Tuesday, 8 February 2011

Catholic News - hottest and latest - 08 Feb 2011

1.  முதிர்ச்சியடைந்த கருவளச் சோதனைக்கு கோஸ்ட்டா ரிக்கா ஆயர்கள் எதிர்ப்பு.

2. கொரியத் திருச்சபை கருக்கலைப்புக்கு எதிராக நடவடிக்கை

3. மத்திய ஜாவா-ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் மூன்று ஆலயங்களையும் ஒரு கிறிஸ்தவ கருணை இல்லத்தையும் நலவாழ்வு     மையத்தையும் தாக்கியுள்ளனர்

4.  அமெரிக்க இளம் கத்தோலிக்கர் தங்களது கத்தோலிக்க விசுவாத்தைக் கைவிடவில்லை 

5.  வன்முறைகள் முன்னேற்றத்தை அச்சுறுத்துவதாக சூடான் ஆயர் கவலை.

6.  ஏழை குழந்தைகளிடையேயான குருக்களின் சேவையை பாராட்டியுள்ளது ஆந்திர அரசு.

7.  சிறுபான்மை மதத்தவர்க்கான அமைச்சகத்தை நீக்க பாகிஸ்தான் அரசு திட்டம்.

8.  இந்தியாவில் நடுத்தரப் பிரிவு மக்களின் எண்ணிக்கை 27 கோடியாக உயரும்

----------------------------------------------------------------------------------------------------------------


1.  முதிர்ச்சியடைந்த கருவளச் சோதனைக்கு கோஸ்ட்டா ரிக்கா ஆயர்கள் எதிர்ப்பு.

பிப்.08,2011. மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவில் முதிர்ச்சியடைந்த கருச் சோதனையைச் சட்டப்படி அங்கீகரிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பரிசோதனையில் மனிதக் கருவின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்கான எல்லா வழிவகைகளும் எடுக்கப்பட்டாலும்கூட அறநெறிப்படி பார்க்கும் போது இது இனப்பெருக்கம் மற்றும் திருமண உறவின் மாண்புக்கு முரணாக இருக்கின்றது என்றும் ஆயர்கள் குறை கூறினர்.
எனினும், கோஸ்ட்டா ரிக்கா அரசின் இந்த நடவடிக்கையில் முதிர்ந்த மனிதக் கருக்கள் அழிக்கப்படும் நிலையும் இருப்பதால், மனிதர்கள், உயிரியல் பொருளாகக் கருதப்படவும் கைவிடப்படவும் கொலை செய்யப்படவும் நாடு ஒத்துழைப்பதாய் இருக்கும் என்றும் ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமார் 45 இலட்சம் மக்களைக் கொண்ட கோஸ்ட்டா ரிக்காவில் 83 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

2. கொரியத் திருச்சபை கருக்கலைப்புக்கு எதிராக நடவடிக்கை

பிப்.08,2011. தென் கொரியாவில் திருமணமாகாமல் குழந்தைப் பெற்றெடுக்கும் தாய்மார் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் அவர்களுக்கு உதவுமாறு கத்தோலிக்க நிறுவனங்களைக் கேட்டுள்ளது அந்நாட்டுத் திருச்சபை.
கொரியாவில் கருக்கலைப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில் புதிய வாழ்வுத் திட்டம்  என்ற நடவடிக்கையில் இறங்கியுள்ள கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் மனித வாழ்வு ஆணையத் தலைவர் ஆயர் Gabriel Chang Bong-hun, Myeongdong பேராலயத்தில் இத்திங்களன்று திருப்பலி நிகழ்த்தி இதனைத் தொடங்கி வைத்தார்.
இதில் மறையுறையாற்றிய ஆயர் Chang, வாழ்வைத் தேர்ந்தெடுப்பது வாழ்வை விரும்பும் கடவுளுக்கு ஏற்றதாகும், நாம் எல்லாரும் வாழ்வைப் பாதுகாத்து வாழ்வின் நற்செய்தியை அறிவிப்பவர்களாகச் செயல்பட வேண்டும் என்றார்.
இந்தத் திட்டத்தில், 15 திருச்சபை மற்றும் மனித வாழ்வுக்கு ஆதரவான குழுக்கள், திருமணமாகாதத் தாய்மார்க்குப் புகலிடம் அளிப்பதற்கு முன்வந்துள்ளன. மேலும், கத்தோலிக்க மருத்துவமனைகள் இத்தகையப் பெண்களுக்கு இலவசமாகப் பிரசவம் பார்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகளிலும் கத்தோலிக்கப் பள்ளிகளிலும் பாலியல் விழிப்புணர்வு கல்வி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் ஆண்டுக்கு சுமார் 4,000 திருமணமாகாதப் பெண்கள் வீதம் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்

3.  மத்திய ஜாவா-ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் மூன்று ஆலயங்களையும் ஒரு கிறிஸ்தவ கருணை இல்லத்தையும் நலவாழ்வு மையத்தையும் தாக்கியுள்ளனர்

பிப்.08,2011. இந்தோனேசியாவில் வழங்கப்பட்ட தேவநிந்தனைக் குற்றம் சம்பந்தப்பட்ட தீர்ப்பு தளர்த்தப்பட்டது போல் தெரிந்ததால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் மூன்று ஆலயங்களையும் ஒரு கிறிஸ்தவக் கருணை இல்லத்தையும் நலவாழ்வு மையத்தையும் இச்செவ்வாய் காலை தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.
Richmond Bawengan Antonius என்ற கிறிஸ்தவர், மதத்தைப் பரப்பினார் மற்றும் இசுலாமுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு இச்செவ்வாய் காலை மத்திய ஜாவாவின் Temanggung நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்.
இவருக்கு மரண தண்டனை வழங்குவதற்குப் பதிலாக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதில் கோபமடைந்த முஸ்லீம்கள் வன்முறைத் தாக்குதலை நடத்தினர். காவல்துறை தலையிட்ட பிறகே இந்த வன்முறை நிறுத்தப்பட்டதாகச் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்தோனேசியாவின் வட சுலவேசியைச் சேர்ந்த Bawengan, Temanggung நகருக்குச் சென்ற சமயம் அச்சடிக்கப்பட்ட கிறிஸ்தவத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் மற்றும் அவற்றில் சில இசுலாமிய அடையாளங்கள் கேலி செய்யப்பட்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு 2010ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார். அவ்வழக்கு விசாரணை இச்செவ்வாயன்று நடைபெற்றது.
புனிதர்கள் பேதுரு பவுல் கத்தோலிக்க ஆலயம்தான் முதன் முதலில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தோனேசியா, உலகில் அதிகமான முஸ்லீம்கள் வாழும் நாடாகும்.

4.  அமெரிக்க இளம் கத்தோலிக்கர் தங்களது கத்தோலிக்க விசுவாத்தைக் கைவிடவில்லை 

பிப்.08,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1940கள் மற்றும் 1950களில் வாழ்ந்த இளம் வயதினரைப் போன்று தற்போதைய இளம்வயதினர் திருச்சபையோடு உறவு கொண்டிருக்காவிடினும் அவர்கள் விசுவாசத்தைக் கைவிடவில்லை என்று CNS கத்தோலிக்க செய்தி நிறுவனம் எடுத்த ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்கக் கத்தோலிக்கக் கல்விக்கான Francis-Ann Curran மையமும், மதம் மற்றும் கலாச்சாரம் குறித்த Fordham மையமும் இணைந்து நடத்திய கூட்டத்தில், இளம் கத்தோலிக்கர் தங்களது கத்தோலிக்க விசுவாத்தையும் திருச்சபையுடனானத் தங்களது தொடர்பையும் பிரித்துப் பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருச்சபைத் தலைவர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடத் தங்களுக்காகத் தாங்களே சிந்திப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்பதை அவர்கள் வலியுறுத்தியதாகவும் அக்கூட்டத்தில் கூறப்பட்டது. 

5.   வன்முறைகள் முன்னேற்றத்தை அச்சுறுத்துவதாக சூடான் ஆயர் கவலை.

பிப் 08, 2011.   சூடானில் இடம்பெற்றுவரும் அண்மைக்கால வன்முறைகள், தென் சூடான் சுதந்திர நாடாக உருவெடுப்பதற்கான முயற்சிகளில் பெரும் அச்சுறுத்தலைத் தருவதாக உள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் Eduardo Hiiboro Kussala.
வன்முறையின் அச்சுறுத்தலை இவ்வாறே தொடர்ந்து எதிர்நோக்கி வந்தால், தென்சூடானில் அமையவிருக்கும் புதிய அரசு தன் வளங்களையெல்லாம் இவ்வன்முறை தடுப்பு நடவடிக்கைகளுக்கே செலவிடவேண்டிய சூழல் உருவாகும் என்ற ஆயர், இதனால் இந்த புதிய நாட்டின் வருங்காலம் பெருமளவில் பாதிக்கப்படும் என மேலும் கூறினார்.
தென்சூடானின் குழந்தைகளுள் பெரும்பான்மையினோர் இன்னும் LRA புரட்சியாளர்களின் கைகளில் இருப்பதாகவும் அவர்களின் நிலை குறித்து எவ்விதத் தகவலும் இல்லை எனவும் கூறும் ஆயர் Hiiboro Kussala, புரட்சியாளர்களின் கைகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் கூட, அவர்கள் அனுபவித்த மனக் காயங்களால் தங்கள் பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர் என்றார்.
சூடானிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுப்பதற்கானத் தென் சூடானின் அண்மைக் கருத்து வாக்கெடுப்பில் 98 விழுக்காட்டினர் தனி நாடு கொள்கைக்கு ஆதரவை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதி இவ்வாண்டு ஜூலையில் ஆப்ரிக்கக் கண்டத்தின் 54வது சுதந்திர நாடாக உருவெடுக்க உள்ளது.

6.  ஏழை குழந்தைகளிடையேயான குருக்களின் சேவையை பாராட்டியுள்ளது ஆந்திர அரசு.

பிப் 08, 2011.   ஆந்திர மாநிலத்தின் இரு மாவட்டங்களில் குழந்தை நல அமைப்புகளின் பொறுப்பாளர்களாக இரு குருக்களை அரசு நியமித்துள்ளது, தலத்திருச்சபையின் ஏழைக் குழந்தைகளிடையேயான பணிக்கான அங்கீகாரம் எனச் செய்தி நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
கிருஷ்ணா மாவட்டத்திற்கான குழந்தை நல அமைப்பின் பொறுப்பை குரு. தாமஸ் கோஷியிடமும் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கான இதே பொறுப்பை குரு தாமஸ் பள்ளிதானத்திடமும் ஒப்படைத்து ஆணை பிறப்பித்துள்ளது ஆந்திர அரசு. இப்பொறுப்பு மூன்றாண்டு கால அளவை உடையது.
விஜயவாடாவில் தெருவாழ் சிறார்களிடையே கடந்த 26 ஆண்டுகளாக பணியாற்றியுள்ள குரு. கோஷி, ஏற்கனவே இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து விருதைப் பெற்றுள்ளார்.
குரு பள்ளிதானமும் ஆந்திராவில் தலித் மக்களின் உரிமைகளுக்காக 24 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.

7.  சிறுபான்மை மதத்தவர்க்கான அமைச்சகத்தை நீக்க பாகிஸ்தான் அரசு திட்டம்.

பிப் 08, 2011.   சிறுபான்மை மதத்தவர்க்கானப் பாகிஸ்தான் அமைச்சகத்தை நீக்கி விட்டு அதனை மத விவகார அமைச்சகத்தின் கீழ் ஒரு துறையாக மட்டும் மாற்றும் திட்டம் பாகிஸ்தான் அரசிடம் இருப்பதாக திருச்சபையின் FIDES   செய்தி நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.
கத்தோலிக்க அமைச்சர் Shahbaz Bhattiயாவின் தலைமையின் கீழ் செயல்பட்டுவந்த அமைச்சகத்தை மூடுவது என்பது, சிறுபான்மை மதத்தவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும், தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிரானக் குரலை ஒடுக்குவதாகவும், மனித உரிமைகள் பொறுத்தவரையில் பின்னோக்கிச் செல்வதாகவும் உள்ளது என்கிறது இக்கத்தோலிக்க செய்தி நிறுவனம்.
சிறுபான்மை மதத்தவர்க்கான அமைச்சகம் அரசால் நீக்கப்பட்டாலும், சிறுபான்மை சமூகத்திற்கான போராட்டத்திலும், தேவநிந்தனைச் சட்டத்திற்கான எதிர்ப்பிலும் தலத்திருச்சபையிடம் எவ்வித மாற்றமும் இருக்காது என்றார் பாகிஸ்தானின் லாகூர் பேராயர் லாரன்ஸ் சல்தான்ஹா.

8.  இந்தியாவில் நடுத்தரப் பிரிவு மக்களின் எண்ணிக்கை 27 கோடியாக உயரும்

பிப்.08,2011. இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடுத்தரப் பிரிவு மக்களின் எண்ணிக்கை சுமார் 27 கோடியாக அதிகரிக்கும் என்று (NCAER) என் சி ஏ இ ஆர் என்ற தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் நுகர்வோர் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போதைய நிலவரப்படி நாட்டில் 3 கோடியே 14 இலட்சம் நடுத்தரக் குடும்பங்கள் உள்ளன, தனிநபர் அடிப்படையில் நடுத்தரப் பிரிவினரின் எண்ணிக்கை 16 கோடியாக உள்ளது, இது 2015 மற்றும் 2016ம் ஆண்டில் 26 கோடியே 70 இலட்சம் அதிகரிக்கும், இதே காலத்தில் நடுத்தரக் நடுத்தரக் குடும்பங்களின் எண்ணிக்கை 5கோடியே 33 இலட்சமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆயினும் மொத்த மக்கள் தொகையில் நடுத்தர மக்களின் எண்ணிக்கை  13.1 விழுக்காடாகும். இது 2025ல் 37 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...