Friday, 30 August 2013

Catholic News in Tamil / கத்தோலிக்கச்செய்திகள் - 29/08/13

1. திருத்தந்தை பிரான்சிஸ், ஜோர்டன் அரசர் சந்திப்பு

2. திருத்தந்தை பிரான்சிஸ் : புனித அகுஸ்தீன் போன்று கிறிஸ்தவர்களும் ஓய்வற்ற இதயங்களைக் கொண்டிருக்க வேண்டும்

3. திருத்தந்தை பிரான்சிஸ் இளையோரிடம் : அழகும், நன்மைத்தனமும், உண்மையும் நிறைந்ததாக வருங்காலத்தை அமையுங்கள்

4. திருத்தந்தை பிரான்சிஸ் : இறையன்புக்கு இயேசு கிறிஸ்து என்ற பெயரும் முகமும் உண்டு

5. திருத்தந்தை பிரான்சிஸ் : கொரிய மறைசாட்சிகள் நற்செய்தி அறிவிப்புப்பணிக்குத் தூண்டுகோல்கள்

6. சிரியாவுக்காகச் செபிக்க அழைப்பு, கர்தினால் Sandri

7. சிரியாவுக்கெதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத் தலையீடு ஒரு குற்றச் செயல், முதுபெரும் தந்தை லகாம்

8. "என் மத நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளாத அயலவரும் நானும்" - பண்பாட்டு, பல்சமய உரையாடல் மையத்தின் கருத்தரங்கு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், ஜோர்டன் அரசர் சந்திப்பு

ஆக.,29,2013. சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள் நிறுத்தப்படுவதற்கு அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றே ஒரே தீர்வு என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஜோர்டன் அரசரும் இவ்வியாழனன்று கூறினர்.
ஜோர்டன் அரசர் Abdullah Husayn, அரசி Rania ஆகிய இருவரும் இவ்வியாழனன்று வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் நடத்திய 20 நிமிடச் சந்திப்பின்போது சிரியா பற்றிய இக்கருத்து தெரிவிக்கப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஜோர்டன் அரசர் Abdullah.
மத்திய கிழக்குப் பகுதியின் நெருக்கடிநிலை குறித்து இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களில், ஒவ்வொரு நாளும் பல அப்பாவி மக்கள் உயிரிழப்பது குறித்த கவலையும் தெரிவிக்கப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
இச்சந்திப்பு, ஜோர்டன் அரசருக்கும், திருத்தந்தைக்கும் இடையே வத்திக்கானில் நடைபெற்ற முதல் சந்திப்பாகும்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2009ம் ஆண்டில் புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டபோது அரசர் Abdullah, Ammanல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : புனித அகுஸ்தீன் போன்று கிறிஸ்தவர்களும் ஓய்வற்ற இதயங்களைக் கொண்டிருக்க வேண்டும்

ஆக.,29,2013. மனிதர்களின் இதயங்கள் இறைவனில் இளைப்பாறும்வரை அவை அமைதியடைவதில்லை என்று புனித அகுஸ்தீன் பெருமையுடன் சொன்னார், ஆனால் இன்று பலர், தங்களின் இதயங்களை ஒருவித மயக்கநிலைக்கு உள்ளாக்கி இறைவனையும் அன்பையும் அவர்கள் தேடுவதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனித அகுஸ்தீன் துறவு சபையினரின் தலைமை ஆலயமான உரோம் புனித அகுஸ்தீன் பசிலிக்காவில் இப்புதன் மாலை திருப்பலி நிகழ்த்தி அச்சபையினரின் 184வது பொதுப்பேரவையை ஆரம்பித்து வைத்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித அகுஸ்தீன் திருவிழாவான இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மறையுரையில், புனித அகுஸ்தீன் சபையினர் இறைவனைத் தேடுவதிலும், தாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் நற்செய்தியைப் பகிர்ந்து, அன்பை வெளிப்படுத்துவதற்கான ஆவலிலும் எப்பொழுதும் ஓய்வின்றிச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆன்மீக வாழ்விலும், இறைவனைத் தேடுவதிலும், பிறரன்பிலும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஓய்வின்றி இருக்கவேண்டுமென்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை.
புனித அகுஸ்தீன் அவர்களின் வாழ்க்கை பற்றியும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், தங்களின் இதயம் பெரிய காரியங்களை விரும்புகின்றதா அல்லது அது தூங்கிக்கொண்டிருக்கின்றதா என்பது குறித்து ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களையே கேள்வி கேட்க வேண்டுமென்றும் கூறினார்.
1244ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புனித அகுஸ்தீன் துறவு சபையின் 184வது பொதுப்பேரவையில் 90 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
தொடக்ககாலக் கிறிஸ்தவ சமூகங்கள் வாழ்ந்த வாழ்வை வாழ்ந்து அதனை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஹிப்போ நகர் ஆயர் புனித அகுஸ்தீன் அவர்களின் போதனைகளின் அடிப்படையில் இத்துறவு சபை தொடங்கப்பட்டது. தற்போது இச்சபையினர் 5 கண்டங்களின் 50 நாடுகளில் பணியாற்றுகின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் இளையோரிடம் : அழகும், நன்மைத்தனமும், உண்மையும் நிறைந்ததாக வருங்காலத்தை அமையுங்கள்  

ஆக.,29,2013. இப்புதன் பிற்பகலில் ஏறக்குறைய 500 இத்தாலிய இளையோர் திருப்பயணிகளை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், துணிச்சலுடன் முன்னோக்கிச் சென்று ஆர்வமாய் ஓங்கிக் குரல் எழுப்புங்கள் என்று கூறினார்
நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடுவதற்காக உரோமைக்குத் திருப்பயணம் மேற்கொண்ட இத்தாலியின் Piacenza-Bobbio மறைமாவட்டத்தின் ஏறக்குறைய 500 இளையோர் திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் தான் இவர்களைச் சந்திக்க விரும்பியதற்கான காரணத்தை எடுத்துச் சொன்னார்.
இளையோராகிய நீங்கள் உங்கள் இதயங்களில் நம்பிக்கையின் வாக்குறுதியைக் கொண்டுள்ளீர்கள், நீங்கள் நம்பிக்கையை எடுத்துச் செல்பவர்கள், உண்மையில் நீங்கள் நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டு வருங்காலத்தை நோக்கிக் கொண்டிருக்கின்றீர்கள், நீங்களே வருங்காலத்தை உருவாக்குகின்றவர்கள் என்பதால் உங்களைச் சந்திக்க விரும்பினேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அழகு, நன்மைத்தனம், உண்மை ஆகிய மூன்றின்மீது இளையோர் ஆவல் கொண்டிருக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், உங்கள் இதயத்திலுள்ள இம்மூன்றையும் ஆர்வமாய் எடுத்துச்சென்று ஓங்கிக் குரல் எழுப்புங்கள் என்றும் இளையோரிடம் கூறினார்.
ஓங்கிக் குரல் எழுப்புங்கள் என்று சொல்லும்போது, நிறையத் தீமை செய்யும் கலாச்சாரத்துக்கு எதிராக, அழகு, நன்மைத்தனம், உண்மை ஆகிய விழுமியங்களுடன் துணிச்சலுடன் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும் என்று தான் கூற விரும்புவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : இறையன்புக்கு இயேசு கிறிஸ்து என்ற பெயரும் முகமும் உண்டு 

ஆக.,29,2013. இறையன்பு ஏதோ தெளிவற்ற அல்லது பொதுப்படையான ஒன்று அல்ல; மாறாக, இறையன்புக்கு, இயேசு கிறிஸ்து என்ற பெயரும் முகமும் உண்டு என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்தாலியின் மிலானில் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே நடைபெற்றுவரும் கருத்தரங்கு ஒன்றிற்குத் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கி.பி.313ம் ஆண்டில் உரோமைப் பேரரசர் Constantine கிறிஸ்தவத்துக்கு மனம்மாறி, உரோமைப் பேரரசு முழுவதும் மதசுதந்திரத்தை அறிவித்ததன் 1700ம் ஆண்டை சிறப்பிக்கும்விதமாக இக்கருத்தரங்கு நடைபெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், மனித சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அனைவரும் உழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
உரோம் அந்தோணியானம் பாப்பிறைப் பல்கலைக்கழகமும், கிரீஸ் நாட்டின் Saloniccoவின் Aristoteles பல்கலைக்கழக்த்தின் ஆர்த்தடாக்ஸ் இறையியல் துறையும் இணைந்து மிலானின் இயேசுவின் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைகழகத்தில் நடத்திவரும் இக்கருத்தரங்கு இவ்வெள்ளிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை பிரான்சிஸ் : கொரிய மறைசாட்சிகள் நற்செய்தி அறிவிப்புப்பணிக்குத் தூண்டுகோல்கள்

ஆக.,29,2013. தென் கொரியாவின் செயோல் உயர்மறைமாவட்டத்தில்  கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்பட்ட இடங்களுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது, அந்நாட்டில் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு உடனடியாக ஈடுபடுவதற்குத் தூண்டுகோலாய் இருக்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
செயோல் உயர்மறைமாவட்டம், இவ்வாண்டு செப்டம்பரை மறைசாட்சிகளின் மாதமாக அறிவித்துச் சிறப்பிக்கவிருப்பதையொட்டி செயோல் பேராயர் Andrew Yeom Soo-jung அவர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
இத்திருப்பயணத்தில் பங்குகொள்ளும் அனைவரும் செபம் மற்றும் மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டான வாழ்வால் தூண்டப்பட்டு, இயேசு கிறிஸ்துவுடன் தங்களுக்குள்ள உறவில் ஆழப்படுவார்களாக என வாழ்த்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இச்செய்தியை செயோல் உயர்மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. சிரியாவுக்காகச் செபிக்க அழைப்பு, கர்தினால் Sandri

ஆக.,29,2013., எகிப்து, ஈராக் மற்றும் பிற பகுதிகளின் காயப்பட்ட சூழல்களால் ஏற்கனவே அதிகம் பாதிப்படைந்துள்ள மத்திய கிழக்குப் பகுதியின் நிலையை, சிரியாவின் தற்போதைய கலக்கமானநிலை மேலும் மோசமடையச் செய்துள்ளது என்று திருப்பீட கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri கவலை தெரிவித்துள்ளார்.
சிரியாவின் தற்போதைய நிலை குறித்து L'Osservatore Romano வத்திக்கான் நாளிதழில் எழுதியுள்ள கர்தினால் Sandri, ஆயுதங்களின் உரத்த ஒலியைவிட ஒப்புரவுக்கான ஒலி மிகுந்த வல்லமை மிக்கது என்று கூறியுள்ளார்.
சிரியாவில் வன்முறைகள் ஒழிந்து உரையாடல் தொடங்கப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்பையும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Sandri.
மேலும், சிரியாவுக்கெதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டு அல்லது NATO படைகளின் இராணுவத் தலையீடு சிரியாவின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று, 1976ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Mairead Maguire கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான சிரியா மக்கள் இறப்பதற்கும், புலம்பெயர்வதற்கும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதின் உறுதியான தன்மை பாதிக்கப்படவும் இது காரணமாக அமையும் என Maguire எச்சரித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. சிரியாவுக்கெதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத் தலையீடு ஒரு குற்றச் செயல், முதுபெரும் தந்தை லகாம்

ஆக.,29,2013. சிரியாவுக்கெதிரான தாக்குதலை நடத்த அமெரிக்க ஐக்கிய நாடும் NATO படைகளும் தயாராகவுள்ளவேளை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிரியாவுக்கெதிரான இராணுவத் தலையீடு ஒரு குற்றச் செயலாக இருக்கும், இத்தலையீடு மேலும் அதிகமான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக அமையும் என, மெல்கிதே கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
கொலை செய்யும் நோக்கத்துடனே உலகெங்கிலுமிருந்து இஸ்லாம் தீவிரவாதிகள் சிரியாவில் நுழைவதைத் தடைசெய்வதற்கு அமெரிக்க ஐக்கிய நாடும், மேற்கத்திய நாடுகளும் எதுவும் செய்யவில்லை என்று குறைகூறினார் முதுபெரும் தந்தை கிரகரி லகாம்.
தற்போது நிலையானதன்மை மிகவும் தேவைப்படும் சிரியாவின் அரசுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் அறிவற்ற செயல் என்று கூறிய அவர்,  சிரியாவில் இஸ்லாம் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினால் கிறிஸ்தவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும் கூறினார். 
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் சிரியாவுக்கெதிராக நடத்தப்படும் இராணுவத் தாக்குதல் பேரழிவைக் கொண்டுவரும் என கல்தேய வழிபாட்டுமுறைத் தலைவர் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ கூறினார்.

ஆதாரம் : Fides/CWN

8. "என் மத நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளாத அயலவரும் நானும்" - பண்பாட்டு, பல்சமய உரையாடல் மையத்தின் கருத்தரங்கு

ஆக.29,2013. சென்னை லொயோலா கல்லூரி வளாகத்தில் "என் மத நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளாத அயலவரும் நானும்" என்ற தலைப்பில் பல் சமய உரையாடல் கருத்தரங்கு ஒன்று ஆகஸ்ட் 28, இப்புதனன்று நடைபெற்றது.
லொயோலா கல்லூரியில் இயங்கிவரும் பண்பாட்டு, பல்சமய உரையாடல் மையம் (IDCR) ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் இந்த மையத்தின் இயக்குனரும், தலைசிறந்த இறையியல் அறிஞருமான இயேசு சபை அருள்பணியாளர் மைக்கிள் அமலதாஸ் அவர்கள் கத்தோலிக்க கண்ணோட்டத்தில் உரையாடலின் தேவைகள் குறித்து உரையாற்றினார்.
சென்னையில் புகழ்பெற்று விளங்கும் குருக்குல் லூத்தரன் இறையியல் கல்லூரியின் சமயத்துறை தலைவர் பேராசிரியர் இஸ்ரயேல் செல்வநாயகம் அவர்களும், தென்னிந்திய கிறிஸ்தவ சபை மாமன்றத்தின் செயலர் விஜி வர்கீஸ் ஈப்பன் அவர்களும் இக்கருத்தரங்கில் முக்கிய உரைகளை வழங்கினர்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பொன்விழா ஆண்டு நடைபெறும் வேளையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பொதுச்சங்கமும் கிறிஸ்தவ சபைகளின் உலக அவையும் சொல்லித்தரும் உரையாடல் வழிகள், அவற்றில் நாம் சந்திக்கும் சவால்கள் போன்ற கருத்துக்கள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.
வெவ்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் மேற்கொள்ளும் கலப்புத் திருமணங்களால் குடும்பத்தினரும், குழந்தைகளும் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் மனப்பக்குவத்தையும், மொழி பயன்பாட்டையும் இளையோர் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற தேவை குறித்தும் இக்கருத்தரங்கில் பேசப்பட்டது.
பண்பாட்டு, பல்சமய உரையாடல் மையத்தின் செயல்பாட்டு இயக்குனர் இயேசு சபை அருள் பணியாளர் வின்சென்ட் சேகர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒரு நாள் கருத்தரங்கில், கத்தோலிக்க அருள் பணியாளர்கள், துறவியர், பொது நிலையினர், மற்றும் கிறிஸ்தவ பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : IDCR, Chennai

No comments:

Post a Comment