Wednesday, 2 May 2012

Catholic News in Tamil - 27/04/12

1. திருப்பீட குருக்கள் பேராயம் : தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது அருட்பணியாளர்களின் கடமை

2. திருப்பீடக் குழு : பெற்றோர்கள், குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கும் கடமையைக் கொண்டிருக்கிறார்கள்

3. ஹொண்டுராஸ் கர்தினால் : உலகளாவியப் பொருளாதார நெருக்கடி நற்செய்தி அறிவிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது

4. அருட்பணியாளர்கள் அரசியலில் பதவி வகிப்பதற்கு முயற்சிக்கக் கூடாது : ஓசியானிய ஆயர்கள்

5. சான் சால்வதோர் : Guantanamo தடுப்பு முகாமை நிரந்தரமாக மூடுவதற்கு வேண்டுகோள்

6. கர்நாடக மாநில ஆளுனர்: இந்தியத் திருஅவை நம்பிக்கையின் அடையாளம்

7. இந்திய நலவாழ்வில் காணப்படும் வளர்ச்சிக்கு ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு

8. வட இலங்கையில் கொத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

9. இலங்கையில் மத சகிப்புத்தன்மை குறைந்துள்ளது

------------------------------------------------------------------------------------------------------
1. திருப்பீட குருக்கள் பேராயம் : தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது அருட்பணியாளர்களின் கடமை

ஏப்ரல்,27,2012: தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது அருட்பணியாளர்களின் கடமை என்பதை உலகின் அனைத்து அருட்பணியாளர்களுக்கும் நினைவுபடுத்தியுள்ளது திருப்பீட குருக்கள் பேராயம்.
வருகிற ஜூன் 15ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்து அருட்பணியாளர்களின் தூய வாழ்வுக்காகச் செபிக்கும் அனைத்துலக நாளையொட்டி செய்தி வெளியிட்ட திருப்பீட குருக்கள் பேராயம் இவ்வாறு கூறியுள்ளது.
இப்பேராயத் தலைவர் கர்தினால் Mauro Piacenza, அதன் செயலர் பேராயர் Celso Morga Iruzubieta ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள இச்செய்தி, அருட்பணியாளர்கள் தூயவர்களாக வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
"நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்" (1தெச.4:3) என்ற தூய பவுலின் திருச்சொற்களை மையமாக வைத்து அமைந்துள்ள இச்செய்தி, அருட்பணியாளர்கள் தங்களது அன்றாட வாழ்வு மற்றும் பணியில் எப்பொழுதும் மூவொரு இறைவனின் பிணைப்பைப் பின்பற்றி வாழுமாறு வலியுறுத்தியுள்ளது.
இறையழைத்தல்களுக்காகச் செபிக்கவும் இத்திருப்பீடச் செய்தி கேட்டுள்ளது.


2. திருப்பீடக் குழு : பெற்றோர்கள், குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கும் கடமையைக் கொண்டிருக்கிறார்கள்

ஏப்ரல்,27,2012: குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் கடமையைக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர்களேயன்றி அரசுகள் அல்ல என்று திருப்பீட பிரதிநிதிகள் குழு ஐ.நா.வில் வலியுறுத்தியது.
மக்கள் தொகையும், முன்னேற்றமும் குறித்து ஐ.நா.வில் இவ்வாரத்தில் நடைபெற்று வரும் 45வது அமர்வில் உரையாற்றிய திருப்பீட பிரதிநிதிகள் குழு, வளர்இளம் பிள்ளைகள் மற்றும் இளையோர் குறித்த விவகாரங்களில் பெற்றோர் மற்றும் குடும்பங்களின் கடமைகளைக் கோடிட்டுக் காட்டியது.
உலகில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் கத்தோலிக்கப் பள்ளிகள் இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அக்குழு, தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்குவதில் முக்கிய கடமையைக் கொண்டிருக்கும் பெற்றோர், பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குக் கொண்டிருக்கும் உரிமையும் கடமையும் மதிக்கப்படுமாறும் வேண்டுகோள் விடுத்தது.
உலகின் இளையோரில் சுமார் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர், இவர்களில் 40 விழுக்காட்டினர்  வேலையின்றி உள்ளனர், ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இளையோரின் கல்வியறிவு விகிதம் 80 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கின்றது என்றும் அத்திருப்பீடக் குழு கூறியது.
சமமான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும் கல்வி முக்கியமான அங்கம் வகிக்கின்றது என்று அத்திருப்பீடக் குழு மேலும் கூறியது.
நாடுகள் தங்களது தேசிய வளர்ச்சித்திட்ட கொள்கைகளிலும் திட்டங்களிலும் இளையோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் கவனம் செலுத்துமாறும் ஐ.நா.அவையில் வலியுறுத்தியது அத்திருப்பீடக் குழு.


3. ஹொண்டுராஸ் கர்தினால் : உலகளாவியப் பொருளாதார நெருக்கடி நற்செய்தி அறிவிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது

ஏப்ரல்,27,2012: பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கான முயற்சிகள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்று ஹொண்டுராஸ் நாட்டுக் கர்தினால் Oscar Rodríguez Maradiaga அழைப்பு விடுத்தார்.
நிதித்துறையிலும் அரசியலிலும் அறநெறி விழுமியங்கள் குறைவதே எல்லா மட்டங்களிலும் ஊழல் மலிந்து கிடப்பதற்கு காரணம் என்றுரைத்த கர்தினால் Rodríguez Maradiaga, பொருளாதார நெருக்கடி நிறைந்த இக்காலத்தில் ஏழைகளுக்கான உதவிகளைப் பல அரசுகள் இரத்து செய்துள்ளன என்று கூறினார்.
இஸ்பெயின் நாட்டு Santanderல் நடந்த திருஅவையின் 41வது சமூக வாரத்தில் இவ்வாறு பேசிய ஹொண்டுராஸ் நாட்டுக் கர்தினால் Rodríguez Maradiaga, எந்நிலையிலும் ஏழைகளுக்கான உதவிகள் இரத்து செய்யப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.
திருஅவை சமூகத்தளத்தில் அதிகம் ஈடுபட்டுள்ளதால் நற்செய்தியின் வல்லமை இல்லாமல் போய்விட்டது என்ற நம்பிக்கை நிலவுகிறது, ஆனால் உண்மையில் நிதித்துறையிலும் அரசியலிலும் நன்னெறி விழுமியங்கள் இல்லாததால் எல்லா மட்டங்களிலும் ஊழல் மலிந்து கிடக்கின்றது என்று கூறினார் கர்தினால்.


4. அருட்பணியாளர்கள் அரசியலில் பதவி வகிப்பதற்கு முயற்சிக்கக் கூடாது : ஓசியானிய ஆயர்கள்  

ஏப்ரல்,27,2012: அருட்பணியாளர்கள் அரசியல் கட்சிகளில் ஈடுபட வேண்டாமென்பதை நினைவுபடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் Papua New Guinea மற்றும் Solomon தீவுகள் நாடுகளின் ஆயர்கள். 
துரதிஷ்டவசமாக நமது சில சகோதர அருட்பணியாளர்கள், இவ்வாண்டில் Papua New Guinea ல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் திட்டமிட்டு வருகின்றனர் என்று அப்பகுதி அருட்பணியாளர்களுக்கென கடிதம் எழுதியுள்ள ஆயர்கள், இம்முயற்சி, தங்களுக்கும் பெரும்பாலான கத்தோலிக்கருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அருட்பணியாளர்கள் அரசியலில் பதவி வகிக்க முயற்சிப்பது மக்களை மறுதலிப்பதாக இருக்கின்றது எனவும், மக்கள் தூய வாழ்வில் வளர்வதற்குத் தாங்கள் உதவ வேண்டிய முக்கிய பணியை அருட்பணியாளர்கள் இழந்து விட்டதாக இந்நடவடிக்கை காட்டுகின்றது எனவும் ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருஅவை சட்ட எண் 285ன்படி அருட்பணியாளர்கள் அரசியலில் பதவி வகிப்பது தடை செய்யப்படுகின்றது என்பதையும், நன்னெறி வாழ்வு முறையில் எது சரி, எது தவறு என்பதை இயேசுவின் நற்செய்தியை அடிப்படையாக வைத்து விளக்க வேண்டியது குருக்களின் பணி என்பதையும் ஆயர்களின் கடிதம் நினைவுபடுத்தியுள்ளது.


5. சான் சால்வதோர் : Guantanamo தடுப்பு முகாமை நிரந்தரமாக மூடுவதற்கு வேண்டுகோள்

ஏப்ரல்,27,2012: சர்ச்சைக்குரிய Guantanamo தடுப்பு முகாமை நிரந்தரமாக மூடுமாறு எல் சால்வதோர் நாட்டு சான் சால்வதோர் பேராயர் José Luis Escobar கேட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு Guantanamo தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இரண்டு கைதிகளுக்கு, அமெரிக்காவின் வேண்டுகோளின்பேரில் எல் சால்வதோர் நாடு அண்மையில் அடைக்கலம் கொடுத்ததையொட்டி இவ்வாறு கேட்டுள்ளார் பேராயர் Luis Escobar.
சுதந்திரம், சனநாயகம் மற்றும் உலகின் நன்மையைக் கருதி இம்முகாமை மூடுவதற்கு இது தக்க தருணம் என்றும் பேராயர் தெரிவித்தார்.
கியூபாவின் தென் கிழக்கிலுள்ள Guantanamo வளைகுடாப் பகுதி 1903ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் சொந்தமானதாக இருந்து வருகிறது. இதன் கரையிலுள்ள  தடுப்பு முகாமில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். கடல்களில் கைது செய்யப்படும் கியூபா மற்றும் ஹெய்ட்டி அகதிகள் இங்கு 1990களில் வைக்கப்பட்டனர்.


6. கர்நாடக மாநில ஆளுனர்: இந்தியத் திருஅவை நம்பிக்கையின் அடையாளம்  

ஏப்ரல்,27,2012: கல்வி, நலவாழ்வு மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்கு கிறிஸ்தவர்கள் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளார்கள் என்று கர்நாடக மாநில ஆளுனர் H R Bharathwaj கூறினார்.
பெங்களூருவில் இப்புதன் முதல் நடைபெற்று வரும் இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவையின் 4 நாள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுனர் பரத்வாஜ், சமய சார்பற்ற நாடாகிய இந்தியாவின் அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று பேசினார்.
எனவே வழிபாட்டுத்தலங்களைச் சேதப்படுத்துவது இந்தியாவின் அரசியல் அமைப்பை புண்படுத்துவதாகும் என்றும், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு திருஅவை நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது என்றும் கூறினார் பரத்வாஜ்.
NCCI எனப்படும் இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மாநாட்டை நடத்துகின்றது. இந்த அவையில் 30 கிறிஸ்தவ சபைகளும் சுமார் ஒரு கோடியே 30 இலட்சம் கிறிஸ்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.


7. இந்திய நலவாழ்வில் காணப்படும் வளர்ச்சிக்கு ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு

ஏப்ரல்,27,2012: இந்திய நலவாழ்வில் காணப்படும் வளர்ச்சி குறித்துப் பாராட்டிய அதேவேளை, பெண்கள் மற்றும் சிறாரின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் மிகுந்த அக்கறை காட்டப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
இந்திய நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சர் Ghulam Nazi Azad ஐ புதுடெல்லியில் சந்தித்துப் பேசிய பான் கி மூன், ஒருகாலத்தில் போலியோ நோயின் மையமாக நோக்கப்பட்ட இந்தியாவில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்நோயால் யாரும் புதிதாகப் பாதிக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டார்.
2011க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில், 5 வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாரின் இறப்பைத் தடுத்தல், சுமார் 3 கோடியே 30 இலட்சம் கருக்கலைப்புக்களைத் தடுத்தல், கர்ப்பம் தொடர்புடைய 7 இலட்சத்து 40 ஆயிரம் பெண்களின் இறப்பைத் தடுத்தல் ஆகிய திட்டங்களுக்கென நான்காயிரம் கோடி டாலர் திட்டத்தை 2010ல் ஐ.நா.பொதுச் செயலர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


8.  வட இலங்கையில் கொத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

ஏப்ரல்,27,2012: இலங்கையின் வடபகுதியில் கொத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐநாவின் நிபுணர் ஒருவர் வெடிக்காத கொத்து வெடிகுண்டுகள் இலங்கையில் வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்ததாக AP செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த மாதத்தில் ஒரு குழந்தை வெடிபொருள் விபத்து ஒன்றில் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகில் இந்த அபாயகரமான ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் கொத்து வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதை இது காண்பிக்கிறது. ஆனால், அனைத்துலக ஒப்பந்தங்களின்படி தடை செய்யப்பட்ட இப்படியான ஆயுதத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை முன்னர் மறுத்தது போலவே இப்போதும் இலங்கை அரசு மறுத்துள்ளது.
கொத்து வெடிகுண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக ஒப்பந்தம் ஒன்று 2010 ம் ஆண்டில் அமலுக்கு வந்தது.
ஆனால், இலங்கை, அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, இரஷ்யா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட வேறு சில நாடுகள் அதில் கையெழுத்திடவில்லை.
கொத்து வெடிகுண்டுகளைச் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்கள் என்று கூறி அமெரிக்க ஐக்கிய நாடு அவற்றை 1960ம் ஆண்டில் வியட்நாமிய போரில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


9. இலங்கையில் மத சகிப்புத்தன்மை குறைந்துள்ளது

ஏப்ரல்,27,2012: இலங்கையில் மதச் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக, அங்கு சக மதங்களை மதிக்கும் சகிப்பு மனப்பான்மை குறைந்துவரும் போக்கு அண்மைக் காலமாக தீவிரமடைந்துவருவதாக அக்கறைகொண்ட குடிமக்கள் என்ற குழுவினர் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
தேசிய அமைதி அவை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், விழுது மனிதவள மேம்பாட்டு நிறுவனம், தாய்மாரும் புதல்வியரும் அமைப்பு, போரினால் பாதிக்கபட்ட பெண்களுக்கான அமைப்பு, காணாமல்போயுள்ளவர்களின் குடும்பங்களுக்கான அமைப்பு என பல அமைப்புகளுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிலரும் இன்னும் பல சமூகப் பிரதிநிதிகளும் உட்பட 200க்கும் அதிகமான கையொப்பங்களுடன் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
தம்புள்ளையில் கடந்த 60 ஆண்டுகளாக சட்ட ஆவணங்களுடன் இயங்கி வருகின்ற பள்ளிவாசலையும் அந்தப் பகுதியில் இருக்கின்ற இந்துக் கோவிலையும் அகற்ற வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டங்களையும், பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நிறுத்தப்பட்டமையையும் சுட்டிக்காட்டியிருக்கின்ற அந்த அறிக்கை, சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மனவருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் போருக்குப் பின்னரானச் சூழலில், இனச்சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதிகள் இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அக்கறைகொண்ட குடிமக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...