Saturday 19 February 2011

Catholic News - hottest and latest - 18 Feb 2011

1. கடவுளுக்கு முதலிடம் தருவதால்தான் மனித குலம் தன் இறுதி நிலையை கண்டுகொள்ள முடியும் - திருத்தந்தை

2. எகிப்தைக் கட்டியெழுப்பும் பணியில் கத்தோலிக்கர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் - கர்தினால் Leonardo Sandri

3. சென்ற ஆண்டில் வத்திக்கான் நிதி நிலைமை திருப்திகரமாக அமைந்துள்ளது

4. சோமசேகரா குழுவின் அறிக்கைக்கு எதிராக பெங்களூருவில் ஆயர்கள் போராட்டம்

5. இயற்கை சார்ந்த சாகுபடி முறைகள் - அமராவதி மறைமாவட்டத்தின் முயற்சிகள்

6. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தைச் சார்ந்த குரு அமலன் கொலை

7. திருத்தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்ட பெண்குழந்தை விபத்திலிருந்து காப்பற்றப்பட்ட அற்புதம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. கடவுளுக்கு முதலிடம் தருவதால்தான் மனித குலம் தன் இறுதி நிலையை கண்டுகொள்ள முடியும் - திருத்தந்தை

பிப்.18,2011. ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் மனதிலும் கடவுளுக்கான முதலிடத்தை மீண்டும் உருவாக்குவதன் மூலம் மட்டுமே, மனித குலம் தன் இறுதி நிலையை மீண்டும் கண்டுகொள்வதற்கான பாதையை காணமுடியும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஐந்து ண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகருக்கு ந்துள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இன்றைய மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்குத் தடைகளாக இருக்கும் பொருளாதார வளர்ச்சியின் சவால்களை மட்டுமல்ல, மதச்சார்பற்ற நிலை, உலகாயுதபோக்கு, நுகர்வுக்கலாச்சாரம் போன்றவைகள் முன்வைக்கும் சவால்களுக்கும் பதிலளித்து மக்களுக்கு உதவ வேண்டிய கடமை திருச்சபைக்கு உள்ளது என்றார்.
கடவுள் வாழ்கிறார், நம்மை அன்பு கூர்கிறார், நம் ஆழமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் என்பதை மக்கள் உணர்ந்து ஏற்கும் வகையில் திருச்சபையின் பணிகள் இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திய பாப்பிறை, பிலிப்பீன்ஸ் திருச்சபையில் பொதுநிலையினரின் ஈடுபாட்டை பாராட்டியதோடு, இளைஞர்களுக்கான பணிகளில் அதிகக் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தையும் ஆயர்களிடம் வலியுறுத்தினார்.


2. எகிப்தைக் கட்டியெழுப்பும் பணியில் கத்தோலிக்கர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் - கர்தினால் Leonardo Sandri

பிப்.18,2011. ஆப்ரிக்க நாடுகளுக்கு மத்தியில் ஒரு தலைசிறந்த நாடாக இருக்க எகிப்து அழைக்கப்பட்டுள்ளதென்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்ற வாரம் வெள்ளியன்று எகிப்து அரசுத் தலைவர் ஹோஸ்னி முபாரக் தன் பதவியைத் துறந்ததையொட்டி, கீழைரீதி சபைகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri, வத்திக்கான் வானொலிக்கு அண்மையில் பேட்டியளித்தபோது இவ்விதம் கூறினார்.
தற்போது எகிப்தின் அரசைக் கட்டுப்படுத்தும் இராணுவ அதிகாரிகள் அங்குள்ள அனைத்து மக்களின், முக்கியமாக, அங்குள்ள கிறிஸ்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்ற தன் நம்பிக்கையை கர்தினால் Sandri தெரிவித்தார்.
எகிப்தில் வாழும் 200000க்கும் மேற்பட்ட காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களுக்கு அண்மைய புரட்சி நாட்கள் அருளும் வாய்ப்புக்களும் நிறைந்த நாட்கள் என்று கூறிய கர்தினால் Sandri, இனி வரும் நாட்களில் எகிப்தைக் கட்டியெழுப்பும் பணியில் கத்தோலிக்கர்கள் தங்கள் பங்களிப்பை அதிகம் வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.


