Friday, 27 May 2011

Catholic News - hottest and latest - 19 May 2011

1.   கர்தினால் டெலஸ்ஃபோர் டோப்போ மற்றும் ஜார்கண்ட் ஆயர்களை சந்தித்து உரையாடினார் திருத்தந்தை

2.  உரோமை கார்மல் சபையின் பாப்பிறை இறையியல் துறைக்கான திருத்தந்தையின் உரை.

3.   2012 உலக அமைதி தினத்திற்கான தலைப்பு,  'நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கற்பித்தல்'

4.  ஜப்பானில் ஒருமைப்பாட்டின் சுனாமி காணப்படுவதாக உரைக்கிறார் கர்தினால் சாரா.

5.  அமெரிக்க கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் சீனப்பொருட்களுக்கு தடை

6.  போர்குற்றம் குறித்து விசாரணை தேவை - இந்தியா

----------------------------------------------------------------------------------------------------------------


1.  கர்தினால் டெலஸ்ஃபோர் டோப்போ மற்றும் ஜார்கண்ட் ஆயர்களை சந்தித்து உரையாடினார் திருத்தந்தை

மே 19,2011.   ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள கர்தினால் டெலஸ்ஃபோர் டோப்போ மற்றும் ஜார்கண்ட் ஆயர்களை இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஏற்கனவே இத்திங்களன்று காலை வடகிழக்கு இந்தியா, பீகார், ஜார்கண்ட், அந்தமான் நிக்கோபார், ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தின் ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியுள்ள திருத்தந்தை, இவ்வியாழன் காலை எட்டு இந்திய திருச்சபைத் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ, துணை ஆயர் வினய் கண்டுல்னா ஆகியோர் முதலில் திருத்தந்தையை தனியாகச் சந்தித்த பின்,  பீகாரின் பாட்னா பேராயர் வில்லியம் டி சூஸா, ஜார்கண்டின் டால்டன்கஞ்ச் ஆயர் கபிரியேல் குஜூர், தும்கா ஆயர் ஜூலியஸ் மராண்டி, கும்லா ஆயர் பால் அலோய்ஸ் லாக்ரா, ஹசாரிபக் ஆயர் சார்ல்ஸ் சொரெங் மற்றும் ஜம்ஷெட்பூர் ஆயர் ஃபெலிக்ஸ் டோப்போ ஆகியோரும் திருத்தந்தையை சந்தித்து உரையாடினர்.

2.  உரோமை கார்மல் சபையின் பாப்பிறை இறையியல் துறைக்கான திருத்தந்தையின் உரை.

மே 19,2011.  இறைவனுடன் நெருக்கமாக நடைபயில விரும்புவோருக்கு மட்டுமல்ல, தாங்கள் பெற்ற திருமுழுக்கிற்கான பொறுப்புணர்வுடன் செயல்படும் அனவருக்கும் ஆன்மீகத்தின் பாதையைக் காட்டும் பணியை திருச்சபைத் தொடர்ந்து ஆற்றி வருவதாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
காலணிகள் அணியா கார்மல் சபையினரால் உரோம் நகரில் தெரசியானம் எனும் பெயரில் பாப்பிறை இறையியல் கல்வி நிறுவனம் துவக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவையொட்டி, அந்நிறுவனத்தின் பேராசிரியர்கள், மாணவ‌ப் பிரதிநிதிகள் என ஏறத்தாழ 115 பேரை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, மனித இன ஆராய்ச்சியின் பின்னணியில் கிறிஸ்தவ ஆன்மீகம் குறித்த கல்வி, இன்றையச் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என கூறினார். கார்மல் சபையினரின் முக்கிய புனிதையாகிய அவிலா தெரசாவின் எடுத்துக்காட்டுக்களையும் மேற்கோள்காட்டிப் பேசிய திருத்தந்தை, இறைஅன்பிற்கு பாராமுகமாய் நம்மால் எங்கனம் இருக்க முடியும் என அப்புனிதை இன்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார் எனவும் தெரிவித்தார்.
கிறிஸ்துவின் மறையுண்மைகள் குறித்தான அறிவை மேலும் பெருக்கிக்கொள்ள வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை இக்கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் அதே வேளை, நமக்காக உயிரைக் கையளித்த இயேசுவின் அன்பு குறித்த சிந்தனை இந்த இறையியல் கல்வி காலத்தில் மாணவர்களுக்குள் மேலோங்கி நிற்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் பாப்பிறை.

