Tuesday 22 February 2011

Catholic News - hottest and latest - 21 Feb 2011

1.             திருச்சபையில் மேலும் மூன்று புனிதர்கள்.

2.             திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை.

3.             லிபியாவில் உள்ள கத்தோலிக்கர்கள் இதுவரை எந்த இடையூறுகளையும் சந்திக்கவில்லை - ஆயர் Martinelli

4.             ஈராக் நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் குறித்து திருச்சபைத் தலைவர்கள் கவலை.

5.             ஓர் இலட்சம் இந்தியக் கிறிஸ்தவர்களின் அமைதி ஊர்வலம்.

6.             முதியோர் மற்றும் நோயாளிகளைப் பேணிவரும் குடும்பங்களுக்கு சமூகம் ஆதரவு வழங்கவேண்டும். 

7.             தெற்கு ஆஸ்திரேலியாவின் கத்தோலிக்கப் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

8.             இறையடியார் இரண்டாம் ஜான் பால் நினைவாக ஆல்ப் மலைச் சிகரங்களில் பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டிகள்

----------------------------------------------------------------------------------------------------------------

1.             திருச்சபையில் மேலும் மூன்று புனிதர்கள்.

பிப் 21, 2011.  சவேரிய மறைபோதகச் சபையின் நிறுவனர் Guido Maria Conforti,  குவனெல்லா சபை  என்றழைக்கப்படும் பிறரன்புப் பணியாளர் சபையை நிறுவிய Luigi Guanella, புனித வளன் பணியாளர் சபையை நிறுவிய Bonifacia Rodríguez de Castro ஆகிய மூன்று முத்திப்பேறுப் பெற்றவர்களை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு இத்திங்களன்று ஒப்புதல் வழங்கியுள்ளார் திருத்தந்தை.
இவர்கள் மூவரின் புனிதர் பட்ட விழா, வரும் அக்டோபர் மாதம் 23ந்தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2.             திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை.

பிப் 21, 2011.  உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் என்ற‌ இயேசுவின் வார்த்தைகளை இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின் போது மேற்கோள் காட்டிய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், நாம் நிறைவுள்ளவர்களாய் வாழ்வது என்பது தாழ்ச்சியில் கட‌வுளின் குழந்தைகளாக அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே ஆகும் என்றார்.
இறைவனைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டு அன்பு கூரும் ஒவ்வொருவரும் ஒரு புது துவக்கத்திற்கு தகுதியானவர்கள் என்ற பாப்பிறை, 'நாம் இறைவனின் ஆலயம், இறைவனின் ஆவி நம்முள் குடிகொண்டுள்ளது' என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டால் நம் வாழ்வு செம்மைப்படுவதுடன் நம் சாட்சியமும் தெளிவானதாய், பலன்தர வல்லதாய் மாறும் என்றார்.
நம்மீது கொண்ட அளவற்ற அன்பை வெளிப்படுத்துவதற்காக மனிதனாக பிறப்பெடுத்த இயேசுவை நாம் பின்பற்ற, அவரின் வார்த்தைகளான 'உங்கள் எதிரிகளிடம் அன்பு கூறுங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்' என்ற அவரின் வேண்டுகோள் மீண்டும் எதிரொலிப்பதை நாம் செவிமடுக்கவேண்டும் என மேலும் கூறினார் பாப்பிறை.
இச்செவ்வாயன்று திருச்சபையில் சிறப்பிக்கப்படும் புனித பேதுருவின் தலைமைப்பீடத் திருவிழா பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, புனித பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் மேய்ப்பர் என்ற பணியை இன்றைய மேய்ப்பர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டியதையும் வலியுறுத்தினார்.

3.             லிபியாவில் உள்ள கத்தோலிக்கர்கள் இதுவரை எந்த இடையூறுகளையும் சந்திக்கவில்லை - ஆயர் Martinelli

பிப்.21,2011. லிபியாவில் உள்ள கத்தோலிக்கர்கள் இதுவரை எந்த இடையூறுகளையும் சந்திக்கவில்லை என்று லிபியாவின் Tripoliக்கான அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli கூறினார்.
Tripoli மற்றும் Benghaziயிலுள்ள இரு கோவில்களும் இதுவரை எந்தத் தாக்குதல்களுக்கும் உள்ளாகவில்லை என்றும் கத்தோலிக்கர்கள் இக்கோவில்களுக்குச் சென்று அமைதிக்கான செபங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் ஆயர் Martinelli வத்திக்கானின் FIDES செய்தி நிறுவனத்திடம் இத்திங்களன்று கூறினார்.
பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களுக்கு உள்ளான மக்களைக் கண்காணிக்கும் பணியில் அருள்சகோதரிகள் பலரும் ஈடுபட்டிருப்பதையும் ஆயர் எடுத்துரைத்தார்.
லிபியாவில் உள்ள தலத்திருச்ச்சபை அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, பிற நாடுகளிலிருந்து அந்நாட்டில் குடியேறியுள்ள ஆசிய, ஆப்ரிக்க, மற்றும் ஐரோப்பிய கத்தோலிக்கர்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்து வருவதாக ஆயர் Martinelli மேலும் கூறினார்.
இவர்கள் அனைவருக்கும் அங்குள்ள கத்தோலிக்கக் கோவில்கள் வழிபாட்டிற்கு மட்டுமின்றி ஒருவருக்கொருவர் உறுதுணையை வளர்க்கும் முயற்சிகளுக்கும் பயன்படுகின்றனவென்று ஆயர் எடுத்துரைத்தார்.

4.             ஈராக் நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் குறித்து திருச்சபைத் தலைவர்கள் கவலை.

பிப் 21, 2011.  ஈராக் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மட்டுமல்ல, அங்குள்ள அனைத்து மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் குறித்து அந்நாட்டு திருச்சபைத் தலைவர்கள் இத்தாலியின் ஜெனிவாவில் கூடி சர்வதேச கத்தோலிக்கத் தலைவர்களுடன் விவாதித்தனர்.
நாட்டிற்குள் நிலவும் பாதுகாப்பின்மை குறித்தும் அகதிகள் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கும் புலம்பெயர்தல் குறித்தும் ஈராக் கிறிஸ்தவத் தலைவர்கள் கவலையை வெளியிட்டனர்.
அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பின் சூழலை உருவாக்க வேண்டிய அரசின் கடமையையும் அவர்கள் வலியுறுத்தினர்.
நாட்டில் நம்பிக்கையை மீண்டும் கொண்டு வரவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்ற கீழை ரீதி அசீரிய திருச்சபையின் பேராயர் மார் ஜியோர்ஜிஸ் சிலிவா, நாட்டை விட்டு வெளியேறியுள்ள மக்கள் நாடு திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் இருப்பினும், தற்போதைய அவசர‌த்தேவை என்பது ஈராக்கில் தற்போது வாழும் மக்களுக்கான பாதுகாப்பே என்றார்.‌
இயல்பு வாழ்வு நாட்டிற்குள் திரும்பி விட்டால், வளர்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவது எளிதாக இருக்கும் என்பதையும் பேராயர் சுட்டிக்காட்டினார்.
ஈராக் கிறிஸ்தவ சபைகள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றபோதிலும் அவை இன்னும் உயிர் துடிப்புடனேயே செயலாற்றி வருகின்றன என்பதை ஜெனிவா கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் எடுத்துரைத்தனர்.

5.             ஓர் இலட்சம் இந்தியக் கிறிஸ்தவர்களின் அமைதி ஊர்வலம்.

பிப் 21, 2011.  கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டது தொடர்பான அரசின் அறிக்கைக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக ஏறத்தாழ ஓர் இலட்சம் கிறிஸ்தவர்கள் மங்களூரில் அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.
மங்களூர் கத்தோலிக்க மறைமாவட்டம் ஏற்பாடுச் செய்திருந்த இவ்வூர்வலத்தில் 45 கிறிஸ்தவ சபைகள் மற்றும் தனியார் அமைப்புகளின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தையும் பொறுமையையும் புரிந்துகொண்டு அவர்களுக்கான நியாயத்தை அரசு வழங்கவேண்டும் என இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவ சபை ஒன்றின் குரு ஆல்வின் குலாசோ கூறினார்.
மங்களூரின் முக்கிய கிறிஸ்தவ பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்ற கிறிஸ்தவர்கள், தங்கள் வாயில் கறுப்புத் துணியைக் கட்டியவர்களாய், கைகளில் கறுப்புக் கொடியைத் தாங்கி தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த ஊர்வலம் குறித்துப் பேசிய மங்களூர் ஆயர் அலோசியஸ் பால் டி சூசா, 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்களின் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை 100யும் தாண்டியிருக்க, அரசு அமைத்த விசாரணைக்குழுவோ, அவ்வெண்ணிக்கை 57 எனக் கூறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

6.             முதியோர் மற்றும் நோயாளிகளைப் பேணிவரும் குடும்பங்களுக்கு சமூகம் ஆதரவு வழங்கவேண்டும். 

பிப் 21, 2011.  முதியோர் மற்றும் நோயாளி உறவினர்களை அக்கறையுடன் பேணிவரும் குடும்பங்களுக்கு சமூகம் வழங்கவேண்டிய ஆதரவின் தேவை குறித்து அழைப்பு விடுத்துள்ளார் இங்கிலாந்தின் வெஸ்ட் மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கொல்ஸ்.
இன்றைய சமூகத்தில் காணப்படும் சில உண்மை நிலைகள், கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு நேர் எதிராக உள்ளதாக தன் கவலையை வெளியிட்ட பேராயர், மருத்துவமனைகளில் முதியோர் ஆதரவின்றி விட்டுச் செல்லப்படுவது அதிர்ச்சி தருவதாக உள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
பொருளாதார நெருக்கடிகளைக் காரணம் காட்டி  உதவித் தேவைப்படுவோர் மீதான அக்கறைகளை அரசுகள் ஒதுக்க முடியாது என்ற பேராயர் நிக்கொல்ஸ், ஒரு சமூகத்தின் வருங்காலம் என்பது குடும்ப வாழ்வின் தன்மையையும் தரத்தையும் சார்ந்துள்ளது என மேலும் கூறினார்.

7.             தெற்கு ஆஸ்திரேலியாவின் கத்தோலிக்கப் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

பிப் 21, 2011.  தெற்கு ஆஸ்திரேலியாவின் கத்தோலிக்கப் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
2005ம் ஆண்டில் கத்தோலிக்கப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 46,665 ஆக இருக்க, அது 2010ம் ஆண்டில் 48,783 ஆக உயர்ந்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்குள் புதிதாக நுழையும் குழந்தைகள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்வோருக்கு கத்தோலிக்கப் பள்ளிகளில் முதலிடம்  கொடுக்கப்படுவதாக உரைத்த தெற்கு ஆஸ்திரேலிய கத்தோலிக்கக் கல்வியின் துணை இயக்குனர் மோனிக்கா கோன்வே, மாணவர்களுக்கான பாடங்கள், அரசின் பாடத்திட்டங்களுக்கு இயைந்த வகையிலும் கத்தோலிக்க மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகவும் தயாரிக்கப்படுகின்றன என்றார்.

8.             இறையடியார் இரண்டாம் ஜான் பால் நினைவாக ஆல்ப் மலைச் சிகரங்களில் பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டிகள்

பிப்.21,2011. போலந்து நாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டியில் அங்குள்ள கத்தோலிக்க குருக்களும் குருத்துவ மாணவர்களும் ஆர்வமாய் பங்கேற்றனர்.
பனிச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இறையடியார் இரண்டாம் ஜான் பால் நினைவாக ஆல்ப் மலைச் சிகரங்களில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இப்போட்டிகள் 1998ம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன.
கடந்த பதினான்கு ஆண்டுகளாய் பிரான்சிஸ்கன் சபை குருக்களால் நடத்தப்படும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் குருக்கள், மற்றும் குருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகி வருகிறதென்று இப்போட்டிகளை ஏற்பாடு செய்த அருள்தந்தை Gregory Szwarc கூறினார்.
இவாண்டு நடத்தப்பட்ட போட்டியில் 30 குருக்களும், 7 குருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர் என்றும், அவர்களில் அருள்தந்தை Chris Sontag மற்றும் அருள்தந்தை Henry Urbas ஆகியோர் பரிசுகள் பெற்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

No comments:

Post a Comment