1. வட இந்திய ஆயர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு
2. திருத்தந்தை 23ம் ஜானின் சமூகக்கோட்பாடுகள் இன்றும் நடைமுறைக்கு ஒத்தவை
3. நல்மேய்ப்பர்களுக்காக செபிக்க அழைப்பு விடுக்கிறார் திருத்தந்தை
4. லிபியா மற்றும் சிரியாவில் அமைதி ஏற்பட திருத்தந்தை அழைப்பு
5. அனைத்து ஆயர் பேரவைகளுக்குமான விசுவாசக்கோட்பாட்டு பேராயத்தின் வழிகாட்டுதல் ஏடு
6. செபம் குறித்த திருத்தந்தையின் புதன் உரைகள் மக்களைக் கவர்ந்துள்ளன
7. சிறுபான்மையினரின் பேச்சுரிமைக்குப் பாதகமாக அமையும் இணையதளம் குறித்த இந்திய அரசின் புது விதிமுறைகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. வட இந்திய ஆயர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு
மே 16, 2011. திருச்சபைக்குள் விசுவாசிகள் ஒவ்வொருவரும் விசுவாசத்திலும் அன்பிலும் பணியிலும் திளைத்து வளர, உறுதியான மறைக்கல்வி படிப்பினைகளுடன் வழிநடத்திச் செல்லப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை இடப்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த வட இந்தியாவைச் சேர்ந்த இலத்தீன் ரீதி ஆயர்களின் ஒரு குழுவை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, நற்செய்திக்கான சாட்சிய வாழ்வை மேற்கொள்ளும் கிறிஸ்தவ அர்ப்பணமானது ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் எதிர்நோக்கி வரும் சவால்களையும் சுட்டிக்காட்டி, இத்தகைய வேளைகளில் கிறிஸ்தவச் சமூகமானது தன் விசுவாசத்திற்கான நேர்மையையும் உண்மைத்தன்மையையும் எதிர்பார்க்கின்றது என்றார். தாங்கள் பணிபுரியும் சமூகங்களின் மொழி மற்றும் பழக்கமுறைகளுக்கு ஏற்ப, கலாச்சாரமயமாக்கலின் முக்கியத்துவம் குறித்தும் திருத்தந்தை இந்திய ஆயர்களிடம் எடுத்துரைத்தார். மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் பற்றியும் எடுத்தியம்பிய திருத்தந்தை, உண்மை எதுவோ அதற்கு மதிப்பளித்து, மதச்சுதந்திரம் மற்றும் வழிபாட்டுச்சுதந்திரம் போற்றி பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மதச்சகிப்புத்தன்மை என்பது அனைத்து மதங்களுக்கும் பயன் தரக்கூடியது என்பதைக் கிறிஸ்தவர்கள் தங்களின் பிறரன்பு மற்றும் சகிப்புத்தன்மை மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை.
2. திருத்தந்தை 23ம் ஜானின் சமூகக்கோட்பாடுகள் இன்றும் நடைமுறைக்கு ஒத்தவை
மே 16, 2011. திருத்தந்தை 23ம் ஜான் வெளியிட்ட 'Mater et Magistra' என்ற ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி உரோம் நகரில் இடம் பெற்ற உலகக் கருத்தரங்கில் கலந்துகொண்டோரை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மனிதகுலத்திற்கான திருச்சபையின் பணிகளைக் கவனத்தில் கொண்டு சமூகக் கோட்பாடுகள் குறித்து திருத்தந்தை 23ம் ஜான் எண்ணியதைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை 16ம் பெனடிக்ட், சமூக மற்றும் கலாச்சார சரிநிகரற்ற நிலைகளை மேற்கொள்ள அத்திருத்தந்தை தன் ஏட்டில் சுட்டிக்காட்டியுள்ள உண்மை, அன்பு, நீதி ஆகியவைகளுடன் கூடிய வழிமுறைகள், இன்றும் உலக மயமாக்கலின் சரிநிகரற்ற நிலைகளை எதிர்கொள்ள இயைந்ததாக உள்ளன என்றார்.
புதிய ஆதாமாம் இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட ஐக்கியத்தைக் கொள்வதன் மூலமே பகுத்தறிவானது குணம்பெற்று பலப்படுத்தப்படுகிறது, அதன் வழியே தான் நாம் இப்புதிய சூழல்களுக்கேற்ற வகையில் முன்னேற்றத்தையும் பொருளாதாரத்தையும் அரசியலையும் பெறமுடியும் என மேலும் கூறினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
3. நல்மேய்ப்பர்களுக்காக செபிக்க அழைப்பு விடுக்கிறார் திருத்தந்தை
மே 16, 2011. உலகின் பல்வேறு குரல்களுக்கிடையே இறைவனின் குரல் காணாமற்போகும் அபாயம் இருப்பதால், ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் இறையழைத்தலை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் அழைக்கப்படுகிறார்கள் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இறையழைத்தலுக்கான உலகச் செப நாளான இஞ்ஞாயிறன்று உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, இயேசுவை நல்லாயனாகக் காட்டும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம், நல்லாயனைப் பின்பற்றும் ஆடுகளின் பண்புகளாக செவிமடுத்தலையும், பின்பற்றுவதையும் காட்டியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
விசுவாசம் பிறப்பெடுத்து வளரும் இறைவார்த்தைக்குச் செவிமடுத்து, இறைவனால் வழிநடத்தப்பட்டு, அவர் படிப்பினைகளின்படி தினசரி வாழ்வை வாழ்ந்து காட்டவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, மனிதர்களுக்கு எப்போதும் இறைவனின் தேவை உள்ளது என்பதால், அவ்விறைவனை திருவருட்சாதனங்களில் கண்டுகொள்ள நம்மை வழிநடத்திச் செல்லும் நல் மேய்ப்பர்களின் தேவையும் எப்போதும் உள்ளது என்றார்.
இறையழைத்தலுக்கான இந்தச் செப நாளில், அனைத்து மேய்ப்பர்களுக்காகவும், குறிப்பாக திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் பங்குகுருக்களுக்காகச் செபிப்பதுடன், இறையழைத்தல்கள் அதிகரிக்க செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
4. லிபியா மற்றும் சிரியாவில் அமைதி ஏற்பட திருத்தந்தை அழைப்பு
மே 16, 2011. அண்மைப் போராட்டங்களாலும் மோதல்களாலும் பாதிக்கப்பட்டிருக்கும் லிபியா மற்றும் சிரியாவில் உடனடி அமைதித் தீர்வுகள் காணப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பொதுமக்களிடையே பல்வேறு உயிரிழப்புகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமாகியுள்ள லிபிய மோதல்களை ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கி வரும் தான், வன்முறைகளின் வழிகள் கைவிடப்படவும், சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் அமைதியின் பாதையைப் பின்பற்றவும் மீண்டும் வலியுறுத்துவதாக இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் பாப்பிறை.
சிரியாவில் இடம்பெறும் போராட்டங்கள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்நாடு இதுவரை கொண்டிருந்த ஐக்கியம் மற்றும் இணக்க வாழ்வு மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார்.
5. அனைத்து ஆயர் பேரவைகளுக்குமான விசுவாசக்கோட்பாட்டு பேராயத்தின் வழிகாட்டுதல் ஏடு
மே 16, 2011. சிறார் மீதான குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகள் எவ்விதம் அணுகப்பட வேண்டும் என்பது குறித்து ஒவ்வோர் ஆயர் பேரவையும் வழிகாட்டுதல் ஏடு ஒன்றை தயாரிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் அனைத்து ஆயர் பேரவைகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடப் பேராயம்.
கடந்த ஆண்டு, திருத்தந்தையின் ஒப்புதலுடன் கூடிய புதிய விதிகளுடன் விசுவாசக்கோட்பாட்டு பேராயத்தால் தயாரிக்கப்பட்ட ஏட்டுடன் அனுப்பப்பட்டுள்ள இப்பேராயத்தலைவர் கர்தினால் வில்லியம் லேவாடாவின் கடிதம், 2012ம் ஆண்டு மே மாதத்திற்குள் புதிய விதிமுறைகளுடன் கூடிய சட்ட விதி ஒவ்வோர் ஆயர் பேரவையாலும் உருவாக்கப்படவேண்டும் என்றும் அதன் ஒரு பிரதி உரோமையிலுள்ள இப்பேராயத்தின் தலைமையகத்திற்கு அனுப்பப்படவேண்டும் எனவும் தெரிவிக்கிறது.
குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகள் குறித்த கடுமையான புதிய விதிகளை வரையறுக்கும் ஏட்டை, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம், ஆயர் பேரவைகளுக்கு அனுப்பியுள்ள போதிலும், அந்தந்த நாடுகளின் சூழல்களுக்கு ஏற்ப புதிய விதிமுறைகளை உருவாக்கி இணைக்குமாறும் விண்ணப்பித்துள்ளது.
தவறான பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புக்கவனம், குற்றம் நேரா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள், குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சூழல்களை உருவாக்குதல், குருக்களை உருவாக்கும் பயிற்சிகளில் சிறப்புக் கவனம் செலுத்துதல், அநீதியான முறையில் குற்றம் சாட்டப்படும் குருக்களுக்கு உதவுதல், அந்தந்த நாட்டின் சட்டங்களுக்கு இயைந்த வகையில் குற்றங்கள் குறித்து காவல்துறைக்கு அறிவித்தல் போன்றவைகளுடன் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பேராயம் தயாரித்து, திருத்தந்தையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இவ்வேடு.
6. செபம் குறித்த திருத்தந்தையின் புதன் உரைகள் மக்களைக் கவர்ந்துள்ளன
மே 16, 2011. கடவுள் சார்பற்ற கொள்கைகளாலும் உலகாயுதப் போக்குகளாலும் கவரப்பட்டிருக்கும் இன்றைய உலகில், புதன் பொதுமறைபோதகங்களில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், செபம் குறித்து தொடர் உரையாற்றி வருவது மக்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதாகக் கூறினார் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி.
கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட செபங்களையே சார்ந்து நிற்கிறார்கள், இதயத்தினுள் ஆழமாகச் சென்று இறைவனின் முன்னிலையில் நம் இதயத்தில் உள்ளவைகளை முன் வைப்பது அரிதாகி வருகின்றது என்பதையும் எடுத்துரைத்தார் குரு லொம்பார்தி.
இறைவன் மறைபொருளானவர் என்பதை ஏற்றுக்கொண்டு அவருக்கான நம் தாகத்தையும், அன்பு, ஒளி மற்றும் உண்மைக்கான ஆவலையும் ஒன்றிணைக்கும்போது நாம் இறைவனை நோக்கி மிக நெருங்கிச் செல்கிறோம் என மேலும் கூறினார் திருப்பீடப்பேச்சாளர்.
7. சிறுபான்மையினரின் பேச்சுரிமைக்குப் பாதகமாக அமையும் இணையதளம் குறித்த இந்திய அரசின் புது விதிமுறைகள்
மே 16, 2011. இணையதளம் குறித்து இந்திய அரசு விதித்துள்ள புது விதிமுறைகள் சிறுபான்மையினரின் பேச்சுரிமைக்குப் பாதகமாக அமைந்துள்ளதென்று இந்தியத் திருச்சபை தெரிவித்துள்ளது.
வன்முறைகளைத் தூண்டும் வாசகங்கள், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வார்த்தைகள், பொது நலனைக் கெடுக்கும் எண்ணங்கள் போன்றவைகளை அரசு அனுமதிக்காது என்று கூறும் இந்த விதிமுறைகள், கண்டனத்திற்குரிய எவ்வகை இணையதளப் பகுதிகளையும் எச்சரிக்கை ஏதும் இல்லாமல் அரசு 36 மணி நேரத்திற்குள் நீக்கும் உரிமை உள்ளதென்றும் கூறுகிறது.
அரசு விதித்துள்ள இந்த விதி முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சத்தை இந்திய திருச்சபை பொறுப்பாளர்கள் பலர் வெளியிட்டுள்ளனர்.
இந்த விதிமுறைகளால் சிறுபான்மையினர் இணையதளத்தில் வெளியிடும் எண்ணங்களும் கருத்துக்களும் தடை செய்யப்படும் என்று இந்திய சமூகத் தொடர்பு ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் அருள்தந்தை Jude Botelho கூறினார்.
கிறிஸ்தவர்கள் இணையதளத்தில் வெளியிடும் பல கருத்துக்கள் மதமாற்றத்திற்குத் தூண்டிவிடுகிறது என்று குறைகூறி, இந்து அடிப்படை வாதிகள் இக்கருத்துக்களைத் தடை செய்ய அரசை வலியுறுத்தும் வாய்ப்பு உள்ளதென்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமூகத் தொடர்புப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை George Plathottam கூறினார்.
No comments:
Post a Comment