Monday 14 February 2011

Catholic News - hottest and latest - 12 Feb 2011

1. திருத்தந்தை : குருத்துவத்தின் மகிமையும் மகிழ்ச்சியும் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பணி செய்வதாகும்
 
2. உலக அளவில் குருக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, வத்திக்கான் அறிக்கை
 
3. தலத்திருச்சபை : எகிப்தியர்கள் நல்லதோர் வருங்காலத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்
 
4. ஈராக் பேராயர் : இசுலாம்மயமாதல் முன்வைக்கும் அச்சுறுத்தலை மேற்கத்திய உலகால் புரிந்து கொள்ள முடியாது
 
5. எகிப்தின் விடியல், அரபு நாடுகளில் அச்சம்
 
6. கொலம்பிய ஆயர்கள் : அமைதிப் பேச்சுவார்த்தையில் இடைநிலை வகிக்கத் திருச்சபை தயார்.
 
7. மதுபானங்கள் தொடர்புடைய இறப்புக்களைத் தடுப்பதற்கு அரசுகளுக்கு வேண்டுகோள்
 
8. ருவாண்டாவில் ஏழு இலட்சம் ஆண்களுக்கு கருவளக்கேடு செய்யும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த PRI முயற்சி
 
9. சிவகங்கையில் திறந்தவெளி சிறை: ஏப்ரலில் திறப்பு: 150 கைதிகள் தேர்வு
 
 
----------------------------------------------------------------------------------------------------------------
 
1. திருத்தந்தை : குருத்துவத்தின் மகிமையும் மகிழ்ச்சியும் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பணி செய்வதாகும்
 
பிப்.12,2011. குருத்துவத்தின் மகிமையும் மகிழ்ச்சியும் கிறிஸ்துவுக்கும் அவரது மறையுடலாம் திருச்சபைக்கும் பணி செய்வதாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித சார்லஸ் மறைபோதகர்களின் சகோதரத்துவ குருக்கள் அமைப்பின் பொது அவையில் பங்கு பெற்ற 400 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருச்சபையின் வாழ்வில் திருநிலைபடுத்தப்பட்ட குருக்களின் இடம் என்ன? ஒன்றிணைந்த குழு வாழ்வில் குருக்களின் அனுபவம் என்ன? ஆகிய இரண்டு கருத்துக்கள் குறித்துத் தான் விளக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
குருத்துவம் கிறிஸ்துவின் நித்திய குருத்துவத்தின் அங்கம் என்பதால் இந்த வாழ்வுக்கான அழைத்தல், திருச்சபையில் மிக நேர்த்தியான மற்றும் தனித்துவம் கொண்ட அழைப்பு என்று கூறிய அவர், உண்மையான மற்றும் பலனுள்ள குருத்துவம் இன்றி திருச்சபையில் உண்மையான வளர்ச்சி இருக்காது என்று கூறினார்.
இவ்வேளையில் குருத்துவப் பயிற்சிக்குத் தங்களை அர்ப்பணித்துள்ள அனைவர்க்கும் தனது நன்றியைத் தெரிவித்தத் திருத்தந்தை, திருச்சபை முழுவதிலும் குருத்துவ வாழ்வு தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்தப் புதுப்பித்தலுக்குச் செபம், தியானம், புனிதர்களின் போதனைகள், குறிப்பாகத் திருச்சபைத் தந்தையரின் போதனைகளைத் தியானித்தல், திருவருட்சாதன வாழ்வைப் பிரமாணிக்கத்துடன் வாழ்தல் போன்றவை இன்றியமையாதவை என்றும் திருத்தந்தை கூறினார்.
குருக்கள் குழுவாக வாழ்வதன் நன்மை குறித்து புனித சார்லஸ் சகோதரத்துவ அமைப்பு கோடிட்டுக் காட்டுகிறது என்றுரைத்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தூதர்களின் அனுபவம் குருத்துவ வாழ்வுக்கு புளிக்காரமாகவும் ஒளியாகவும் இருக்கட்டும் என்றும் வாழ்த்தினார்.
 
2. உலக அளவில் குருக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, வத்திக்கான் அறிக்கை
 
பிப்.12,2011.  மேலும், உலக அளவில் குருக்களின் எண்ணிக்கை 1999ம் ஆண்டில் இருந்ததைவிட 2009ம் ஆண்டில் 5,000த்துக்கும் அதிகமாக இருந்தது என்று  திருச்சபையின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் 2009ம் ஆண்டில் குருக்களின் எண்ணிக்கை 4,10,593 ஆக இருந்தது என்றும் இவ்வெண்ணிக்கை 1999ம் ஆண்டில் 4,05,009 ஆக இருந்தது என்றும் அப்புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காலக் கட்டத்தில் மறைமாவட்ட குருக்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு மேல் அதிகரித்ததாகவும் துறவற சபைகளைச் சார்ந்த குருக்களின் எண்ணிக்கை சுமார் 5,000 மாகக் குறைந்தது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வட அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய பகுதிகளில் மறைமாவட்ட மற்றும் துறவற சபைக் குருக்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும் ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் இவ்வெண்ணிக்கை முப்பது விழுக்காட்டுக்கு மேலாக அதிகரித்ததாகவும் வத்திக்கான் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
 
3. தலத்திருச்சபை : எகிப்தியர்கள் நல்லதோர் வருங்காலத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்
 
பிப்.12,2011 எகிப்து மக்கள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் நல்லதோர் எதிர்காலத்தை நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்று அந்நாட்டு அலெக்ஸாண்டிரிய காப்டிக் ரீதிக் கத்தோலிக்க முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறினார்.
எகிப்து நாட்டை முப்பது வருடங்களாக ஆட்சி செய்த 82 வயது அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி 18 நாட்களாக நடைபெற்ற பொது மக்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் முபாரக் தான் பதவியைத் துறப்பதாக இவ்வெள்ளி இரவு அறிவித்தார். இதையொட்டி மக்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டனர் மற்றும் பட்டாசுகளைக் கொளுத்தித் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். தற்சமயம் நாடு பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் இராணுவ உயர் அதிகாரிகளின் கைகளில் இருக்கின்றது. 
இந்த நிகழ்வை முன்னிட்டு ZENIT செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த கர்தினால் Naguib, ஒவ்வொரு குடிமகனும் நாட்டில் ஒன்றிணைக்கப்படுவதற்குத் தேசியத் தோழமையுணர்வும் உறுதியான உரையாடலும் அவசியம் என்றார்.
சமுதாய வாழ்வில் பொதுமக்களை ஆர்வமுடன் பங்கெடுக்கத் தூண்ட வேண்டும்  என்றும் அவர்களுக்கு இருக்கும் வாக்களிக்கும் கடமையையும் மற்றும் பிற தேசியக் கடமைகளையும் நினைவுபடுத்த வேண்டும் என்றும் கர்தினால் கூறினார்.
மேலும், ஐ.நா.பொதுச் செயலர், அமெரிக்க அதிபர் உட்பட பல தலைவர்கள் முபாரக்கின் பதவி விலகலை வரவேற்றிருப்பதோடு நாட்டில் சனநாயகம் அமைய வலியுறுத்தியுள்ளனர்.  
 
4. ஈராக் பேராயர் : இசுலாம்மயமாதல் முன்வைக்கும் அச்சுறுத்தலை மேற்கத்திய உலகால் புரிந்து கொள்ள முடியாது
 
பிப்.12,2011. உலகாயுதப் போக்கு கொண்ட மேற்கத்திய உலகு, இசுலாமின் மறுஎழுச்சி மத்திய கிழக்குப் பகுதியில் முன்வைக்கும் அச்சுறுத்தலை முழுமையாகப் புரிந்து கொள்ள திறமையின்றி இருக்கின்றது என்று ஈராக் பேராயர் ஒருவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்குப் பகுதியில் பரவலாக இடம் பெறும் பதட்டநிலைகளின் விளைவுகள் குறித்து இத்தாலிய ஆயர் பேரவையின் SIR செய்தி நிறுவனத்திடம் விளக்கிய கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ, இசுலாமிய சக்திகளும் இயக்கங்களும் மத்திய கிழக்குப் பகுதியை ஷாரியா சட்டங்கள் ஆட்சி செய்யும் இசுலாமிய நாடுகளாக மாற்றுவதற்கு விரும்புகின்றன என்றார்.
ஈராக்கில் செயல்படும் அல-கெய்தா, அன்சார் அல் இசுலாம் போன்ற இசுலாம் தீவிரவாதக் குழுக்கள், பிற மத்திய கிழக்கு நாடுகளில் இசுலாமியத் தாக்கத்தை ஏற்படுத்துமாறு அந்நாடுகளின் குடிமக்களைத் தூண்டி வருகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.
மேலும், எகிப்தில் இடம் பெற்ற போராட்டங்கள் அந்நாட்டின் மிகுதியான சமூக வறுமை மற்றும் அரசியல் நிலைகளுக்கு எதிராக நடந்திருந்தாலும், முஸ்லீம் சகோதரத்துவம் போன்ற அமைப்புமுறை இசுலாமியக் கழகங்கள் இந்தக் குழப்பத்தை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகின்றன என்ற அச்சமும் இருப்பதாக ஈராக் பேராயர் தெரிவித்தார்.
 
5. எகிப்தின் விடியல், அரபு நாடுகளில் அச்சம்
 
பிப்.12,2011. அரபு நாடுகள் எகிப்து நாட்டின் தற்போதைய நிலைமையை வரவேற்றுள்ள போதிலும் சீனா உட்பட பல அரபு நாடுகளில் எகிப்தின் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.  
மேலும், வட ஆப்ரிக்க நாடான அல்ஜீரியத் தலைநகர் அல்ஜியர்ஸில் அரசின் தடையையும் மீறி இச்சனிக்கிழமை காலை நூற்றுக்கணக்கான மக்கள் சனநாயக ஆதரவு போராட்டங்களை மேற்கொண்டனர்.
அல்ஜீரியாவில் 1992ம் ஆண்டிலிருந்து அமலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின்படி பொதுவான ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
எனினும், அந்நாட்டின் அரசுத்தலைவர் Abdelaziz Bouteflika வைக் குறிக்கும் விதமாக, சுமார் 200 போராட்டதாரர்கள்கூடி "Bouteflika !" வெளியேறுக என்ற கோஷங்களை எழுப்பினர்.  
அல்ஜீரியாவில் பாதுகாப்புப் படைகளுக்கும் இசுலாமியப் புரட்சியாளருக்கும் இடையே ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அவ்வப்போது இடம் பெறும் மோதல்களில் 2,50,000 பேர் இறந்துள்ளனர். இந்நாட்டினரும் அதிக சுதந்திரம் மற்றும் நல்லதொரு வாழ்க்கைத்தரத்திற்காக ஏங்கி வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 
 
6. கொலம்பிய ஆயர்கள் : அமைதிப் பேச்சுவார்த்தையில் இடைநிலை வகிக்கத் திருச்சபை தயார்.
 
பிப்.12,2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கும் FARC என்ற கொலம்பிய புரட்சிப் படைக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் நல்லெண்ணத்துடன் இடம் பெறத் தொடங்கியவுடன் தலத்திருச்சபை நடுநிலையாளராகச் செயல்படும் என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் ரூபன் சலசார் கோமெஸ் அறிவித்தார்.
திருச்சபையின் சமூகக் கோட்பாட்டு அடிப்படையில் வழிமுறைகளைக் கொடுத்து உதவுவதற்குத் தலத்திருச்சபை என்றும் தயாராக இருப்பதாக ஆயர் சலசார் கோமெஸ் மேலும் அறிவித்தார்.
கொலம்பியாவில் ஆயுதம் தாங்கிய மோதல்கள் மட்டுமல்ல, வறுமை, செல்வம், நிலம்  பகிரப்படல் போன்ற சமூக மோதல்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்றும் ஆயர் கூறினார்.
 
7. மதுபானங்கள் தொடர்புடைய இறப்புக்களைத் தடுப்பதற்கு அரசுகளுக்கு வேண்டுகோள்
 
பிப்.12,2011. உலகில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 25 இலட்சம் பேர் மதுபானங்கள் அருந்துவதால் இறக்கும்வேளை, இவ்விறப்புக்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசுகள் ஆவன செய்யுமாறு WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் கேட்டுள்ளது.
 
மதுபானங்கள் மற்றும் நலவாழ்வு குறித்த உலகளாவிய நிலைமை குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், வளரும் நாடுகளில் மதுபானங்கள் அருந்துவது இளைய தலைமுறைகள் மத்தியில் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
உலகில் இடம் பெறும் இறப்புக்களில் சுமார் நான்கு விழுக்காடு மதுபானங்கள் தொடர்புடையவை.
காயங்கள், புற்றுநோய், மாரடைப்பு, குடல்புண் போன்ற வியாதிகள் இந்தவித இறப்புக்களுக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆண்கள் இறப்புக்களில் 6.2 விழுக்காடும், பெண்கள் இறப்புக்களில் 1.1 விழுக்காடும் மதுபானங்களோடு தொடர்புடைய நோய்களாகும்.
மதுபானங்களோடு தொடர்புடைய நோய்களால் ஆண்டுதோறும் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 3,20,000 இளையோர் இறக்கின்றனர்.
 
8. ருவாண்டாவில் ஏழு இலட்சம் ஆண்களுக்கு கருவளக்கேடு செய்யும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த PRI முயற்சி
 
பிப்.12,2011. ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் ஏழு இலட்சம் ஆண்களுக்கு கருவளக்கேடு செய்யும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு PRI என்ற மக்கள் தொகை ஆராய்ச்சி நிறுவனம் உறுதியளித்துள்ளது.
எய்ட்ஸ் நோயிலிருந்து ருவாண்ட மக்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் அந்நாட்டு அரசு ஏழு இலட்சம் ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்வதற்கு முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
அரசின் இந்நடவடிக்கையைக் கடுமையாய் எதிர்த்துள்ளார் PRI அமைப்புத் தலைவர் ஸ்டீவென் மோஷர்.  
 
9. சிவகங்கையில் திறந்தவெளி சிறை: ஏப்ரலில் திறப்பு: 150 கைதிகள் தேர்வு
 
பிப்.12,2011. சிவகங்கை மாவட்டத்தில்  இரண்டு கோடி ரூபாய் செலவில், 87 ஏக்கரில் கட்டப்படும் திறந்தவெளி சிறை வருகிற ஏப்ரலில் திறக்கப்படும். இதற்காக விருப்பமான கைதிகள் 150 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி சிறை என்பது, முள்வேலி அமைக்கப்பட்ட நிலத்திற்குள் கைதிகள் விவசாயம் செய்து, பயிர் உற்பத்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் கைதிகளுக்கு மனஅழுத்தம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, சேலத்தில் இச்சிறை உள்ளது. தென்மாவட்டங்களுக்கென சிவகங்கை - இளையான்குடி சாலையில் திறந்தவெளி சிறை அமைக்கப்பட்டு அதைச் சுற்றி, மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியவாயில் பகுதியில் சுற்றுச் சுவர் கட்டப்படவுள்ளது. இங்கு முந்திரி மரங்கள் அதிகம் இருப்பதால், அதை அதிகளவில் சாகுபடி செய்ய சிறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், அனைத்து வகைப் பயிர்களும் சொட்டு நீர் பாசன முறையில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. மேலும், தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இச்சிறை திறப்பு விழா ஏப்ரலில் நடக்கிறது. திறந்தவெளி சிறையில் தங்கி, பயிர் உற்பத்தி செய்ய, ஐந்தாண்டு முதல் பத்தாண்டு தண்டனை அனுபவிக்கும், எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, விருப்பமுடைய கைதிகள் 150 பேர் அனைத்துச் சிறைகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 

No comments:

Post a Comment