1 திருத்தந்தை : மனிதன் தன்னலச் சோதனையை வெல்வதற்கு நோன்பு அனுபவம் உதவுகின்றது
2. குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் செயலராக கேரளா கோழிக்கோடின் ஆயர் நியமனம்.
3. மத்தியக்கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள் குறித்த அக்கறையை வெளியிட்டுள்ளனர் இஸ்லோவாக் ஆயர்கள்.
4. தினசரி கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்ளும் பெண்டிர், மகிழ்ச்சி மனநிலையுடன் வாழ்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
5. கல்வி அமைப்பானது அரசியலிலிருந்து விடுதலைப் பெற்றதாய் இருக்க வேண்டும்
6. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநில கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பு.
7. பங்களாதேசில் கிறிஸ்தவ பழங்குடி கிராமம் தாக்கப்பட்டுள்ளது.
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1 திருத்தந்தை : மனிதன் தன்னலச் சோதனையை வெல்வதற்கு நோன்பு அனுபவம் உதவுகின்றது
பிப்.22,2011. மனிதன் அன்பின் கூறுகளில் வளருவதற்குத் தடையாய் இருக்கும் தன்னலத்தை வெற்றி கொள்வதற்கு நோன்பு அனுபவம் வழியாக அவன் கற்றுக் கொள்ள முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வருகிற மார்ச் 9ம் தேதி சாம்பல் புதனோடு தொடங்கும் இந்த 2011ம் ஆண்டின் தபக்காலத்திற்கெனத் திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நோக்கங்களைக் கொண்டிருக்கும் நோன்பானது, கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆழமான மத முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது என்றுரைக்கும் திருத்தந்தை, நமது உணவு மேஜையில் வறியவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் தன்னலத்தை மேற்கொள்ளக் கற்றுக் கொள்கிறோம் என்றார்.
அத்துடன், சுயநலத்தைப் புறந்தள்ளி, நமக்கு நெருக்கமாக இருக்கும் கடவுளைக் கண்டு கொள்ளவும், பல சகோதர சகோதரிகளின் முகத்தில் கடவுளைக் காணவும் நோன்பு உதவுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
மனமாற்றத்திற்கான நமது அர்ப்பணத்தின் வெளிப்பாடுகளாக பாரம்பரியமாக நாம் கடைபிடிக்கும் நோன்பு, ஈகை, செபம் ஆகியவற்றின் வழியாக கிறிஸ்துவின் அன்பை இன்னும் அதித்தீவிரமாக வாழ்வதற்கு இத்தபக்காலம் போதிக்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
நமது வாழ்வை நேர்மையுடன் ஆழமாகப் பரிசீலனை செய்து நமது பலவீனங்களை ஏற்று ஒப்புரவு அருட்சாதனத் திருவருளைப் பெற்று கிறிஸ்துவை நோக்கி ஒரு தீர்மானமானப் பயணத்தைத் தொடருவதற்கு இத்தபக்காலம் சாதகமான காலம் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.
கடவுளுக்கு முதன்மைத்துவம் கொடுப்பதற்குத் தடையாய் இருக்கும் பண ஆசையால் இந்த நம் பயணத்தில் அடிக்கடி நாம் சோதிக்கப்படுகிறோம், இந்தப் பேராசை வன்முறைக்கும் சுரண்டலுக்கும் மரணத்திற்கும் இட்டுச் செல்லும், இதனாலே திருச்சபை இத்தபக்காலத்தில் தானதர்மத்தை ஊக்குவிக்கின்றது என்றார் அவர்.
பொருட்களை வணங்குதல், நம்மைப் பிறரிடமிருந்து பிரிப்பது மட்டுமல்லாமல், மனிதனைக் கடவுளிடமிருந்து திசை திருப்பி அவனை ஏமாற்றி மகிழ்ச்சியின்றி வைக்கின்றது என்று சொல்லி தானதர்மத்தின் சிறப்பை விளக்கியுள்ளார் திருத்தந்தை.
இத்தபக்காலத்தில் தினமும் இறைவார்த்தையைத் தியானித்து அதனை உள்வாங்குவதன் மூலம் செபம் எவ்வளவு நேர்த்தியானது என்றும் அதற்கு இணையாக வேறு எதுவும் இல்லை என்றும் கற்றுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.
சாத்தான் பணியில் இருக்கிறான், அவன் ஒருபொழுதும் சோர்வடைவதில்லை, இக்காலத்திலும் இறைவனுக்கு நெருக்கமாகச் செல்ல விரும்பும் மக்களை அவன் சோதித்துக் கொண்டிருக்கிறான் என்ற திருத்தந்தை, இவ்வுலகில் ஆட்சி செய்யும் சக்திகளாகிய இருளின் தலைவர்களுக்கு எதிராகச் செயல்பட கிறிஸ்தவ விசுவாசம் துணைசெய்கின்றது என்றார்.
நம் மீட்பரோடு ஆள்-ஆள் உறவு கொள்வதன் மூலம், நோன்பு, தானதர்மம், செபம் ஆகியவை மூலம், கிறிஸ்துவின் உயிர்ப்பை நோக்கிய நமது மனமாற்றப் பயணம் நமது திருமுழுக்கு திருவருட்சாதனத்தை மீண்டும் கண்டுணரச் செய்கின்றது என்றும் திருத்தந்தை அதில் கூறியுள்ளார்.
“நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்” (கொலோ. 2: 12) என்பது திருத்தந்தையின் இவ்வாண்டு தவக்காலச் செய்தியின் கருப்பொருளாகும்.
2. குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் செயலராக கேரளா கோழிக்கோடின் ஆயர் நியமனம்.
பிப்.22, 2011. குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் செயலராக கேரளா கோழிக்கோடின் ஆயர் ஜோசப் கலத்திபரம்பிலை இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வேராப்பொலி உயர்மறைமாவட்டத்தின் வதுத்தலா என்ற இடத்தில் 1952ம் ஆண்டு பிறந்த ஆயர் கலத்திபரம்பில் உரோம் நகரில் பயின்று முனைவர் பட்டம் பெற்று 2002ம் ஆண்டு கோழிக்கோடின் ஆயராக பொறுப்பேற்றார்.
குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் செயலராக திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள ஆயர் கலத்திபரம்பில், 1984 முதல் 89 வரை உரோம் நகரின் தூய பவுல் பாப்பிறை கல்லூரியின் துணை அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
3. மத்தியக்கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள் குறித்த அக்கறையை வெளியிட்டுள்ளனர் இஸ்லோவாக் ஆயர்கள்.
பிப்.22, 2011. தங்கள் விசுவாசத்திற்காக அநீதியான முறையில் துன்பங்களை அனுபவித்து வரும் மத்தியக்கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்த தன் ஆழ்ந்த அக்கறையை வெளியிட்டுள்ளது இஸ்லோவாக் ஆயர் பேரவை.
உலகின் எப்பகுதியிலும் மத விடுதலையையும் மனச்சான்றின் சுதந்திரத்தையும் பாதுகாக்கவேண்டியது அவசியம் எனக்கூறும் ஆயர்கள், கிறிஸ்தவர்களைச் சித்ரவதைகளிலிருந்து காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து ஐரோப்பிய ஐக்கிய அவை ஆராய்ந்து ஆவன மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
தங்கள் விசுவாசத்திற்காக துன்புறும் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பது குறித்த ஐரோப்பிய ஐக்கிய அவையின் தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படுவது, ஐரோப்பிய ஐக்கிய அவைக்கும் கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் கனியாக இருக்கும் எனவும் இஸ்லோவாக் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
4. தினசரி கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்ளும் பெண்டிர், மகிழ்ச்சி மனநிலையுடன் வாழ்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
பிப்.22, 2011. தினசரி கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்ளும் பெண்டிர், தங்கள் வாழ்வின் துன்ப துயர்களால் அதிகம் பாதிக்கப்படாதவர்களாய், பொதுவாகவே மகிழ்ச்சி மனநிலையுடன் வாழ்வதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்கப் பெண்களிடையே கடந்த 36 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பெண்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அவர்கள் வழிபாட்டுச் சடங்குகளில் பங்குகொள்வதும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.
5. கல்வி அமைப்பானது அரசியலிலிருந்து விடுதலைப் பெற்றதாய் இருக்க வேண்டும்
பிப்.22, 2011. இலங்கையில் கல்வி அமைப்பானது அரசியலிலிருந்து விடுதலை பெற்றதாய், பெற்றோரின் உரிமைகளை மதிப்பதாய் இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை தலத்திருச்சபை அதிகாரி ஒருவர்.
நாட்டிற்குத் தேவையான நல்ல திறமைசாலிகளை உருவாக்குவதற்கு கல்வி முறையில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்ற இலங்கையின் புனித பேதுரு பள்ளியின் முதல்வர் குரு த்ராவிஸ் கபிரியேல், ஒவ்வொரு மாணவனின் திறமையையும் மதிப்பதாயும் ஆசிரியர்களின் ஆர்வத்தையும் ஆய்வுகளையும் அனுமதிப்பதாயும் கல்வி முறையின் சீர்திருத்தங்கள் இருக்க வேண்டும் என்றார்.
ஓர் அரசு கல்வி முறையை முற்றிலுமாக தன் கீழ் கொண்டிருப்பது பள்ளிகளை அரசு இயந்திரமாக நடத்துவது போல் இருக்கும் என்ற அவர், தங்கள் குழந்தைகளுக்கான கல்விக்கூடங்களைத் தேர்ந்தெடுக்க பெற்றோர்களுக்கு இருக்கும் உரிமை மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த அண்மை ஆய்வுகளின் முடிவுகள் பற்றியும் எடுத்துரைத்த குரு கபிரியேல், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் கல்வித்திட்டங்களுக்கு இயைந்த வகையில் இலங்கையின் வழிமுறைகளும் இருக்க வேண்டும் என்றார்.
6. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநில கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பு.
பிப்.22, 2011. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்தின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவப் பெண்மணி ஆசியா பீபிக்கு ஆதரவாக இந்தியாவின் பஞ்சாப் மாநில கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து உண்ணா நோன்பு மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களை மேற்கொண்டனர்.
ஆசியா பீபிக்கு எதிரான மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசை வேண்டுவதாயும், தேவ நிந்தனைச் சட்டத்தை நீக்கும்படி பாகிஸ்தான் அரசை வலியுறுத்துமாறு சர்வதேச சமுதாயத்தை விண்ணப்பிப்பதாயும் இந்த எதிர்ப்புப் போராட்டம் இந்திய பாகிஸ்தான் எல்லையின் இந்தியப் பகுதியில் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானின் தேவ நிந்தனைச் சட்டத்தை தனிமனிதர்கள் தங்கள் சொந்த பகைக்குப் பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டிய அமிர்தசரஸ் ஆயர் சமந்தராய், இதனாலேயே இச்சட்டத்தை நீக்க சர்வதேச சமுதாயம் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
7. பங்களாதேசில் கிறிஸ்தவ பழங்குடி கிராமம் தாக்கப்பட்டுள்ளது.
பிப்.22, 2011. பங்களாதேசில் சிட்டகாங் மறைமாவட்டத்தின் கிராமம் ஒன்றைத் தாக்கி, கிறிஸ்தவ பழங்குடியினரை வெளியேற்றியுள்ளனர் இஸ்லாமிய குடியேற்றதாரர்கள்.
Ragipara என்ற கிராமத்தில் குடியேறியுள்ள இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டவர்களுள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் இந்துக்கள் அடங்குவர்.
இக்கிராமத்தில் குடியேறிய 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த பூர்வீகக் குடிமக்களின் விவசாய நிலங்களைக் கைப்பற்றி அம்மக்களை ஊரை விட்டு விரட்டியுள்ளனர். இதனைக் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்ததாக சிறுபான்மை மதத்தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment