Thursday, 24 May 2012

Catholic News in Tamil - 21/05/12

1.  திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

2. இத்தாலி நில அதிர்ச்சி குறித்து திருத்தந்தை மற்றும் மிலான் கர்தினால் இரங்கற் செய்தி

3. அமெரிக்கக் கத்தோலிக்கர்களின் மத உரிமைகளைக் காப்பதற்கு, 'உரிமைகளுக்காக இரு வாரங்கள்' செப முயற்சிகள்

4. 'கருக்கலைப்பு அற்ற இரஷ்யா' - இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை மக்கள் மாஸ்கோ நகரில் போராட்டம்

5. தமிழகத்தில் வறியவர் விகிதம் அறிவிப்பு

6. செல்லிடப் பேசி ஆபத்து : ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் பலி

7. உயர் பதவி வகிக்கும் பெண்கள் மது அருந்துவது அதிகரிப்பு

-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

மே 21,2012. வானுலகம் குறித்த வாக்குறுதியையும், இவ்வுலக செபத்தின் வல்லமையையும் கிறிஸ்தவர்களுக்கு நினைவூட்டுவதாக இயேசுவின் விண்ணேற்றம் உள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசுவின் விண்ணேற்றத் திருவிழாவான இஞ்ஞாயிறன்று தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளோடு இணைந்து அல்லேலூயா வாழ்த்தொலி செப வேளையில், உரை வழங்கிய திருத்தந்தை, வானுலகம் நோக்கி எழுந்துச் சென்ற இயேசு தன் மனிதத்தன்மையில் நம் மனித நிலைகளையும் இறைவனை நோக்கி எடுத்துச் சென்றதன் வழி, நம் இவ்வுலக வாழ்வின் நோக்கம் இறைவனைச் சென்றடைவதே என்பதை காண்பித்துள்ளார் என்றார்.
எவ்வாறு இயேசு நமக்காக இவ்வுலகிற்கு இறங்கி வந்து துன்புற்றாரோ, அவ்வாறே நமக்காகவே அவர் வானுலகம் நோக்கி எழுந்துச் சென்றார் என்ற பாப்பிறை, இயேசு மனுவுரு எடுத்தத்தில் துவங்கிய மீட்பு, அவரின் விண்ணேற்றத்தில் தன் நிறைவைக் கண்டது என்றார். நம் மனிதத்தன்மை இயேசுவின் வழி இறைவனை நோக்கிச் சென்றுள்ளதால், நாம் ஒவ்வொரு முறை செபிக்கும்போதும் இவ்வுலகம் வானுலகோடு இணைகிறது என மேலும் கூறிய‌திருத்தந்தை, தூபமிடும்போது புகை மேல்நோக்கிச் செல்வது போல் நம் செபமும் இறைவனை அடைந்து பதிலுரை வழங்கப்படுகிறது என்றார்.

2. இத்தாலி நில அதிர்ச்சி குறித்து திருத்தந்தை மற்றும் மிலான் கர்தினால் இரங்கற் செய்தி

மே 21,2012. இஞ்ஞாயிறன்று காலை இத்தாலியின் வடபகுதியில் நிகழ்ந்த நில அதிர்ச்சியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களோடு ஆன்மீக முறையில் தான் மிக அருகாமையில் இருப்பதாகவும், இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் ஆன்மீக இளைப்பாற்றிக்காகவும், காயமுற்றோரின் துன்பங்கள் அகலவும் இறைவனை நோக்கி செபிப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.
இதற்கிடையே, இத்தாலியின் எமிலியா ரொமாஞ்ஞா பகுதியில் இடம்பெற்ற இந்நில அதிர்ச்சி குறித்து தன் ஆழ்ந்த கவலையையும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆன ஒருமைப்பாட்டையும் வெளியிட்டு மிலான் நகர் கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலாவும் இரங்கற்தந்தி ஒன்றை அப்பகுதி தலத்திருஅவைக்கு அனுப்பியுள்ளார்.
இஞ்ஞாயிறு காலை இத்தாலியின் மாந்தோவா நகர் அருகே இடம்பெற்ற நில அதிர்ச்சியில் 7பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த எண்ணற்ற கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

3. அமெரிக்கக் கத்தோலிக்கர்களின் மத உரிமைகளைக் காப்பதற்கு, 'உரிமைகளுக்காக இரு வாரங்கள்' செப முயற்சிகள்

மே,21,2012. அமெரிக்கக் கத்தோலிக்கர்களின் மத உரிமைகளைக் காப்பதற்கு, அமெரிக்க ஆயர்கள் விடுத்துள்ள ஓர் அழைப்பை ஏற்று அந்நாட்டு கத்தோலிக்கர்கள் ஜூன் 21ம் தேதி முதல், ஜூலை 4ம் தேதி வரை 'உரிமைகளுக்காக இரு வாரங்கள்' என்ற முயற்சியைத் திட்டமிட்டு வருகின்றனர் என்று அமெரிக்கக் கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
நலக் காப்பீட்டு திட்டங்களின் கீழ் ஒபாமா அரசு கருத்தடை மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளது கத்தோலிக்க மதத்திற்கும், கத்தோலிக்கர்களின் மனசாட்சிக்கும் எதிரானவை என்ற எதிர்ப்பை அமெரிக்கக் கத்தோலிக்கத் திருஅவை கடந்த சில மாதங்களாகத் தெரிவித்து வருகிறது.
இந்த எதிர்ப்பின் ஓர் அங்கமாக, ஜூன் மாதம் 21ம் தேதி மாலை ஆரம்பமாகும் செப முயற்சிகள் ஜூலை மாதம் 4ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் விடுதலை நாளன்று நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 21ம் தேதி Baltimoreல் உள்ள அன்னை மரியாவின் விண்ணேற்பு பசிலிக்காவில் பேராயர் William Lori அவர்கள் நடத்தும் திருவிழிப்புத் திருப்பலியுடன் இந்த இருவார முயற்சிகள் ஆரம்பமாகும். ஜூலை மாதம் 4ம் தேதி Washingtonல் உள்ள அன்னை மரியாவின் அமல உற்பவ பசிலிக்காவில் கர்தினால் Donald Wuerl நிகழ்த்தும் திருப்பலியுடன் நிறைவடையும்.
இவ்விரு வாரங்களில் Philadelphia, Portland, Arlington, Denver ஆகிய பல மறைமாவட்டங்களிலும் பல்வேறு செப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4. 'கருக்கலைப்பு அற்ற இரஷ்யா' - இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை மக்கள் மாஸ்கோ நகரில் போராட்டம்

மே,21,2012. 'கருக்கலைப்பு அற்ற இரஷ்யா' என்ற அறைகூவலை மையமாகக் கொண்ட ஒரு போராட்டத்தை இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் (பழமைக் கொள்கை/பழமைவாத) கிறிஸ்தவ சபை மக்கள் இஞ்ஞாயிறன்று மாஸ்கோ நகரில் மேற்கொண்டனர்.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Kirill அவர்களுக்கு எதிராக ஊடகங்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அவதூறான செய்திகளை மறுத்து, குல முதுபெரும் தலைவருக்கு ஆதரவு தெரிவித்தும், கருக்கலைப்புக்கு எதிராகவும் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தில் 300க்கும் அதிகமான வாகனங்கள் கலந்து கொண்டன.
'கருக்கலைப்பு அற்ற இரஷ்யா', 'முதுபெரும் தலைவர் Kirill அவர்களுக்கு ஆதரவு', 'உறுதியளித்த 200 கோவில்களை அரசு கட்டித் தரவேண்டும்' என்ற பல கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களைத் தாங்கியபடி இந்த போராட்ட ஊர்வலம் மாஸ்கோ சாலைகளில் சென்றதென்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஆர்த்தடாக்ஸ் கொள்கைகளை இரஷ்ய அரசிடமிருந்து காக்கவேண்டும் என்று முதுபெரும் தலைவர் Kirill விடுத்த அழைப்பை ஏற்று ஏப்ரல் மாதம் 22ம் தேதி 40,000க்கும் அதிகமான இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மாஸ்கோவின் கிறிஸ்து மீட்பர் பேராலயத்திற்கு முன் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. தமிழகத்தில் வறியவர் விகிதம் அறிவிப்பு

மே 21,2012. தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள், 22.5 விழுக்காடு எனவும்இது, தேசிய சராசரி அளவை விட, 5 விழுக்காடு குறைவு எனவும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மக்கள்தொகை, 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 7கோடியே 21 இலட்சம் எனவும்வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் 22.5 விழுக்காடு எனவும், கல்வியறிவு 80.33 விழுக்காடு எனவும், குழந்தைகள் இறப்பு விகிதம் 1,000 குழந்தைகளுக்கு 28 எனவும், சராசரி ஆயுட்காலம் 66.2 ஆண்டுகள் எனவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அளவில் விகித நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எல்லா நிலைகளிலும் தமிழகம் மேம்பாடு கொண்டிருப்பதாகவும் இவ்வறிக்கை வழி தெரிய வந்துள்ளது.

6. செல்லிடப் பேசி ஆபத்து : ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் பலி

மே 21,2012. செல்லிடப் பேசியில் பேசியபடியும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியபடியும் வாகனங்களில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துக்களால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 5000 க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்  என அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது.
இவர்களில் இளம் வயதினர் அதிகளவில் பலியாகியுள்ளதாகவும்மேலும், வாகன ஓட்டுனரின் அருகில் அமர்ந்து செல்லிடப் பேசியில் பேசியபடி வரும் வாடிக்கையாளர்களாலும் ஓட்டுனரின் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. உயர் பதவி வகிக்கும் பெண்கள் மது அருந்துவது அதிகரிப்பு

மே 21,2012. உயர் பதவி வகிக்கும் பெண்கள் மது அருந்துவது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என அண்மையில் வெளியிடப்பட்ட பிரிட்டன் அறிக்கை ஒன்று கூறுகிறது.
மேற்கத்திய நாடுகளில் பெண்கள் மது அருந்துவது சர்வ சாதாரணமான விடயம் எனினும், சாதாரணப் பணியில் இருப்போரை விட, மேலாளர் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் பிரிட்டன் பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்துவதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நடுத்தர வர்க்கத்துப் பெண்களிடையே மது அருந்தும் வழக்கம் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது என்றும், அனைத்து வணிக வளாகங்களிலும் தற்போது மது கிடைப்பதால், பெண்கள் எளிதாக மதுவை வாங்கிச் சென்று வீட்டில் அருந்தும் நிலை உருவாகியுள்ளது என்றும், பிரிட்டன் நலத்துறை அமைச்சர் Diane Abbott  கவலையை வெளியிட்டார்.
மது அடிமைகள் மறுவாழ்வு அமைப்பின் தலைவர் Ian Gilmore  குறிப்பிடுகையில், வீட்டுப் பிரச்சனை, பணி புரியும் இடத்தில் உள்ள வேலைப் பளு ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தைச் சமாளிக்க உயர் பதவி வகிக்கும் பெண்கள் மது அருந்துவது அதிகரித்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...