1. இந்தியப் பயணம் தன்னை அதிகம் கவர்ந்ததாகக் கூறும் கர்தினால்
2. குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்துவதே வறுமையை நீக்கும் சிறந்த வழி - வத்திக்கான் அதிகாரி
3. மக்களாட்சி முறைப்படி எகிப்தின் வருங்காலம் அமைக்கப்படுவதே தங்கள் கனவு - கர்தினால் Antonios Naguib
4. நாடோடி இனத்தவர் குறித்து திருத்தந்தை விடுத்த அழைப்பிற்கு இந்துமதத் தலைவர்களின் பாராட்டு
5. கந்தமால் பகுதியில் அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு ஒரிஸ்ஸா அரசு 3,70,000 அமெரிக்க டாலர்கள் வழங்க முடிவு
6. நாட்டின் பட்ஜெட் திட்டங்கள் நன்னெறிகளின் அடிப்படையில் வரையறுக்கப்படவேண்டும் - அமெரிக்க ஆயர்கள்
7. காதலர் தினத்தையொட்டி, நேபாள கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு உதவிகள்
8. கத்தோலிக்கர் ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட அமெரிக்காவின் மிக உயர்ந்த பட்டம்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. இந்தியப் பயணம் தன்னை அதிகம் கவர்ந்ததாகக் கூறும் கர்தினால்
பிப்.16,2011. இந்தியா ஓர் அழகான நாடு, அங்கு மதங்கள் மதிக்கப்படுவதே தன்னைக் கவர்ந்த மிகச் சிறந்த அம்சம் என்று கர்தினால் Cormac Murphy-O’Connor தெரிவித்தார்.
மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் இந்தியாவில் மேற்கொண்ட முதல் திருப்பயணத்தின் 25ம் ஆண்டைக் கொண்டாட, தற்போதையத் திருத்தந்தையின் பிரதிநிதியாக இந்தியாவில் அண்மையில் பயணங்களை மேற்கொண்ட கர்தினால் Murphy-O’Connor, BBC தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
இறையடியார் இரண்டாம் ஜான்பால் நினைவாகக் கொண்டாடப்பட்ட அனைத்து கூட்டங்களிலும் மக்கள் மிக ஆர்வமாய் பங்கெடுத்ததையும், அவர்கள் தனக்கு அளித்த மாலை, மரியாதைகள் தன்னை அதிகம் கவர்ந்ததாகவும் கர்தினால் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
இந்திய கத்தோலிக்கர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராய் இருந்தாலும் அவர்கள் நாட்டில் ஆற்றவேண்டிய கடமை மிகப் பெரியது என்று 25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் எடுத்துரைத்ததை மீண்டும் நினைவு கூர்ந்த கர்தினால் Murphy-O’Connor, தனது பயணத்தின்போது, இந்திய கத்தோலிக்கத் திருச்சபை உறுதியுடன், ஆர்வமுடன் இயங்கி வருவதைக் காண முடிந்ததென்று எடுத்துரைத்தார்.
2. குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்துவதே வறுமையை நீக்கும் சிறந்த வழி - வத்திக்கான் அதிகாரி
பிப்.16,2011. குழந்தைகளின் நலனிலும், அவர்கள் முன்னேற்றத்திலும் முக்கிய கவனம் செலுத்துவதே வறுமையை நீக்குவதற்கும், எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் சிறந்த வழி என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
"வறுமை ஒழிப்பு" என்ற கருத்தை மையமாகக் கொண்டு நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.கருத்தரங்கில் அண்மையில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் இவ்வாறு கூறினார்.
நாம் இன்று சந்திக்கும் சமுதாய, பொருளாதார பிரச்சனைகள் வருங்காலத்திலும் தொடராமல் இருக்கவும், அவைகளை வருங்காலத்தில் தீர்ப்பதற்கும் ஒரே வழியாக இருப்பவர்கள் இன்றைய குழந்தைகளே என்று கூறிய பேராயர், இன்று நிலவும் வறுமைக்கு குழந்தைகள் எவ்விதத்திலும் காரணம் இல்லை எனவும் எடுத்துரைத்தார்.
மக்கள் தொகை வளராமல் இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், இன்று வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் மனித சமூகத்தின் சராசரி வயது அதிகரித்திருப்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று பேராயர் சுல்லிக்காட் கூறினார்.
வறுமை ஒழிப்பு என்பதை வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் பார்ப்பது தவறு என்றும், முழுமனித வளர்ச்சியிலேயே சமுதாய முன்னேற்றமும் அடங்கியுள்ளதென்றும் ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுல்லிக்காட் தன் உரையின் நிறைவில் கூறினார்.
3. மக்களாட்சி முறைப்படி எகிப்தின் வருங்காலம் அமைக்கப்படுவதே தங்கள் கனவு - கர்தினால் Antonios Naguib
பிப்.16,2011. மத அடிப்படையிலோ, இராணுவ அடிப்படையிலோ அரசு அமையாமல், மக்களாட்சி முறைப்படி எகிப்தின் வருங்காலம் அமைக்கப்படுவதே தங்கள் நம்பிக்கை, கனவு என்று அலேக்சான்றியாவின் முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறியுள்ளார்.
எகிப்தின் முன்னாள் அரசுத் தலைவர் ஹோஸ்னி முபாரக் பதவி துறந்ததை அடுத்து அங்கு நாட்டைக் கட்டுப்படுத்தி வரும் இராணுவத் தலைமைக்குத் தன் சிறப்பான ஆதரவைத் தெரிவித்துள்ளார், காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களின் தலைவர் கர்தினால் Naguib.
தற்போது பொறுப்பேற்றிருக்கும் இராணுவம், புதிய அரசை அமைக்கும் விதமாக, தேர்தல்களை நடத்தவிருப்பதாக அறிவித்திருப்பதைத் தான் பெரிதும் வரவேற்பதாகக் கூறிய கர்தினால், மக்களாட்சியை அமைக்கும் முயற்சியில் அந்நாட்டின் 200000 காப்டிக் கத்தோலிக்கர்களும் முழுமையாக ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எகிப்தின் தற்போதைய நிலையற்ற தன்மையால், மத அடிப்படைவாதத்தினர் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவர் என்பது மிகைப்படுத்தப்பட்ட அச்சம் என்று கூறிய கர்தினால் Naguib, எகிப்து நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கட்டுப்படுத்துவதை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, அந்நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விரும்பவில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.
கர்தினால் Antonios Naguibன் கருத்துக்களையே மின்யா மறைமாவட்ட ஆயர் இப்ராகிம் சிட்ராக்கும் Aid to Church in Need என்ற அமைப்புக்கு அண்மையில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
4. நாடோடி இனத்தவர் குறித்து திருத்தந்தை விடுத்த அழைப்பிற்கு இந்துமதத் தலைவர்களின் பாராட்டு
பிப்.16,2011. உரோமையில் வாழும் நாடோடி இனத்தவர் இன்னும் அதிகமாய் சமுதாயத்தின் ஓர் அங்கமாக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை விடுத்த அழைப்பிற்கு இந்துமதத் தலைவர்கள் தங்கள் பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய மூவேளை செப உரையில் உரோமை நகரில் அண்மையில் தீவிபத்தில் இறந்த குழந்தைகளை நினைவு கூர்ந்தபோது, நாடோடி மக்களின் வாழ்வை முன்னேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தார்.
அகில உலக இந்துக்கள் கழகத்தின் தலைவரான Rajan Zed என்ற அமெரிக்க அரசு அதிகாரி, திருத்தந்தையின் இவ்வழைப்பைக் குறித்து தன் கருத்தைத் தெரிவித்தபோது, திருத்தந்தையின் கருத்துக்கள் சரியான வழியில் அமைந்திருந்தன என்று கூறினார்.
Roma என்று அழைக்கப்படும் நாடோடி மக்களின் முன்னேற்றத்திற்குத் திருத்தந்தையுடன் இணைந்து உழைக்க தான் தயாராக இருப்பதாகவும் Rajan Zed எடுத்துரைத்தார்.
5. கந்தமால் பகுதியில் அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு ஒரிஸ்ஸா அரசு 3,70,000 அமெரிக்க டாலர்கள் வழங்க முடிவு
பிப்.16,2011. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு ஒரிஸ்ஸா அரசு 3,70,000 அமெரிக்க டாலர்கள், அதாவது, 1,66,50,000 ரூபாய் நிதியை வழங்கத் தீர்மானித்துள்ளது.
தலத்திருச்சபைத் தலைவர்களும், 2008ம் ஆண்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களும் அரசு அதிகாரிகளுடன் அண்மையில் நடத்திய ஒரு சந்திப்பின் விளைவாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதென ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அழிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட அரசு இதுவரை பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், அவர்களைத் தலத் திருச்சபை மீண்டும் மீண்டும் அணுகிய பிறகே இம்முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர் என்று இப்பகுதி மக்களுக்குப் பணி புரியும் Monfort சபையின் சகோதரர் K J Markose கூறினார்.
6. நாட்டின் பட்ஜெட் திட்டங்கள் நன்னெறிகளின் அடிப்படையில் வரையறுக்கப்படவேண்டும் - அமெரிக்க ஆயர்கள்
பிப்.16,2011. நாட்டில் வரையறுக்கப்படும் பட்ஜெட் திட்டங்கள் வெறும் பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டும் வரையறுக்கப்படக் கூடாது, மாறாக நன்னெறிகளின் அடிப்படையிலும் வரையறுக்கப்படவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் கத்தோலிக்கத் தலைவர்கள் 300 பேர் அடங்கியக் குழுவொன்று இச்செவ்வாயன்று வாஷிங்டன் மாநகரில் மக்களவையின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ள இக்கருத்தை ஒரு கடிதத்தின் மூலம் அவர்களுக்குத் தெரிவித்தனர்.
பொருளாதாரப் பின்னடைவு இன்னும் தீராத இச்சூழலில் அமெரிக்காவிலும், உலகெங்கும் உள்ள ஏழைகளை முன்னிறுத்தி பட்ஜெட் விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது மனசாட்சியின் அவசியம் என்று அமெரிக்க ஆயர்கள் இக்கடிதத்தின் மூலம் கூறியுள்ளனர்.
பிற நாடுகளிடமிருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்றுவது முக்கியமான ஒரு தேவை என்றாலும், நாட்டிற்குள் பாதுகாப்பு ஏதுமின்றி வாடும் ஏழைகளைப்பற்றி சிந்திப்பதும் சரிநிகரான ஒரு தேவை என்று ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆயர்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், அமெரிக்க ஆயர் பேரவையின் அகில உலக நீதி மற்றும் அமைதிக்கான பணிக்குழுவின் தலைவரான ஆயர் Howard Hubbard, உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்றத்திற்கான பணிக்குழுவின் தலைவர் ஆயர் Stephen Blaire ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
7. காதலர் தினத்தையொட்டி, நேபாள கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு உதவிகள்
பிப்.16,2011. இத்திங்களன்று கொண்டாடப்பட்ட வாலன்டைன் நாள், அல்லது காதலர் தினத்தையொட்டி, நேபாள கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு உதவிகள் பல செய்து, விவிலியத்தை வழங்கினர்.
எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல், காத்மண்டு நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில் கத்தோலிக்க, மற்றும் பிற கிறிஸ்தவ இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விளையோரின் முயற்சிகளைக் கண்ணுற்ற பல இந்துக்களும் இதைப் பாராட்டினர். வாலன்டைன் நாளன்று கடவுளின் அன்பைப் பறைசாற்றும் வகையில் இவ்விளைஞர்கள் செய்த பணிகள் பாராட்டுக்குரியதென்று புகழ்பெற்ற இந்து பாடகர் Komal Oli கூறினார்.
இந்துக்களின் அரசு என்று விளங்கிய நேபாளத்தில் 2006ம் ஆண்டு முதல் மத சுதந்திரம் மதிக்கப்படுவதால், தற்போது அந்நாட்டில் 1,50,000 கிறிஸ்தவர்களும், 8,000 கத்தோலிக்கர்களும் வாழ்கின்றனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவில் 1929ம் ஆண்டு காதலர் தினத்தன்று திருமணம் புரிந்து, கடந்த 82 ஆண்டுகளாக பிரியாமல் வாழும் இருவரை அமெரிக்க ஐக்கிய நாடு சிறப்பான வகையில் கௌரவித்தது.
New Mexicoவில் வாழும் Marshall Kuykendallம் அவரது மனைவி Winnieம் திருமணம் புரிந்தபோது, தங்களைச் சாவு மட்டுமே பிரிக்கவேண்டும் என்ற உறுதியை கோவிலிலும், நீதி மன்றத்திலும் பதிவு செய்ததாகக் கூறினர்.
8. கத்தோலிக்கர் ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட அமெரிக்காவின் மிக உயர்ந்த பட்டம்
பிப்.16,2011. உழைப்பாளர்களின் தலைவராக இருந்த கத்தோலிக்கர் ஒருவர் இச்செவ்வாயன்று வாஷிங்க்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் மிக உயர்ந்த பட்டம் ஒன்றைப் பெற்றார்.
76 வயதான John Sweeney, கல்லூரியை முடித்ததும் அவருக்குக் கிடைத்த IBM நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அகிலஉலக தையல் பெண்களின் கழகம் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். பின்னர் இரு தொழிலாளர் சங்கங்களின் பொறுப்பாளராக 35 ஆண்டுகள் பணி செய்தார். அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்றத்திற்கான பணிக்குழுவின் ஆலோசகராகப் பணி புரிந்தார்.
இவரது பல்வேறு சேவைகளைப் பாராட்டி, அமெரிக்க அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பட்டமான Medal of Freedom அதாவது விடுதலைப் பதக்கம் என்ற சிறப்பை இச்செவ்வாயன்று அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமா இவருக்கு வழங்கினார்.
முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ், ஜெர்மன் பிரதமர் அஞ்செலா மெர்கெல், தொழிலதிபரும் உலகப்பெரும் செல்வந்தருமான Warren Buffett ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment