Wednesday, 2 February 2011

Catholic News - hottest and latest - 01 Feb 2011

1. திருத்தந்தை : நற்செய்தி அறிவிப்பின் பெரும் பணி, இறையழைத்தல்கள் அதிகரிப்பதைச் சார்ந்து இருக்கின்றது

2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் 25ம் ஆண்டு நிகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன

3. இந்தியாவில் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம், புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளது

4. பாகிஸ்தானில் தீவிரவாத இசுலாமை எதிர்ப்பதற்கு மௌனமாக இருக்கும் முஸ்லீம்களுக்குலாகூர் பேராயர் அழைப்பு

5. பாகிஸ்தான் ஆயர்கள் : நாட்டு விவகாரங்களிலிருந்து மதம் பிரிக்கப்படுவது இன்றியமையாதது

6. ஆப்ரிக்காவில் அறநெறி சார்ந்த சிந்தனை குறைபடுவது, எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டிற்குத் தடை, பேராயர் Tlhagale

7. ஐ.நா.பொதுச் செயலர்: கற்பழிப்பு, போர்க் கருவியாகப் பயன்படுத்தப்படுவது, அமைதிக்கு இடையூறு 

8. ப்ரெஞ்ச் அரசியல் அமைப்பு அவை ஒரே பாலினத் திருமணங்களைத் தடை செய்திருப்பது அரசியல் அமைப்பை எந்த விதத்திலும் மீறுவதாக இல்லை

9. 22 ஆண்டுகளுக்கு பின் மியான்மாரில் நாடாளுமன்றம் கூடியது

10. பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருக்கலைப்பை எதிர்க்கின்றனர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நற்செய்தி அறிவிப்பின் பெரும் பணி, இறையழைத்தல்கள் அதிகரிப்பதைச் சார்ந்து இருக்கின்றது

பிப்.01,2011. நற்செய்தி அறிவிப்பின் பெரும் பணி, இறைவனின் அழைப்புக்குத் தாராள மனத்துடன் பதில் அளித்து நற்செய்திக்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்போரைச் சார்ந்து இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இறையழைத்தல்கள் அதிகரிப்பது, திருச்சபையின் உயிர்த்துடிப்பான இருப்பு மற்றும் அனைத்து இறைமக்களின் உறுதியான விசுவாச வாழ்வின் அடையாளமாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்த்தா ரிக்காவின் கார்த்தகோவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள, இலத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் இரண்டாவது இறையழைத்தல் மாநாட்டிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்வு, திருச்சபையின் பண்பை விளக்கும் இறையழைத்தல் கூரையும் உள்ளடக்கியது என்று கூறியுள்ளார்.
இறையழைத்தல், மனிதத் திட்டத்தாலோ அல்லது நிர்வாக யுக்தியின் பலனாலோ கிடைப்பது அல்ல, மாறாக அது கடவுளின் கொடை என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இறையழைத்தல் அதிகரிக்க ஆன்மீக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
தனியாகவும் சமூகமாகவும் கிறிஸ்துவுடன் ஒன்றித்த வாழ்வுக்குச் சாட்சியமாக இருப்பதும் இறையழைத்தல் அதிகரிக்க வாய்ப்பாகும் என்றும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
இந்த மாநாடு பிப்ரவரி 5 வருகிற சனிக்கிழமை நிறைவடையும்

2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் 25ம் ஆண்டு நிகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன

பிப்.01,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் 25ம் ஆண்டு நிகழ்வுகள் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளன.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1986ம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் 11ம் தேதி வரை இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு நாட்டில் அமைதி, நீதி மற்றும் ஐக்கியம் பற்றிய செய்திகளை தைரியமுடன் எடுத்துச் சொன்னார்.
இந்தப் பயணத்தின் வெள்ளிவிழா நிகழ்வுகள் புதுடெல்லி, ராஞ்சி, கல்கத்தா, கொச்சின், மும்பை ஆகிய ஐந்து நகரங்களில் சிறப்பாக இடம் பெறுகின்றன.
இறையழைத்தல்என்ற தலைப்பில் புதுடெல்லியிலும், பழங்குடி மற்றும் தலித் மக்கள்என்ற தலைப்பில் ராஞ்சியிலும், பிறரன்பும் சமூகப்பணியும்என்ற தலைப்பில் கல்கத்தாவிலும், நற்செய்தி அறிவிப்புஎன்ற தலைப்பில் கொச்சினிலும், உரையாடல், இளையோர், குடும்பம்என்ற தலைப்பில் மும்பையிலும் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இக்கொண்டாட்டங்களின் தொடக்கமாக, புதுடெல்லியில், திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இந்தியத் திருப்பயணம் பற்றிய புத்தகம் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.. திருப்பீடத் தூதரகத்தில் அத்திருத்தந்தையின் உருவமும் திறந்து வைக்கப்பட்டது. இப்புதனன்று திருப்பீடத்தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ புதுடெல்லி பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார்.


3. இந்தியாவில் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம், புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளது

பிப்.01,2011. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் இடையே இடம் பெற்ற கூட்டம், ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்வதற்கு உதவியுள்ளது என்று இந்திய மறைமாவட்ட குருக்கள் அவையின் செயலர் அருட்திரு ஜான் குழந்தை தெரிவித்தார்.
குருக்களின் பணி நிலைமைகள், அவர்களுக்கானப் பராமரிப்பு போன்றவை குறித்த அவர்களின் மனக்குறைகளை அகற்றும் நோக்கத்தில் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ கூட்டிய கூட்டத்தில் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டதாகவும் அருட்திரு ஜான் குழந்தை கூறினார்.
ஒவ்வோர் ஆயரும் தங்கள் குருக்களின் தேவைகள் குறித்து அக்கறையுடன் இருக்கிறார் என்றும் அவர்களின் நியாயமான தேவைகள் நிறைவேற்றப்படுவதற்குத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார் என்றும் இக்கூட்டத்தில் தெரிவித்தார் பேராயர் கொர்னேலியோ.

4. பாகிஸ்தானில் தீவிரவாத இசுலாமை எதிர்ப்பதற்கு மௌனமாக இருக்கும் முஸ்லீம்களுக்குலாகூர் பேராயர் அழைப்பு

பிப்.01,2011. பாகிஸ்தானில் மௌனப்படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை முஸ்லீம்கள், வளர்ந்து வரும் தீவிரவாத இசுலாமின் தாக்கத்திற்கு எதிராகப் பேச வேண்டியதற்கான நேரம் வந்துள்ளது என்று அந்நாட்டு லாகூர் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா கூறினார்.
பாகிஸ்தானில் இஞ்ஞாயிறன்று அனுசரிக்கப்பட்ட தேசிய செப, தப மற்றும் உண்ணா நோன்பு நிகழ்வில் இவ்வாறு உரைத்த பேராயர் சல்தான்ஹா, இசுலாம் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றி இசுலாமிய வாழ்வு முறையைத் திணித்தால், ஓர் இருண்ட எதிர்காலத்தைக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றார்.
இசுலாத்திற்காக எந்த ஒரு செயலைச் செய்பவர்கள் போற்றப்படுகிறார்கள் என்று கூறிய அவர், தேவநிந்தனை சட்டத்தை எதிர்த்த பஞ்சாப் ஆளுனர் சல்மான் தசீரைக் கொலை செய்த மும்தாஜ் காத்ரி ஹீரோவாகப் பாராட்டப்படுவதைச் சுட்டிக் காட்டினார்.
பத்துக்கும் பதினெட்டு வயதுக்கும் உட்பட்ட சிறார் இசுலாத்திற்காக இறந்தால் விண்ணக மகிமையைப் பெற முடியும் என்று சொல்லி அதற்காகத் தயாரிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள், ஜிஹாத்தை ஊக்குவிக்கும் உபஇராணுவ தீவிரவாத அமைப்புகளில் இணைகிறார்கள் என்றும் பேராயர் கூறினார்.


5. பாகிஸ்தான் ஆயர்கள் : நாட்டு விவகாரங்களிலிருந்து மதம் பிரிக்கப்படுவது இன்றியமையாதது

பிப்.01,2011. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு, நாட்டில் மனச்சான்று மற்றும் பேச்சு சுதந்திரம் அனுமதிக்கப்படுமாறு தலத்திருச்சபை மற்றும் தன்னார்வ மனித உரிமை அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.
நாட்டு விவகாரங்களிலிருந்து மதம் பிரிக்கப்படுவது இன்றியமையாதது என்று வலியுறுத்திய பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம், பத்தரிகையாளர், குறிப்பாக அரசியல் பணியாளர்கள் குறிவைத்துக் கொல்லப்படுவது மற்றும் நீதிமன்றத்தால் தீர்ப்பிடப்படுவது குறித்தத் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் ஆளுனர் சல்மான் தசீர் கொலை செய்யப்பட்டதன் நாற்பதாம் நாளைக் கடைபிடித்த அதேநாளில், நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், தேவநிந்தனை சட்டங்களுக்கு ஆதரவாகப் பேரணியை நடத்தினர்.
பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டங்கள் தொடர்பான வன்முறையில் 1392 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

6. ஆப்ரிக்காவில் அறநெறி சார்ந்த சிந்தனை குறைபடுவது, எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டிற்குத் தடை, பேராயர் Tlhagale

பிப்.01,2011. ஆப்ரிக்கக் கண்டத்தில் எய்ட்ஸ் நோய் முக்கியமானப் பிரச்சனையாக இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டிய அதேவேளை, ஆப்ரிக்காவில் அறநெறி சார்ந்த சிந்தனை வறிய நிலையில் உள்ளது என்று குறை கூறினார் தென் மண்டல ஆப்ரிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Buti Tlhagale .
ஆப்ரிக்காவில் அதிகரித்து வரும் எய்ட்ஸ் நோய்ப் பிரச்சனைக்கு அமெரிக்க-ஐரோப்பியச் சிந்தனை வழியில் தீர்வு காண்பது அவசியம் என்று ஜொஹான்னஸ் பேராயரான  Tlhagale பரிந்துரைத்தார்.
ஐரோப்பா, எய்ட்ஸ் மற்றும் HIV நோய்க் கிருமிகள் சார்ந்த அறநெறி விவகாரங்கள் குறித்துச் சிந்திக்கும் போது ஒரே பாலினச் சேர்க்கை மக்களை நினைக்கின்றது, ஆனால் ஆப்ரிக்கா இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ள இலடசக்கணக்கான ஆண், பெண் மற்றும் இளையோரை நினைக்கின்றது என்று  கூறினார் பேராயர் Tlhagale.
Pretoria வில் நடைபெற்று வரும் ஆயர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார் அவர்.
ஐ.நா. எய்டஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின்படி 2009ல் தென்னாப்ரிக்காவில் சுமார் 29 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். உலகிலுள்ள இந்நோயாளிகளுள் 67 விழுக்காட்டினர் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் உள்ளனர்.


7. ஐ.நா.பொதுச் செயலர்: கற்பழிப்பு, போர்க் கருவியாகப் பயன்படுத்தப்படுவது, அமைதிக்கு இடையூறு 

