1. இறையழைத்தலுக்கான அகிலஉலக செப நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள சிறப்புச் செய்தி
2. ஒப்புரவு அருட்சாதனத்தை எந்தக் கருவியின் மூலமாகவும் நிறைவேற்ற முடியாது - திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்
3. நாக்பூர் உயர்மறைமாவட்டத்தின் உதவித் திட்டங்களால் காப்பாற்றப்பட்டிருக்கும் 600 விவசாயக் குடும்பங்கள்
4. பாகிஸ்தான் கத்தோலிக்க விவிலியக் கழகத்தின் "ஒரு லட்சம் விவிலிய நண்பர்கள்"முயற்சி
5. கருத்தடைக்கு எதிராக பிலிப்பின்ஸ் ஆயர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்புக்கு அமெரிக்க ஆயர்களின் ஆதரவு
6. வியட்நாமில் தொழு நோயாளர்கள் குடியிருப்புக்கு நடுவே திறக்கப்பட்ட ‘இறை இரக்கம்’ கோவில்
7. பிரெஞ்ச் அரசுத்தலைவருக்கு World Social Forum அனுப்பியுள்ள அழுத்தமான செய்தி
8. இயற்கைப் பேரிடர்களிலிருந்து நகரங்களையும் மக்களையும் காக்க ஐ.நா.பொதுச் செயலரின் பரிந்துரை
----------------------------------------------------------------------------------------------------------------
1. இறையழைத்தலுக்கான அகிலஉலக செப நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள சிறப்புச் செய்தி
பிப்.10,2011. இயேசு தன் சீடர்களை அழைத்ததும், அவர்களைத் தன்னோடு பணிகளில் ஈடுபடுத்தியதும், இறையழைத்தலை எவ்விதம் நாம் வளர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
வருகிற மே மாதம் 15ம் நாள் ஞாயிறன்று சிறப்பிக்கப்படவிருக்கும் இறையழைத்தலுக்கான அகில உலக செப நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள சிறப்புச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
தலத் திருச்சபையில் இறையழைத்தலை உருவாக்குதல் என்ற கருத்தில் வருகிற மே மாதம் சிறப்பிக்கப்படும் இந்த இறையழைத்தல் செப நாள், அகில உலகத் திருச்சபையில் 48 ஆண்டுகளாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
எழுபது ஆண்டுகளுக்கு முன் அப்போது திருத்தந்தையாக இருந்த வணக்கத்திற்குரிய பனிரெண்டாம் பத்திநாதர் குருத்துவ அழைத்தலுக்கென உருவாக்கிய திருப்பீடச் சேவையைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு மறைமாவட்டங்களில் இறையழைத்தலை வளர்க்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திருத்தந்தை தன் சிறப்புச் செய்தியில் கூறியுள்ளார்.
இயேசு தன் பணி வாழ்வை துவக்கும் நேரத்தில் எளிய மீனவர்களை தன் பின்னே வருமாறு அழைத்தார்; அவர்களுக்குப் படிப்படியாக தன் மீட்புப் பணிகுறித்த பல பாடங்களைச் சொல்லித் தந்தார்; இறுதியில் தன் நேரம் நெருங்கியது என தெரிந்ததும், தன் பணியைத் தொடரும்படி அவர்களுக்குப் பணித்தார் என்ற கருத்துக்களைத் தன் செய்தியில் தெளிவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை.
நாம் வாழும் இக்காலச்சூழலில் இயேசு "என் பின்னே வாருங்கள்" என்று விடுக்கும் அழைப்பு, உலகில் ஓங்கி ஒலிக்கும் பிற சப்தங்களில் அடங்கிப் போக வாய்ப்புக்கள் அதிகம் உண்டு, எனவே இன்றையச் சூழலில் இயேசுவின் குரலைக் கேட்பதும் அவரது வழியைப் பின்பற்றுவதும் பெரும் சவால்களாக வளர்ந்து வருகின்றன என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
இச்செய்தியின் ஒரு பகுதியில் தன் சகோதர ஆயர்களுக்குச் சிறப்பான முறையில் செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை. ஆயர்கள் தங்கள் மறைமாவட்டங்களில் குருத்துவ வாழ்வுக்கும், துறவற வாழ்வுக்குமான இறையழைத்தலை கவனமாய் வளர்க்க வேண்டும்; இறையழைத்தல் பணியில் ஈடுபடுவோரை அக்கறையுடன் தேர்ந்து அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்; மற்றும், தங்கள் தலத் திருச்சபையின் தேவைகளை மட்டும் மனதில் கொள்ளாமல், உலகளாவியத் திருச்சபைக்கும் குருக்களும், துறவறத்தாரும் உழைக்க வேண்டுமெனும் கண்ணோட்டத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று திருத்தந்தை ஆயர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
2. ஒப்புரவு அருட்சாதனத்தை எந்தக் கருவியின் மூலமாகவும் நிறைவேற்ற முடியாது - திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்
பிப்.10,2011. iPhone வழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்புரவு அருட்சாதனம் குறித்த ஒரு வசதி, குருவிடம் நேரடியாகப் பெறும் இத்திருவருட்சாதனத்திற்கு எவ்வகையிலும் ஒரு மாற்று வழி அல்ல என்பதைத் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் இயேசு சபை குரு Federico Lombardi கூறினார்.
"ஒப்புரவு அருட்சாதனம்: உரோமன் கத்தோலிக்க முறைகள்" என்ற பெயரில் இவ்வருட்சாதனம் குறித்த விவரங்கள் அடங்கிய ஒரு வசதியை அமெரிக்காவில் iApps என்ற நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.
iPhone, iPod உள்ளவர்கள் இந்த வசதி மூலம் ஒப்புரவு அருட்சாதனத்திற்கு எவ்விதம் தங்களையே தயாரிப்பது, எவ்விதம் தங்கள் மனசாட்சியை பரிசோதிப்பது என்பவை குறித்த பல விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
ஒரு சில பத்திரிகை நிருபர்கள் இந்த வசதியைக் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளாமல், iPhone வழியாக இனி ஒப்புரவு அருட்சாதனத்தை மேற்கொள்ள முடியும் என்று கூறிவந்ததால், திருப்பீடம் தன் விளக்கத்தை இப்புதன் மாலை அறிவித்தது.
ஒப்புரவு அருட்சாதனம் என்பது, அருட்போழிவு செய்யப்பட்ட ஒரு குருவிடம் மனம் வருந்தி வரும் ஒருவர் தன் பாவங்களைக் கூறி, இறைவனின் மன்னிப்பையும் அருளையும் பெறும் ஒரு அருட்சாதனம் எனவே இத்திருவருட்சாதனத்திற்குக் கட்டாயம் இருவரும் நேரடியாகப் பிரசன்னமாகி இருக்க வேண்டும். வேறு எந்தக் கருவியின் மூலமாகவும் இந்த அருட்சாதனத்தை நிறைவேற்ற முடியாது என்று அருள்தந்தை லொம்பார்தி பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கினார்.
ஒப்புரவு அருட்சாதனம் குறித்த பல்வேறு புத்தகங்கள் இதுவரை வெளிவந்திருப்பது போல, இப்போது iPhone மூலமாகவும் இவ்வருட்சாதனத்தைக் குறித்த விளக்கங்கள் வந்துள்ளனவே தவிர, இந்த வசதி எவ்வகையிலும் அருட்சாதனமாகாது என்று திருபீடப் பேச்சாளர் வலியுறுத்திக் கூறினார்.
3. நாக்பூர் உயர்மறைமாவட்டத்தின் உதவித் திட்டங்களால் காப்பாற்றப்பட்டிருக்கும் 600 விவசாயக் குடும்பங்கள்
பிப்.10,2011. திருச்சபையின் உதவித் திட்டங்கள் இல்லையெனில் நான் இன்று உயிருடன் இருந்திருக்க முடியாது என்று ஓர் இந்திய விவசாயி கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பாவைச் சேர்ந்த பாலாஜி சனேஸ்வர் என்ற விவசாயி, தொடர்ந்து தன் சாகுபடி பொய்த்ததால் தற்கொலை வரை செல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, நாக்பூர் உயர்மறைமாவட்டத்தின் உதவித் திட்டங்களால் தானும் தன் குடும்பமும் காப்பாற்றப்பட்டிருப்பதாக UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சனேஸ்வர் குடும்பத்தைப் போல, 600 விவசாயக் குடும்பங்கள் நாக்பூர் தலத்திருச்சபையின் முயற்சிகளால் காப்பற்றப்பட்டிருப்பதாக UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
தலத்திருச்சபையின் இத்திட்டத்தின் மூலம், சாகுபடி பொய்த்துப்போனதால் வறுமையில் சிக்கியுள்ள இக்குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் 800 ரூபாய் தரப்படுவதாக இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் அருள் சகோதரி அஞ்சனா தெரேஸ் கூறினார்.
மகாராஷ்டிரா மாநில அரசு அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அம்மாநிலத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் 4,427 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். உண்மையான எண்ணிக்கை இதைபோல் குறைந்தது மூன்று மடங்கு அதிகம் இருக்கும் என்று சமூகநல ஆர்வலர்கள் பலர் கூறியுள்ளனர்.
4. பாகிஸ்தான் கத்தோலிக்க விவிலியக் கழகத்தின் "ஒரு லட்சம் விவிலிய நண்பர்கள்"முயற்சி
பிப்.10,2011. பாகிஸ்தானில், கராச்சி உயர்மரைமாவட்டத்தின் பல கோவில்களில் மாலை வேளைகளில் விவிலிய வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
பாகிஸ்தானில் உள்ள கத்தோலிக்க விவிலியக் கழகம் "ஒரு லட்சம் விவிலிய நண்பர்கள்" என்ற ஒரு முயற்சியைக் கடந்த ஆண்டு ஆரம்பித்தது.
கராச்சி உயர் மறைமாவட்ட பேராயர் Evarist Pinto இம்முயற்சியைப் பெரிதும் பாராட்டி ஊக்குவித்து வருகிறார். கிறிஸ்தவர்களில் 60 விழுக்காட்டினர் வாசிக்கும் திறமை இல்லாதவர்கள்; இருந்தாலும், விவிலியத்தைக் கேட்கவும், அதன் விளக்கங்களைப் புரிந்துகொள்ளவும் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று பேராயர் கூறினார்.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் விவிலியத்தைத் தங்கள் உடமையாக்கவும், விவிலியத்தைத் தினமும் படிக்கவும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த முயற்சியை கடந்த சில மாதங்களாகச் செய்து வருவதாக கத்தோலிக்க விவிலியக் கழகத்தின் செயலர் அருள் தந்தை எம்மானுவேல் அசி கூறினார்.
இம்முயற்சியின் ஒரு பகுதியாக, ஆறு மறைமாவட்டங்களில் விவிலியம் வாசிக்கும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தான் முழுவதையும் இணைத்து ஒரு பெரும் விவிலிய மாரத்தான் நடைபெறும் என்றும் அருள்தந்தை எம்மானுவேல் அசி கூறினார்.
5. கருத்தடைக்கு எதிராக பிலிப்பின்ஸ் ஆயர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்புக்கு அமெரிக்க ஆயர்களின் ஆதரவு
பிப்.10,2011. மக்கள்பேறு குறித்து பிலிப்பின்ஸ் அரசு தற்போது விவாதித்து வரும் பிரச்சனைக்குரிய ஒரு சட்ட வரைவினை எதிர்த்து பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை கூறி வரும் எதிர்ப்புக்கு, அமெரிக்க ஆயர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
கருத்தடைக்கு எதிராக பிலிப்பின்ஸ் ஆயர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்புக்குத் தங்கள் முழு ஆதரவு உண்டு என்று சிகாகோ பேராயர் கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் தனக்கு தொலைபேசி மூலம் செய்தி அனுப்பியதாக பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் குடும்பநலக் குழுவின் தலைவர் பேராயர் Paciano Aniceto, UCAN செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.
அழிவு கலாச்சாரத்தை பரப்பி வரும் சட்டப்பூர்வமான கருத்தடைகள், கருக்கலைப்பு ஆகியவைகளுக்கு எதிராக உயிரின் புனிதத்துவத்தை வலியுறுத்தும் தங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்று பேராயர் உறுதியாகக் கூறினார்.
6. வியட்நாமில் தொழு நோயாளர்கள் குடியிருப்புக்கு நடுவே திறக்கப்பட்ட ‘இறை இரக்கம்’ கோவில்
பிப்.10,2011. அண்மையில் கொண்டாப்பட்ட சீனப் புத்தாண்டையொட்டி, வியட்நாமில் அரசு நடத்தும் தொழு நோயாளர்கள் குடியிருப்புக்கு நடுவே கோவில் ஒன்று அவர்களுக்கெனத் திறக்கப்பட்டது.
Thani Binh மறைமாவட்டத்தின் ஆயர் Pierre Nguyen Van De அவர்கள் தலைமையில் 16 குருக்கள் நிகழ்த்தியத் திருப்பலியுடன் இறை இரக்கம் என்ற பெயர் தாங்கிய இக்கோவில் அர்ச்சிக்கப்பட்டது.
இறைவன் எங்கள் செபங்களுக்குத் தக்க பதில் அளித்துள்ளார் என்று Vincent Vu The Hung என்ற தொழுநோயாளர் ஒருவர் கூறினார். தாங்கள் இதுவரை பிற கோவில்களில் திருப்பலியில் பங்கேற்க செல்லும்போதெல்லாம் கோவிலுக்கு வெளியே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாகவும், தற்போது இறைவனை அருகில் காணும் பேறு பெற்றோம் என்றும் இந்நோயாளர் கூறினார்.
1900மாம் ஆண்டு அயல்நாட்டு மறைப்பணியாளர்களால் தொழு நோயாளருக்கென்று உருவாக்கப்பட்ட இந்தக் குடியிருப்பை 1954ம் ஆண்டு அரசு எடுத்துக் கொண்டது.
தொழுநோயாளர் பணியில் ஈடுபட்டுள்ள அருள்தந்தை Joseph Mai Tran Huynh இக்கோவிலில் தற்போது 1000 பேர் திருப்பலியில் பங்கு கொள்ள முடியும் என்றும், 20 மாதங்களாய் கட்டப்பட்ட இந்தக் கோவில், 2,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதென்றும் கூறினார்.
7. பிரெஞ்ச் அரசுத்தலைவருக்கு World Social Forum அனுப்பியுள்ள அழுத்தமான செய்தி
பிப்.10,2011. தங்கள் நாட்டில் வரி செலுத்துவதற்குப் பதில் அந்நிய நாட்டில் பணத்தைச் செலுத்துவோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமான ஒரு செய்தி பிரெஞ்ச் அரசுத் தலைவர் Nicolas Sarkozy க்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரான்சில் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள G20 மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட வேண்டுமென இப்புதனன்று World Social Forum வலியுறுத்தியுள்ளது.
ஆப்ரிக்காவின் Senegal நாட்டில் கடந்த ஞாயிறு முதல் இவ்வெள்ளி வரை நடைபெறும் WSF கூட்டத்தில், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்பட வேண்டிய வரிப்பணத்தை செலுத்தாமல் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களின், பெரும் செல்வந்தர்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டுமென்று இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Christian Aid, ActionAid, Tax Justice Network Africa ஆகிய பல்வேறு மனிதநல அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்டுள்ள இம்முயற்சி வெற்றி அடைய வேண்டும் என்று Christian Aid அமைப்பின் ஆலோசகர் முனைவர் David McNair கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் இந்நிறுவனங்கள், செல்வந்தர்கள் செலுத்தாமல் விடும் வரிப்பணம் 1600 கோடி டாலர்கள் என்றும், இவைகளைக் கொண்டு உலகின் பல்வேறு சமுதாய முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று David McNair மேலும் கூறினார்.
பிரெஞ்ச் அரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தச் செய்தி இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை வலியுறுத்த விழைவோர் இவ்விணையதளத்தின் மூலம் தங்கள் பெயர்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் WSF கூறியுள்ளது. இவ்விணையதளத்தின் முகவரி: www.endtaxhavensecrecy.org
8. இயற்கைப் பேரிடர்களிலிருந்து நகரங்களையும் மக்களையும் காக்க ஐ.நா.பொதுச் செயலரின் பரிந்துரை
பிப்.10,2011. இயற்கைப் பேரிடர்களில் தங்கள் நாட்டையும், நகர்களையும் காத்தவர்களிடம் இருந்து பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐ.நா.தலைமையகத்தில் ஐ.நா.உயர் அதிகாரிகள், மற்றும் உலகின் பல்வேறு பெருநகர மேயர்கள், மற்றும் மனித சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஓர் உயர்மட்டக் கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
2010ம் ஆண்டில் மட்டும் உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் 300000 பேர் உயிரிழந்துள்ளனர், 20 கோடியே 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் 1100 கோடி டாலர்கள் அளவு அழிவு ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட நகரங்கள் பல்வேறு இயற்கைச் சீற்றங்களுக்கு ஆளாகும் நிலையில் உள்ளதென ஐ.நா.அமைப்பு கண்டுள்ளதாகவும், அவைகளில் கடைபிடிக்க வேண்டிய பத்து அம்சக் கொள்கைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதென்றும் ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
No comments:
Post a Comment