1. திருத்தந்தை: அன்பின் ஐக்கியத்தில் ஆணும் பெண்ணும் இணையும்போது, மனித வாழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது
2. இஸ்பெயின் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை தந்தி மூலம் அனுப்பிய அனுதாபச் செய்தி
3. பாப்பிறை அறிவியல் கழகம் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை
4. பாப்பிறை அருள்பணி கழகங்களின் ஆண்டு கூட்டத்தில் பேராயர் Vacchelliயின் செய்தி
5. அகில உலக குடும்ப நாளையொட்டி சிங்கப்பூர் பேராயரின் செய்தி
6. சீனாவின் Sichuan பகுதி நிலநடுக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நினைவுச்சடங்கு
7. நிலநடுக்கம், சுனாமி இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஜப்பான் காரித்தாஸ் அமைப்பு தொடர்ந்து வரும் பணிகள்
8. மியான்மாரில் சமய சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்ச்சி
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை: அன்பின் ஐக்கியத்தில் ஆணும் பெண்ணும் இணையும்போது, மனித வாழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது
மே 13,2011. திருமணம் மற்றும் குடும்பம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பெயரிலான திருப்பீட நிறுவனத்தின் அங்கத்தினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தப் பாப்பிறை 16ம் பெனடிக்ட், திருமண உறவுகளின் நோக்கம் குறித்து எடுத்தியம்பினார்.
30 ஆண்டுகளுக்கு முன்னால் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், குடும்பங்களுக்கான திருப்பீட அவையையும், தன் பெயரிலான திருப்பீட நிறுவனத்தையும் ஒரே நேரத்தில் துவக்கி வைத்ததை நினைவுகூர்ந்த பாப்பிறை, 'மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால், ஆவிக்குரிய உடலும் உண்டு' என்ற தூய பவுலின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.
ஓவியர் மிக்கேலாஞ்சலோ சிஸ்டைன் சிற்றாலயத்தில் வரைந்த ஓவியங்களில் நிர்வாண நிலையில் மனிதர்கள் வரையப்பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு அன்றைய திருத்தந்தை வழங்கிய பதிலை மேற்கோள் காட்டிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஒளியாலும் அழகாலும் வாழ்வாலும் உடுத்தப்பட்டிருக்கும் நம் உடல், ஒரு மறையுண்மையை மறைத்து நிற்கிறது என்றார்.
அன்பின் ஐக்கியத்தில் ஆணும் பெண்ணும் இணையும்போது, அங்கு மனித வாழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது; கற்பு எனும் புண்ணியத்திற்கு புது அர்த்தம் கிட்டுகிறது என மேலும் கூறினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
2. இஸ்பெயின் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை தந்தி மூலம் அனுப்பிய அனுதாபச் செய்தி
மே 13,2011. இஸ்பெயின் நாட்டின் லோர்கா எனும் நகரில் இப்புதன் மாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த நிலநடுக்கத்தையொட்டி, திருத்தந்தையின் அனுதாபங்களையும், செபங்களையும் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே CARTAJENA ஆயர் ஹோசே மானுவேலுக்கு ஒரு தந்தியின் மூலம் இவ்வியாழனன்று அனுப்பியுள்ளார்.
இவ்வியற்கைப் பேரிடரால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் தன் செபங்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, அங்கு பணிகளை மேற்கொண்டுள்ள பலருக்கும் தன் நன்றியையும், செபங்களையும் கூறியுள்ளார்.
இப்புதன் மாலை 5.2 ரிக்டர் அளவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130 பேர் காயமடைந்துள்ளனர். லோர்கா நகரில் 20000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.
இஸ்பெயின் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இத்தனை பெரிய பாதிப்புக்களை உருவாக்கிய நில நடுக்கம் ஏற்பட்டதில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.
3. பாப்பிறை அறிவியல் கழகம் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை
மே 13,2011. துரித கதியில் செல்லும் அறிவியல் முன்னேற்றங்களால் பனிப்பாறைகள் உருகி வருவதும், பிற சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்படுவதும் மனிதகுலத்தின் மேல் பெரும் விளைவுகளை உருவாக்கும் என்று வத்திகான் அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
உலகின் மிகப் பழமையான அறிவியல் கழகங்களில் ஒன்றான பாப்பிறை அறிவியல் கழகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், மறுபடியும் சீரமைக்க முடியாத மாற்றங்களை மனித குலம் சுற்றுச்சூழல் மீது உருவாக்கி வருவதைக் குறித்த ஓர் எச்சரிக்கையை அளித்துள்ளது.
இவ்வுலகில் நாம் நீதியையும், அமைதியையும் விரும்பினால், நாம் வாழும் இப்பூமியைக் காப்பதில் முதல் கவனம் செலுத்த வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2010ம் ஆண்டிற்கான உலக அமைதி நாள் செய்தியில் கூறியிருந்த எண்ணங்களை இவ்வறிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மனிதகுலம் பயன்படுத்தும் பல்வேறு கருவிகளிலிருந்து வெளியாகும் கரியமல வாயுவின் (கார்பன் டை ஆக்சைடின்) அளவைக் குறைப்பது, காடுகளை அழிப்பதை நிறுத்துவது, மறுபடியும் காடுகளை உருவாக்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால், சுற்றுச் சூழலையும், மனித குலத்தையும் நம்மால் காக்க முடியும் என்று பாப்பிறை அறிவியல் கழகம் தன் பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.
4. பாப்பிறை அருள்பணி கழகங்களின் ஆண்டு கூட்டத்தில் பேராயர் Vacchelliயின் செய்தி
மே 13,2011. இறைவனின் அருட்பணிகளில் ஈடுபடும்போது, நாம் தூய ஆவியாரின் கரங்களாய் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோமே தவிர, இப்பணிகளின் நாயகர்களாய் நாம் விளங்குவதற்கு அல்ல என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்திங்கள் முதல் வெள்ளி வரை உரோமையில் நடைபெற்ற பாப்பிறை அருள்பணி கழகங்களின் ஆண்டு கூட்டத்தில் பேசிய நற்செய்தி பணிக்கான திருப்பீட பேராயத்தின் துணைச் செயலரான பேராயர் Piergiuseppe Vacchelli இவ்வாறு கூறினார்.
உலகின் பல நாடுகளில் கிறிஸ்தவர்களாய் வாழ்வதே ஒரு பெரும் சவாலாக மாறிவரும் நமது இன்றைய உலகில், நற்செய்திப் பணியை இன்னும் தீவிரப்படுத்தவும், துயருறும் நம் கிறிஸ்தவ மக்களுடன் ஒன்றித்திருக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று பேராயர் Vacchelli கூறினார்.
அருட்பணியாளர்களை உருவாக்கும் குருத்துவ இல்லங்களுக்கு விசுவாசிகள் எவ்விதம் உதவிகள் செய்ய இயலும் என்றும் பாப்பிறை அருள்பணி கழகங்களின் ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
5. அகில உலக குடும்ப நாளையொட்டி சிங்கப்பூர் பேராயரின் செய்தி
மே 13,2011. ஒவ்வொரு குடும்பத்திலும் ஆழமான உறவுகளை உருவாக்க நேரம் ஒதுக்கப்பட வேண்டுமென்று சிங்கப்பூர் பேராயர் நிக்கோலஸ் சியா கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 15ம் தேதியை அகில உலக குடும்ப நாள் என ஐ.நா. அறிவித்துள்ளது. இஞ்ஞாயிறன்று உலகெங்கும் கொண்டாடப்படும் குடும்ப நாளையொட்டி, சிங்கப்பூர் பேராயர் தன் மக்களுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் குடும்ப உறவுகள் குறித்த இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அலுவலகத்தில் அதிக நேரம் பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செலவிடப்படும் நேரம் என்று ஒரு நாளின் பெரும் பகுதி கழிவதால், குடும்பத்தினரிடையே உறவை வளர்க்கும் நேரம் குறைந்து வருகிறதென்ற கவலையை, பேராயர் தன் செய்தியில் வெளியிட்டார்.
இல்லங்களிலும் அலுவலகத்திலும் கருவிகளோடு கொள்ளும் தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பிற மனிதர்களுடன் நாம் கொள்ளும் உறவும் தொடர்பும் குறைந்து வருகிறதென்று பேராயர் சியா சுட்டிக் காட்டினார்.
குடும்ப உறவுகள் வலுவற்றுப் போகும்போது, இளையோரிடையே மது, போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளதென்று கூறிய பேராயர், வாரத்தில் மூன்று நாட்களாகிலும் குடும்பமாய் கூடி வந்து இரவு உணவு அருந்துவது நல்லதொரு முயற்சியாக இருக்கும் என்று தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
6. சீனாவின் Sichuan பகுதி நிலநடுக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நினைவுச்சடங்கு
மே 13,2011. சீனாவின் Sichuan பகுதியில் 2008ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவான இவ்வியாழனன்று, சீன அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு நினைவுச்சடங்கில் அப்பகுதியின் கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டனர்.
ரிக்டர் அளவில் 8 மதிப்புடைய இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியான Beichuan என்ற இடத்தில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலியிலும், பிற செபங்களிலும் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
2008ம் ஆண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 68636 பேர் இறந்தனர்; 17516 பேர் காணமல் போயினர்; மற்றும் 360000 காயமடைந்தனர்.
மதியம் 2.28 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் Chengdu மறைமாவட்டத்தில் உள்ள 22 கோவில்கள் சேதமடைந்துள்ளன என்றும், இவைகளைக் கட்டியெழுப்ப நிதி உதவிகள் இல்லாததால், இக்கோவில்கள் இன்னும் பயன்பாட்டில் இல்லை என்றும் அருள்தந்தை Pan Hong'en கூறினார்.
மக்களின் பொது வாழ்வுக்கு கோவில்கள் ஒரு முக்கிய தளமாக இருப்பதால், அவை இல்லாதபோது, மக்களை ஒருங்கிணைத்துச் செயல்படுவதும் தடை படுகிறதென்று அருள்தந்தை Hong'en மேலும் கூறினார்.
சீனாவைப் பொறுத்த வரை, கட்டிட வடிவில் கோவில்களை எழுப்பும் அதே வேளையில், மக்களை மீண்டும் ஆன்மீகத்திலும் கட்டியெழுப்பும் அவசியம் உள்ளதென்று அருள்தந்தை Zhang Yiquiang கூறினார்.
7. நிலநடுக்கம், சுனாமி இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஜப்பான் காரித்தாஸ் அமைப்பு தொடர்ந்து வரும் பணிகள்
மே 13,2011. மார்ச் 11ம் தேதி ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மீட்புப் பணியைத் தொடர்வதற்கு ஜப்பான் காரித்தாஸ் அமைப்பு ஜப்பானிலிருந்தும் இன்னும் பிற நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் இளையோரை நம்பியுள்ளது.
Kamaishi என்ற இடத்தில் உள்ள கோவிலில் தங்கி, சுற்றுப் புறத்தில் பணிகளை மேற்கொண்டுள்ள இளையோர், இன்னும் அப்பகுதியைச் சுத்தம் செய்வதிலேயே பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர் என்று UCAN செய்தி கூறுகிறது.
பணி நேரங்கள் போக, மீதி நேரங்களில் இவ்விளையோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது ஒருவரை ஒருவர் இன்னும் அதிகம் புரிந்து கொள்வதற்கும், அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனுபவங்களை வளர்த்துக் கொள்வதற்கும் உதவுகின்றன என்று இவ்விளையோர் UCANக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
காரித்தாஸ் போன்ற பிறரன்பு அமைப்பில் பாதுகாப்பான உணர்வுடன் பணிகளை மேற்கொள்ள முடிகிறதென்றும், பிறருக்கு உதவிகள் செய்வதில் உள்ள மகிழ்வை உணர முடிகிறதென்றும் காரித்தாஸ் தன்னார்வத் தொண்டர்கள் கூறினர்.
8. மியான்மாரில் சமய சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்ச்சி
மே 13,2011. மியான்மாரில் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் அதிகம் கிடைக்கக்கூடும் என்று தலத் திருச்சபை தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.
மியான்மாரில் நிலவி வந்த இராணுவ ஆட்சி விலகி, கடந்த மார்ச் மாதம் மக்களாட்சி மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதால், சமய சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அங்குள்ள குருக்கள் இப்புதனன்று வெளிப்படுத்தினர்.
கிறிஸ்தவக் கோவில்கள் கட்டுவதற்கும், பொது இடங்களில் கிறிஸ்தவ விழாக்கள் கொண்டாடுவதற்கும் தடைகள் இருந்தாலும், வழிபாட்டுத் தலங்களில் தங்கள் விசுவாசத்தை வளர்க்கும் முயற்சிகளை தற்போதைய அரசு தடை செய்யாமல் இருப்பதே ஒரு பெரும் முன்னேற்றம் என்று அருள்பணியாளர்கள் கூறினர்.
அகில உலக மதச்சுதந்திரம் குறித்த அமெரிக்கக் குழுவொன்று அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், எகிப்து, பாகிஸ்தான், சீனா, வியட்நாம், சவுதி அரேபியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை மதச்சுதந்திரம் மிகவும் குறைந்துள்ள நாடுகளாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment