Monday 21 February 2011

Catholic News - hottest and latest - 19 Feb 2011

1.    உரோம் வாழ் பிலிப்பீன்ஸ் குருக்களுக்கான திருத்தந்தையின் உரை.

2.    திருச்சபையின் முக்கிய தகவல்கள் அடங்கிய திருப்பீட ஆண்டு புத்தகம் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

3.    நோயாளிகள் மீதான முன்னாள் திருந்தந்தையின் அக்கறை.

4.   திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறுப்பெற்றவராக அறிவிக்கப்பட உள்ள திருப்பலியில் பங்கு பெற‌ அனுமதிச்சீட்டு தேவையில்லை.

5.   போலந்து நாட்டு குரு ஒருவர் துனிசியாவில் படுகொலை.

6.  Waterloo போர்க்களத்தின் புகழ்பெற்ற ஒரு சிலுவை அண்மையில் திருடப்பட்டுள்ளது

----------------------------------------------------------------------------------------------------------------

1.    உரோம் வாழ் பிலிப்பீன்ஸ் குருக்களுக்கான திருத்தந்தையின் உரை.

பிப் 19, 2011.  உரோம் நகரில் வந்து பயிலும் குருக்களுக்கான பயிற்சி என்பது கல்வியை மட்டும் சார்ந்ததில்லை மாறாக, உரோம் நகரின் வாழும் வரலாறு மற்றும் அங்கு மடிந்த மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டுகளால் ஆன்மீகமுறையில் உருவாக்கப்படுவதையும் சார்ந்துள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரில் உள்ள பிலிப்பீன்ஸ் நாட்டுக் குருக்களுக்கான இல்லம் தன் 50ம் ஆண்டைச் சிறப்பிப்பதை முன்னிட்டு அவ்வில்ல‌த்தில் வாழும் குருக்களை இச்சனியன்று திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை, அவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்தும் அதேவேளை, உரோம் நகரில் வாழும் பிலிப்பீன்ஸ் சமுதாயத்தின் மறைப்பணித் தேவைகளிலும் தனி அக்கறைக்காட்டி செயல்படவேண்டும் என விண்ணப்பித்தார். ஒவ்வொரு குருவும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இப்பயிற்சிக் காலத்தைப் பயன்படுத்தி ஆன்மீக மற்றும் இறையியல் துறைகளில் சிறப்புப் பெற்றவர்களாய் நாடு திரும்பி தலத்திருச்சபை மற்றும் அகில உலக திருச்சபையின் மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டியதையும் உரோம் வாழ் பிலிப்பீன்ஸ் குருக்களுடனான தன் சந்திப்பின் போது குறிப்பிட்டார் திருத்தந்தை.

2.    திருச்சபையின் முக்கிய தகவல்கள் அடங்கிய திருப்பீட ஆண்டு புத்தகம் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பிப் 19, 2011.  தலைமைத் திருச்சபை மற்றும் அகில உலகத்திருச்சபையின் முக்கிய தகவல்கள் அடங்கிய திருப்பீட ஆண்டு புத்தகம் இச்சனியன்று திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
திருச்சபையின் புள்ளிவிவர‌ மைய அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு திருப்பீடச்செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்த்தோனேயால் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வாண்டு புத்தகம்திருமுழுக்குப்பெற்ற கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2008க்கும் 2009க்கும் இடைப்பட்டக்காலத்தில் உலக அளவில் 1.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
2008ம் ஆண்டு 116 கோடியே 60 இலட்சமாக இருந்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2009ல் 118 கோடியே 10 இலட்சமாக உயர்ந்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் கத்தோலிக்க ஆயர்களின் எண்ணிக்கையும் 1.3 விழுக்காடு, அதாவது 5002 லிருந்து 5065 ஆக அதிகரித்துள்ளதாகவும் திருச்சபையின் ஆண்டு புத்தகம் தெரிவிக்கிறது.
மறைமாவட்ட மற்றும் துறவு சபை குருக்களைப் பொறுத்தவரையில் 2000க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து ஐயாயிரத்து நூற்று எழுபத்தெட்டு என்பதிலிருந்து 4 இலட்சத்து 10 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது. மறைமாவட்ட குருக்களின் எண்ணிக்கை ஐரோப்பா கண்டத்தில் மட்டுமே குறைந்து வருவதாகவும், அதே வேளை துறவு சபை குருக்களின் எண்ணிக்கை ஆசியா மற்றும் ஆப்ரிக்கா தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் குறைந்து வருவதாகவும் திருப்பீடத்தின் 2011ம் ஆண்டு புத்தகத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தேவ அழைத்தல்களின் எண்ணிக்கையும் 2008ம் ஆண்டில் ஓர் இலட்சத்து 17 ஆயிரத்து 24 ஆக இருந்தது 2009 ம் ஆண்டில் ஓர் இலட்சத்து 17 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இவ்வெண்ணிக்கை குறைந்து வருகின்றபோதிலும் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருவதே உலக அளவில் மொத்தமாக அதிகரிப்பதற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.

3.    நோயாளிகள் மீதான முன்னாள் திருந்தந்தையின் அக்கறை.

பிப் 19, 2011.  விசுவாச ஒளியில் நோயுடன் வாழ்வதன் சாட்சியாக இருந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்படுவதற்கான தாயாரிப்புகள் இடம்பெறும் இவ்வேளையில், அவரே பிப்ரவரி மாதத்தில் திருச்சபையில் நோயாளர் தினம் சிறப்பிக்கப்படும் முறையைக் கொணர்ந்தார் என்பதை நினைவூட்டினார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
வாரந்தோறும் தொலைக்காட்சியில் தான் வழங்கும் 'ஒக்தாவா தியேஸ்' என்ற நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்ட குரு லொம்பார்தி, திருத்தந்தை 2ம் ஜான் பால் நோயாளிகள் மற்றும் நம் மீதான அக்கறையுடன் வாழ்ந்ததே அவரின் புனிததன்மை குறித்த உறுதிப்பாட்டை நமக்குத்தருவதாக உள்ளது என்றார். இயேசுவின் சிலுவையைத் தாங்கியவராய் ஒவ்வொரு நோயாளிக்காகவும் பரிந்து பேசுபவராக திருத்தந்தை ஜான் பால் இருந்தார் என்ற இயேசு சபை குரு லொம்பார்தி, அன்பின் ஆழத்தை புரிந்து கொண்டு, அதனை வாழ்ந்து மனித நேயத்தில் வளர்வோம் என மேலும் கூறினார்.

4.   திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறுப்பெற்றவராக அறிவிக்கப்பட உள்ள திருப்பலியில் பங்கு பெற‌ அனுமதிச்சீட்டு தேவையில்லை.

பிப் 19, 2011.  இம்மேமாதம் முதல் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட உள்ள திருப்பலியில் பங்கு கொள்ள விரும்பும் திருப்பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை என திருப்பீடம் அறிவித்துள்ளது.
வழக்கமாக திருத்தந்தை நிறைவேற்றும் திருச்சடங்குகளில் பங்குகொள்ள விரும்புபவர்களுக்கு திருப்பீடத்தின் அனுமதிச்சீட்டு இலவசமாக வழங்கப்படுகின்றபோதிலும் சில வெளி நிறுவனங்கள் இவ்வனுமதிச்சீட்டைப்பெறுவதற்கும் பணம் வசூலித்து வருவதை தடுக்கும் விதமாக, இந்த முத்திப்பேறு திருப்பலிக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை என திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருத்தந்தையின் எந்த ஒரு திருப்பலிக்கோ திருச்சடங்கு நிறைவேற்றும் நிகழ்வுக்கோ அனுமதிச்சீட்டு இலவசமாகவே வழங்கப்படுகிறது என்றும், எவரும் இதற்காக பணம் வசூலிக்க அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் பெயரில் சில விஷமிகள் மின்னஞ்சல் மூலமாகவும் இணையதளங்கள் மூலமாகவும் நிதி திரட்ட முயன்று வருவது ஓர் ஏமாற்று வேலை என எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலியாவிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Giuseppe Lazzaratto.

5.   போலந்து நாட்டு குரு ஒருவர் துனிசியாவில் படுகொலை.

பிப் 19, 2011.  துனிசியாவில் பணியாற்றிவந்த போலந்து நாட்டு குரு ஒருவர் அடையாளம் தெரியாத மனிதர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
துனிசியாவின் மனவ்பா நகரில் உள்ள சலேசியப் பள்ளியின் சேமிப்பு அறையில் குரு Marek Rybinski யின் கொலையுண்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சலேசிய தகவல் மையம் அறிவித்தது.
போலந்தில் 2005ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட 33 வயதாகும் இக்குரு, 2007ம் ஆண்டு முதல் துனிசியாவின் மனவ்பா நகரில் பணியாற்றி வந்துள்ளார்.
துனிசியாவின் அண்மை பதட்டநிலை காலத்தில் கொலையுண்டுள்ள இரண்டாவது குரு இவர் ஆவார்.

6.  Waterloo போர்க்களத்தின் புகழ்பெற்ற ஒரு சிலுவை அண்மையில் திருடப்பட்டுள்ளது

பிப்.19,2011. Waterloo என்று அழைக்கப்படும் போரின்போது தீக்கிரையான ஒரு கோவிலில் அழியாமல் இருந்த ஒரு சிலுவை அண்மையில் திருடப்பட்டுள்ளது.
தற்போது பெல்ஜியம் என்று அழைக்கப்படும் நாட்டில், 1815ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போரில் நெப்போலியன் தோல்வியுற்ற Waterloo என்ற இடத்தில் ஆறடி உயரமுள்ள மரத்தால் ஆன சிலுவை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தீக்கிரையான அப்பகுதியில் மரத்தால் ஆன இச்சிலுவை எச்சேதமும் அடையாததால், ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாய் போற்றப்பட்டு வந்துள்ளது.
இன்னும் நான்கு ஆண்டுகளில் 2015ம் ஆண்டு இச்சிலுவையின் இருநூறாம் ஆண்டு சிறப்பிக்கப்பட உள்ள இவ்வேளையில் இச்சிலுவை திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறதென்று இந்நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை திட்டமிடும் குழுவின் தலைவரான பிரித்தானிய படைத் தளபதி Sir Evelyn Webb-Carter கூறினார்.
ஆறடி உயரமும், 440 பவுண்டு எடையுமுள்ள இச்சிலுவையைத் திருடிச் சென்றவர்கள் இதைச் சேதப்படுத்தியுள்ளனர் என்பதற்கு சிலுவையில் இருந்து பெயர்ந்து விழுந்துள்ள ஒரு சில மரத் துண்டுகள் சாட்சி என்று இச்சிலுவையைப் பராமரித்து வரும் Yves Van Der Cruysen  கூறினார்.
இச்சிலுவையைத் திருடிச் சென்றவர்கள் இதை எங்கும் விற்கமுடியாத பட்சத்தில், சமுதாயத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு பரிதாப முயற்சியாக இதை தான் காண்பதாக  Cruysen மேலும் கூறினார்.

No comments:

Post a Comment