Tuesday 15 February 2011

Catholic News - hottest and latest - 15 Feb 2011

1. திருத்தந்தையை இவ்வியாழனன்று சந்திக்க உள்ளார் ரஷ்ய அரசுத்தலைவர்.

2. முன்னாள் கம்யூனிச நாடுகளின் திருச்சபைக்கென நிதியுதவி.

3. கர்நாடகாவில் இந்து தீவிரவாத அமைப்புகளால் தாக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய ஊர்வலம்.

4. கருக்கலைப்பு, ஒரே பாலினத்திருமணங்கள் மற்றும் போதை மருந்து பயன்பாட்டு அனுமதிக்கு பெரு மக்கள் எதிர்ப்பு.

5. கொல‌ம்பியாவில் இளங்குரு ஒருவர் சுட்டுக்கொலை.

6. ஆஃப்கானின் மோதல்களால் உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா. அமைப்பு  கவலை.

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையை இவ்வியாழனன்று சந்திக்க உள்ளார் ரஷ்ய அரசுத்தலைவர்.

பிப்  15, 2011.   இவ்வாரம் திருத்தந்தைக்கும் இரஷ்ய அரசுத்தலைவருக்கும் உரோம் நகரில் இடம்பெற உள்ள சந்திப்பானது, நட்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கும் என்றார் இரஷ்யாவிற்கான திருப்பீடத் தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர்.
இரு தலைவர்களுக்கும் இடையே இம்மாதம் 17ம்தேதி அதாவது இவ்வியாழனன்று இடம்பெற உள்ள சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட திருப்பீட தூதரகத்தின் முதன்மைச் செயலர் குரு Visvaldas Kulbokas, எந்தெந்த தலைப்புகள் குறித்து விவாதிப்பார்கள் என்பது தெளிவில்லை எனினும், ஏற்கனவே இருதரப்பினரிடையேயும் நிலவும் நல்லுறவுகளின் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் இது இருக்கும் என்றார்.
தற்போதைய இரஷ்ய அரசுத்தலைவர் Dmitry Medvedev  2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம்தேதி திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதைத் தொடர்ந்தே இரு நாடுகளிடையேயான அரசியல் உறவு முழுமையான அளவில் சீர்செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2. முன்னாள் கம்யூனிச நாடுகளின் திருச்சபைக்கென நிதியுதவி.

பிப்  15, 2011.   அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் திருநீற்றுப் புதனான மார்ச் ஒன்பதாம் தேதியன்று காணிக்கை பிரிக்கப்பட்டு, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள முன்னாள் கம்யூனிச நாடுகளின் கத்தோலிக்கர்களுக்கு உதவும் நோக்கில் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருச்சபை.
முன்னாள் கம்யூனிச நாடுகளின் வறுமை நிலைகள் இன்னும் தொடர்கின்றன என்பதைக் குறித்த விழிப்புணர்வை வழங்குவதாய் இந்நிதி திரட்டல் இருக்கும் என அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
முன்னாள் கம்யூனிச நாடுகளில் திருச்சபையின் உள்கட்டுமான அமைப்புகளைச் சரி செய்யவும், திருச்சபைப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கவும் என நிதி உதவிகளை வழங்கி வரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருச்சபை, கடந்த ஆண்டு  112 மாணவர்களின் கல்விக்கென உதவித்தொகைகளை வழங்கியதுடன், 21 நாடுகளின் 314 திட்டங்களுக்கென 63 இலட்சம் டாலர்களையும் அளித்துள்ளது.

3. கர்நாடகாவில் இந்து தீவிரவாத அமைப்புகளால் தாக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய ஊர்வலம்.

பிப்  15, 2011.   கர்நாடகா மாநிலத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளால் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து மங்களூர் நகரில் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.
குழந்தைகளுக்கான கல்வி மற்றும் முதியோர்க்கான மருத்துவ வசதிகள் என சமுதாய அக்கறையுடன் செயல்படும் கிறிஸ்தவர்கள் மீது இந்து தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவது இந்து மத கொள்கைகளாகவோ நாட்டுப்பற்றாகவோ இருக்க முடியாது என்றார் இவ்வூர்வலத்திற்கு ஏற்பாடு செய்த அலி ஹாசன்.
மங்களூர் இஸ்லாமிய மத்திய அவையின் ஒருங்கிணைப்பாளரான இவர் உரைக்கையில், 2008ம் ஆண்டில் கிறிஸ்தவக்கோவில்கள் தாக்கப்பட்டதில் இந்து தீவிரவாதிகளின் தொடர்பை மறுக்கும் அண்மை அரசின் அறிக்கை குறித்த அதிருப்தியை வெளியிடும் விதமாக‌ இவ்வூர்வலம் நடத்தப்பட்டதாகக் கூறினார்.
கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எதிரான‌ வ‌ன்முறைக‌ள் குறித்து தன‌க்கு சாத‌க‌மான‌ ஓர் அறிக்கையை த‌யாரிக்க‌ க‌ர்நாட‌கா அர‌சு 19 கோடி ரூபாயை வீணாக்கியுள்ள‌தாக‌ அர‌சின் அறிக்கை குறித்து க‌ருத்து வெளியிட்டுள்ளார் அம்மாநில‌த்தின் பெண்க‌ள் அமைப்பின் முன்னாள் த‌லைவ‌ர் பிலோமினா பெரேஸ்.

