1. திருத்தந்தை : ஐரோப்பியக் குடும்பங்கள் மீது அக்கறை
2. அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள அனைவரும், இயேசுவின் வார்த்தைகளுக்குக் கவனமாய் செவிசாய்க்கவும் வேண்டும் - திருத்தந்தை
3. மறைந்தத் திருத்தந்தை இறையடியார் இரண்டாம் ஜான் பால் அவர்களின் உருவச் சிலை புது டில்லியில் திறப்பு
4. எகிப்தில் நடைபெற்றுவரும் போராட்டம் இஸ்லாமிய-கிறிஸ்தவ ஒன்றிப்பைப் பறைசாற்றுவதாய் உள்ளது - கத்தோலிக்க காப்டிக் ரீதி கர்தினால்
5. கர்நாடகாவில் வெளியிடப்பட்ட Somashekhara அறிக்கையை எதிர்த்து மங்களூர் மறைமாவட்டம் மேல்முறையீடு செய்யும்
6. சீனக் கத்தோலிக்கர்கள் மெழுகுதிரிகள் ஏந்திய பவனியுடன் மேற்கொண்ட புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
7. தலித் கிறிஸ்தவர்களைக் கவர கேரளாவின் பொதுவுடைமை கட்சியினரின் முயற்சிகள்
8. 'மக்களுக்கென்று காடுகள்' என்ற மையக் கருத்துடன் அகில உலகக் காடுகள் ஆண்டு ஆரம்பம்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை : ஐரோப்பியக் குடும்பங்கள் மீது அக்கறை
பிப்.03,2011. கலாச்சாரம், வரலாறு மற்றும் மக்களின் தினசரி வாழ்வில் கத்தோலிக்க விசுவாசத்தின் நற்பண்புகள் வேரூன்றப்பட்டிருக்கும் ஆஸ்திரிய நாட்டில் பல்வேறு மதங்களும் கலாச்சாரங்களும் ஒன்றிணைந்த அமைதி வாழ்வைக் கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான ஆஸ்திரிய நாட்டின் புதிய தூதர் அல்போன்சோ குளோசிடமிருந்து இவ்வியாழனன்று நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, ஆஸ்திரியாவின் பழைய நாட்டுப் பண்ணில் காணப்படும், “ஒன்றிப்பிலேயே வல்லமை உள்ளது” என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.
ஐரோப்பிய நாடுகளில் அரசுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவில் ஒருவித பதட்டநிலை காணப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
சமய சுதந்திரத்தை மதிப்பதன் மூலம் சமூகத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தடையின்றி இடம் பெற உதவுகிறோம் என்ற திருத்தந்தை, கல்வி நிறுவனங்கள் பிறரன்பு அமைப்புகள் மூலமானத் திருச்சபையின் பணிகளையும் சுட்டிக் காட்டினார்.
அரசு நிர்வாகத்திலிருப்போர் குடும்பங்கள் குறித்தத் தங்கள் அக்கறையை வெளிப்படுத்தி சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு குடும்பம் மற்றும் திருமணத்திற்கான அரசின் சிறப்புப் பாதுகாப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஆஸ்திரிய தூதர் அல்போன்சோ குளோசிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.
2. அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள அனைவரும், இயேசுவின் வார்த்தைகளுக்குக் கவனமாய் செவிசாய்க்கவும் வேண்டும் - திருத்தந்தை
பிப்.03,2011. கோவிலில் இயேசுவைச் சந்தித்த சிமியோன், அன்னாவைப் போல, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள அனைவரும், இயேசுவின் முகத்தைக் காணவும், அவர் வார்த்தைகளுக்குக் கவனமாய் செவிசாய்க்கவும் வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதனன்று கொண்டாடப்பட்ட அகில உலக அர்ப்பணிக்கப்பட்டோர் நாளன்று புனித பேதுரு பசிலிக்காவில் மாலைத் திருவழிபாடு நடத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
குழந்தை இயேசு கோவிலில் காணிக்கையாக்கப்பட்ட இத்திருநாளன்று, அவரை உலகின் ஒளியாக நற்செய்தி பகர்கின்றது. அந்த ஒளி மரியா, யோசேப்பு, சிமியோன், அன்னா ஆகியோர் மீதும், அவர்கள் மூலமாய் உலகில் உள்ள அனைவர் மீதும் ஒளிர்ந்தது என்றுரைத்தார் திருத்தந்தை.
தியான வாழ்வு மற்றும் செயல்பாடுகள் நிறைந்த வாழ்வு என இருவழிகளில் அர்ப்பணிக்கப்பட்டோர் அழைக்கப்படுகின்றனர் என்றும், இவ்விரு வழிகளிலும் கடவுளைக் காண்பதற்கு துறவறத்தார் அனைவரும் கடவுளின் வார்த்தைகளை கவனமாய் கேட்பதற்கு முயல வேண்டும் என்றும் திருத்தந்தை இம்மாலை திருவழிபாட்டில் எடுத்துரைத்தார்.
3. மறைந்தத் திருத்தந்தை இறையடியார் இரண்டாம் ஜான் பால் அவர்களின் உருவச் சிலை புது டில்லியில் திறப்பு
பிப்.03,2011. புது டில்லியில் உள்ள இயேசுவின் திரு இருதயப் பேராலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்தத் திருத்தந்தை இறையடியார் இரண்டாம் ஜான் பால் அவர்களின் உருவச் சிலையை திருத்தந்தையின் பிரதிநிதியாக இந்தியா சென்றிருக்கும் கர்தினால் Cormac Murphy O'Connor இப்புதனன்று திறந்து வைத்தார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்தியாவில் 1986ம் ஆண்டு மேற்கொண்ட முதல் திருப்பயணத்தின் 25ம் ஆண்டு நினைவைக் கொண்டாட திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதியாக தற்போது இந்தியாவில் பத்து நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் O 'Connor, திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் உருவச்சிலையைத் திறந்து வைத்தபின் திருப்பலியும் நிகழ்த்தினார்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias, இந்திய இலத்தீன்ரீதி ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Telesphore Toppo, பேராயர் Vincent Concessao மற்றும் பிற ஆயர்களுடன் நடத்தப்பட்டத் திருப்பலியில், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இந்த 25ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அனுப்பியிருந்த சிறப்பு செய்தியையும் கர்தினால் O'Connor வாசித்தார்.
திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி இவ்வியாழனன்று இந்தியாவின் அரசுத் தலைவரைச் சந்தித்தபின் மகாத்மா காந்தியின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அடுத்த பத்து நாட்கள் ராஞ்சி, கொல்கத்தா, கொச்சி, மும்பை ஆகிய இடங்களில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் திருப்பயண 25ம் ஆண்டு நினைவாக நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கர்தினால் Murphy O'Connor கலந்து கொள்வார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
4. எகிப்தில் நடைபெற்றுவரும் போராட்டம் இஸ்லாமிய-கிறிஸ்தவ ஒன்றிப்பை பறைசாற்றுவதாய் உள்ளது - கத்தோலிக்க காப்டிக் ரீதி கர்தினால்
பிப்.03,2011. எகிப்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் அந்நாட்டில் மாற்றம் தேவை என்பதை உலகறியச் செய்துள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக எகிப்தின் கெய்ரோ நகரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கும் போராட்டம், அந்நாட்டின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக மாற்றியுள்ளதென்று எகிப்திற்கான வத்திக்கான் தூதர் பேராயர் Michael Fitzgerald, CNA செய்தி நிறுவனத்திற்குத் தொலைபேசி வழியே கூறினார்.
இந்தப் போராட்டங்களில் மதத்தின் சாயல் எதுவும் இல்லையென்றும், இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பேராயர் Fitzgerald கூறினார்.
தற்போது நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம் இஸ்லாமிய-கிறிஸ்தவ ஒன்றிப்பை பறைசாற்றுவதாய் உள்ளதென்று கத்தோலிக்க காப்டிக் ரீதி முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறினார்.
இந்தப் போராட்டத்தைக் காரணமாகக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதம் எகிப்தில் பரவும் ஆபத்து உள்ளதென்று அரசியல் ஆய்வாளர்கள் கூறும் வேளையில், இதுவரை இப்போராட்டத்தில் மத சார்பானவை எதுவும் காணப்படவில்லை என்று கர்தினால் Naguib குறிப்பிட்டார்.
5. கர்நாடகாவில் வெளியிடப்பட்ட Somashekhara அறிக்கையை எதிர்த்து மங்களூர் மறைமாவட்டம் மேல்முறையீடு செய்யும்
பிப்.03,2011. அண்மையில் கர்நாடகாவில் வெளியிடப்பட்ட Somashekhara அறிக்கைக்கு மங்களூர் மறைமாவட்டம் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அது குறித்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் அரசுக்கும், இந்துத் தீவிரவாதக் குழுக்களுக்கும் தொடர்பு இல்லையென்று கூறும் Somashekhara அறிக்கை சென்ற வாரம் வெளியானது.
இந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்றும், இது குறித்து இந்திய அரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அதிகாரப்பூர்வமான எதிர்ப்புக்களைத் தெரிவிக்க உள்ளதாகவும் மங்களூர் மறைமாவட்ட ஆயர் Aloysius Paul D'Souza கூறினார்.
சனவரி 28 அன்று வெளியான இவ்வறிக்கையைக் குறித்து இச்செவ்வாயன்று மங்களூரில் கிறிஸ்தவத் தலைவர்களும், சட்ட வல்லுனர்களும் சந்தித்தபின் இம்முடிவு எடுக்கப்பட்டது என்று கூறிய மங்களூர் ஆயர், இவ்வறிக்கையை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகத் தெரிவித்தார்.
6. சீனக் கத்தோலிக்கர்கள் மெழுகுதிரிகள் ஏந்திய பவனியுடன் மேற்கொண்ட புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
பிப்.03,2011. குளிர் காலத்தின் தீவிரம் அதிகமாய் இருந்தாலும் சீனக் கத்தோலிக்கர்கள் மெழுகுதிரிகள் ஏந்திய பவனியுடனும், திருப்பலியுடனும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மேற்கொண்டனர்.
முயலின் ஆண்டு என்று அழைக்கப்படும் 2011ம் ஆண்டை Taiyuan மறைமாவட்டத்தின் துணை ஆயர் Ningyou Meng மெழுகுதிரிகள் ஏந்திய பவனியுடன் இப்புதன் நள்ளிரவு ஆரம்பித்து வைத்தார். கிறிஸ்து உலகின் ஒளியாக இருக்கிறார் என்ற கருத்தில் இந்த பவனி நடத்தப்பட்டதென்று அவர் விளக்கினார்.
இவ்வியாழனன்று ஆரம்பமாகும் சீனப் புத்தாண்டன்று ஐந்துத் திருப்பலிகள் நடைபெறும் என்றும் ஒவ்வொரு திருப்பலியிலும் மக்களின் பங்கேற்பு அதிகம் இருக்கும் என்றும் ஆயர் Meng கூறினார்.
இப்புத்தாண்டையொட்டி ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இளையோர் தன்னார்வக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதென்றும், இக்குழுவினர் புத்தாண்டு விழாக்களில் கலந்து கொள்ள முடியாத வயதானோர், நோயுற்றோர் ஆகியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு உணவும் உடைகளும் வழங்க உள்ளனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
7. தலித் கிறிஸ்தவர்களைக் கவர கேரளாவின் பொதுவுடைமை கட்சியினரின் முயற்சிகள்
பிப்.03,2011. கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களைப் பிரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கிறிஸ்தவ குழுக்கள் கூறியுள்ளன.
இப்புதனன்று கேரளாவின் கோட்டயத்தில் நடைபெற்ற பொதுவுடைமை கட்சியினரின் மாநாட்டில் கலந்து கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
பல நூற்றாண்டுகள் ஆகியும் மேல்ஜாதி கிறிஸ்தவர்கள் தலித்துக்களைத் தங்களுடன் சரிசமமாய் நடத்துவதில்லை என்றும், அவர்களுக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் தலைவர் Pinarayi Vijayan கூறினார்.
பொதுவுடைமை கட்சித் தலைவர்களின் இந்தப் புதிய ஆர்வம் தங்களுக்குச் சந்தேகங்களை எழுப்புகிறதென்று தலித் கிறிஸ்தவத் தலைவர் Joseph Thomas, UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
8. 'மக்களுக்கென்று காடுகள்' என்ற மையக் கருத்துடன் அகில உலகக் காடுகள் ஆண்டு ஆரம்பம்
பிப்.03,2011. நமது சுற்றுச் சூழலைக் காப்பதற்கும், மனிதர்களுக்கு, சிறப்பாக ஏழைகளுக்குத் தேவையான உணவு, எரிபொருள், மருந்துகள் ஆகியவை வழங்குவதற்கும் காடுகள் மிகவும் தேவை என்று ஐ.நா.நிறுவனம் கூறியுள்ளது.
'மக்களுக்கென்று காடுகள்' என்ற மையக் கருத்துடன் அகில உலகக் காடுகள் ஆண்டு இப்புதனன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
உலகில் தற்போது குறைந்தது 160 கோடி மக்கள் காடுகளை நம்பி வாழ்கின்றனர் என்றும், இவர்களில் 6 கோடி மக்கள் காடுகளிலேயே வாழ்கின்றனர் என்றும் ஐ.நா.வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இவைகள் அன்றி, உலகில் உள்ள 700 கோடி மக்களும் காடுகளை ஏதோ ஒரு வகையில் சார்ந்துள்ளோம் எனவே, காடுகளைக் காப்பது நம் அனைவரின் கடமை என்றும் நமது கடமைகளை இவ்வாண்டு முழுவதும் மனித சமுதாயத்திற்கு நினைவு படுத்துவதே ஐ.நா.வின் திட்டம் என்றும் ஐ.நா.அதிகாரி Jan McAlpine கூறினார்.
No comments:
Post a Comment