1. பிறரன்புச் சேவைகளுக்கு உதவிகள் செய்யும் பாப்பிறை அறக்கட்டளைக்கு திருத்தந்தையின் செய்தி
2. திருத்தந்தை : திருமறைநூல்கள் அவற்றின் உண்மையான இயல்புகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கப்படுவது திருச்சபையின் வாழ்வுக்கு இன்றியமையாதது
3. ஒசாமா பின் லேடனின் மரணம் முழுமையான உலக அமைதிக்கு உத்திரவாதம் அல்ல - லாகூர் முன்னாள் பேராயர்
4. அருளாளர் இரண்டாம் ஜான்பாலுக்கு யூதமதத் தலைவர்களின் பாராட்டுரை
5. சாதீய அமைப்பு முறைக்குத் தகுந்ததொரு பதில் அளிக்கும் கடமை இந்தியத் திருச்சபைக்கு உள்ளது
6. பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் உள்ளடக்கிய இலங்கையை உருவாக்க முடியும் - மதத்தலைவர்கள்
7. பொருளாதாரச் சரிவு உலகின் பெரும் செல்வந்தர்களை இன்னும் செல்வமுடையவர்களாக மாற்றியுள்ளது
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. பிறரன்புச் சேவைகளுக்கு உதவிகள் செய்யும் பாப்பிறை அறக்கட்டளைக்கு திருத்தந்தையின் செய்தி
மே 05,2011. திருத்தந்தையர்களின் எண்ணங்களுக்கேற்ப மேற்கொள்ளப்படும் பல பிறரன்புச் சேவைகளுக்கு உதவிகள் செய்யும் பாப்பிறை அறக்கட்டளைக்கு தன் நன்றிகளைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒவ்வொரு ஆண்டும் பாப்பிறை அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் உரோமைக்கு வருகை தரும் தருணத்தையொட்டி, இவ்வாண்டு திருத்தந்தை அவர்களை வரவேற்று அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
உயிர்ப்புத் திருவிழா காலத்தில் இவ்வறக்கட்டளை உறுப்பினர்கள் உரோமைக்கு வந்திருப்பதற்கு தன் மகிழ்வைத் தெரிவித்த திருத்தந்தை, இவ்வறக்கட்டளை மேற்கொள்ளும் பல செயல்பாடுகள், அகில உலகத் திருச்சபையின் ஒவ்வொரு மறைமாவட்ட அளவிலும் முழு மனித முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
நடைமுறை உலகத்தின் மீது திருத்தந்தையர்கள் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்த நிறுவப்பட்ட பாப்பிறை அறக்கட்டளை, திருச்சபையின் வருங்காலத்தலைவர்களை உருவாக்கும் கல்விப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பது நம்பிக்கை தரும் ஒரு செயல் என்பதையும் திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டினார்.
இவ்வறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.
2. திருத்தந்தை : திருமறைநூல்கள் அவற்றின் உண்மையான இயல்புகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கப்படுவது திருச்சபையின் வாழ்வுக்கு இன்றியமையாதது
மே 05,2011. திருமறை நூல்களுக்குக் கொடுக்கப்படும் விளக்கங்கள் அவற்றின் உள்தூண்டுதல்களை மறப்பதாயும் அல்லது அவற்றைப் புறக்கணிப்பதாயும் இருந்தால் அவை கடவுளிடமிருந்து வந்தவை என்ற மிக முக்கிய மற்றும் மதிப்புமிக்க பண்பை இழக்கக்கூடும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்திங்களன்று வத்திக்கானில் தொடங்கிய பாப்பிறை விவிலியக் கழகத்தினரின் ஐந்து நாள் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இந்த விளக்கங்கள் மனித வார்த்தைகளுக்குள் அடங்கிவிட்டால் திருமறைநூல் கொண்டுள்ள விலைமதிப்பற்ற கருவூலத்தை நாம் இழக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.
திருமறைநூல்கள் அவற்றின் உண்மையான இயல்புகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கப்படுவது திருச்சபையின் வாழ்வுக்கும் மறைப்பணிக்கும் இன்றியமையாதது என்றும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் இச்செய்தியானது திருப்பீட விசுவாசக்காப்புப் பேராயத் தலைவர் கர்தினால் William Levadaவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாள் கூட்டமானது, “திருவிவிலியத்தின் உள்தூண்டுதல்களும் உண்மையும்” என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
3. ஒசாமா பின் லேடனின் மரணம் முழுமையான உலக அமைதிக்கு உத்திரவாதம் அல்ல - லாகூர் முன்னாள் பேராயர்
மே 05,2011. உலக அமைதிக்கு பெருமளவில் பாதிப்புக்களை உருவாக்கி வந்த ஒசாமா பின் லேடனின் மரணம் முழுமையான உலக அமைதிக்கு உத்திரவாதம் அல்ல என்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் முன்னாள் பேராயர் லாரன்ஸ் ஜான் சல்தானா கூறினார்.
ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பேராயர் சல்தானா, பின் லேடனின் மரணம் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எவ்வகைப் பாதிப்புக்களை உருவாக்கும் என்பதை தற்போது கணிக்க முடியாது என்றும், அரசு கிறிஸ்தவ கோவில்கள், மற்றும் நிறுவனங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து வருகிறது என்றும் கூறினார்.
பாகிஸ்தானில் இராணுவச் செயல்பாடுகள் அதிகம் உள்ள ஒரு பகுதியில் அரசு, அல்லது இராணுவத்திற்குத் தெரியாமல் ஒசாமா பின் லேடன் வாழ்ந்து வந்தது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
பாகிஸ்தானின் தலையாயப் பிரச்சனையான தீவிர வாதத்தை ஒழிக்க அனைத்து மக்களும் முன் வர வேண்டுமென்று பாகிஸ்தான் பிரதமர் Gilaniயும், அல் கெய்தா அமைப்பின் தலைவனுக்கு அரசு உதவிகள் செய்ததென்பது ஆதாரமற்ற கட்டுக் கதை என்று பாகிஸ்தான் அரசுத் தலைவர் Asif Ali Zardariயும் கூறியுள்ளனர்.
4. அருளாளர் இரண்டாம் ஜான்பாலுக்கு யூதமதத் தலைவர்களின் பாராட்டுரை
மே 05,2011. உலகிலுள்ள ஒட்டுமொத்த யூத மக்களின் ஆழ்மனதில் கரோல் வொய்த்திவாவின் நினைவு ஒளி நிறைந்ததாய் விளங்குகிறது என்று உரோமையில் உள்ள மூத்த யூதமதத் தலைவரான Rabbi Elio Toaff கூறினார்.
அண்மையில் இரண்டாம் ஜான்பால் அருளாளராய் உயர்த்தப்பட்ட நிகழ்வையொட்டி யூதமதத் தலைவர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டுத் தலைவர்கள் பகிர்ந்து கொண்ட செய்திகளை வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் உயர் அதிகாரியான Yossi Peled மே மாதம் முதல் நாள் நடைபெற்ற இத்திருச்சடங்கில் தான் கலந்துகொண்டதை பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் 2000மாம் ஆண்டு திருத்தந்தையாக இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டதை அன்புடன் நினைவு கூர்ந்த இராணுவத் தலைவர் Peled, அருளாளருக்கு யூத மக்கள் அனைவரின் சார்பாக தன் நன்றியையும் கூறினார்.
கிறிஸ்தவத்திற்கும், யூத மதத்திற்கும் இடையே எழுந்திருந்த வலிமையான ஒரு கோட்டையை அருளாளர் இரண்டாம் ஜான்பால் தன் கருணை கொண்ட கண்ணோட்டத்தால் தகர்த்தார் என்று உரோமை நகர் யூத மத குரு Rabbi Riccardo Di Segni கூறினார்.
5. சாதீய அமைப்பு முறைக்குத் தகுந்ததொரு பதில் அளிக்கும் கடமை இந்தியத் திருச்சபைக்கு உள்ளது
மே 05,2011. காலம் காலமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள சாதீய அமைப்பு முறைக்குத் தகுந்ததொரு பதில் அளிக்கும் கடமை இந்தியத் திருச்சபைக்கும், ஏனைய கிறிஸ்தவ சபைகளுக்கும் உள்ளதென்று கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
World Council of Churches (WCC) என்ற அமைப்பால் “சாதி, மதம், பண்பாடு” என்ற தலைப்பில் கடந்த ஞாயிறு முதல் புதன் வரை கேரளாவின் கொச்சியில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவில் உள்ள 2,80,00000 கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருந்தாலும், அவர்கள் சமுதாயத்திலும், கிறிஸ்தவ அமைப்புக்களிலும் மேற்குடியினரின் அடக்கு முறைகளை உணர வேண்டியுள்ளதென்று இக்கருத்தரங்கில் பேசப்பட்டது.
அண்மைக் காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது ஒரு நல்ல அடையாளம் எனினும், இந்த அடையாளங்கள் கிறிஸ்தவ சபைகளின் மத்தியில் செயல்பாட்டு வடிவம் பெற வேண்டியது அவசியம் என்று இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
6. பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் உள்ளடக்கிய இலங்கையை உருவாக்க முடியும் – மதத்தலைவர்கள்
மே 05,2011. இலங்கையில் பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் உள்ளடக்கிய ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்று மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுகளைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக Sabaragamuwa பகுதியில் அண்மையில் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் முஸ்லிம்கள் ஒன்று கூடி வந்தபோது, இக்கருத்து வெளியிடப்பட்டது.
“தேசிய ஒற்றுமைக்கான பல்சமய ஒருங்கிணைப்பு” என்ற ஓர் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியில் Colombo, Moratuwa, Gampaha, Kurunegala ஆகியப் பகுதிகளிலிருந்து பல சமயங்களையும் சேர்ந்த 2000 பேருக்கும் அதிகமாய் வந்து இக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
மக்களிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்ப்பதற்கு திருவிழா நாட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தேவையில்லை என்று புத்த மதத் தலைவரான Valavita Janananda Thero கூறினார்.
7. பொருளாதாரச் சரிவு உலகின் பெரும் செல்வந்தர்களை இன்னும் செல்வமுடையவர்களாக மாற்றியுள்ளது - CCTWD
மே 05,2011. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகை வருத்திய பொருளாதாரச் சரிவு உலகின் பெரும் செல்வந்தர்களை இன்னும் செல்வமுடையவர்களாக மாற்றியுள்ளது என்று ஓர் உலக அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தப் பொருளாதாரச் சரிவு உண்டான 2009ம் ஆண்டில் பெரும் கோடீஸ்வரர்கள் என்ற கணக்கில் 1011 பேர் இருந்ததாகவும், இந்த எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் 1210 ஆக உயர்ந்துள்ளதென்றும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்த இதே காலக் கட்டத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 40 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
மூன்றாம் உலக நாடுகளின் கடன்களை நீக்கும் வழிமுறைகளை அறிய ஈடுபட்டுள்ள CCTWD என்ற ஓர் அமைப்பு அண்மையில் வெளியிட்ட இந்த அறிக்கையில், உலகக் கோடீஸ்வரர்களின் செல்வ மதிப்பீடு கடந்த இரு ஆண்டுகளில் 3500 பில்லியன் டாலரிலிருந்து 4500 பில்லியன் - அதாவது, 450000 கோடி டாலர்களாக உயரந்துள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களான இவர்கள் ஆண்டொன்றுக்கு இரண்டு விழுக்காடு வரி செலுத்தினால், அவ்வரித் தொகையான 8000 கோடி டாலர்களைக் கொண்டு வறியோரின் அடிப்படைத் தேவைகளை அடுத்த பத்து ஆண்டுகள் தீர்க்க முடியும் என்று இவ்வறிக்கை கணித்துள்ளது.
No comments:
Post a Comment