3. சென்ற ஆண்டில் வத்திக்கான் நிதி நிலைமை திருப்திகரமாக அமைந்துள்ளது

பிப்.18,2011. இச்செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் வத்திக்கான் நிதித் துறையின் ஆண்டு கூட்டம் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2010ம் ஆண்டுக்கான  வத்திக்கானின் நிதிநிலைமை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
உலகெங்கும் நிலவும் பொருளாதார பிரச்சனைகள் வத்திக்கான் நிதி நிலைமையையும் ஓரளவு பாதித்துள்ளன என்றாலும், பொதுவாக, சென்ற ஆண்டின் நிதிநிலைமை திருப்திகரமாக அமைந்துள்ளதென்று திருப்பீடத்தின் நிதித்துறை தலைவர் கர்தினால் Velasio De Paolis கூறினார்.
வத்திக்கானின் நிர்வாக அலுவலகம், மற்றும் வத்திக்கானின் தொடர்புத் துறைகளான வத்திக்கான் வானொலி, வத்திக்கான் செய்தித் துறை, வத்திக்கான் தொலைக்காட்சி ஆகியவை உறுதியான நிலையில் உள்ளன என்று சென்ற ஆண்டின் நிதி அறிக்கை கூறுகிறது.
விசுவாசிகள் அளிக்கும் நிதி உதவிகளே திருப்பீடத்தின் முக்கியமான வருவாய் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் De Paolis, திருத்தந்தையின் உலகளாவியப் பணிகளுக்குப் பக்கபலமாய் இருக்கும் விசுவாசிகளின் தாராளமனதைப் பாராட்டினார்.


4. சோமசேகரா குழுவின் அறிக்கைக்கு எதிராக பெங்களூருவில் ஆயர்கள் போராட்டம்

பிப்.18,2011. கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆயர்கள் 18 பேர் தலைமையில் பெங்களூருவில் இவ்வியாழனன்று போராட்டம் ஒன்று நடைபெற்றது.
கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 2008ம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு  வன்முறை தாக்குதல்கள் குறித்து வெளியான B.K. சோமசேகரா குழுவின் அறிக்கை வெறும் கண்துடைப்பு என்றும், இத்தாக்குதல்கள் குறித்து CBI விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தும் வண்ணம் கர்நாடகா கத்தோலிக்க ஆயர்கள் அவையும், கர்நாடகா கிறிஸ்தவ ஒன்றிப்பின் மனித உரிமைகள் அமைப்பும் இணைந்து இப்போராட்டத்தை மேற்கொண்டனர்.
தாக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் குற்றவாளிகள் என்றும், தாக்குதலை மேற்கொண்ட இந்து அடிப்படைவாதக் குழுவினர் குற்றமற்றவர்கள் என்றும் கூறும் இக்குழுவின் அறிக்கை நீதியைக் கேலிக்குரியதாக்குகிறதென்று பெங்களூரு பேராயர் Bernard Moras கூறினார்.
பெங்களூரு நகரின் மற்றொரு பகுதியில் அகில உலக இந்தியக் கிறிஸ்தவர்கள் கழகம் இவ்வியாழனன்று ஏற்பாடு செய்திருந்த மற்றொரு போராட்டத்தில், அனைத்து கத்தோலிக்க, கிறிஸ்தவ குழுக்களைச் சார்ந்த 3000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்று UCAN செய்தியொன்று கூறுகிறது.
மேலும் வருகிற ஞாயிறன்று மங்களூரில் மற்றொரு கிறிஸ்தவப் பேரணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


