Saturday, 5 February 2011

Catholic News - hottest and latest - 04 Feb 2011

1. திருத்தந்தை : ஐந்து புதிய ஆயர்களுக்குத் திருப்பொழிவு

2. இந்தியத் திருச்சபை தைரியமாக இருக்குமாறு திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி அழைப்பு

3. தேவநிந்தனைச் சட்டங்களில் மாற்றங்களைப் பரிந்துரைத்த மசோதா திரும்பப்பெறப் பெற்றுள்ளதற்கு பேராயர் கவலை

4. வட ஆப்ரிக்க ஆயர்கள் : டுனிசியா மற்றும் எகிப்தின் தற்போதையப் போராட்டங்கள் சுதந்திரம் மற்றும் மனித மாண்புக்கானவை

5. கருக்கலைப்புக்கு எதிராகச் சிறைக்குச் செல்வதற்கும் தயார்- பிலிப்பைன்ஸ் ஆயர்கள்

6. கென்யாவில் புலம் பெயர்ந்த மக்களின் நலனில் அக்கறை காட்டுமாறு ஆயர்கள் அரசுக்கு வேண்டுகோள்

7. இலங்கை குடியரசு தினம்

8. டாக்கா புதிய விமான நிலையம் குறித்து பொது மக்கள் கருத்து தேவை ஆயர் ரொசாரியோ

9. பிப்ரவரி 4, சர்வதேச புற்றுநோய் தினம்

10. குற்றவாளிகளைப் பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஐந்து புதிய ஆயர்களுக்குத் திருப்பொழிவு

பிப்.04,2011. இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் ஐந்து புதிய ஆயர்களுக்குத் திருப்பொழிவு வழங்குவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாகிஸ்தானுக்கானப் புதிய தூதர் பேருட்திரு எட்கர் பேனா பாரா, திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்தின் புதிய செயலர் சீனரான ஹாங்காங்கின் பேருட்திரு சாவியோ ஹோன் தாய்ஃபாய், இந்தோனேசியாவுக்கானத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள 48 வயது பேருட்திரு அந்தோணியோ குய்தோ ஃபிலிப்பாட்சி, திருப்பீட புனிதர்கள் பேராயச் செயலர் பேருட்திரு மார்ச்செல்லோ பார்த்தோலூச்சி, திருப்பீட குருக்கள் பேராயச் செயலர் பேருட்திரு செல்சோ மோர்கா ஆகிய ஐந்து பேருக்குத் திருப்பொழிவு வழங்குவார் திருத்தந்தை
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி 5 ஆயர்களுக்கும் 2009ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி 5 ஆயர்களுக்கும் திருப்பொழிவு வழங்கியுள்ளார்.

2. இந்தியத் திருச்சபை தைரியமாக இருக்குமாறு திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி அழைப்பு

பிப்.04,2011. இந்தியத் திருச்சபை நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதத்தினரோடு மேற்கொண்டு வரும் உரையாடலை விட்டுவிடாமல் ஏழைகள் மத்தியிலான பணியையும் தொடர்ந்து செய்யுமாறு வத்திக்கான் பிரதிநிதி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் சமூகப் போதனைகள் என்ற தலைப்பில் புது டில்லியில் இவ்வியாழனன்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் கோர்மாக் மர்ஃபி ஒக்கானர், பயப்படாமல் தைரியத்துடன் செயல்படுமாறும் கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1986ம் ஆண்டு இந்தியாவில் மேற்கொண்ட முதல் திருப்பயணத்தின் 25ம் ஆண்டு நினைவைக் கொண்டாடத் திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதியாக தற்போது இந்தியாவில் பத்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இங்கிலாந்து  கர்தினால் ஒக்கானர்.
இம்மாதம் 11ம் தேதி உரோம் திரும்பு முன்னர் இராஞ்சி, கல்கத்தா, கொச்சின், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறும் விழா நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார்.
மறைந்த இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் உருவச் சிலையையும் அவர் இப்புதனன்று திறந்து வைத்தார்.

3. தேவநிந்தனைச் சட்டங்களில் மாற்றங்களைப் பரிந்துரைத்த மசோதா திரும்பப்பெறப் பெற்றுள்ளதற்கு பேராயர் கவலை

பிப்.04,2011 பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டங்களில் மாற்றங்களைப் பரிந்துரைத்து மசோதாவைச் சமர்ப்பித்த ஒருவர் அதனைத் திரும்பப் பெறுவதற்கு நிர்ப்பந்தப்படுத்திய  அரசின் தீர்மானத்தை வன்மையாய்க் கண்டித்துள்ளார் அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்.
பாகிஸ்தான் அரசு, தேவநிந்தனைச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும்  கொண்டுவருவதற்கு ஒருபொழுதும் எண்ணியது கிடையாது மற்றும் இந்த தேவநிந்தனைச் சட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கானக் கமிட்டியையும் அரசு கலைத்துள்ளது என்று பிரதமர் Yousaf Raza Gilani  இப்புதனன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த மசோதாவைத் தாக்கல் செய்த Sherry Rehman அதனைத் திரும்பப் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளார் என்றும் பிரதமர் அறிவித்தார்.
இசுலாமியக் கட்சிகளின் வற்புறுத்தல்களுக்கு உடன்பட்டது தவறு என்றுரைத்த பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா, இந்தப் பிரச்சனைக்குரிய சட்டங்களில் அண்மை எதிர்காலத்தில் மாற்றங்கள் இடம் பெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கவலை தெரிவித்தார். 
எனது கட்சியின் தீர்மானத்திற்குப் பணிவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இம்மசோதாவைப் பரிந்துரைத்த ரெஹ்மான் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டங்கள் தொடர்பான வன்முறைகளில் 1,392 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரசு-சாரா அமைப்புகள் கூறுகின்றன.

4. வட ஆப்ரிக்க ஆயர்கள் : டுனிசியா மற்றும் எகிப்தின் தற்போதையப் போராட்டங்கள் சுதந்திரம் மற்றும் மனித மாண்புக்கானவை

பிப்.04,2011. டுனிசியா மற்றும் எகிப்தில் தற்போது இடம் பெற்று வரும் போராட்டங்கள் சுதந்திரம் மற்றும் மனித மாண்புக்கானப் போராட்டங்கள் என்று வட ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை அல்ஜியர்ஸ் நகரில் இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
டுனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, லிபியா, மேற்கு சஹாரா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் அல்ஜியர்ஸ் நகரில் நடத்திய ஆண்டுக் கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில், சுதந்திரம் மற்றும் மனித மாண்பை வலியுறுத்துவதில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே எவ்வித வேறுபாடும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
வறுமை மற்றும் சர்வாதிகாரிகளின் ஊழல்களின் பாதிப்புக்களால் இடம் பெற்று வரும் இப்போராட்டங்கள் அரசியல் அமைப்புகளையே அசைத்துள்ளன என்றும் கூறும் ஆயர்களின் அறிக்கை, முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சேர்ந்து போராடுவது சர்வதேசப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறுகின்றது.
எகிப்தில் சுமார் முப்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை வெளியேற்றும் நாளாக இவ்வெள்ளியன்று தலைநகர் கெய்ரோவில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்ட்டதில் இறங்கினர்.
மேலும், ஏமனிலும் சுமார் 32 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபர் Ali Abdallah Saleh பதவி விலக வேண்டும், சனநாயகச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சானா நகரில் இப்புதனன்று இருபதாயிரத்துக்கு அதிகமானோர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

5. கருக்கலைப்புக்கு எதிராகச் சிறைக்குச் செல்வதற்கும் தயார்- பிலிப்பைன்ஸ் ஆயர்கள்

பிப்.04,2011. பிலிப்பைன்சில் கருக்கலைப்புக்கு ஆதரவானச் சட்டம் கொண்டுவரப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளவேளை அதனை நிறுத்துவதற்குச் சிறைக்கும் செல்வதற்கும் தயாராக இருப்பதாக அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
இனப்பெருக்கம் பற்றிய நலவாழ்வு மசோதா, சட்டமாக அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறும் பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Arturo Bastes, இதற்கு எதிராக அரசுக்கு ஒத்துழையாமை போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசின் இந்த அறநெறிக்கெதிரான செயலுக்கு எதிராகக் குருக்களும் ஆயர்களும் சிறை செல்லவும் தயார் என்றும் ஆயர் கூறினார்.
பிலிப்பைன்சில் கருக்கலைப்புக்கு ஆதரவாக நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச அமைப்புகள், அரசுக்கு 90 கோடி டாலருக்கு மேற்பட்ட நிதி உதவி வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

6. கென்யாவில் புலம் பெயர்ந்த மக்களின் நலனில் அக்கறை காட்டுமாறு ஆயர்கள் அரசுக்கு வேண்டுகோள்

பிப்.04,2011. ஆப்ரிக்க நாடான கென்யாவில் 2008ம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இடம் பெற்ற வன்முறையின் போது நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த மக்களின் நிலைமைகளை அரசு கவனத்தில் கொள்ளுமாறு அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் அரசை மீண்டும் கேட்டுள்ளனர்.
இந்த வன்முறை முடிவுற்று மூன்று ஆண்டுகள் ஆகியும், இந்தப் புலம் பெயர்ந்த மக்களின் துன்பமும் நோய்களும் வறுமையும் ஏமாற்றங்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்று கென்ய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் பேராயர் சக்கேயுஸ் ஒக்கோத் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
ஒவ்வொரு மனிதனும் தனது அடிப்படையான மாண்பு மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறான் என்று கென்ய அரசியல் அமைப்பு எண் 28 கூறுவதைச் சுட்டிக் காட்டும் அவ்வறிக்கை, புலம் பெயர்ந்த மக்கள் மீதான அரசின் நிலைப்பாடு, அந்நாட்டு அரசியல் அமைப்பை மீறுவதாக இருக்கின்றது என்று தெரிவிக்கிறது.
கென்யாவில் 2007ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளை முன்னிட்டு 2008ல் இடம் பெற்ற வன்முறையில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பெருமளவான  சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

7. இலங்கை குடியரசு தினம்

பிப்.04,2011. இலங்கையில் இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட குடியரசு தினம், அந்நாட்டில் அமைதி, ஒப்புரவு, ஒன்றிப்பு, சுதந்திரம் ஆகியவற்றைக் கொண்டுவருவதற்கு தூண்டுதலாக அமையும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டனர் அந்நாட்டுக் கத்தோலிக்கர்.
1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிரித்தானியரிடமிருந்து விடுதலை அடைந்ததன் 63ம் ஆண்டை இவ்வெள்ளியன்று சிறப்பித்தது இலங்கை.
இந்தக் குடியரசு தினக் கொண்டாட்டம் அந்நாட்டில் 133 வருட பிரித்தானிய ஆட்சியை முறியடித்தது மட்டுமல்லாமல் உண்மையான அமைதியில் நாடு வாழ்வதற்கான வாய்ப்பாகவும் அமைகின்றது என்றார் கத்தோலிக்க ஆசிரியர் நலின் பெர்னாண்டோ. 
இலங்கையில் கடந்த இருபது ஆண்டுகளில் 14 பத்தரிகையாளர் கொல்லப்பட்டுள்ளனர்

8. டாக்கா புதிய விமான நிலையம் குறித்து பொது மக்கள் கருத்து தேவை ஆயர் ரொசாரியோ

பிப்.04,2011. பங்களாதேஷில் திட்டமிடப்பட்டு வரும் புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைக்கும் இடம் குறித்து அறிஞர்கள், அரசியல்வாதிகள் உட்பட பொது மக்களின் கருத்துக் கேட்கப்பட வேண்டும் என்று அந்நாட்டுத் திருச்சபையின் சமூகத் தொடர்பு ஆணையத் தலைவர்ஆயர் கெர்வாஸ் ரொசாரியோ கூறினார்.
நவீன வசதிகளுடன் புதிய விமான நிலையம் அமைப்பது நாட்டிற்கு நல்லது, அதிக மக்களுக்கு வேலை கிடைக்கும், எனினும் இடத்தைத் தேர்வு செய்வதில் அரசு விவேகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஆயர் ரொசாரியோ கூறினார்.
டாக்காவுக்குத் தெற்கே 11,500 ஏக்கர் சதுப்பு நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்தப் பரிந்துரை வெளியானதைத் தொடர்ந்து இந்தச் சனவரி 31ம் தேதி வன்முறை எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. இதனையடுத்து ஆயர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

9. பிப்ரவரி 4, சர்வதேச புற்றுநோய் தினம்

பிப்.04,2011. ஒரு வாரத்தில் சுமார் 150 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்தால் மார்பு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களைத் தவிர்க்க முடியும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் இவ்வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தது.
இவ்வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட உலக நலவாழ்வு நிறுவனம், புற்று நோய், உலகில் இடம் பெறும் இறப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது என்று கூறியது.
2005க்கும் 2015க்கும் இடைபட்ட காலத்தில் உலகில் புற்று நோயால் சுமார் எட்டு கோடியே நாற்பது இலட்சம் பேர் இறப்பார்கள் என்றும் உலகில் இரண்டு ஆண்களுக்கு ஒருவர் மற்றும் மூன்று பெண்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தங்கள் வாழ்நாளில் புற்று நோயால் பாதிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர் என்றும் அந்நிறுவனம் கூறியது.
ஆரோக்யமான வாழ்க்கைத் தரத்தை மேற்கொண்டால் பிரிட்டனில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய எண்பதாயிரம் புற்று நோய் இறப்புகளைத் தவிர்க்க முடியும்  என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஆண்டுதோறும் சுமார் மூன்று இலட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் இந்நோயால் இறக்கின்றனர்   

10. குற்றவாளிகளைப் பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு

 பிப்.04,2011. "குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,'' என, சர்வதேச காவல்துறையின் பொதுச் செயலர்  ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார்.
சந்தேகத்திற்குரியவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் சர்வதேச காவல்துறையின் உதவியை நாடுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
"இன்டர்போல்' என்னும் சர்வதேச காவல்துறை அமைப்பு மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து, குற்றவாளிகளை எளிதில் கண்டறிகிறது. ரெட் கார்னர் நோட்டீசின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாடுகளில், இந்தியா மிக முக்கியமானது என்றும் நோபிள் கூறினார்.
குற்றவாளிகளை கண்டறியவும், அவர்களைப் பிடித்துக் கொண்டு வரவும், நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை பிடித்துத் தருவது தொடர்பான ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். சர்வதேச காவல்துறையின்ர் மூலம், ஒரு குற்றவாளி பற்றி ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கும் போது, அந்த குற்றவாளி எளிதில் சுதந்திரமாக நாடுகளுக்கு இடையே உலவிட முடியாது என்றார் அவர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...