Wednesday, 2 February 2011

Catholic News - hottest and latest - 02 Feb 2011

1. பாகிஸ்தானுக்குப் புதியத் திருப்பீடத் தூதர் பேராயர் Edgar Peña Parra

2. துறவியரின் வாழ்வு திருச்சபையின் சுற்றுச்சூழலுக்கு வாழ்வு கொடுப்பதாய் இருக்கின்றது வத்திக்கான் அதிகாரி

3. திருத்தந்தையின் குரோவேஷியத் திருப்பயணத்தை முன்னிட்டு ஆயர்கள் அறிக்கை

4. இந்தோனேசிய ஆயர் : அரசியல்வாதிகள் சுய ஆதாயங்களுக்காக மத சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்

5. மியான்மார் புதிய நாடாளுமன்றம் இராணுவத்தின் கைப்பொம்மை - உலகளாவிய கிறிஸ்தவத் தோழமை அமைப்பு

6. ஒரிசாவில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை குறித்து தேசியப் புலனாய்வு நிறுவனம் விசாரிக்க வலியுறுத்தல்

7. இளையோர் மேற்கொள்ளவிருக்கும் இலட்சக்கணக்கான நிமிடங்கள் மௌனம்

8. உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டவுள்ளவேளை, இளைய தலைமுறையில் கவனம் செலுத்த ஐ.நா. உறுதி

----------------------------------------------------------------------------------------------------------------

1. பாகிஸ்தானுக்குப் புதியத் திருப்பீடத் தூதர் பேராயர் Edgar Peña Parra 

பிப்.02,2011. பாகிஸ்தானுக்கானத் திருப்பீடத் தூதராகப் பேராயர் Edgar Peña Parraவை இப்புதனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின் Maracaiboவில் 1960ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி பிறந்த பேராயர் Edgar Peña Parra, 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
திருச்சபை சட்டத்தில் முனைவர் பட்டமும் சர்வதேச சட்டத்தில் சிறப்புப் பயிற்சியும் பெற்றிருக்கும் இவர், கென்யா, யூக்கோஸ்லாவியா, சுவிட்சர்லாந்து, ஹொண்டுராஸ், மெக்சிகோ ஆகிய நாடுகளில் திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றியிருக்கிறார்.
பாகிஸ்தானுக்கானப் புதியத் திருப்பீடத் தூதராக நியமனம் பெற்றுள்ள பேராயர் Edgar Peña Parraவுக்கு, ஸ்பானியம், இத்தாலியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச், போர்த்துக்கீசியம், செர்போ-குரோவேஷியம் ஆகிய மொழிகள் தெரியும்.


2. துறவியரின் வாழ்வு திருச்சபையின் சுற்றுச்சூழலுக்கு வாழ்வு கொடுப்பதாய் இருக்கின்றது வத்திக்கான் அதிகாரி

பிப்.02,2011. தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, பணிகள் மற்றும் பிறரன்பு மூலம் அவரது அன்புக்குச் சாட்சியம் பகரும் அர்ப்பணிக்கப்பட்ட துறவியரின் வாழ்வு திருச்சபையின் சுற்றுச்சூழலுக்கு வாழ்வு கொடுப்பதாய் இருக்கின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிப்ரவரி 2, இப்புதனன்று 15வது அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் நாள் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்தத் துறவிகளுக்கானப் பேராயச் செயலர் பேராயர் ஜோசப் தோபின், இந்நாள், துறவற வாழ்க்கையின் அழகையும் முக்கியத்துவத்தையும் விசுவாசிகளுக்கு நினைவுபடுத்துவதாய் இருக்கின்றது என்று  கூறினார்.
உலகின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அமேசான் பருவமழைக் காடுகள் அமைந்துள்ளது போன்று திருச்சபையின் சுற்றுச்சூழலுக்கு துறவற வாழ்வு அமைந்துள்ளது என்றும் பேராயர் தோபின் தெரிவித்தார்.
இந்தச் சர்வதேச துறவியர் நாள் 1997ம் ஆண்டு இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் உருவாக்கப்பட்டது.


3. திருத்தந்தையின் குரோவேஷியத் திருப்பயணத்தை முன்னிட்டு ஆயர்கள் அறிக்கை

பிப்.02,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற ஜூன் 4,5 தேதிகளில் குரோவேஷிய நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு அந்நாட்டின் 21 ஆயர்கள் இணைந்து மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்
குரோவேஷியத் தலத்திருச்சபை முதல் முறையாக நடத்தும் தேசிய கத்தோலிக்க குடும்பங்கள் மாநாட்டில் கலந்து கொள்வதே திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், அந்நாட்டில் திருமணம் மற்றும் குடும்பங்களின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியுள்ளனர்
வேலைவாய்ப்பின்மை, தீர்க்கப்படாதக் குடியிருப்புப் பிரச்சனைகள் போன்ற சமூகப் பிரச்சனைகளால் பெருமளவான குரோவேஷிய இளையோர் திருமணத்தைத் தள்ளிப் போட்டு வருகின்றனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
அதிகரித்து வரும் திருமண முறிவுகள், வீட்டு வன்முறை, குடிப்பழக்கம், திருமணமாகாமல் சேர்ந்து வாழ்தல் போன்றவை திருமண மதிப்பீடுகளை வெளிப்படையாய்ப் புறக்கணிக்கின்றன என்று கூறும் ஆயர்களின் அறிக்கை, அந்நாட்டின் தேசியக் குடும்ப மாநாடு ஆரோக்யமான குடும்பங்கள் உருவாக உதவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.


4. இந்தோனேசிய ஆயர் : அரசியல்வாதிகள் சுய ஆதாயங்களுக்காக மத சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்

பிப்.02,2011. அரசியல்வாதிகள் தங்களது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தையும் மதக் குழுக்களையும் பயன்படுத்துகிறார்கள் என்று இந்தோனேசிய ஆயர் ஒருவர் குறை கூறினார்.
இந்தோனேசியத் திருச்சபை சமூகநலப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதற்கான காரணம் பற்றி ஆசிய செய்தி நிறுவனத்திடம் விளக்கிய பதாங் (Padang) ஆயர் மார்ட்டினுஸ் டாக்மா சிட்டுமொராங், சமூக நீதிக்குக் குரல் கொடுக்கும் மதத் தலைவர்களின் வேண்டுகோள்  கண்டுகொள்ளப்படுவதில்லை என்றார்.
அரசியல் அதிகாரிகள், சமய சுதந்திரத்தை வழிபாடுகள் நடத்தவும், தனிப்பட்ட ஒழுக்க வாழ்வுக்குமென வரையறுத்துள்ளனர் என்று கூறிய ஆயர் மார்ட்டினுஸ், உண்மையான சமய சுதந்திரம் என்பது, பொதுவான விவகாரங்களில் சமயத் தலைவர்களின் குரல் கேட்பதற்கு வாய்ப்புகள் அளிக்கப்படுவதாகும் என்றார்.
இந்தோனேசியக் கிறிஸ்தவத் தலைவர்கள், அந்நாட்டு அரசின் மதம் மற்றும் சமூகக் கொள்கைகள் குறித்த நிலைப்பாடு பற்றி அண்மை வாரங்களாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


5. மியான்மார் புதிய நாடாளுமன்றம் இராணுவத்தின் கைப்பொம்மை - உலகளாவிய கிறிஸ்தவத் தோழமை அமைப்பு

பிப்.02,2011. மியான்மாரில் உருவாகியுள்ள புதிய நாடாளுமன்றம் போலியானது மற்றும் அந்நாட்டில் ஆட்சியைத் தொடரும் இராணுவத்தின் கைப்பொம்மை அமைப்பு என்று குறை கூறியது CSW என்ற உலகளாவிய கிறிஸ்தவத் தோழமை அமைப்பு.
இந்த நாடாளுமன்றம், இராணுவத்தின் அதிகாரத்திற்கு உறுதியளிக்கும் போலியான அரசியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்ட போலியானத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் இராணுவம் அதன் குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கு வழி செய்கிறது என்றும் CSW ன் பெனடிக்ட் ரோஜர்ஸ் கூறினார்.
மியான்மாரின் மனித உரிமைகள் நிலவரம் குறித்துக் கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முதல் பரிசீலனை நடைபெற்றதையடுத்து இக்கிறிஸ்தவ அமைப்பு அந்நாட்டு இராணுவ அரசை விமர்சித்துள்ளது


6. ஒரிசாவில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை குறித்து தேசியப் புலனாய்வு நிறுவனம் விசாரிக்க வலியுறுத்தல்

பிப்.02,2011. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம் பெற்ற வன்முறையில் தான் ஈடுபட்டதாக இந்து தீவிரவாதி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ள வேளை, அவ்வன்முறை குறித்து தேசியப் புலனாய்வு நிறுவனம் தனது விசாரணைகளைத் தொடங்குமாறு திருச்சபை மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓர் இராணுவ இரகசிய புலனாய்வு அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், மூத்த இராணுவ அதிகாரி Prasad Srikant Purohit என்பவரும் புதுடெல்லியிலுள்ள Abhinav Bharat என்ற அவரது குழுவும் கந்தமால் உட்பட பல இடங்களில் கிறிஸ்தவர்க்கெதிரானத் தாக்குதல்களில் கவனம் செலுத்தியது என்று வெளியிடப்ப்டடுள்ளது.
ஒரிசாவில் இரண்டு பேரைக் கொலை செய்ததாக Purohit ஒத்துக் கொண்டுள்ளார். இந்த அறிக்கை வெளியானதை வைத்துப் பேசிய Berhampur  ஆயர் Sarat Chandra Nayak, இந்து தீவிரவாதக் குழுவின் உண்மையான நிறம் வெளிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்று கூறினார்
NIA என்ற தேசியப் புலனாய்வு நிறுவனம் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கென்று 2009ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.


7. இளையோர் மேற்கொள்ளவிருக்கும் இலட்சக்கணக்கான நிமிடங்கள் மௌனம்

பிப்.02,2011. இளையோர் தாங்கள் வாழும் சமுகங்களில் தங்களைப் பாதிக்கும் விவகாரங்கள் பற்றிப் பேசி நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக, மூன்று இலட்சத்து 78 ஆயிரம் நிமிடங்கள் மௌனம் அனுசரிப்பதற்கு அவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.
ஒரு பிரிட்டன் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இளையோர் இவ்வாறு உறுதி எடுத்துள்ளனர்
இளையோரும் அவர்கள் மீது அக்கறை கொண்டோரும் சமுதாயத்தால் மௌனமாக்கப்பட்டுள்ள பிற இளையோருடன் தோழமையுணர்வில் அமைதியில் அமர்ந்து  சிந்திப்பதற்கு  இந்த இலட்சக்கணக்கான நிமிட மௌனம் உதவும் என்று அவ்வமைப்பு கூறியது.
திருத்தந்தையின் பிரிட்டனுக்கானத் தி்ருப்பயணத்தின் போது இளையோர் சார்பாக உரையாற்றிய Pascal Uche இந்நடவடிக்கையில் முக்கியமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது


8. உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டவுள்ளவேளை, இளைய தலைமுறையில் கவனம் செலுத்த ஐ.நா. உறுதி

பிப்.02,2011. உலக மக்கள் தொகை இந்த 2011ம் ஆண்டின் இறுதியில் 700 கோடியை எட்டவுள்ளவேளை, உலக அளவில் வளர்ந்து வரும் இளைய தலைமுறை குறித்து கவனம் செலுத்தவிருப்பதாக UNFPA என்ற ஐ.நா.மக்கள் தொகை நிதியகத்தின் புதிய தலைவர் Babatunde Osotimehin  கூறினார்.
ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பின் செயல்திட்டக் கூட்டத்தில் பேசிய Osotimehin, இளையோர் சக்தியிலும் அவர்களின் நலவாழ்விலும் பாலினச் சமத்துவத்திலும் கவனம்  செலுத்துவது நாடுகள் பொருளாதாரத்தில் வளர்வதற்கு உதவும் என்றார்.
இன்று உலகில் 180 கோடி இளம் வயதினர் இருக்கின்றனர், இவர்கள் உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பாகமாக உள்ளனர், இவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர், இது அடுத்த இருபது ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் Osotimehin கூறினார்.
இந்த இளைய தலைமுறைக்கு ஆதரவும் அதிகம் தேவைப்படுகின்றது, அவர்கள் மாண்பு, ஈடுபாடு, சுதந்திரம் ஆகியவற்றுடன் வாழ விரும்புகிறார்கள் என்றும் ஐ.நா.அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...