5. இயற்கை சார்ந்த சாகுபடி முறைகள் - அமராவதி மறைமாவட்டத்தின் முயற்சிகள்

பிப்.18,2011. இந்தியாவின் அமராவதி மறைமாவட்டத்தின் முயற்சிகளால் பல விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கை பிறந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி பகுதியில் இந்திய காரித்தாஸ் அமைப்பின் நிதி உதவியுடன் Organic farming என்று வழங்கப்படும் இயற்கை சார்ந்த சாகுபடி முறைகளை அம்மறைமாவட்டம் விவசாயிகளுக்குச் சொல்லித் தருகிறது.
இச்சாகுபடி முறையால் தங்கள் விளைச்சல் இருமடங்கு பெருகியுள்ளதென்று கங்காராம் ஜமார்கர் என்ற விவசாயி UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தொடர்ந்து சில ஆண்டுகள் சாகுபடி பொய்த்ததால், விவசாயிகளின் குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டதையொட்டி அமராவதி மறைமாவட்டம் இம்முயற்சியை மேற்கொண்டது என்றும், இம்முயற்சியால் பல விவசாயிகளின் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் இம்முயற்சியின் ஒருங்கிணைப்பாளர் முகுந்த் தேஷ்முக் கூறினார்.
ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் சோதனைக்காக இம்முயற்சிகளை ஆரம்பித்தனர் என்றும், இம்முறையால் அவர்கள் பெற்ற பயனைக் கண்டு தங்கள் நிலம் முழுவதிலும் இவ்வியற்கை சார்ந்த சாகுபடிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளனர் என்றும் அமராவதி மறைமாவட்ட சமூகப் பணிக் குழுவின் தலைவர் அருள்தந்தை ஜாலி புத்தென்புரா கூறினார்.


6. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தைச் சார்ந்த குரு அமலன் கொலை

பிப்.18,2011. தமிழ் நாட்டின் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தைச் சார்ந்த குரு ஒருவரின் இறந்த உடல் இப்புதனன்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரது அடக்கச் சடங்குகள் இவ்வியாழன் நிறைவேறின.
பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் குடும்பநலப் பணிக்குழுவின்  செயலரான அருள்தந்தை அமலனின் உயிரற்ற உடலை இப்புதனன்று காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
அருள்தந்தை அமலன் ஓர் எளிமையான, நேர்மையான மனிதர் என்றும், அவர் இவ்விதம் மரணமடைந்திருப்பது பெரும் வேதனையைத் தருகிறதென்றும் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூட் பால்ராஜ் கூறினார்.
பணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர் என்றும் தந்தையின் மரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் மறைமாவட்டத்தின் குருகுல முதல்வர் அருள்தந்தை அன்டனிசாமி UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


7. திருத்தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்ட பெண்குழந்தை விபத்திலிருந்து காப்பற்றப்பட்ட அற்புதம்

பிப்.18,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் ஆஸ்திரேலிய பயணத்தின்போது அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பெண்குழந்தை இச்செவ்வாயன்று ஒரு விபத்திலிருந்து அற்புதமான வகையில் காப்பற்றப்பட்டுள்ளார் என்று இவ்வெள்ளியன்று வெளியான ஆஸ்திரேலிய செய்தித்தாள் கூறுகிறது.
2008ம் ஆண்டு திருத்தந்தை ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் உலக இளையோர் நாளைக் கொண்டாச் சென்றிருந்தபோது ஒரு  சில மாதங்களே ஆன Claire Hill என்ற குழந்தையைக் கையிலேந்தி ஆசீர்வதித்தார்.
தற்போது மூன்று வயதாகும் Claireன் தந்தை Mini Bus ஓட்டுனர். அவர் இச்செவ்வாய் பிற்பகலில் தன் சிற்றுந்தை பின்புறமாய் எடுக்கும் வேளையில் அவரது மகள் Claire வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். சிற்றுந்து சிறுமியின் வயிற்றுப் பகுதியில் முற்றிலும் ஏறி இறங்கியது.
நடந்ததை உணர்ந்த Peter வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி வந்தார். தன் மகளைத் தானே கொன்றுவிட்டோம் என்று எண்ணினார். ஆனால், சிறுமி Claire எந்த வித ஆபத்தும் இல்லாமல் காப்பற்றப்பட்டதை அறிந்தார்.
வாகனத்தின் சக்கரங்கள் சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பதிந்துள்ளதை நன்கு காண முடிந்தது என்றாலும், எலும்புகள், உள் உறுப்புக்கள் எதுவும் சேதமடையாமல் ஒரு சில வெளிப்புறக் காயங்களோடு சிறுமி Claire காப்பாற்றப்பட்டது ஒரு புதுமையே என்று கூறப்படுகிறது.
Claireன் தாய் Sue Hill விபத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர்தான் சிறுமிக்கு மரியன்னையின் பதக்கம் ஒன்றை தான் அணிவித்ததாகவும், தங்கள் குழந்தை செபத்தினாலேயே காப்பாற்றப்பட்டாள் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment