Saturday, 7 May 2011

Catholic News - hottest and latest - 06 May 2011

1. வத்திக்கான் நகரில் பணி செய்யும் சுவிஸ் கார்ட்ஸ்களுக்கு திருத்தந்தை பாராட்டு

2. திருத்தந்தை : கிறிஸ்தவத் திருவழிபாடு, உலகை மாற்றுவதற்கானப் பயணத்தில் நம்பிக்கையாக இருக்கின்றது

3. திருத்தந்தையின் வெனிஸ் நகருக்கானத் திருப்பயணம்

4. டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி : குண்டுவீச்சுத் தாக்குதல்கள் அறநெறிக்குப் புறம்பான செயல்கள் என்று சொல்லும் கடமையைக் கொண்டிருக்கிறேன்

5. தென் கொரிய ஆயர் : கருக்கலைப்பு, கொலைகளிலே மிக மோசமானது

6. 2008ல் இடம் பெற்ற கந்தமால் படுகொலைகள் : நியாயம் கேட்டு கிறிஸ்தவர்கள் தர்ணா

7. பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்

8. இரஷ்யாவில் 82 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்

----------------------------------------------------------------------------------------------------------------

1. வத்திக்கான் நகரில் பணி செய்யும் சுவிஸ் கார்ட்ஸ்களுக்கு திருத்தந்தை பாராட்டு

மே06,2011. சுவிஸ் கார்ட்ஸ்(Pontifical Swiss Guards) எனப்படும் திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள் வத்திக்கான் நகரத்தில் பணி செய்வதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது ஆன்மீக வாழ்க்கையை ஆழப்படுத்திக் கொள்ளுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
1527ம் ஆண்டு மே ஆறாம் தேதி பேரரசர் ஐந்தாம் சார்லஸின் படைகள் உரோமை நகரைச் சூறையாடிய போது திருத்தந்தை ஏழாம் கிளமென்ட்டைப் பாதுகாப்பதற்காக 147 சுவிஸ் நாட்டுப் படைவீரர்கள் தங்கள் உயிரை இழந்தனர். இதன் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மே ஆறாம் தேதி வத்திக்கானில் புதிய சுவிஸ் கார்ட்ஸ் சேர்க்கப்படுகிறார்கள். இவ்வெள்ளிக்கிழமை 34 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். இந்தப் புதியவர்கள், இன்னும் ஏற்கனவே பணியில் இருக்கும் மெய்க்காப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை அக்காலத்தில் உரோம் சூறையாடப்பட்டது பற்றிய நினைவானது இக்காலத்தில் காணப்படும் மிகவும் ஆபத்தான ஒரு சூறையாடல் முன்வைக்கும் அச்சுறுத்தல் குறித்து சிந்திக்க வைக்கின்றது என்றார்.
இக்காலத்தில் இந்த அச்சுறுத்தல் ஆன்மீக வாழ்க்கையில் காணப்படுகின்றது என்றும் இன்றையச் சமூகச் சூழலில் பல இளையோர் மேலோட்டமான கருத்துக்கோட்பாடுகளுக்குள் தள்ளப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்தப் புதிய சுவிஸ் கார்ட்ஸ், தங்களது பணிவாழ்வில் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை நன்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார் அவர்.
வத்திக்கான் நகரத்திற்குள் இந்த மெய்க்காப்பாளர்கள் ஆற்றி வரும் சேவைக்கு நன்றி தெரிவித்த பாப்பிறை வத்திக்கான் பசிலிக்காவுக்கு வரும் விசுவாசிகளுக்கு இவர்களின் வாழ்வு, மேலும் மேலும் உள்தூண்டுதலை ஏற்படுத்தும் என்பதில் தான் நம்பிக்கை கொள்வதாகக் கூறினார்.
19க்கும் 30 வயதுக்கும் உட்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க இளைஞர், திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இவர்கள் குறைந்தது 174 செ.மீ.உயரம் இருக்க வேண்டும்.


2. திருத்தந்தை : கிறிஸ்தவத் திருவழிபாடு, உலகை மாற்றுவதற்கானப் பயணத்தில் நம்பிக்கையாக இருக்கின்றது

மே06,2011. புனித ஆன்செல்ம் பாப்பிறை திருவழிபாட்டுக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு அந்நிறுவனம் நடத்தும் ஒன்பதாவது அனைத்துலக திருவழிபாட்டு மாநாட்டில் கலந்து கொள்ளும் சுமார் 250 பிரதிநிதிகளையும் இவ்வெள்ளிக்கிழமை சந்தித்தார் திருத்தந்தை.
கிறிஸ்தவத் திருவழிபாடு, வாகுகுறுதிகள் கிறிஸ்துவில் நிறைவேறியதைக் கொண்டாடும் திருவழிபாடாகும், அத்துடன் உலகை மாற்றுவதற்கானப் பயணத்தில் நம்பிக்கையின் வழிபாடாகவும் இது இருக்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.
நினைவுக்கும், இறைவாக்குக்கும் இடையே புனித ஆன்செல்ம் பாப்பிறை திருவழிபாட்டுக் கல்வி நிறுவனம் என்ற தலைப்பில் இந்த ஜூபிலி ஆண்டு மாநாடு இடம் பெறுவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, நினைவு என்று சொல்லும் போது, இந்த அரை நூற்றாண்டில் தூய ஆவி தூண்டுதலால் கிடைத்துள்ள அளப்பெரும் பலன்கள் பற்றி நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான், தூய ஆவியின் இறைவாக்குத் தூண்டுதலால் வழிநடத்தப்பட்டு இந்தக் கல்வி நிறுவனத்தைத் தொடங்கப் பணித்தது, இந்த நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் திருச்சபையில் திருவழிபாட்டு மறுமலர்ச்சிக்குச் செய்து வரும் அரும்பணிகள் போன்றவை பற்றியும் எடுத்துச் சொன்னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


3. திருத்தந்தையின் வெனிஸ் நகருக்கானத் திருப்பயணம்

மே06,2011. இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை மூன்று மணிக்கு இத்தாலியின் அக்குய்லேயா, மெஸ்த்ரே, வெனிஸ் ஆகிய நகரங்களுக்கானத் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தைத் தொடங்குகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சனிக்கிழமை மாலை அக்குய்லேயா நகர் வளாகத்தில் நகர மக்களைச் சந்தித்தல், அந்நகர் பசிலிக்காவில் விசுவாசிகளுக்கு உரையாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளை நிறைவு செய்து அன்று மாலையே வெனிஸ் செல்வார் திருத்தந்தை.
அன்று வெனிஸ் புனித மாற்கு வளாகத்தில் மக்களைச் சந்தித்தல், பின்னர் ஞாயிறு காலை மெஸ்த்ரே புனித ஜூலியானோ பூங்காவில் திருப்பலி, புனித மாற்கு பசிலிக்காவில் வெனிஸ் மறைமாவட்ட மன்ற நிறைவு ஆகிய நிகழ்ச்சிகளை நிறைவு செய்து ஞாயிறு இரவு வத்திக்கான் திரும்புவார் திருத்தந்தை.
திருத்தந்தையர் பத்தாம் பத்திநாதர், அருளாளர் 23ம் ஜான், முதலாம் ஜான் பால் ஆகியோர் வெனிஸ் மறைமாவட்ட முதுபெரும் தந்தையராய் இருந்த போது பாப்பிறைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
மேலும், திருத்தந்தையர் 12ம் கிரகரி, 4ம் யூஜின், 2ம் பவுல், 7ம் அலெக்சாண்டர், 8ம் கிளமென்ட் ஆகியோர் வெனிஸ் நகரைச் சேர்ந்தவர்கள். 


4. டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி : குண்டுவீச்சுத் தாக்குதல்கள் அறநெறிக்குப் புறம்பான செயல்கள் என்று சொல்லும் கடமையைக் கொண்டிருக்கிறேன்

மே06,2011. குண்டுவீச்சுத் தாக்குதல்கள் அறநெறிக்குப் புறம்பான செயல்கள் என்று சொல்லும் கடமையைத் தான் கொண்டிருப்பதாக லிபியாவின் டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மர்த்தினெல்லி கூறினார்.
லிபியாவில் நடத்தப்படும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஒப்புதலின் பேரில் இடம் பெறுகின்றன, எனவே தான் ஆன்மீகக் காரியங்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அறிக்கைகள் தனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பதாக Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார் ஆயர் மர்த்தினெல்லி.
குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்துவது பற்றித் தீர்மானம் செய்வதற்கு ஐ.நா.வுக்கோ, நேட்டோவுக்கோ, ஐரோப்பிய சமுதாய அவைக்கோ எவ்வித நன்னெறி சார்ந்த அதிகாரம் கிடையாது என்றும் ஆயர் தெரிவித்தார்.
உண்மையில் தான் யாருடைய அரசியல் நடவடிக்கையிலும் தலையிட விரும்பவில்லை, ஆயினும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் அறநெறிக்குப் புறம்பான செயல்கள் என்று சொல்லும் கடமையைத் தான் கொண்டிருக்கிறேன் என்று ஆயர் மர்த்தினெல்லி கூறினார்.


5. தென் கொரிய ஆயர் : கருக்கலைப்பு, கொலைகளிலே மிக மோசமானது

மே06,2011. கருக்கலைப்பு, சாதாரணக் கொலையைவிட மோசமானது, ஏனெனில் இது வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய பெற்றோராலும் மருத்துவராலும் நடத்தப்படுகின்றது என்று தென்கொரிய ஆயர் ஒருவர் கூறினார்.
மே மாதம் இறுதி ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்ட வாழ்வு ஞாயிறுக்கென செய்தி வெளியிட்ட கொரிய ஆயர் பேரவையின் உயிர்அறநெறியியல் பணிக்குழுத் தலைவர் ஆயர் Gabriel Chang Bong-hun இவ்வாறு குறை கூறினார்.
கருக்கலைப்பு, தன்னையே பாதுகாக்க இயலாத மனிதருக்கெதிரான கடும் குற்றமாகும், இதனைக் கேள்விக்கு உட்படுத்தாமல் கண்டிக்க வேண்டும் என்று ஆயர் Chang மேலும் கூறினார்.
தென்கொரியாவில் வாழ்வுக்கு ஆதரவான ஞாயிறு வழக்கமாக மே மாதம் இறுதி ஞாயிறன்று கடைபிடிக்கப்படு்ம். ஆனால் இவ்வாண்டு மே முதல் ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்டது.
தென்கொரியாவில் 2005ம் ஆண்டில் 4,40,000 குழந்தை பிறப்புகள் இடம்  பெற்றன. ஆனால் அதே ஆண்டில் சட்டத்துக்குப் புறம்பே 3,41,000 கருக்கலைப்புகள் நடத்தப்பட்டன. 2009ல் 3,80,000 கருக்கலைப்புகள் நடத்தப்பட்டன என்று ஒரு கிறிஸ்தவ அரசு சாரா அமைப்பு அறிவித்தது.


6. 2008ல் இடம் பெற்ற கந்தமால் படுகொலைகள் : நியாயம் கேட்டு கிறிஸ்தவர்கள் தர்ணா

மே06,2011. 2008ம் ஆண்டில் ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதில் மூன்று பேரின் பங்கு குறித்து தேசிய புலன் விசாரணை நிறுவனம்(NIA) விசாரணையைத் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கிறிஸ்தவப் பொது அவை(CGIC) இவ்வெள்ளிக்கிழமை ஒருநாள் தர்ணாவை நடத்தியது.
இப்படுகொலை விவகாரம் தொடர்பான புலன்விசாரணை மற்ற மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டுமென்று  CGIC அவை வலியுறுத்தியது.
Indrash Kumar, Swami Asimanand, இராணுவத்தளபதி Shrikant Purohi ஆகியோர் இவ்விவகாரத்தில் சந்தேகிக்கப்படுகிறார்கள். 2008ல் கந்தமாலிலும் கர்நாடகாவிலும் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கு எதிரான வன்முறைகளில் இந்துத்துவ தீவிரவாதிகள் முக்கிய பங்கு வகித்தனர் என்று CGIC தலைவர் ஷாஜன் ஜார்ஜ் கூறினார்.
2008ல் முஸ்லீம்களுக்கு எதிரானத் தாக்குதல்களைத் திட்டமிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள Pragya Singh Thakur அளித்த வாக்குமூலத்தின்படி, இராணுவத்தளபதி Prasad Srikant Purohit, 2008, ஆகஸ்டில் கந்தமாலிலும் கர்நாடகாவிலும் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கு எதிரான வன்முறைகளில் மூளையாகச் செயல்பட்டவர் என்று தெரிகிறது.


7. பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்

மே06,2011. பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாகக் காணப்படும் பதட்டநிலைகளால் அந்நாடெங்கும் திருச்சபையும் கிறிஸ்தவக் குழுக்களும் எச்சரிக்கையோடு செயல்படுகின்றன என்று UCAசெய்தி நிறுவனம் கூறியது.
அல்-கெய்தா தலைவர் பின் லேடன் பற்றிய செய்திகளை உலகம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் வேளை, பாகிஸ்தானில் பல கிறிஸ்தவப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பின்லேடன் பற்றிப் பொதுப்படையாகப் பேசுவதில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள் என்றும்  UCAசெய்தி நிறுவனம் கூறியது
இதற்கிடையே, பாகிஸ்தானின் முக்கிய சமயக் கட்சியான Jamaat-e-Islami, பாகிஸ்தான் அரசையும் புலனாய்வு அமைப்பையும் திறமையற்றவை என்று குறைகூறி, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு எதிரானப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது


8. இரஷ்யாவில் 82 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்

மே06,2011.இரஷ்யாவில் பெரும்பாலான மக்கள் அதாவது ஏறக்குரைய 82 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்று அந்நாட்டு பொதுநலக் கருத்து அறக்கட்டளை கூறியது.
இரஷ்யாவின் 44 மாநிலங்களில் பதினெட்டும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில்  எடுத்த ஆய்வின்படி, 13 விழுக்காட்டினரே கடவுளில் நம்பிக்கை இல்லை என்று கூறியதாகத்  தெரிகிறது.
தலைமுறைகளாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த இரஷ்யாவில் தற்போதைய இந்த ஆய்வின் மூலம், அந்நாடு, ஐரோப்பாவில் அதிகமான சமய உணர்வு கொண்ட நாடாகக் கணிக்கப்பட்டுள்ளது.
கடவுள் நம்பிக்கை கொண்டவர்களில் 27 விழுக்காட்டினர் எந்தவித நிறுவன அமைப்பைச் சார்ந்த மதத்தைச் சாராதவர்கள் ஆவர்.
இரஷ்யாவில் இருவருக்கு ஒருவர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.

No comments:

Post a Comment