Friday, 6 May 2011

Catholic News - hottest and latest - 02 May 2011

1.   திருத்தந்தை 16ம் பெனடிக்ட்,  போலந்து அரசுத்தலைவர் சந்திப்பு

2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஒவ்வொரு மனிதனின் மாண்பு பாதுகாக்கப்படுவதற்கு உண்மையிலேயே உழைத்தவர் - திருப்பீடச் செயலர்

3.  ஒவ்வொரு நிகழ்வும் பகமையை அல்ல அமைதியை வளர்ப்பதை நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்.

4.   பின் லேடனின் மரணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படும் அபாயம்

5.  லிபியாவின் அமைதிக்காக அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையை வேண்டுவதாக அறிவித்தார் அந்நாட்டு ஆயர்.

6.  2030ல் இந்தியாவில் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும் என்கிறது சர்வதேச ஆய்வு ஒன்று

7.  இந்தியாவில் கிராம பகுதி மக்கள் தரும் இலஞ்சம் 471 கோடி ரூபாய்.

8.   கர்தினால் அகுஸ்தின் கார்சியா காஸ்கோ இ விச்செந்தே இறைபதம் அடைந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------
1.   திருத்தந்தை 16ம் பெனடிக்ட்,  போலந்து அரசுத்தலைவர் சந்திப்பு

மே02,2011. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டது குறித்து இத்திங்கள் காலை திருத்தந்தை 16ம் பெனடிக்டை சந்தித்து போலந்து நாட்டின் சார்பாகத் தனது நன்றியைத் தெரிவித்தார் போலந்து அரசுத்தலைவர் Bronisław Komorowski.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற பெருவிழாத் திருப்பலியில் கலந்து கொண்ட போலந்து அரசுத்தலைவர் Komorowski, நீண்ட காலம் பாப்பிறைப் பணி செய்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், போலந்துக்கு மட்டுமல்லாமல், இந்த உலகம் முழுவதிற்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கிறார் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என்றும் கூறினார்.
மனித மாண்பு, மனிதனின் தவிக்க முடியாத உரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான அவரது நடவடிக்கைகளும் அவரது அதிகாரப்பூர்வ ஆசிரிய வெளியீடுகளும் இன்றையக் காலத்திற்கு மட்டுமல்லாமல், வருங்காலத்திற்கும் உகந்தனவாக இருக்கின்றன என்றும் போலந்து அரசுத்தலைவர் கூறினார். 
இஞ்ஞாயிறு திருப்பலியில் சுமார் 15 இலட்சம் பேர் கலந்து கொண்டனர்.

2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஒவ்வொரு மனிதனின் மாண்பு பாதுகாக்கப்படுவதற்கு உண்மையிலேயே உழைத்தவர் - திருப்பீடச் செயலர்

மே02,2011. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், விசுவாச மனிதர், கடவுள் மனிதர், கடவுள் மனிதராகிய இவரது வாழ்க்கை முழுவதும் இடைவிடாத செபத்தால் அமைந்திருந்தது, அச்செபத்தில் இப்பூமியின் ஒவ்வொரு மனிதனையும் நினைவுகூர்ந்தார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டதையொட்டி இத்திங்கள் காலை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூட்டுத் திருப்பலி நிகழ்த்திய கர்தினால் பெர்த்தோனே, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஒவ்வொரு மனிதனின் மாண்பு பாதுகாக்கப்படுவதற்கு உண்மையிலேயே உழைத்தவர் என்றார்.
முப்பது கர்தினால்கள், சுமார் 800 அருட்பணியாளர்கள் உட்பட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் விசுவாசிகள் கலந்து கொண்ட இந்நன்றித் திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அரசியல் மற்றும் சமூகக் கருத்துக் கோட்பாடுகளுக்காக மட்டும் போராடவில்லை, மாறாக, இனம், நிறம், மதம், மொழி என்ற பாகுபாடின்றி ஒவ்வொரு மனிதனின் மாண்பு காக்கப்படுவதற்காகப் போராடியவர், இவர் மற்ற மனிதரை எனது மறுபக்கம் என்று எழுதியிருப்பதிலிருந்து இது தெரிகின்றது என்றார் அவர்.
நாம் கிறிஸ்தவ விசுவாசத்தை எவ்வாறு வாழ வேண்டும், கிறிஸ்தவ விழுமியங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தவர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் என்றும் கர்தினால் பெர்த்தோனே புகழ்ந்தார்.
இத்தகைய சாட்சிய மனிதரைக் கடவுள் நமக்கு வழங்கியதற்காக இன்று இறைவனுக்கு நன்றி சொல்லுவோம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், எக்காலத்திலும் இருந்ததைவிட அவர் காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு இருக்கும் நன்னெறி சார்ந்த அதிகாரத்தை உறுதிப்படுத்தினார் என்றும் இரண்டாயிரமாம் ஜூபிலி ஆண்டு நிகழ்ச்சிகளின் வழியாக புதிய நற்செய்திப்பணிக்கான உந்துதலை அளித்தார் என்றும் பாராட்டினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே

3.  ஒவ்வொரு நிகழ்வும் பகமையை அல்ல அமைதியை வளர்ப்பதை நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்.

மே 02, 2011. பிறரின் மரணம் குறித்து கிறிஸ்தவர்கள் மகிழ்வதில்லை எனினும் மரணம் என்பது நாம் இறைவன் மற்றும் மனிதர் முன்னிலையில் நமக்கிருக்கும் பொறுப்புணர்வைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்றார் திருப்பீடப் பேச்சாளர் குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
அல் கொய்தா இயக்கத் தலைவர் ஓசாமா பின் லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருப்பீடப்பேச்சாளர், மக்களிடையே பகைமையையும் பிரிவினைகளையும் பரப்பியதிலும், அதன் வழி எண்ணற்ற மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்ததிலும், இதற்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்தியதிலும் பின்லேடனின் இடம் குறித்து அனைவருக்கும் தெரிந்த ஒன்றே எனவும் கூறினார்.
பிறரின் மரணத்தில் கிறிஸ்தவர்கள் மகிழ்வதில்லை என்ற இயேசு சபை குரு லொம்பார்தி, உலகின் ஒவ்வொரு நிகழ்வும் பகைமையை வளர்ப்பதற்கான நோக்கம் கொண்டிராமல் அமைதியை ஊக்குவிப்பதற்காக இருக்க வேண்டும் என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையையும் சுட்டிக்காட்டினார். 

4.   பின் லேடனின் மரணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படும் அபாயம்

மே 02, 2011. இதற்கிடையே, பின் லேடனின் மரணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக‌க் கவலையை வெளியிட்டுள்ளார் பாகிஸ்தான் பேராயர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டைத் தாக்க முடியாதவர்கள் தங்கள் பழிவாங்கும் எண்ணத்தை கிறிஸ்தவர்கள் மீது திருப்புவ‌தே நடந்து கொண்டிருக்கிறது என்ற லாகூரின் முன்னாள் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா, கிறிஸ்தவர்களுக்குப் போதிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார்.
பின் லேடனின் மரணம் மூலம், பாகிஸ்தானில் தீவிரவாதப் போக்குகளின் அளவு குறையும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் அவர்.
இஸ்லாமிய புரட்சியின் தலைவராகப் பலரால் நோக்கப்பட்ட பின் லேடன், தீவிரவாதத்தின் முன்மாதிரிகையாகவும் உலக அமைதிக்கான அச்சுறுத்தலாகவும் மாறியது குறித்த கவலையை வெளியிட்ட பேராயர், இம்மரணத்திற்குப்பின் தீவிரவாதத்தின் பொய்யான நம்பிக்கைகள் களையப்படும் என்ற கருத்தையும் தெரிவித்தார்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி நியூயார்க்கின் உலக வர்த்தக மையம் தாக்கப்படுவ‌தற்கு மூளையாகச் செயல்பட்ட பின் லேடன், மே ஒன்றாம் தேதி பாகிஸ்தானில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் துருப்புகளால் கொல்லப்பட்டார்.

5.  லிபியாவின் அமைதிக்காக அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையை வேண்டுவதாக அறிவித்தார் அந்நாட்டு ஆயர்.

மே 02, 2011. லிபியாவில் பல இடங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியும், பல அப்பாவி மக்கள் உயிரிழந்தும் வரும் நிலையில், நாட்டின் அமைதிக்காக புதிய அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையை வேண்டி செபிப்பதாக கூறினார் தலைநகர் டிரிப்பொலியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மர்த்தினெல்லி.
பல நகர்களில் பொதுமக்கள் பெருமளவில் தாக்கப்படுகிறார்கள், அவர்களைத் தாக்குவது யார் எனத் தெளிவாகத் தெரியவில்லை என்ற ஆயர், விரைவில் மருத்துவமனைகளுக்குச் சென்று காயமுற்றவர்களை தான் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்களைப் பாதுகாப்பதற்கெனக் கூறி, கூட்டு நாடுகள் நடத்தும் தாக்குதலில் பொது மக்களும் பெருமளவில் உயிரிழந்துள்ளார்கள் எனக் குற்றம் சாட்டிய ஆயர் மர்த்தினெல்லி, இடைக்காலப் போர் நிறுத்தமே தற்போதைய உடனடித் தேவை என்றார்.
1997ல் லிபியாவுடன் வத்திக்கானின் அரசியல் உறவை உருவாக்கிய திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையை நாடுவதன் மூலம் லிபியாவில் அமைதியைக் கொணர முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டர் ஆயர்.

6.  2030ல் இந்தியாவில் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும் என்கிறது சர்வதேச ஆய்வு ஒன்று

மே 02, 2011. இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்' என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
"உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் உள்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்தியா தண்ணீர்ப் பற்றாக்குறையை சந்திக்கும். இது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்று இந்நிறுவனத்தின் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
2030ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை, 120 கோடியில் இருந்து 160 கோடி அல்லது 170 கோடியாக அதிகரிக்கும்போது, தண்ணீர்த் தேவையும்  இருமடங்கு  அதிகரிக்க உள்ள நிலையில், தேவையில் பாதியளவு பற்றாக்குறையாக இருக்கும்' என்றும் கூறப்பட்டுள்ளது.
"இந்தியாவின் தட்பவெப்பம் ஒன்று முதல் இரண்டு டிகிரி அதிகரிக்கும்' என்றும் அறிவியலாளர் தெரிவித்துள்ளனர்.

7.  இந்தியாவில் கிராம பகுதி மக்கள் தரும் இலஞ்சம் 471 கோடி ரூபாய்.

மே 02, 2011. இந்தியாவில் கிராமப் பகுதி மக்கள் குடும்ப அட்டை, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளைப் பெற, கடந்தாண்டில் 471 கோடியே 80 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக கொடுத்துள்ளனர் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
"இந்திய ஊழல் ஆய்வு 2010' என்ற தலைப்பில், மீடியா ஆய்வு மையம், 12 மாநிலங்களில், 9,960 வீடுகளில், இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சராசரியாக ஒரு குடும்பத்தில் இருந்து வழங்கப்பட்ட இலஞ்சம் 164 ரூபாய் என்றும், அசாம், குஜராத், கேரளா, இமாச்சலபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்திற்கு 2010 - 2011ம் ஆண்டில், செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும் போது, இந்த 471 கோடியே 80 இலட்சம் ரூபாய் அதற்குச் சமமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்படி வழங்கபட்ட இலஞ்சத்தில், பொதுப்பணித் துறைக்கு 156 கோடியே 80 இலட்சம் ரூபாயும், தண்ணீர் இணைப்பு மற்றும் சேவைப் பணிகளுக்கு 83 கோடியே 30 இலட்சம் ரூபாயும், மருத்துவமனை சேவை பெற 130 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2005ம் ஆண்டில் இருந்து இலஞ்சம் தருவது நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இலஞ்சப் பட்டியலில் சத்திஸ்கர், பீகார் ஆகிய மாநிலங்கள் முதல் இடத்தில் உள்ளன.

8.   கர்தினால் அகுஸ்தின் கார்சியா காஸ்கோ இ விச்செந்தே இறைபதம் அடைந்தார்.

மே 02, 2011. இஸ்பெயின் கர்தினால் அகுஸ்தின் கர்சியா காஸ்கோ இ விசெந்தே இஞ்ஞாயிறன்று  உரோம் நகரில் மாரடைப்பால் காலமானதையொட்டி, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற்தந்தியை அந்நாட்டின் வலென்சியா உயர் மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
க‌ர்தினால் கார்சியா காஸ்கோவின் உறவினர்களுக்கும், அவர் பேராய‌ராக‌ப் ப‌ணியாற்றிய இந்த‌ உய‌ர் ம‌றைமாவ‌ட்ட‌த்தின் விசுவாசிக‌ளுக்கும் த‌ல‌த்திருச்ச‌பை அதிகாரிக‌ளுக்கும் த‌ன் ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ளை வெளியிட்டுள்ள‌ திருத்த‌ந்தை, ம‌றைந்த‌ க‌ர்தினாலின் மேய்ப்புப் ப‌ணிக‌ளை, குறிப்பாக‌ குடும்ப‌ங்க‌ளுக்கான‌ சேவைக‌ளைப் பாராட்டியுள்ளார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் அருளாளர் பட்டமளிப்பு விழாத் திருப்பலியில் கலந்துகொள்ள உரோம் நகர் வந்திருந்த கர்தினால் கர்சியா காஸ்கோ, சனிக்கிழமையின் திருவிழிப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு திரும்பியபின் ஞாயிறு காலை இறைபதம் அடைந்தார்.
1931ம் ஆண்டு இஸ்பெயினில் பிறந்த இவர், 1992ம் ஆண்டு அந்நாட்டின் வலென்சியாவின் பேராயராக நியமிக்கப்பட்டார். 2007ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
கர்தினால் கர்சியா காஸ்கோவின் மரணத்துடன் திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 198 ஆகக் குறைந்துள்ளது. இதில் 115 பேரே 80 வயதிற்குட்பட்டவர்கள்.

No comments:

Post a Comment