4. கருக்கலைப்பு, ஒரே பாலினத்திருமணங்கள் மற்றும் போதை மருந்து பயன்பாட்டு அனுமதிக்கு பெரு நாட்டு மக்கள் எதிர்ப்பு.

பிப்  15, 2011.   பெரு நாட்டில் கருக்கலைப்பு, ஒரே பாலினத்திருமணங்கள் மற்றும் போதை மருந்து பயன்பாட்டு அனுமதி ஆகியவைகளுக்கு அந்நாட்டின் மக்களுள் மூன்றில் இரு பகுதிக்கு மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக அண்மையில் அந்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட இவ்வாய்வின் மூலம் பெரு நாட்டு மக்கள் ஒழுக்கரீதி மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அதற்கு எதிரான கொள்கைகளை எதிர்க்கத் துணிவதாகவும் தெரிவதாக லீமா உயர்மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
பெரு நாட்டு மக்களுள் 92 விழுக்காட்டினர் போதைபொருள் பயன்பாட்டைச் சட்டபூர்வமாக அனுமதிப்பதை எதிர்ப்பதாகவும், 76.3 விழுக்காட்டினர் கருக்கலைப்பையும், 74 விழுக்காட்டினர் ஒரேபாலினத் திருமணங்களையும் எதிர்ப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

5. கொல‌ம்பியாவில் இளங்குரு ஒருவர் சுட்டுக்கொலை.

பிப்  15, 2011.   கொல‌ம்பியாவின் Rio Negro கிராம‌த்தில் இச்ச‌னிய‌ன்று சுட‌ப்ப‌ட்டு ஞாயிற‌ன்று ம‌ருத்துவ‌ ம‌னையில் ம‌ர‌ணமடைந்த‌ குரு Luis Carlos Orozco Cardonaன் கொலை தொட‌ர்பாக‌ சிறுவ‌ன் ஒருவ‌ன் சந்தேக‌த்தின் பேரில் விசாரிக்க‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தாக‌ கொல‌ம்பிய‌ காவ‌ல்துறை அறிவித்த‌து.
Sonsón - Rionegro ம‌றைமாவ‌ட்ட‌ பேரால‌ய‌த்தில் ப‌ணியாற்றி வந்த‌ இவ‌ர், க‌டந்த‌ ஆண்டு பிப்ர‌வ‌ரி மாத‌ம் 26ம்தேதி தான் குருவாக‌ திருநிலைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டார்.
இக்கொலை குறித்து த‌ன் ஆழ்ந்த‌ க‌வ‌லையையும் அனுதாப‌ங்க‌ளையும் வெளியிட்ட‌ Sonsón - Rionegro ம‌றைமாவ‌ட்ட‌ ஆய‌ர் Fidel Leon Cadavid Marin, இன்றைய சமுதாயத்தில் மதிப்பீடுகள் எந்த அளவு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம் என்றார். எழைகளிடையேயான தன்னலமற்ற பணிகளுக்கென தன்னை அர்ப்பணித்த குரு Luis Carlos கொல்லப்பட்டுள்ளது, மனித வாழ்வுக்கான மதிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான நம் அர்ப்பணத்திற்கு அழைப்பு விடுப்பதாக உள்ளது எனவும் கூறினார்.

6. ஆஃப்கானின் மோதல்களால் உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா. அமைப்பு  கவலை.

பிப்  15, 2011.   ஆஃப்கானின் மோதல்களால் உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா. அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானில் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா. நிறுவனம், இவ்வுயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் தாலிபான் மற்றும் ஏனைய தீவிர வாத குழுக்கள் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் இந்நாட்டில் 2,400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 75 விழுக்காட்டு உயிரிழப்புகளுக்கு தாலிபான் மற்றும் ஏனைய தீவிரவாத அமைப்புகளே காரணம் எனவும் உரைக்கும் இவ்வறிக்கை, 2009ம் ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் மோதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆஃப்கானில் மோதல் தொடர்புடைய வன்முறைகளால் 1800 குழந்தைகள் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் எனவும் கூறும் இவ்வறிக்கை, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் குழந்தை உயிரிழப்புகளின் எண்ணிக்கை 155 விழுக்காடு அதிகரித்திருந்ததாகத் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment