“ஏப்ரல் முட்டாள்கள் தினம்” - “April Fools’ Day” - எல்லாரையும், எப்போதும் ஏமாற்ற முடியாது
கடந்த சில நூற்றாண்டுகளில், “ஏப்ரல் முட்டாள்கள் தினம்” - “April Fools’ Day” - என்ற நாளையொட்டி, பலரையும் ஏமாற்றும் முயற்சிகளை ஊடகங்கள் மேற்கொண்டு வந்துள்ளன. அவற்றில் ஒன்று இதோ:
1976ம் ஆண்டு, ஏப்ரல் முதல் தேதியன்று, பிபிசி (BBC) வானொலியில் விண்வெளி வீரர், Patrick Moore என்பவர் பங்கேற்ற ஒரு பேட்டி ஒலிபரப்பானது. அந்த பேட்டியில், அவர், ஏப்ரல் முதல் தேதியன்று காலை, வான் கோள்களுக்கிடையே ஓர் அதிசயம் நிகழப்போவதாகச் சொன்னார். காலை, சரியாக, 9:47 மணிக்கு, பூமி, வியாழன் (Jupiter), புளூட்டோ (Pluto) ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமையப் போகின்றன என்றும், அதனால், பூமியின்
புவி ஈர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்றும் அவர் கூறினார். சரியாக 9:47
மணிக்கு யாராவது தரையிலிருந்து மேலெழும்பும் வகையில் குதித்தால், அவர்கள், புவி ஈர்ப்பு சக்தியை உணராமல் மிதந்து வரும் அனுபவம் அவர்களுக்குக் கிடைக்கும் என்றும் விண்வெளி வீரர் Moore அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
அன்று காலை, 9:47 மணி கடந்தபின், பிபிசி (BBC) வானொலிக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. அழைத்தவர்கள் அனைவரும், தாங்கள் காற்றில் மிதந்தது போன்ற உணர்வு பெற்றதாகக் கூறினர். அவர்களில் ஓர் இளம்பெண், தானும் தன் தோழிகள் 11 பேரும் தங்கள் அறையில் காற்றில் மிதந்துவந்ததை விவரித்துக் கூறினார். பிபிசி (BBC) நடத்திய அந்தப் பேட்டி முழுவதும், ஏப்ரல் முட்டாள்கள் தின முயற்சி என்று, அடுத்தநாள் தெரிய வந்தது.
"எல்லாரையும் சிலவேளைகளில் ஏமாற்றலாம்; சிலரை, எப்போதும் ஏமாற்றலாம்; ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றமுடியாது" என்று சொன்னவர், முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர், ஆபிரகாம் லிங்கன்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment