1. திருத்தந்தை : சமய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுவதற்குத் திருப்பீடம் எல்லா நாடுகளுக்கும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றது
2. சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபச் செய்தி
3. உலக இளையோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, அருளாளர் இரண்டாம் ஜான்பால் இஸ்பெயின் நாட்டு இளையோரைத் தூண்டுவார் - பேராயர் Ignacio Munilla Aguirre
4. அருளாளர் இரண்டாம் ஜான்பால் பெயரால் பிலிப்பின்ஸில் பங்குத்தளம் அமைக்கும் முயற்சி
5. லிபியாவில் பிரச்சனைகளைத் தீர்க்க வன்முறையைப் பயன்படுத்துவதை எந்நாளும் அங்கீகரிக்க மாட்டோம் - Comboni மறைபரப்புப் பணியாளர்கள்
6. ஸ்பெயின் நாட்டில் திரு நற்கருணையை மையப்படுத்திய 1000மாம் ஆண்டு ஜுபிலி கொண்டாட்டங்களின் நிறைவு
7. இஸ்ரேல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகளில் குழந்தைகளின் அவல நிலை - ஐ.நா.உயர் அதிகாரி
8. 21வது நூற்றாண்டின் இறுதியில் மக்கள்தொகை ஆயிரம் கோடியைத் தாண்டும் - ஐ.நா.அறிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை : சமய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுவதற்குத் திருப்பீடம் எல்லா நாடுகளுக்கும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றது
மே 04,2011. இக்காலத்திய கருத்துக் கோட்பாடுகளில் அடிப்படை மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும்வேளை, சமய சுதந்திரத்தையும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய சவாலை நாம் எதிர்நோக்குகிறோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் சமூக அறிவியல் கழகம் வத்திக்கானில் நடத்திய 17வது ஆண்டுக் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, மேற்கத்திய கிறிஸ்தவக் கலாச்சாரம் உலகில் சமய சுதந்திரத்திற்குப் பெரும் பங்கு ஆற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான சமய சுதந்திரம், மனிதன் தனது நிறைவை அடையவும் அதன்மூலம் சமுதாயத்தின் பொது நலனுக்குத் தனது பங்கை வழங்கவும் வழி செய்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறியது.
மனிதரின் அடிப்படை உரிமையான சமய சுதந்திரம் அங்கீகரிக்கப்படுவதற்கும் அது மதிக்கப்படுவதற்கும் திருப்பீடம் எல்லா நாடுகளுக்கும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் என்றும் அவரின் செய்தி கூறியது.
பெரும்பான்மை மதத்தவர் வாழும் ஒரு நாட்டில் சிறுபான்மையினர் அமைதியுடன் வாழவும், நாட்டின் பொது மற்றும் அரசியல் வாழ்வில் அவர்கள் முழுமையாகப் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுமாறும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வத்திக்கானில் இச்செவ்வாயன்று நிறைவடைந்த ஐந்து நாள் கூட்டம், “பன்மைத்தன்மை கொண்ட உலகில் உலகளாவிய உரிமைகள் : சமய சுதந்திரம்” என்ற தலைப்பில் நடைபெற்றது. திருத்தந்தையின் இச்செய்தி, இத்திருப்பீடக் கழகத் தலைவர் Mary Ann Glendon க்கு அனுப்பப்பட்டுள்ளது
2. சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபச் செய்தி
மே 04,2011. அண்மையில் சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அமெரிக்காவில் அலபாமா பகுதியில் ஏப்ரல் இறுதியில் வீசிய சூறாவளியால் 300 உயிர்கள் பலியாயின. அப்பகுதி பெரும் சேதங்களுக்கு உள்ளானது. இந்த இயற்கைப் பேரிடரைக் குறித்து திருத்தந்தையின் அனுதாபத்தை அலபாமா பேராயர் தாமஸ் ரோடிக்கு ஒரு தந்தி மூலம் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தோனே அனுப்பி வைத்தார்.
இந்த இயற்கைப் பேரிடரால் தங்கள் உறவுகளையும், வீடுகளையும் இழந்திருக்கும் மக்களுடன் தானும் செபத்தில் இணைந்திருப்பதாக திருத்தந்தை இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இப்பேரிடரைப் போக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அமைப்புக்கள், பிறர்நல அமைப்புக்கள் அனைத்திற்கும் இறைவனின் அருள் கிடைக்க தான் செபிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
1925ம் ஆண்டு அமெரிக்காவில் வீசிய சூறாவளியில் 695 இறந்தனர்; அதற்கு அடுத்தபடியாக, அண்மையில் வீசிய இந்தச் சூறாவளியே அதிக உயிர்களைப் பலி வாங்கியுள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
3. உலக இளையோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, அருளாளர் இரண்டாம் ஜான்பால் இஸ்பெயின் நாட்டு இளையோரைத் தூண்டுவார் - பேராயர் Ignacio Munilla Aguirre
மே 04,2011. இஸ்பெயினில் உள்ள இளையோர் அங்கு நடைபெறவுள்ள உலக இளையோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களைத் தூண்டுவார் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்தார் பேராயர் Ignacio Munilla Aguirre.
உலகின் பல நாடுகளிலிருந்தும் பல்லாயிரம் இளையோர் இந்த மாநாட்டைக் குறித்து அதிக ஆர்வம் கொண்டிருக்கும் அதே வேளையில், இஸ்பெயினில் உள்ள இளையோரிடையே ஆர்வம் குறைந்து காணப்படுகிறதென்று San Sebastian உயர்மறைமாவட்டப் பேராயர் Aguirre கூறினார்.
இஸ்பெயின் நாட்டு இளையோர் மத்தியில் மத சார்பற்ற நிலை, நுகர்வுக் கலாச்சாரம் ஆகியவை அதிகம் பரவியுள்ளதால் எந்த ஒரு மதத்தின் மீதும் பிடிப்பில்லாமல் அவர்கள் வாழ்கின்றனர் என்றும், இளையோர் மேல் அதிக ஆர்வம் காட்டிய அருளாளர் இரண்டாம் ஜான்பாலின் பரிந்துரையால் இவ்விளையோர் உலக இளையோர் மாநாட்டில் ஆர்வம் கொள்வர் என்றும் பேராயர் கூறினார்.
1986ம் ஆண்டு திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஜான்பால் இளையோருக்கென்று அளித்த ஒரு சிலுவை ஒவ்வொரு உலக இளையோர் மாநாட்டிற்கும் பயணம் செய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் மத்ரித் நகரில் நடைபெற உள்ள இளையோர் மாநாட்டிற்கென இச்சிலுவை தற்போது இஸ்பெயின் நாட்டை அடைந்துள்ளதால், இளையோரிடையே புதியதொரு உற்சாகம் பிறந்துள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
4. அருளாளர் இரண்டாம் ஜான்பால் பெயரால் பிலிப்பின்ஸில் பங்குத்தளம் அமைக்கும் முயற்சி
மே 04,2011. அருளாளர் இரண்டாம் ஜான்பால் 1981ம் ஆண்டு பிலிப்பின்ஸ் சென்றபோது திருப்பலி நிகழ்த்திய இடம் ஒரு நினைவுத் தலமாக இத்திங்களன்று துவக்கப்பட்டது. இதை விரைவில் ஒரு பங்குத்தளமாக மாற்றி அருளாளர் இரண்டாம் ஜான்பால் பெயரைச் சூட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சிகளை வரவேற்றுப் பேசிய Balanga ஆயர் Ruperto Santos, அருளாளர் இரண்டாம் ஜான்பால் திருப்பலி நிகழ்த்திய இடம் தற்போது அரசின் வசம் இருக்கின்றதென்றும், இந்த நிலம் தலத்திருச்சபைக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டால், அருளாளரின் பெயரால் பங்குத்தளம் ஆரம்பிக்க முடியும் என்றும் கூறினார்.
தலத் திருச்சபையின் இப்புனித முயற்சிகளுக்கு அரசு தடையாக இருக்காதென்று தான் நம்புவதாக அப்பகுதியின் மேற்பார்வையாளராகப் பணி புரியும் முன்னாள் கடற்படைத் தளபதி Amado Sanglay கூறினார்.
அருளாளர் ஜான்பால் 1981ல் திருப்பலி நிகழ்த்திய அந்த இடம், 'படகு மக்கள்' (Boat people) என்று வழங்கப்படும் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான வியட்நாம், கம்போடிய அகதிகளுக்கு பல ஆண்டுகள் தற்காலிகக் குடியிருப்பாகச் செயல்பட்டுள்ளதென்பதும், அவ்விடத்தில் இரண்டாம் ஜான்பால் அகதிகளுடன் திருப்பலி நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
5. லிபியாவில் பிரச்சனைகளைத் தீர்க்க வன்முறையைப் பயன்படுத்துவதை எந்நாளும் அங்கீகரிக்க மாட்டோம் - Comboni மறைபரப்புப் பணியாளர்கள்
மே 04,2011. பிரச்சனைகளைத் தீர்க்க வன்முறையைப் பயன்படுத்துவதை எந்நாளும் அங்கீகரிக்க மாட்டோம் என்று லிபியாவில் பணிபுரியும் ஒரு துறவற சபையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியின் Lake Garda என்ற இடத்தில் அண்மையில் கூடிவந்த Comboni மறைபரப்புப் பணியாளர்களின் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் அருட்பணி என்ற தலைப்பில் நடந்த இக்கருத்தரங்கில் பங்குபெற்ற Camboni மறைபரப்புப் பணியாளர்கள், வன்முறை வன்முறையையே பெற்றெடுக்க முடியும் என்றும், இவ்வன்முறைகளில் அப்பாவி பொதுமக்களே பெருமளவு பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.
மறைபரப்புப் பணியில் உள்ளவர்கள் என்ற கோணத்தில் பார்க்கும்போது, ஐரோப்பா தன்னைப் பற்றிய கவலைகளிலேயே மூழ்கியிராமல், உலகின் பல நாடுகளில் நடைபெறும் பிரச்சனைகளில் ஈடுபட முன்வர வேண்டுமென்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆப்ரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் நிலவும் பிரச்சனைகளின் எதிரொலியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக விழையும் மக்களை ஐரோப்பா மனிதாபிமானத்துடன் வரவேற்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
6. ஸ்பெயின் நாட்டில் திரு நற்கருணையை மையப்படுத்திய 1000மாம் ஆண்டு ஜுபிலி கொண்டாட்டங்களின் நிறைவு
மே 04,2011. ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள Ivorra என்ற ஒரு சிறு கிராமம் கடந்த ஞாயிறு மே மாதம் முதல் தேதியன்று தன் 1000மாம் ஆண்டு ஜுபிலி கொண்டாட்டங்களை நிறைவு செய்தது.
இக்கிராமத்தில் 1010ம் ஆண்டு திருநற்கருணையை மையப்படுத்திய ஒரு புதுமை நிகழ்ந்தது. அப்புதுமை நடந்த 1000மாம் ஆண்டு ஜுபிலி கொண்டாட்டங்களை வத்திக்கான் அனுமதியுடன் 2010ம் ஆண்டு மே மாதம் இக்கிராமம் ஆரம்பித்தது.
160 பேர் வாழும் Ivorra கிராமத்தில் இந்த ஜுபிலி ஆண்டில் 14000 மக்கள் வந்திருந்தனர் என்று பங்குத் தந்தை அருள்திரு Fermin Manteca கூறினார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அக்கிராமத்துப் பங்கில் பணி புரிந்த அருள்தந்தை Bernat Oliver இயேசுவின் அப்பரச பிரசன்னம் குறித்த சந்தேகங்களுடன் ஆற்றிய திருப்பலியில், பீடத்தில் வைக்கப்பட்டிருந்த திருக்கிண்ணத்தில் இருந்த திராட்சை இரசம் இரத்தமாக மாறி, கிண்ணத்திலிருந்து வழிந்து பீடத்துணியை இரத்தத்தில் தொய்த்ததைக் கண்ணுற்றார்.
இந்த நிகழ்ச்சி அப்பகுதியின் ஆயர் Ermengol வழியாக அப்போதையத் திருத்தந்தை 6 ம் Sergiusக்கு தெரிவிக்கப்பட்டது. திருத்தந்தையும் ஒரு பாப்பிறை சாசனம் வழியாக இந்தப் புதுமையை உலகறியச் செய்தார்.
ஒவ்வோர் ஆண்டும் உயிர்ப்புத் திருவிழாவுக்கு அடுத்ததாக வரும் பாஸ்கா காலத்து இரண்டாம் ஞாயிறு இந்தப் புதுமை விழா கொண்டாடப்படுகிறது.
7. இஸ்ரேல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகளில் குழந்தைகளின் அவல நிலை - ஐ.நா.உயர் அதிகாரி
மே 04,2011. இஸ்ரேல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகளில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐ.நா.உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்ரேல் இராணுவத்தால் 1335 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனியப் பகுதிகளுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதரான Richard Falk கூறினார்.
குழந்தைகளை இரவில் கைது செய்வது, சிறைப்படுத்தப்பட்டக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள், தகுந்த காரணம் இன்றி இஸ்ரேல் இராணுவம் ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்று பல்வேறு அநீதச் செயல்களால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர் என்று Richard Falk கூறினார்.
இஸ்ரேல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாதென்ற சட்டம் இருப்பதால், இக்குழந்தைகள் பயில்வதற்கு பள்ளிகள் இல்லாமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத அநீதி என்றும் Richard Falk வலியுறுத்தினார்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் இராணுவம் நீக்கப்படுவதற்கு உலக அரசுகள் இஸ்ரேல் அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென்று ஐ.நா.உயர் அதிகாரி Richard Falk இந்த அறிக்கையின் இறுதியில் விண்ணப்பித்துள்ளார்.
8. 21வது நூற்றாண்டின் இறுதியில் மக்கள்தொகை ஆயிரம் கோடியைத் தாண்டும் - ஐ.நா.அறிக்கை
மே 04,2011. உலக மக்கள்தொகை 2050ம் ஆண்டு 900 கோடியைத் தாண்டும் என்றும் 21வது நூற்றாண்டின் இறுதியில் ஆயிரம் கோடியைத் தாண்டும் என்றும் இச்செவ்வாய் வெளியிடப்பட்ட ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆப்ரிக்காவின் சகாராப் பகுதி நாடுகள், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளே மக்கள் தொகை அதிகமாவதற்குக் காரணமாக இருக்கும் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
தற்போது 700 கோடியை நெருங்கி வரும் உலக மக்கள்தொகை, இதே அளவில் உயர்ந்து வந்தால், 2023ம் ஆண்டு 800 கோடியையும், 2041ல் 900 கோடியையும் தாண்டும் என்றும், 2081ம் ஆண்டு 1000 கோடியைத் தாண்டும் மக்கள் தொகை, இந்நூற்றாண்டின் இறுதியில் 1010 கோடியை நெருங்கும் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும் அதே வேளையில், வாழ்வோரின் சராசரி வயது கூடி வருவதும் மக்கள் தொகை உயர்வதற்குக் காரணம் என்று ஐ.நா. மக்கள்தொகைப் பிரிவின் இயக்குனர் Hania Zlotnik கூறினார்.
இவ்வாண்டின் இறுதிக்குள் உலக மக்கள்தொகை 700 கோடியைத் தாண்டும் என்றும், மக்களின் வாழும் காலம் இப்போதுள்ள சராசரி நிலையான 68 வயதிலிருந்து, இந்நூற்றாண்டின் இறுதிக்குள் 81ஆக உயரும் என்றும் ஐ.நா. வெளியிட்ட இவ்வறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment