Wednesday, 2 May 2012

Catholic News in Tamil - 28/04/12

1. திருத்தந்தை : உரோம் மறைமாவட்டத்திற்கென எட்டு தியோக்கன்களுக்கு குருத்துவத் திருநிலைப்பாடு

2. திருப்பீடச் செயலர் : பொதுநிலைக் கிறிஸ்தவர்கள் Giuseppe Tonioloவிடமிருந்து பாடம் கற்க வேண்டும்

3. Connecticut மாநிலத்தில் மரணதண்டனை இரத்து செய்யப்பட்டிருப்பதற்கு ஆயர்கள் வரவேற்பு

4. ஈராக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கு கிர்குக்  பேராயர் முயற்சி

5. லைபீரிய ஆயர் : Charles Taylor க்கு எதிரான தீர்ப்பு எல்லாருக்கும் ஒரு செய்தியை முன்வைக்கிறது

6. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் முதன்முறையாக அனைத்துலக மீட்புப் படை

7. ஐ.நா.பொதுச் செயலர் : வேதிய ஆயுதங்கள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்

8. உலகில் அதிகமான சிறார் தொழிலாளரைக் கொண்டுள்ள நாடு இந்தியா

-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : உரோம் மறைமாவட்டத்திற்கென எட்டு தியோக்கன்களுக்கு குருத்துவத் திருநிலைப்பாடு

ஏப்ரல்28,2012. 49வது அனைத்துலக இறையழைத்தல் தினமான இஞ்ஞாயிறன்று ஒன்பது தியோக்கன்களுக்கு குருத்துவத் திருநிலைப்பாடு வழங்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் மறைமாவட்ட ஆயராகிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் இஞ்ஞாயிறு காலை நிகழ்த்தும் திருப்பலியில், உரோம் மறைமாவட்டத்திற்கென எட்டு பேர், வியட்நாமின் Bui Chu மறைமாவட்டத்திற்கென ஒருவர் என ஒன்பது தியோக்கன்களுக்கு குருத்துவத் திருநிலைப்பாடு வழங்கவுள்ளார்.
இவர்களில் உரோம் நகரைச் சேர்ந்த 29 வயது Marco Santarelli என்பவர் ஒரு தனியார் விமான ஓட்டுனராக வேலை செய்தவர். இவர் அருளாளர் 2ம் ஜான் பால், 2002ம் ஆண்டில் உலக இளையோர் தினத்தில் இளையோருக்கு விடுத்த அழைப்பைக் கேட்டு குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்.
இறையழைத்தல் இறைவனின் கொடை என்ற தலைப்பில் இந்த 49வது அனைத்துலக இறையழைத்தல் தினத்திற்கென ஏற்கனவே செய்தியும் வெளிட்டியிருக்கிறார் திருத்தந்தை.
2. திருப்பீடச் செயலர் : பொதுநிலைக் கிறிஸ்தவர்கள் Giuseppe Tonioloவிடமிருந்து பாடம் கற்க வேண்டும்

ஏப்ரல்28,2012. பன்மைத்தன்மை போக்கை எதிர்கொள்வதும் உண்மையான உரையாடலும், நீதி மற்றும் அமைதி வளர்வதற்கான கூறுகளாக அமைகின்றன என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே கூறினார்.
இந்தக் கூறுகள் வேற்றுமைகளை அகற்றுவதில்லை, மாறாக, உரையாடலை ஆழப்படுத்துகின்றன என்று, Giuseppe Toniolo பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொள்வோருக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பெர்த்தோனே.
இத்தாலிய சமூகநல வாரங்களை உருவாக்கியவரும், கத்தோலிக்கத் திருஅவையின் சமூகப் போதனைகளுக்கு முன்னோடியாகக் கருதப்படுபவருமான Giuseppe Toniolo, இஞ்ஞாயிறன்று உரோம் புனித பவுல் பசிலிக்காவில் நடைபெறும் திருப்பலியில் அருளாளர் என அறிவிக்கப்படவிருக்கிறார்.
இந்நிகழ்வை முன்னிட்டு இவ்வெள்ளியன்று Giuseppe Toniolo வின் பள்ளியில் என்ற சுலோகத்துடன் உரோமில் தொடங்கிய மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொள்வோருக்கு அனுப்பிய செய்தியில், திருஅவையில் பன்மைத்தன்மை இருந்தாலும், மறைப்பணி ஒன்றே என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பெர்த்தோனே.
திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத் துறையின் பேரருட்திரு Peter Wells இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு திருப்பீடச் செயலரின் செய்தியையும் வழங்கினார்.
இத்தாலியின் மாபெரும் பொருளியல் மற்றும் சமூகவியல் வல்லுனர் எனப் போற்றப்படும் Giuseppe Toniolo, ஒரு நடுத்தரக் குடும்பத்தில் Treviso வில் பிறந்தார். 1883ம் ஆண்டில் Pisa பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த இவர், 1918ம் ஆண்டு அவர் இறக்கும் வரை அப்பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதாரத் துறையின் தலைவராக இருந்தார்.

3. Connecticut மாநிலத்தில் மரணதண்டனை இரத்து செய்யப்பட்டிருப்பதற்கு ஆயர்கள் வரவேற்பு

ஏப்ரல்28,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டு Connecticut மாநிலத்தில் மரணதண்டனை நிறைவேற்றும் சட்டம் இரத்து செய்யப்பட்டிருப்பதை ஐ.நா. மற்றும் அந்நாட்டு ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.
இது குறித்த சட்டத்தில் Connecticut மாநில ஆளுனர் Dan Malloy இம்மாதம் 25ம் தேதி கையெழுத்திட்டிருப்பதன் மூலம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மரணதண்டனையை இரத்து செய்துள்ள 17வது மாநிலமாக Connecticut மாறியுள்ளது.
இந்நடவடிக்கை குறித்துப் பேசிய அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்ற ஆணையத் தலைவர் ஆயர் Stephen E. Blaire, மிகப் பயங்கரமான குற்றவாளிகளாய் இருந்தாலும்கூட, மனித வாழ்வை மதிப்பதற்கும், வாழ்வின் நன்னெறியைப் போற்றுவதற்கும் கத்தோலிக்கர் எப்போதும் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்று கூறினார்.
நீதியும் பாதுகாப்பும் நிறைந்த சமூகத்தை உருவாக்க உழைக்கும் அனைவரோடும் கத்தோலிக்கத் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது என்றும் ஆயர் கூறினார்.

4. ஈராக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கு கிர்குக்  பேராயர் முயற்சி

ஏப்ரல்28,2012. ஈராக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பல்சமயத்தவரை ஊக்குவிக்கும் முயற்சியை முன்னின்று நடத்தியுள்ளார் அந்நாட்டு கிர்குக் நகர் கல்தேய ரீதி கத்தோலிக்கப் பேராயர் லூயிஸ் சாக்கோ.
சுன்னி இசுலாம் பிரிவினர், அராபியப் பழங்குடி இனத் தலைவர்கள், உள்ளூர் அரசு அதிகாரிகள் என சுமார் 50 பிரதிநிதிகளுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் பேராயர் சாக்கோ.
இந்நடவடிக்கை குறித்துப் பேசிய பேராயர் சாக்கோ, இதில் கையெழுத்திட்டுள்ள அனைவரும் கிர்குக்கில் அமைதியுடன் வாழ்வதற்கு உறுதி வழங்கினர் என்று கூறினார்.
கிறிஸ்தவர்கள், அனைத்து மக்கள் மத்தியிலும் நீதி மற்றும் ஒப்புரவை உருவாக்கும் பணியைக் கொண்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வன்முறை நிலைமையை மாற்றாது அல்லது மேம்படுத்தாது; மாறாக, அநீதி, சமூக இழப்புகள் மற்றும் வளர்ச்சியின்மையின் கடலுக்குள் நகரை அமுக்கி விடும் என்று கூறி, எல்லா வகையான வன்முறைகளை இவ்வொப்பந்தம் கண்டனம் செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கிர்குக் நகர மக்களில் 4 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

5. லைபீரிய ஆயர் : Charles Taylor க்கு எதிரான தீர்ப்பு எல்லாருக்கும் ஒரு செய்தியை முன்வைக்கிறது

ஏப்ரல்28,2012. ஆப்ரிக்க நாடான லைபீரியாவின் முன்னாள் அரசுத் தலைவர் Charles Taylor மனித சமுதாயத்திற்கு எதிராகச் செய்த குற்றங்கள் மற்றும் சியெரா லியோன் உள்நாட்டுப் போரின் போது செய்த போர்க் குற்றங்கள் தொடர்பாக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை ஐ.நாவும் அந்நாட்டு ஆயர்களும் வரவேற்றுள்ளனர்.
Charles Taylor குறித்த 11 போர்க் குற்றங்கள் மற்றும் சிறார் படைவீரர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியது, கூட்டுத் தண்டனைகள், கட்டாயத் திருமணங்களுக்காக அடிமைகளை வைத்திருந்தது, போர்க்காலச் சூறையாடல் உட்பட மனித சமுதாயத்திற்கு எதிராகச் செய்த குற்றங்கள் குறித்து சியெரா லியோன் நாட்டுக்கான ஐ.நா.ஆதரவு பெற்ற சிறப்பு நீதிமன்றம், ஹாலந்தில் விசாரித்து இவ்வியாழனன்று தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த Cape Palmas ஆயர் Andrew Karnley, இது எவ்வித வேறுபாடுமின்றி, லைபீரிய நாட்டவர்க்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஒரு தெளிவான செய்தியை  வழங்குகிறது என்று தெரிவித்தார்.
2006ம் ஆண்டில் சியெரா லியோன் நாட்டில் தொடங்கிய இவ்விசாரணை, பாதுகாப்பு காரணமாக ஹாலந்து நாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சார்லஸ் டெய்லர், லைபீரியாவில் சட்டத்துக்குப் புறம்பே வைரங்களையும் மரங்களையும் வெட்டி சியெரா லியோனின் உள்நாட்டுப் போருக்கு உதவி செய்தவர். மேலும்,  லைபீரியாவில் 1999ம் ஆண்டில் இரண்டாவது தடவையாக சண்டை தொடங்கக் காரணமானவர். அச்சண்டையில் பல குருக்களும் துறவிகளும் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் லைபீரியாவில் இடம் பெற்ர இரண்டு உள்நாட்டுப் போர்களிலும் சுமார் 2,50,000 பேர் இறந்தனர் என்றும் ஆயர் கூறினார்.

6. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் முதன்முறையாக அனைத்துலக மீட்புப் படை

ஏப்ரல்28,2012. அனைத்துலக மீட்புப் படை என்ற கிறிஸ்தவ அமைப்பு இத்தாலியில் செயல்படத் தொடங்கியதன் 125ம் ஆண்டை முன்னிட்டு, அப்படையின் வரலாற்றில் முதன்முறையாக வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை காலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது என்று திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை கூறியது.
அனைத்துலக மீட்புப் படையானது இறைவார்த்தையை அறிவித்து, கருணை இல்லங்கள், வீடற்றவர்களுக்கு விடுதிகள், மருத்துவமனைகள், அவசரகால நிவாரணப் பணிகள் எனப் பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையுடன் சில ஆண்டுகளாக நல்ல உறவையும் கொண்டிருப்பதாக அந்த அவை அறிவித்தது.
1887ம் ஆண்டு இத்தாலியில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, தற்போது சுமார் 121 நாடுகளில் சுமார் 10 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

7. ஐ.நா.பொதுச் செயலர் : வேதிய ஆயுதங்கள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்

ஏப்ரல்28,2012. இப்பூமியில் துன்பங்களையும் இறப்புக்களையும் ஏற்படுத்தும் கருவிகளை ஒழிக்கும் நடவடிக்கையைத் தாமதப்படுத்துவதற்கு எந்தவிதச் சாக்குப்போக்கும் சொல்லத் தேவையில்லை என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
வேதிய ஆயுதப் போரில் பலியானவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாள் ஏப்ரல் 29 இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளுக்கென செய்தி வெளியிட்ட  ஐ.நா.பொதுச் செயலர், இந்த மனிதத்தன்மையற்ற ஆயுதங்களுக்குப் பலியானவர்களை நினைக்கும் இத்தினத்தில் இவ்வுலகிலிருந்து இவற்றை முழுவதுமாக ஒழித்துவிட உறுதி எடுப்போம் என்று கேட்டுள்ளார்.
வேதிய ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் இவ்வாண்டில் நிறைவடைகின்றது என்றும், உலகின் 98 விழுக்காட்டு மக்களைக் கொண்டிருக்கும் 188 நாடுகள் இவ்வொப்பந்தத்தில் உறுதியாக இருக்கின்றன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
அதேசமயம், இதில் கையெழுத்திடாத 8 நாடுகள், தாமதமின்றி விரைவில் கையெழுத்திடுமாறும் அவர் கேட்டுள்ளார்.

8. உலகில் அதிகமான சிறார் தொழிலாளரைக் கொண்டுள்ள நாடு இந்தியா

ஏப்ரல்28,2012. உலகில் அதிகமான சிறார் தொழிலாளரைக் கொண்டுள்ள நாடு இந்தியா என்று உலக தொழில் நிறுவனம் அறிவித்திருப்பதாக ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
இந்தியாவில் 5க்கும் 14 வயதுக்கும் உட்பட்ட ஒரு கோடியே 26 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர் என்றும், இவர்களில் 20 விழுக்காட்டினர் வீட்டு வேலை செய்கின்றனர் மற்றும் அதிகம் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் உலக தொழில் நிறுவனம் கூறியது.
எனினும், இவ்வெண்ணிக்கை 4 கோடியே 50 இலட்சம் என மற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...