பிப்.01,2011. கற்பழிப்பு நடவடிக்கையை, ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அதிகாரத்துக்கானப் போராட்டக் கருவியாக நோக்குவதைத் தவிர்த்து கட்டுப்பாட்டுடன் செயல்பட உறுதி எடுக்கும் போது இக்குற்றத் தழும்பை ஒழிக்க முடியும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஆயுதம் தாங்கிய மோதல்களில் பாலியல் வன்முறைஎன்ற தலைப்பில் நடைபெறும் ஆப்ரிக்கக் கூட்டத்தையொட்டி எத்தியோப்பிய நாட்டு அதிஸ் அபாபாவில் நிருபர் கூட்டத்தில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் இவ்வாறு கூறினார்.
ஆயுதம் தாங்கிய மோதல்களில் இடம் பெறும் பாலியல் வன்முறைகளை நிறுத்துவதிலும் பெண்களுக்கு உரிமைகள் வழங்குவதிலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதில் உலகில் முன்னேறி வரும் நாடுகளில் ஆப்ரிக்க நாடுகளும் உள்ளடங்கும் என்றார் அவர்.
1992க்கும் 95க்கும் இடைப்பட்ட காலத்தில் போஸ்னியாவில் சண்டை நடந்த போது 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் பெண்கள் கற்பழிப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர் என்று ஐ.நா.அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

8. ப்ரெஞ்ச் அரசியல் அமைப்பு அவை ஒரே பாலினத் திருமணங்களைத் தடை செய்திருப்பது அரசியல் அமைப்பை எந்த விதத்திலும் மீறுவதாக இல்லை

பிப்.01,2011. பிரான்சில் ஒரே பாலினத் திருமணங்களைத் தடை செய்திருப்பது அந்நாட்டு அரசியல் அமைப்பை எந்த விதத்திலும் மீறுவதாக இல்லை என்று ப்ரெஞ்ச் அரசியல் அமைப்பு அவை அறிவித்தது.
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான ஐக்கியமே திருமணம் என்று ப்ரெஞ்ச் அரசியல் அமைப்பின் 75 மற்றும் 144 எண்கள் கூறுவதைச் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏழு நீதிபதிகள் கொண்ட குழு.
எனினும் பிரான்சில் 2006ம் ஆண்டில் எடுத்த ஆய்வின்படி 58 விழுக்காட்டினர் ஒரே பாலினத் திருமணத்தை ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது.
பெல்ஜியம், ஹாலந்து, நார்வே, சுவீடன், ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் ஒரே பாலினத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது 

9. 22 ஆண்டுகளுக்கு பின் மியான்மாரில் நாடாளுமன்றம் கூடியது

பிப்.01,2011. மியான்மார் வரலாற்றில், இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின் இத்திங்களன்று முதன் முறையாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அந்நாட்டின் நிர்வாகத் தலைநகரான Naypyitaw ல் கூடின. இந்த முதல் கூட்டத்தில், நாட்டின் புதிய அரசியல் சாசனம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 50 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த இராணுவ ஆட்சி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம், நாடு முழுவதும் 14 மாகாண சட்டசபைகளும் முதன் முறையாகக் கூடின.
மியான்மாரில் 1962ம் ஆண்டிலிருந்து இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி, பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அவுங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளில், இராணுவத் தலைமையால் இயக்கப்படும் ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி(யு.எஸ்.டி.பி.,) பெரும்பான்மை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் இத்திங்களன்று முதன் முதலாக அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டம் துவங்கியது. மொத்தம் 440 இடங்கள் கொண்ட கீழவையும், 224 இடங்கள் கொண்ட மேலவையும் ஒரே நேரத்தில் துவங்கின.
அவுங் சான் சூச்சி கட்சி தேர்தலில் பங்கேற்காததால் அதன் உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை. கூட்ட நடவடிக்கைகளைப் பார்வையிட பத்திரிகையாளர்கள், அரசியல் நிபுணர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

10. பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருக்கலைப்பை எதிர்க்கின்றனர்

பிப்.01,2011. பிரேசில் நாட்டில் இச்செவ்வாயன்று பணிப்பிரமாணம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருக்கலைப்பைச் சட்டமாக்குவதற்கு எதிரானவர்கள் என்று புதிய கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.
பிரேசிலின் 513 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியில், 52.4 விழுக்காட்டினர் தாங்கள் கத்தோலிக்கர் எனவும் தாங்கள் கருக்கலைப்பை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...