1. திருத்தந்தை : கருக்கலைப்பு குறித்தத் தவறான எண்ணத்தைப் போக்குவது மருத்துவர்களின் கடமை
2. லிபிய ஆயர் முஸ்லீம்களிடம் பாதுகாப்புக் கோருகிறார்
3. கடாஃபி அரசுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்
4. உலகில் சமய சுதந்திரம் குறித்த EU அவையின் உறுதிமொழிக்கு ஆயர்கள் வரவேற்பு
5. மெக்சிகோவில் ஊழல் ஒழிக்கப்பட ஆயர் அழைப்பு
6. பெரு ஆயர்கள் : கருக்கலைப்பு அநீதியானது
7. புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்குத் தபக்காலத் தியாகங்கள் செய்யப் பரிந்துரை
8. வட கொரிய மக்கள் பசிக் கொடுமையால் காட்டுப் புற்களையும் புழுதியையும் சாப்பிடுகின்றனர்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை : கருக்கலைப்பு குறித்தத் தவறான எண்ணத்தைப் போக்குவது மருத்துவர்களின் கடமை
பிப்.26,2011. கருக்கலைப்பு எந்தப் பிரச்சனையையும் தீர்க்காது என்று கூறி கருக்கலைப்புக்கு எதிரானத் தனது கடுமையான எதிர்ப்பை இச்சனிக்கிழமை மீண்டும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீட வாழ்வுக் கழகம் நடத்திய 17வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 250 பேரை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கருக்கலைப்பு, குழந்தையைக் கொல்லுகின்றது, பெண்ணின் வாழ்வைப் பாழடிக்கின்றது, தந்தையின் மனசாட்சியின் மீது பாரத்தைச் சுமத்துகின்றது, பல சமயங்களில் குடும்ப வாழ்வைச் சிதறடிக்கின்றது என்று தெரிவித்தார்.
கருக்கலைப்பு செய்து கொண்டு மனத்தளவிலே குற்ற உணர்ச்சியோடு வாழ்வு முழுவதையும் கழிக்கின்ற பெண்களை ஆன்மீக மற்றும் உளவியல் ரீதியில் தேற்றுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
கருக்கலைப்பு மிகவும் அவசியமானது, இது குழந்தைகளையும் குடும்பங்களையும், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கின்றது என்ற தவறான எண்ணம் கொண்ட அனைவரின் ஒழுக்கநெறி மனசாட்சியைக் கேள்வி கேட்டுள்ள திருத்தந்தை, வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கு அனைத்து சமுதாயத்தினரும் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கருக்கலைப்பினால் ஓர் உயிர் கொல்லப்படுகிறது, தாயின் வாழ்வு சீர்குலைக்கப்படுகிறது என்பதைப் புரிய வைக்க வேண்டியது கத்தோலிக்க மருத்துவர்களின் கடமை என்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
சிலசமயங்களில், கணவன்கள் கருவுற்ற தங்களது மனைவிமாரைக் தனியாக விட்டுவிடுவது குறித்த கவலை தெரிவித்த அவர், மனைவிகளின் கர்ப்பக் காலத்தில் அவர்களது கணவன்மார் கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்
2. லிபிய ஆயர் முஸ்லீம்களிடம் பாதுகாப்புக் கோருகிறார்
பிப்.26,2011. கடும் பதட்டநிலைகள் இடம் பெற்று வரும் லிபியாவில், அந்நாட்டின் சிறுபான்மைக் கத்தோலிக்கருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு லிபிய அப்போஸ்தலிக்க நிர்வாகியான திரிப்போலி ஆயர் ஜொவான்னி மார்த்தினெல்லி முஸ்லீம்களிடம் கேட்டுள்ளார்.
லிபியாவை சுமார் 42 வருடங்களாக ஆட்சி செய்து வரும் முமாமர் கடாஃபிக்கு எதிராக இடம் பெற்று வரும் போராட்டங்களை முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் கடுமையாய் இருப்பதாகவும், லிபியத் தெருக்களில் ஓடும் இரத்தம் அந்நாட்டில் பொதுவான ஒப்புரவுக்குத் தடையாக இருப்பதாகவும் ஆயர் மார்த்தினெல்லி தெரிவித்தார்.
"La Stampa" என்ற இத்தாலிய செய்தித்தாளுக்குப் பேட்டியளித்த ஆயர் மார்த்தினெல்லி, தற்போதைய மக்கள் புரட்சி 1968ம் ஆண்டில் இடம் பெற்ற புரட்சியை ஒத்தது என்றும், குடியிருக்க வீடின்றியும் அதனால் குடும்பங்களை அமைப்பதற்கு இளையோர் கஷ்டப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
கத்தோலிக்க ஆலயங்கள், துறவு இல்லங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் அருட்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு செம்பிறைச் சங்கம் மற்றும் பிற முஸ்லீம் அமைப்புக்களிடம் கேட்டிருப்பதாகவும் ஆயர் மார்த்தினெல்லி கூறினார்.
2005ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி லிபியாவில் சுமார் எழுபதாயிரம் கத்தோலிக்கரும் 8 குருக்களும் 30 அருட்சகோதரிகளும் உள்ளனர்.
3. கடாஃபி அரசுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்
பிப்.26,2011. லிபியாவில் கடாஃபி அரசுக்கு எதிராக உடனடியாகத் திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் ஐ.நா.பாதுகாப்பு அவையைக் கேட்டுள்ளார்.
கடாஃபி அரசு, போராடுகிறவர்கள் மீது, இறப்பை வருவிக்கும் கடும் அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் இச்சூழல்களில் நேரத்தைக் கடத்தினால் அதிகமான மனித உயிர்களை இழக்க நேரிடும் என்றும் பான் கி மூன் கூறினார்.
மேலும், தனது ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவும் நோக்கத்தில் தலைநகர் திரிப்போலியில் ஆயுதக் கிடங்குகளை அமைக்கவிருப்பதாகக் கடாஃபி அறிவித்துள்ளதையொட்டி உள்நாட்டுக் கலவரம் மூளும் என்ற அச்சமும் நிலவுகிறது என்று ஊடகங்கள் கூறுகின்றன. லிபியாவின் சுமார் 65 இலட்சம் பேரில் 20 இலட்சம் பேர் திரிப்போலியில் வாழ்கின்றனர்.
ஐ.நா.பாதுகாப்பு அவையும், லிபியாவுக்கு எதிரான ஆயுதத் தடை, போக்குவரத்துத் தடை மற்றும் முதலீடுகளை முடக்குவதற்கு சிந்தித்து வருகிறது.
திரிப்போலியில் இவ்வெள்ளியன்று மட்டும் ஆயிரம் பேர் வரைக் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இவ்வெள்ளியன்று கூடிய ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு, லிபியத் தலைவர் கடாஃபிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்விவகாரத்தில் உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இன்னும், கடாபியின் சொத்துக்களை சுவிஸ் வங்கி முடக்கியிருக்கிறது.
4. உலகில் சமய சுதந்திரம் குறித்த EU அவையின் உறுதிமொழிக்கு ஆயர்கள் வரவேற்பு
பிப்.26,2011. உலக அளவில் சமய சுதந்திரத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதற்கு ஐரோப்பிய சமுதாய அவை உறுதி அளித்திருப்பதை ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.
EU என்ற ஐரோப்பிய சமுதாய அவையின் வெளியுறவு அமைச்சர்கள் இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறையைக் கண்டித்துள்ளதோடு சமய சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கானத் தங்களது ஆழமான அர்ப்பணத்திற்கும் உறுதியளித்துள்ளனர்.
இவ்வறிக்கையை வரவேற்றுப் பேசியுள்ள EU நாடுகளின் ஆயர்களின் பிரதிநிதிகள் ஆணையப் பேச்சாளர் Johanna Touzel, இந்த அமைச்சர்கள் தங்களின் இந்த உறுதிப்பாட்டைச் செயல்படுத்துவதற்குத் திட்டவட்டமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற ஆயர்களின் நம்பிக்கையையும் தெரிவித்தார்.
அதேசமயம், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கடந்த சனவரியில் திருப்பீடத்துக்கான நாடுகளின் தூதர்களிடம் தெரிவித்த சமய சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஐந்து கூறுகளை EU அவையின் வெளியுறவு அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர்.
5. மெக்சிகோவில் ஊழல் ஒழிக்கப்பட ஆயர் அழைப்பு
பிப்.26,2011. மெக்சிகோவில் அருட்பணியாளர் Santos Sánchez Hernández கொல்லப்பட்டிருப்பதற்குத் திருட்டுக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அந்நாட்டில் ஊழலும் ஒழுக்கமின்மையும் மிகுந்திருப்பதையே இத்தகைய கொலைகள் பிரதிபலிக்கின்றன என்று மெக்சிகோ ஆயர் ஒருவர் அரசைக் குறை கூறினார்.
54 வயதாகும் அருட்பணியாளர் Sánchez, Mecapalapa பங்கில் இத்திங்கள் இரவு கொலை செய்யப்பட்டது குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆயர் ஹூவான் நவாரோ, மெக்சிகோவில் வன்முறையும் பாதுகாப்பற்ற சூழலும் நிலவுவதாகத் தெரிவித்தார்.
ஒழுக்க மற்றும் சமூக ஒழுங்கு முறைகளைக் காக்க வேண்டிய நிறுவனங்களில் காணப்படும் ஊழல்,இக்குருவின் கொலையில் பிரதிபலிக்கின்றது என்றும் ஆயர் நவாரோ கூறினார்.
6. பெரு ஆயர்கள் : கருக்கலைப்பு அநீதியானது
பிப்.26,2011. கருக்கலைப்பை அனுமதிக்கும் எந்த ஒரு சட்டமும் அநீதியானது, அது சட்டமே அல்ல என்று பெரு நாட்டு ஆயர் பேரவையின் வாழ்வுக்கான ஆணையம் கூறியது.
மார்ச் 25ம் தேதி கடைபிடிக்கப்படும் கருவில் வளரும் குழந்தை தினத்தை முன்னிட்டு அந்த ஆணையம் வெளியிட்ட செய்தியில், உண்மையை எதிர்க்கும் அறிவற்ற மனங்களே கருவில் வளரும் குழந்தையின் மனித இயல்பை ஏற்கத் தவறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உலகில் இன்னும் பிறக்காத குழந்தையின் வாழ்வு, தாயைப் போல முக்கியமானது அல்ல என்ற கருத்தை இந்த ஆணையம் மறுத்துள்ளது.
7. புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்குத் தபக்காலத் தியாகங்கள் செய்யப் பரிந்துரை
பிப்.26,2011. தபக்காலத்தின் 40 நாட்களும் விருப்பமான இனிப்புக்களைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதாக மட்டும் இருக்கக் கூடாது, மாறாக, மிகவும் உறுதியான மற்றும் நீதி நிறைந்த உலகை அமைப்பதற்கு உதவும் சில நிரந்தரத் தியாகங்கள் செய்வதாய் அமைய வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கச் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறினார்.
புவி வெப்பமடைந்து வருவதலும் வெப்பநிலை மாற்றமும், நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தைச் சார்ந்து இருக்கின்றது என்று வெப்பநிலை மாற்றம் குறித்த அமெரிக்கக் கத்தோலிக்கக் கூட்டமைப்பு இயக்குனர் Dan Misleh கூறினார்.
நம் வாழ்க்கை நிலையைப் பரிசோதிப்பதற்குத் தபக்காலம் முற்றிலும் ஏற்ற காலம் என்றும் மிஸ்லே கூறினார்.
வருகிற மார்ச் 9ம் தேதி தொடங்கும் தபக்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருச்சபை விசுவாசிகளுக்கு முன்வைக்கும் சிலத் தபக்காலத் தியாகங்களையும் வெளியிட்டுள்ளது இக்கத்தோலிக்கக் கூட்டமைப்பு.
மக்கள் சாமான்கள் வாங்குவதற்குத் துணிப்பைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆண்டுதோறும் விநியோகிக்கப்படும் ஏறக்குறைய 38,000 கோடி பிளாஸ்டிக் பைகளைக் குறைக்க முடியும்.
குப்பையில் போடப்படும் பேப்பர் கைக்குட்டைகள் பேப்பர் துண்டுகள் போன்றவற்றைத் தவிர்த்தல்.
“இருப்பதில் நிறைவு கொள். போதுமான உணவு, வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகள் இல்லாமல் இருப்போரை நினைத்துப் பார்”. இவை போன்ற வசனங்களை இணையதளத்தில் வெளியிட்டு மக்களின் நுகர்வுத்தனமைக் குறைவதற்கு உதவுதல்.
இவை போன்ற இன்னும் சில பரிந்துரைகளை அவ்வமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
8. வட கொரிய மக்கள் பசிக் கொடுமையால் காட்டுப் புற்களையும் புழுதியையும் சாப்பிடுகின்றனர்
பிப்.26,2011. வட கொரியாவில் மக்கள் காட்டுப் புற்களையும் புழுதியையும் சாப்பிடும் அளவுக்கு மிகவும் மனம் சோர்ந்து பசிச் சாவை எதிர் நோக்குகின்றனர் என்று அந்நாட்டிற்குச் சென்று திரும்பியுள்ள அரசு சாரா அமைப்புகள் கூறுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களின் கடும் குளிரால் அந்நாட்டில் பயிரிடப்பட்ட கோதுமை மற்றும் பார்லி விளைச்சல் 50 முதல் 80 விழுக்காடு வரை சேதமாகியுள்ளது என்று அவ்வமைப்புகள் கூறின.
வட கொரியாவின் தற்போதைய அவலம் பொது மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தலாம் மற்றும் பெருமளவில் மக்கள் தென் கொரியாவுக்கு புலம் பெயரலாம் என்றும் அவ்வமைப்புகள் கூறின.
பெருமளவானப் புலம் பெயர்வுகள் தென் கொரியாவில் தாக்கு பிடிக்காது என்றும் அந்நாடு அவர்களைத் திருப்பி அனுப்பக்கூடும் என்றும் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment