1. வத்திக்கான் அதிகாரி : தண்ணீர் ஒவ்வொருவருக்கும் உரிய, உலகளாவிய உரிமையைக் கொண்டுள்ளது
2. திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் : மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய பணி மிகவும் சவாலானது
3. இயேசுவின் திருஇதயப் பக்தியைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் உலக மாநாடு
4. கிழக்கு இந்தியாவில் இன மோதல்கள் முடிவுக்கு வருவதற்கு அசாம் பேராயர் உதவி
5. லிபியாவில் கத்தோலிக்க மறைபோதகர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்
6. WCC : அமெரிக்க ஐக்கிய நாடு இஸ்ரேல் மீதான ஐ.நா.தீர்மானத்தைத் தடுத்திருப்பதில் தவறு செய்துள்ளது
7. தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது
8. உலகெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சார்பாகக் குரல் கொடுப்பதற்கென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் புதிய அமைப்பு
9. உலகின் 75 விழுக்காட்டுப் பவளப்பாறைகள் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. வத்திக்கான் அதிகாரி : தண்ணீர் ஒவ்வொருவருக்கும் உரிய, உலகளாவிய உரிமையைக் கொண்டுள்ளது
பிப்.24,2011. நீர் வளங்கள், தனிப்பட்டவரின் சொத்தாகவும் முழுவதும் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலும் நிர்வகிக்கப்படக் கூடாது, மாறாக, இவை உலகளாவிய தன்மையையும் மாற்றிக் கொடுக்கப்பட முடியாத உரிமையையும் கொண்டுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Greenaccord என்ற இத்தாலிய அமைப்பு, “எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடு” என்ற தலைப்பில் உரோமையில் இவ்வியாழனன்று நடத்திய அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைச் செயலர் ஆயர் மாரியோ தோசோ (Mario Toso) இவ்வாறு கூறினார்.
கொலம்பியா, பிலிப்பைன்ஸ், கானா போன்ற நாடுகளின் தலைநகரங்களில் தனியார் விநியோகிக்கும் தண்ணீரின் விலை, நியுயார்க், இலண்டன் போன்ற நகரங்களின் தண்ணீர் விலையைவிட மூன்று முதல் ஆறு மடங்கு அதிகம் என்று குறிப்பிட்ட ஆயர் தோசோ, தண்ணீர், வியாபாரப் பொருள் அல்ல, மாறாக இது ஒவ்வொருவருக்கும் உரியது, இது உலகளாவிய உரிமையைக் கொண்டுள்ளது என்றார்.
இன்று உலகில் சுமார் நூறு கோடிப் பேருக்கு சுத்தமான குடிநீர் வசதி கிடையாது, புவி வெப்பமடைந்து வருவதால் இவ்வெண்ணிக்கை 2050ல் மேலும் 280 கோடியாக உயரும், உலக அளவில் சுத்தமான நீரைப் பயன்படுத்தும் தேவை 5 முதல் 25 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்பதால் 2025ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகையில் சுமார் பாதிப்பேர் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்குவர், இவர்களில் பாதிப்பேர் வளரும் நாடுகளில் இருப்பார்கள் என்றும் ஆயர் எச்சரித்தார்.
இதனால் ஏற்படும் மோசமான சுகாதாரச் சூழல்களால் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 18 இலட்சம் சிறார் இறக்க நேரிடும் என்றும் ஆயர் தோசோ தெரிவித்தார்.
தண்ணீர் மக்கள் நலமாக வாழ்வதற்கு வழி செய்வதால், இதற்கான உரிமை மற்ற அடிப்படை உரிமைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றது என்று கூறிய திருப்பீட அதிகாரி, நீர் வளங்கள் சரியாக நிர்வகிக்கப்படுவதற்குச் சர்வதேச சமுதாயம் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
2. திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் : மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய பணி மிகவும் சவாலானது
பிப்.24,2011. மனித வாழ்வுக்கு எதிரான அச்சுறுத்தல் மிகக் கடுமையாக அதிகரித்து வரும் இன்றையக் காலக்கட்டத்தில், ஒருங்கிணைந்த மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய நமது பணி மிகவும் சவாலானது என்று திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் ஆயர் கராஸ்கோ தெ பவுலா கூறினார்.
திருப்பீட வாழ்வுக் கழகம் இவ்வியாழனன்று வத்திக்கானில் தொடங்கிய மூன்று நாள் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் தெ பவுலா, இக்காலத்தில் மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய நமது பணியை மிக ஆழமாகத் தீவிரப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
இன்றைய நிலவரத்தை நோக்கும் போது, மனித வாழ்வுக்கானத் திருப்பீட கழகத்தை மனிதனுக்கானத் திருப்பீட கழகம் என்று பெயரிடத் தோன்றுகிறது என்றும் உரைத்த ஆயர் தெ பவுலா, வருங்காலத்தைப் புதிய கண்களுடன் நோக்க வேண்டும் என்றார்.
3. இயேசுவின் திருஇதயப் பக்தியைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் உலக மாநாடு
பிப்.24,2011. குடும்பங்களிலும் சமூகங்களிலும் இறையன்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இயேசுவின் திருஇதய பக்தி தோன்றிய இடத்தில் முதன் முறையாக உலக மாநாடு ஒன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இயேசுவின் திருஇதய பக்தி பிறந்த இடமான பிரான்ஸ் நாட்டு பார்லே மோனியால் (Paray-le-Monial) என்ற ஊரில் வருகிற அக்டோபர் 6 முதல் 11 வரை இந்த முதல் உலக மாநாடு இடம் பெறவுள்ளது.
இம்மாநாட்டை, இயேசு மற்றும் மரியின் திருஇதயங்கள் துறவு சபையினர் நடத்துகின்றனர்.
பார்லே மோனியால் என்ற ஊரிலுள்ள காட்சிகள் சிற்றாலயத்தில் அருட்திரு Mateo Crawley-Boevey என்பவர் தனது நோயிலிருந்து அற்புதமாய்க் குணமான பின்னர் இயேசுவின் திருஇதய பக்தியை உலகெங்கும் பரப்புவதற்குத் தூணடுதல் பெற்றார். 1907ம் ஆண்டில் பாப்பிறை பத்தாம் பத்திநாதர் இப்பக்தியை உலகெங்கும் பரப்புவதற்கு இக்குருவுக்கு உத்தரவு அளித்தார்.
இயேசுவின் திரு இதய நகரம் என அழைக்கப்படும் Paray-le-Monial ல் 17ம் நூற்றாண்டில் மார்கிரேட் மேரி அலகோக் (Margherita Maria Alacoque) என்னும் இளம் அருட்சகோதரிக்கு இயேசுவின் திரு இதயம் காட்சிக் கொடுத்தது.
4. கிழக்கு இந்தியாவில் இன மோதல்கள் முடிவுக்கு வருவதற்கு அசாம் பேராயர் உதவி
பிப்.24,2011. கிழக்கு இந்தியாவில் அசாம் மற்றும் மெஹாலய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் பூர்வீக இனத்தவர் மத்தியில் ஏற்பட்டுள்ள பதட்டநிலைகளுக்குத் தீர்வு காண்பதற்கு குவாஹாட்டி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் உதவி செய்து வருகிறார்.
இப்பிரச்சனை தொடர்பாக பேராயர் மெனாம்பரம்பில், ராப்ஹா மற்றும் காரோ சமூகங்களுடன் அண்மையில் நடத்திய கூட்டத்தில், நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்புவதற்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக அச்சமூகங்கள் உறுதி அளித்தன.
கடந்த சனவரி தொடக்கத்தில் அசாம் மற்றும் மெஹாலய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் 90 கிராமங்களில் ஏறக்குறைய 1500 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
ராப்ஹா இன இளையோர், காரோ இனத் திருமண நிகழ்வு ஒன்றில் நடத்திய தாக்குதலையொட்டி இவ்வன்முறைகள் தொடங்கின.
5. லிபியாவில் கத்தோலிக்க மறைபோதகர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்
பிப்.24,2011. லிபிய நாட்டு நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கு ஆதரவானப் படைவீரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம் பெற்று வரும் வேளை, அந்நாட்டில் கத்தோலிக்க மறைபோதகர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அதிகச் சுதந்திரம் கேட்டுப் போராடும் மக்கள் மீது லிபிய அதிபர் முவாம்மர் கடாஃப்பி கடும் வன்முறை நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளை, அந்நாட்டின் கிழக்கில் பாதிப் பகுதி அதாவது பென்காசியும் மற்ற நகரங்களும் இராணுவத்தின் ஆதரவுடன் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கள் வந்துள்ளன.
தலைநகர் திரிப்போலியை ஆக்ரமிப்பது தொடர்பாகக் கடும் மோதல்கள் இடம் பெற்று வருகின்றன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வன்முறைகளில் ஆயிரம் முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும் என்ற அச்சமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
லிபியாவில் சரியான ஆவணங்கள் இன்றி வாழும் 500 குடியேற்றதாரர்களை வெளியேற்றுவதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை முயற்சித்து வருகிறது.
லிபியாவிலுள்ள கத்தோலிக்கர் முழுவதும் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
6. WCC : அமெரிக்க ஐக்கிய நாடு இஸ்ரேல் மீதான ஐ.நா.தீர்மானத்தைத் தடுத்திருப்பதில் தவறு செய்துள்ளது
பிப்.24,2011. இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்புக்களை அமைத்து வருவதைக் கண்டிக்கும் ஐ.நா.பாதுகாப்பு அவைத் தீர்மானத்தை அமெரிக்க ஐக்கிய நாடு தடுத்து நிறுத்தியிருப்பது குறித்து WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் தனது ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 18ம் தேதியன்று இடம் பெற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு இத்தீர்மானத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு அவையின் 15 உறுப்பினர்களில் 14ம், இன்னும் 130 நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன.
இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்புக்களை அமைத்து வருவதற்கான நியாயத்தை அமெரிக்க ஐக்கிய நாடு ஏற்றுக் கொள்ளாது என்று 2010ம் ஆண்டு ஜூனில் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதற்கு தற்போதயை அந்நாட்டின் செயல்பாடு முரணாக இருக்கின்றது என்று WCC மன்றத்தின் மையக் குழு கூறியது.
மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் புதிய சவாலகளைக் களைவது குறித்த சர்வதேச கருத்தரங்கை 2012ம் ஆண்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளது WCC மன்றம்.
WCC மன்றத்தில் 349 கிறிஸ்தவ சபைகள் உறுப்பினர்களாக உள்ளன.
7. தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது
பிப்.24,2011. சி.என்.என். நிறுவனம், இந்தியாவின் சிறந்த மாநிலமாக, தமிழகத்தைத் தேர்வு செய்து விருது வழங்கியது. இவ்விருதை, துணை ஜனாதிபதியிடமிருந்து கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.
சி.என்.என் - ஐ.பி.என் செய்தி நிறுவனம், தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களை தேர்வு செய்து அவற்றுக்கு, "வைர மாநில விருதுகள்' வழங்கி வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டுக்கு, ஒன்பது பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டன. இவற்றில், தமிழகம் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதையும், மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.
டில்லியில் இச்செவ்வாயன்று நடந்த விழாவில், இவ்விருதுகளை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி வழங்கினார். தமிழக அரசின் சார்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுகளை பெற்றுக் கொண்டார்.
8. உலகெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சார்பாகக் குரல் கொடுப்பதற்கென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் புதிய அமைப்பு
பிப்.24,2011. உலகெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சார்பாகக் குரல் கொடுப்பதற்கென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் UN Women என்ற புதிய பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வில் உலகளாவிய அரசியல், வணிகம், பத்திரிகை, இசை, திரைப்படம் எனப் பல துறையினர் கலந்து கொண்டனர்.
2010ம் ஆண்டு ஜூலையில் ஐ.நா.பொது அவையால் உருவாக்கப்பட்ட இப்புதிய அமைப்பில் UNIFEM என்ற பெண்களுக்கான ஐ.நா. வளர்ச்சித் திட்ட நிதி, DAW என்ற பெண்கள் முன்னேற்றப் பிரிவு, பாலின விவகாரம் குறித்த சிறப்பு ஆசலோசகர் அலுவலகம், UN-INSTRAW என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான சர்வதேச ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை உள்ளடங்கும்.
இப்புதிய அமைப்பு ஆண்டுக்குக் குறைந்தது 50 கோடி டாலர் செலவில் செயல்படும்.
9. உலகின் 75 விழுக்காட்டுப் பவளப்பாறைகள் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன
பிப்.24,2011. அதிகப்படியாக மீன் பிடித்தல், கடற்கரை வளர்ச்சி, தூய்மைக் கேடு உட்பட மனிதரின் செயல்பாடுகளால் உலகின் 75 விழுக்காட்டுப் பவளப்பாறைகள் அழியும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன என்று ஐ.நா.ஆதரவு பெற்ற அறிக்கை ஒன்று கூறுகிறது.
வெப்பநிலை மாற்றம், கடல் வெப்பமடைதல், பெருங்கடல்களின் மட்டம் அதிகரிப்பு, போன்றவையும் இதற்குக் காரணங்களாக அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
பவளப்பாறைகள் எதிர்நோக்கும் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2030ம் ஆண்டுக்குள் 90 விழுக்காட்டுப் பகுதியும் 2050க்குள் முழுவதுமாகவும் அழியும் ஆபத்தில் உள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment