக்கப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம், நம்பிக்கைகளுக்கும், மதங்களுக்கும் மட்டுமல்ல, அரசியலமைப்பிற்கே மதிப்புக் குறைவான செயல்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மதம் சார்ந்த எந்த ஓர் உரிமையும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் வைக்கப்பட்டு அவர்களின் அனுமதி பெற்றபிறகே செயல்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்திருத்த மசோதா, மதச் சமூகங்களைக் கட்டுப்படுத்த மட்டுமல்ல, அரசு அதிகாரிகளே அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் என்ற எண்ணத்தை வழங்கவும் உதவுகிறது என்றும் கர்தினால் Minh Man தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

7.  சீனாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்தும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது

மே 23,2011. சீனாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்தும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தும் வருவதால், 'குடும்பத்திற்கு ஒரு குழந்தை' என்ற கொள்கையில் அரசு மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
சீனாவில் 2000மாம் ஆண்டில் 127 கோடியாக இருந்த மக்கள்தொகை 2010ம் ஆண்டில் 134 கோடியாக உயர்ந்துள்ளபோதிலும், மக்கள் தொகைப் பெருக்க விகிதம் 1.07 விழுக்காடு என்பதிலிருந்து 0.57 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக அந்நாட்டின் அண்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
சீனாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 23 விழுக்காடாக இருந்தது, தற்போது 16.6 விழுக்காடாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பெண்கள் கருவிலேயேக் கொல்லப்படுவதால், அந்நாட்டின் மக்கள் தொகையில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை 3கோடியே 40 இலட்சம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...