1. திருத்தந்தை : இன்றும் உலகம் கடவுளைத் தேடுவதால் இக்காலம் பணிக்கான நேரம்
2. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இவ்வாண்டு தபக்காலத் தியானம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பற்றிய சிந்தனைகளையும் உள்ளடக்கியிருக்கும்
3. வத்திக்கான், உயிர்அறநெறியியல் குறித்த புதிய கையேட்டை வெளியிடவுள்ளது
4. எகிப்திய மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துள்ளது - கர்தினால் நகுய்ப்
5. ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனம் : எகிப்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுகோள்
6. ஆப்கான் அகதிகள் குறித்த ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைக்கு ஆயர்கள் பாராட்டு
7. கியூபாவில் மேலும் இரண்டு அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் - ஹவானா கர்தினால்
8. ஐ.நா.அகதிகள் அமைப்பு : பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இடம் பெறும் மோதல்களில் 90,000 பேர் புலம் பெயரக்கூடும்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை : இன்றும் உலகம் கடவுளைத் தேடுவதால் இக்காலம் பணிக்கான நேரம்
பிப்.05,2011. திருச்சபையின் மேய்ப்பர்கள் காலத்தின் போக்கிற்கு வளைந்து கொடுக்காமல், உறுதியாக இருந்து தங்கள் வாழ்க்கையால் சாட்சியம் பகருமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் ஐந்து புதிய ஆயர்களுக்குத் திருப்பொழிவு செய்தத் திருப்பலியை நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்வின் நான்கு அடிப்படைக் கூறுகள் பற்றி விளக்கினார்.
உண்மையின் வறுமையிலிருந்து மக்களை விடுவிக்கும் உண்மையின் ஒளிக்கு அவர்களை அழைத்து வருவதற்கானப் பணிக்கான நேரம் இது என்றும் திருத்தந்தை கூறினார்.
இன்றும் உலகம் கடவுளைத் தேடுவதால் இக்காலம் பணிக்கான நேரம் என்று ஐந்து புதிய ஆயர்களிடம் உரைத்தத் திருத்தந்தை, இக்காலத்தின் கொந்தளிக்கும் கடல்களில் நற்செய்தி வலைகளை வீச வேண்டியது இவர்களது பணி என்று கூறினார்.
இன்றைய நவீன உலகின் பெரும் பகுதி கடவுளைவிட்டுத் தூரமாகச் செல்வது போன்றும் விசுவாசம் கடந்த காலத்தின் ஒரு பொருளாக நோக்கப்படுவது போல் தெரிந்தாலும் நீதி, அன்பு, அமைதி ஆகியவற்றுக்காக ஏங்குவோரையும் வறுமையும் துன்பங்களும் அகன்று மகிழ்ச்சியுடன் வாழ விரும்பும் மக்களையும் காண முடிகின்றது என்றார் அவர்.
பக்தி, தளரா ஊக்கம், கிறிஸ்தவராக இருப்பதன் சாரம், ஆண்டவரின் அறுவடையில் பணியாளர்களாக இருப்பது ஆகிய நான்கும் இயேசு கிறிஸ்துவின் திருச்சபையில் அடிப்படைக் கிறிஸ்தவக் கூறுகளாக இருக்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.
திருத்தூதர்களின் போதனைகளைப் பேணிக் காத்தல், திருச்சபை வாழ்வின் தூணாக இருக்கும் ஒன்றிப்பு, திருச்சபையின் அடிப்படைக் கூறான அப்பம் பிடுதல்- திருநற்கருணை, திருச்சபை வாழ்வின் தூணாக அமைந்துள்ள செபம் ஆகிய நான்கு கூறுகள் குறித்தும் விரிவாகத் தனது மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
பாகிஸ்தானுக்கானப் புதிய தூதர் பேருட்திரு எட்கர் பேனா பாரா, திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்தின் புதிய செயலர் சீனரான ஹாங்காங்கின் பேருட்திரு சாவியோ ஹோன் தாய்ஃபாய், இந்தோனேசியாவுக்கானத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள 48 வயது பேருட்திரு அந்தோணியோ குய்தோ ஃபிலிப்பாட்சி, திருப்பீட புனிதர்கள் பேராயச் செயலர் பேருட்திரு மார்ச்செல்லோ பார்த்தோலூச்சி, திருப்பீட குருக்கள் பேராயச் செயலர் பேருட்திரு செல்சோ மோர்கா ஆகிய ஐந்து பேருக்கு ஆயர் திருப்பொழிவு வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி 5 ஆயர்களுக்கும் 2009ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி 5 ஆயர்களுக்கும் திருப்பொழிவு வழங்கியுள்ளார்.
2. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இவ்வாண்டு தபக்காலத் தியானம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பற்றிய சிந்தனைகளையும் உள்ளடக்கியிருக்கும்
பிப்.05,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உட்பட திருப்பீடத் தலைமையக அதிகாரிகளின் இவ்வாண்டு தபக்காலத் தியானம் மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பற்றிய சிந்தனைகளையும் உள்ளடக்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கானில் வருகிற மார்ச் 13 முதல் 19 வரை நடைபெறும் இந்த ஆன்மீகத் தியானம், “திருச்சபையின் இதயத்தில் கிறிஸ்துவின் ஒளி- திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மற்றும் புனிதர்களின் இறையியல்” என்ற தலைப்பில் இடம் பெறும்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருப்பீடத் தலைமையக உறுப்பினர்கள் மற்றும் பிறத் திருச்சபை அதிகாரிகள் செய்யும் இவ்வாண்டுத் தியானத்தை கார்மேல்சபை அருட்தந்தை François-Marie Léthel வழிநடத்துவார். ப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இவர், தெரேசியானம் பாப்பிறை இறையியல் மற்றும் ஆன்மீகப் பல்கலைகழகத்தில் பேராசிரியராவார்.
3. வத்திக்கான், உயிர்அறநெறியியல் குறித்த புதிய கையேட்டை வெளியிடவுள்ளது
பிப்.05,2011. உயிரணுக்கள் குறித்த ஆராய்ச்சி, இனப்பெருக்கத் தொழிற்நுட்பம் போன்ற உயிர்அறநெறியியல் விவகாரங்களில் வழிமுறைகளைக் கொண்ட புதிய கையேட்டை வெளியிடுவதற்கு திருப்பீட நலவாழ்வுத்துறைத் தயாரித்து வருகிறது.
இந்தக் கையேடு குறித்துப் பேசிய திருப்பீட நலவாழ்வுத்துறைச் செயலர் ஆயர் José Redrado, நலவாழ்வுப் பணியாளர்கள், மரணக் கலாச்சாரத்திற்கு எதிராய்ச் செயல்படுவதற்கு இக்கையேடு உதவும் என்றார்.
மேலும், எய்ட்ஸ் நோய்க் குறித்த ஒருநாள் கருத்தரங்கு வருகிற மே 28ம் தேதி நடைபெறும் என்றும், எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் பணியாற்றும் கத்தோலிக்க நலவாழ்வுப் பணியாளர்களுக்கென உதவும் கையேடு ஒன்று அதன் முடிவி்ல வெளியிடப்படும் என்றும் திருப்பீட நலவாழ்வுத்துறையின் நேரடிப் பொதுச் செயலர் பேரருட்திரு Jean-Marie Mpendawatu கூறினார்
இந்த மே கருத்தரங்கு, வருகிற ஜூலை 17 முதல் 20 வரை உரோமையில் நடைபெறும் எய்ட்ஸ் குறித்த ஆறாவது சர்வதேச கருத்தரங்கிற்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்..
4. எகிப்திய மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துள்ளது - கர்தினால் நகுய்ப்
பிப்.05,2011. எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி பத்து நாட்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பித் தொழில்களைத் தொடங்குமாறு அந்நாட்டு அலெக்ஸாந்திரியக் காப்டிக்ரீதி கத்தோலிக்கப் பிதாப்பிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எகிப்து நாட்டு வரலாற்றின் இடர்செறிந்த இந்த நேரத்தைக் கத்தோலிக்கத் திருச்சபை தனது இதயத்தில் தாங்கியுள்ளது என்று கூறிய முதுபெரும் தலைவர் கர்தினால் அந்தோணியோஸ் நகுய்ப், நாடு இழந்துள்ள சேதத்திலிருந்து எழும்பி மீண்டும் கட்டி எழுப்பப்படுவதற்கு உதவியாக மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துள்ளது என்று கூறினார்.
எகிப்தில் அமைதியும் உறுதியான தன்மையும் ஏற்படவும் நாட்டுத் தலைவர்கள் விவேகமும் புரிந்துணர்வும் கொண்டு நாட்டை வழிநடத்தவும் இறைவனிடம் செபிப்பதாகவும் கர்தினால் கூறியுள்ளார்.
எகிப்து நாட்டை ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் 82 வயதாகும் அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமானப் பொருட்சேதமும் ஆட்சேதமும் ஏற்பட்டுள்ளன. இவ்வெள்ளிக்கிழமை மட்டும் கெய்ரோவில் சுமார் ஒரு இலட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எகிப்தின் எட்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். இவர்களில் பெரும்பாலானோர் சுன்னிப் பிரிவு இசுலாமைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவர்கள் பத்து விழுக்காட்டினர் மட்டுமே.
5. ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனம் : எகிப்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுகோள்
பிப்.05,2011. எகிப்தில் இடம் பெறும் அதிர்ச்சியூட்டும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலர்களும் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு ஐ.நா. மனித உரிமைகள் நிறுவன உயர் இயக்குனர் நவநீதம்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போராட்டதாரர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து பாதுகாக்கப்படுவது உட்பட மொத்தத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு ஜெனீவாவில் நிருபர் கூட்டத்தில் கூறினார் நவநீதம்பிள்ளை .
அரசுகள் தங்கள் மக்களுக்குச் செவிமடுத்து அவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்று நவநீதம்பிள்ளை மேலும் கூறினார்
6. ஆப்கான் அகதிகள் குறித்த ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைக்கு ஆயர்கள் பாராட்டு
பிப்.05,2011. ஆஸ்திரேலியாவில் ஆப்கான் அகதிகள் குறித்து ஆஸ்திரேலிய அரசுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள புதிய உடன்பாட்டை வரவேற்றுள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.
அகதிகளை நாட்டை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றும் கடுமையான கொள்கைகள் தளர்த்தப்படும் என்ற நம்பிக்கையையும் ஆஸ்திரேலிய ஆயர்களின் அகதிகள் மற்றும் குடியேற்றதாரர் அலுவலகம் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானில் கடும் அடக்குமுறைக்கு உள்ளாகும் அந்நாட்டு ஹஜாரா சிறுபான்மை சமூகம், சட்டரீதியான அகதிகள் நிலையைக் கொண்டிராமல் இருந்தாலும், அவர்கள் ஆஸ்திரேலியாவை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்படமாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும் அந்த அலுவலகம் கூறியது.
7. கியூபாவில் மேலும் இரண்டு அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் - ஹவானா கர்தினால்
பிப்.05,2011. கியூபாவில் மேலும் நான்கு அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தலைநகர் ஹவானா கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அலமினோ கூறினார்.
பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை தொடர்ந்து செயல்பட்டு வரும்வேளை, சுமார் அறுபது அரசியல் கைதிகள் விடுதலையாகி ஸ்பெயினுக்குச் செல்வதற்கு இசைவு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
தற்சமயம் மேலும் 4 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தலத்திருச்சபை கூறியுள்ளது.
இந்த நான்கு பேரில் ஒருவரானவும், ஸ்பெயினுக்குச் செல்ல மறுத்த முக்கிய அரசியல் கைதியுமான Guido Sigler என்பவரை இச்சனிக்கிழமை அரசு விடுவித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
8. ஐ.நா.அகதிகள் அமைப்பு : பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இடம் பெறும் மோதல்களில் 90,000 பேர் புலம் பெயரக்கூடும்
பிப்.05,2011. பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் Mohmand இனப் புரட்சியாளர்க்கு எதிரான இராணுவ நடவடிக்கைத் தீவிரப்படுத்தப்பட்டால் இம்மாத இறுதிக்குள் 90,000 பேர் புலம் பெயரக்கூடும் என்று ஐ.நா.அகதிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக அளவில் அகதிகளின் உரிமைகளுக்கும் நல்வாழ்வுக்குமென உழைத்து வரும் UNHCR என்ற ஐ.நா.அகதிகள் அமைப்பு, அப் பகுதியில் இடம் பெறும் மோதல்களினால் ஏற்கனவே சுமார் 25 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று கூறியது.
பாகிஸ்தானில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இடம் பெற்ற மோதல்களினால் சுமார் பத்து இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் Mohmand இனத்தவர் சுமார் 1,40,000 பேர் என்று ஐ.நா. கூறியது.
No comments:
Post a Comment