32012 உலக அமைதி தினத்திற்கான தலைப்பு,  'நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கற்பித்தல்'

மே 19,2011.  வரும் ஜனவரி முதல் தேதி அகில உலக திருச்சபையில் கொண்டாடப்படவிருக்கும் உலக அமைதி தினத்திற்கென 'நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கற்பித்தல்' என்பதை தலைப்பாக எடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2012ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி சிறப்பிக்கப்பட உள்ள 45வது உலக அமைதி தினத்திற்கென திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள இத்தலைப்பு, பொதுநலனுக்காக உழைப்பதிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பெறவல்ல நீதியும் அமைதியும் நிறைந்த சமூக ஒழுங்கை உறுதி செய்வதிலும் இளையோரின் முக்கிய பங்கை வலியுறுத்துவதாக இருக்கும் என்கிறது திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவை வெளியிட்ட அறிக்கை.
வருங்காலச் சமூகம் சுதந்திரமாகவும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவதற்கு ஏதுவான புதியதோர் உலகைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் சூழல்களை உருவாக்கித் தரவேண்டியது இன்றைய தலைமுறையின் கடமையாகிறது எனவும் கூறுகிறது இவ்வறிக்கை.
இளையோரை  வசந்த கால நம்பிக்கைகளின் அடையாளமாக திருச்சபை பார்ப்பதாகவும், அவர்களுக்கான உண்மை, சுதந்திரம், அன்பு, நீதி போன்றவைகள் குறித்த ஆழமான விழிப்புணர்வை வழங்கவல்ல சகோதரத்துவ அன்புடன் கூடிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய அனைவரின் கடமையையும் வலியுறுத்தி உள்ளது நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவை.

4.  ஜப்பானில் ஒருமைப்பாட்டின் சுனாமி காணப்படுவதாக உரைக்கிறார் கர்தினால் சாரா.

மே 19,2011.  கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானில் 14,000 பேரின் உயிர்களை பலிவாங்கிய  நில அதிர்ச்சி மற்றும் சுனாமியின் பாதிப்புகளைத் தொடர்ந்து தற்போது அந்நாட்டில் ஒருமைப்பாட்டு உதவிகளின் சுனாமியைக் காணமுடிகிறது என்றார் கர்தினால் ராபர்ட் சாரா.
ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட திருத்தந்தையின் சார்பில் சென்ற திருப்பீடத்தின் 'கோர் ஊனும்' உதவி அமைப்பின் தலைவர் கர்தினால் சாரா, சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் மூலம் சிறப்பான பணிகளை இம்மக்களிடையே திருச்சபை ஆற்றி வருகின்றது என்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுள் 10,000க்கும் மேற்பட்டோருக்கு ஜப்பான் காரித்தாஸ் அமைப்பு, உணவு, போர்வைகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களை அண்மை வாரங்களில் வழங்கி வருவதாகவும் மேலும் கூறினார் கர்தினால் சாரா.

5.  அமெரிக்க கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் சீனப்பொருட்களுக்கு தடை

மே 18, 2011. தொழிற்சங்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட சீனாவில் அனுமதி மறுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டுப் பொருட்களைத் தன் வளாகத்திற்குள் விற்பனைச் செய்ய தடை விதித்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டின் நோத்ருதாம் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்.
சீனாவில் தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தத் தடைகளை முன்வைப்பதாக அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சீனாவின் மனித உரிமை நிலைகள் குறித்து தொடர்ந்து குற்றஞ்சாட்டிவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு செனட் அவை அங்கத்தினர்கள் சிலர், இந்தக் கத்தோலிக்கப் பலகலைக்கழகத்தின் நிலைப்பாட்டிற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
நோத்ருதாம் பலகலைக்கழகத்தின் இந்த நிலைப்பாடு மிகவும் முக்கியமானது என தன் பாராட்டுதல்களை வெளியிட்ட விர்ஜீனியாவிற்கானப் பிரதிநிதி ஃப்ராங்க் ஊல்ஃப்இத்தகையத் தடைகளை விர்ஜீனியா மாநிலத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அமுல்படுத்தவேண்டும் என வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

6.  போர்குற்றம் குறித்து விசாரணை தேவை - இந்தியா

மே 19,2011. இலங்கைப்போரின் இறுதி கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை மீறல் புகார் தொடர்பான சாட்சிகள் இருந்தால், அது இலங்கை சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை இறுதிகட்ட போர் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலரால் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியான நிலையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்ளிட்ட பலரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
திங்கள்கிழமையன்று இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நடத்திய பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இருதரப்பு உறவுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாய் நாடு திரும்ப விரும்புவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, சுமார் 60 ஆயிரம் அகதிகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், நிலைமை சீரடைந்துவிட்ட நிலையில், பெரும்பாலானவர்கள் இலங்கை திரும்ப விரும்புவதாகவும் பீரீஸ் தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment